Saturday, April 11, 2009

ஒன்றரை மாதங்களுக்கு முன்னால்...


"ஹலோ... ஈரோடு நாகராஜன் இருக்காரா"

நான் தான் பேசறேன், சொல்லுங்கோ.

என் பேரு .................... (பெயர் சொல்கிறார்) உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நெனக்கறேன்.

மாமா! எப்படி இருக்கேள்? இப்போ ஒடம்பு எல்லாம் தேவலையா?

ஆச்சுப்பா. இப்போ நான் ரொம்ப active. பழைய மாதிரி ஆயிட்டேன். மதுரைக்கு, டாட்டா சுமோல போயிண்டிருந்த போது பெரிய accident ஆயிடுத்து. ரொம்ப நாள் கோமால இருந்தேன்; நடக்க முடியல... அது இதுன்னு... இப்போ நல்லா இருக்கேன். திருப்பாவைக் குழு திரும்ப ஆரம்பிச்சுட்டேன். ஆனா, ஈரோட்டுல இல்ல. இங்கயே தான், T. நகர்ல..

ஒ... எல்லாரும் எப்படியிருக்கா மாமா.... ஆடிட்டர் சீனிவாசன், கோபாலகிருஷ்ணன் எல்லாரும்...

எல்லாரும் சௌக்கியம். Secretary... treasurer-னு அந்தந்த போஸ்ட்ல அப்படியே இருக்கா. பதினொரு கச்சேரி போட்டிருக்கேன். நீங்க எல்லாம் அப்பவே வாசிசிருக்கணும். அப்போ ரொம்ப பெரிய பாட்டெல்லாம் மொதல்ல போடனும்னு ஒரு எண்ணம். அதான் இப்போ போடறேன்.

ஆமாம் மாமா... நீங்க எல்லாம் நடத்தினதால தான் M.S., செம்மங்குடி, பர்வீன் சுல்தானா, லால்குடி, D.K. ஜெயராமன் எல்லாம் எங்களுக்கு கேக்க முடிஞ்சுது. Infact, ராஜம் ஐயர் கச்சேரிக்கு சிவராமன் சார் அங்க வந்தப்போ தான் அவர நேர்ல பாத்தேன்! மெட்ராசுக்கு வா, சொல்லித்தரேன்னு சொன்னார்.

அப்பவே இங்க வந்துட்டீங்க இல்ல?

ஆமாம் மாமா... எய்ட்டி நைன்ல வந்தேன்.

சார் எப்படி இருக்கார்.. ரொம்ப நாள் ஆச்சு அவரைப் பாத்து...

நன்னா இருக்கார் மாமா.

சரி... நீங்க பதிணொண்ணு இல்ல பதிமூணு ஏப்ரல் free-யா?

நீங்கன்னு எல்லாம் சொல்லாதீங்கோ... eleventh... ம்ம்... free தான், சொல்லுங்கோ...

அப்போ, Hyedrabad Sisters அன்னிக்கு பாடறா. உஷா ராஜகோபால் தான் வயலின். நீ மிருதங்கம், ஒரு கடம் ஏற்பாடு பண்ணீ டுப்பா.

சரி மாமா.

உன் சம்பாவனை எவ்ளோன்னு சொல்லணும், நீ என்ன கேட்டாலும் தர ரெடியா இருக்கேன். என்னோட பழைய contacts எல்லாம் திரும்பவும் நல்ல touch- இருக்கா.

அதெல்லாம் ஒண்ணும் இல்ல மாமா, நீங்க என்ன குடுத்தாலும் சந்தோஷம் தான். உங்களால எத்தன பெரியவா கச்சேரியெல்லாம் கேட்டிருக்கோம்... அந்த பத்து நாளும் கேக்கறது தான் அந்த வருஷம் பூரா ஞாபகம் வெச்சுக்கணும்கறா மாதிரி... உங்க கிட்ட இவ்ளோ குடுங்கோ அவ்ளோ குடுங்கோன்னு demand எல்லாம் பண்ண மாட்டேன்.

இல்லையில்ல... நீங்க எல்லாம் அந்த ஊர்ல இருந்தப்போ, நான் ஒண்ணுமே செய்யல. இப்போ முடியறது, பண்றேன்... ஒரு ஐயாயிரம் ரூபா தரேன், வாங்கீண்டு வாசிச்சு நடத்திக்குடுக்கணும்.
T.V.சங்கரநாராயணன், சேஷகோபாலன் எல்லாரும் பாடறா. சௌம்யா எல்லாம் ஊர்ல இல்ல போலிருக்கு...

ஆமாம் மாமா... US டூர் போறா.

கச்சேரியெல்லாம் நம்ப ஆத்துங்கிட்டயேதாம்பா. ஒரு கல்யாண மண்டபம் இருக்கு...

தெரியும் மாமா...
நீங்க இந்த ஊருக்கு வந்த புதுசுல, அங்க ஒரு தடவ நீங்க ஏற்பாடு பண்ணி, சந்தானகோபாலனுக்கு சார் வாசிச்சார். நான் வந்திருந்தேன்.

... நீ வந்திருந்தியா... அதுக்கு அடுத்த வருஷம் தான் accident ஆயிடுத்து. இப்போ நல்லாயிருக்கேன்பா... இந்த வருஷம் ரெண்டு லக்ஷ ரூபா கலெக்ட் பண்ணப் போறேன். நிறைய கச்சேரி வெக்கணும். கடம் ஏற்பாடு பண்ணீட்டு சொல்லுபா. சில பேரெல்லாம் phone பண்ணினா மதிக்க மாட்டேங்கறா... நீங்க யாருன்னே தெரியாதுங்கறா... தேதிய நோட் பண்ணிக்குங்கோ....

சரி மாமா... நமஸ்காரம்... அப்புறம் பேசறேன்.

தேடிய சிலரில், D.V.வெங்கடசுப்ரமணியம் இருந்தான்.

"ஹலோ... வெங்கியா... பதிமூணு ஏப்ரல், free-yaa?"

"நாகரஜ்ஜீ... free தான்... சொல்லுங்கோ.. எங்க கட்டம்; யாருக்கு?"

Hyedrabad Sisters-க்கு. "...................." நடத்தறார்.

கச்சேரி டயரியைத் தேடினேன். April 11-ல் எழுதிவிட்டு, சற்று நேரம் சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தேன். கைபேசியில் missed calls தெரிந்தது. எல்லாம், மெசேஜ்களால் விவரிக்கப் பட்டிருந்தது. அதில் இரண்டு, ஏப்ரல் 11 free என்றால் அழைக்கவும் என்றிருந்தது. எப்போதும் இப்படித்தான். எங்காவது ஒத்துக்கொண்ட பின் உடனே அழைப்புகள் அணிவகுக்கும், அதே தேதிக்கு!

இப்போது, மூன்றாவது அழைப்பு வந்தது, land line-ல்.

"ஹலோ... ஈரோடு நாகராஜன் இருக்காரா?"

"நமஸ்காரம்... நான் தான் பேசறேன், சொல்லுங்கோ..."

"சார், நான் மிசஸ்
.................... பேசறேன். அவர் படுத்துண்டு இருக்கார். அவர் சொல்றது எதையும் நம்பாதீங்கோ. எழுந்து நடக்கவே முடீல. எக்கச்சக்க சுகர் வேற... கோமாலேர்ந்து பொழச்சதே பெருசு. இவரானா, வசூல் பண்றேன், கச்சேரி போடறேன்னு ஒளர்றார்... ரெண்டடி நடக்கவே ரெண்டு பேர் புடிச்சுக்கணும். அவரண்ட சொல்ல முடீல. பசங்களும் சொல்லிப் பாத்துட்டா. கேக்க மாட்டேங்கறார். என்ன திட்டறா எல்லாரும். நான் என்ன பண்ணுவேன்... நீங்க வேற ஏதாவது கச்சேரி வந்தா ஒத்துண்டுடுங்கோ... நான் phone பண்ணேன்னு யார்கிட்டயும் சொல்லாதீங்கோ"

நேற்று,
.................... மாமாவுக்கு phone செய்தேன்.

"யாரு... ஈரோடு நாகராஜனா.... எங்கப்பா இருக்கே... என் நம்பர் எப்படிக் கெடச்சுது!"

No comments:

Post a Comment