Saturday, September 14, 2019

மஹாலக்ஷ்மி

எனக்கு அது நஷ்டம் தான்; இடைஞ்சலும் கூட, என்றாலும் நீ அதையே செய். அது உனக்கு நல்லது என்பதால் மட்டுமல்ல, அது தான் சரி, நியாயம் என்பதாலும் கூட என்று சுயநலம் சாராது தர்ம நியாங்களைக் கைக்கொள்பவர் உண்டு. உறவுகளிடமும் அப்படித்தான்; நண்பர்களிடமும் அதுவே. எங்கள் குல தெய்வம் திரௌபதி - ‘தர்மராஜா’ என்பதாலேயோ என்னமோ, எங்கள் வீட்டில் வழக்கத்துக்குச் சற்று அதிகமாகவே அப்படி இருப்போம். அதனாலேயே நீ சொல்லு சரியாயிருக்கும் என்று பஞ்சாயத்துகள் மத்யஸ்தங்கள் முன்வைக்கப்படும். என் பள்ளி நாட்களில் சில ஆசிரியர்கள் தேர்வுத்தாட்களைத் என்னைத் திருத்தச் சொல்லும்போது, கடவுளே என் பேப்பர் அவன் கிட்ட போய்டக்கூடாது என்று வகுப்பில் வேண்டிக்கொள்வார்கள். தஞ்சை அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியின் ஹாஸ்டல் வாழ்க்கையிலும் பின்னர் வேலையிலும் வீட்டிலும் மஹாலக்ஷ்மியும் அதுபோலத்தான் பெயர் பெற்றிருந்தாள். மஞ்சூர் பள்ளி நாட்களைப் பற்றி மாதுவுக்கும் ரவிக்கும் தான் அதிகம் தெரியும். 


என் நினைவில் அட்டகட்டியே உள்ளது. அங்கிருந்து பேருந்தில் வால்பாறைக்குச் செல்வார்கள். என்றேனும் வாங்க முடிந்த ஆப்பிள் கேக் மாலாவுக்கு மிகவும் பிடிக்கும். என்னைத் தூக்கிக்கொண்டு சாதம் ஊட்டி வேடிக்கை காட்டிய நாட்கள். வீட்டுச் சுவற்றை ஒட்டியே சின்னதாய் ஒரு மெஸ். அதில் சமைப்பது பரிமாறும் பாத்திரம் தேய்க்கும் வேலைகள் எல்லாம் பாட்டி, அம்மா, மாது, மாலா ரவி மற்றும் நீலகண்டன் நீலாயதாக்ஷி தான். ரவி அங்கிருந்து ஒரு காப்பி என்று குரல் கொடுத்து, அம்மா சமையலறையிலிருந்து கொடுத்ததும் வாங்கி வந்து அவனே குடித்து விட்டுச் சிரித்தான் ஒரு முறை என்று அம்மா சொல்லுவாள். எனக்குக் கேலிபர்ஸ் போட்ட வயது. மெஸ்ஸின் மூலையில் ஒரு முறை தேன்கூடு இருந்தது. அதன் அடியில் ஒரு தட்டை வைத்தால் தேன் சொட்டும். மாலா ரொம்ப நல்லாயிருக்கும் என்றாள். பிறகு ஈரோடு வந்துவிட்டோம். மாலா கூடை பின்னுவாள். பழைய எக்ஸ்ரேவைச் சுரண்டியது போன்ற ஃபிலிமில் இந்தியன் இங்க், ப்ரஷ், நிப் வைத்து ஆடைகளுக்கு டிசைன் போட்டு சாயப்பட்டறைகளுக்குக் கொடுப்பாள். அங்கேயே வர்ணமேற்றும் வேலையும் உண்டு. நீண்ட மேஜையின் இருமுனைகளிலும் இருவர் நின்றபடி கட்டையை வர்ணத்தின் மீது தேய்க்கவேண்டும். தினம் மூன்று ரூபாய்கள். சாயமேற்றிய துணிகள் வெயிலில் உலர்த்தும் போது, வாரயிறுதிகளில் நான்கு மூலைகளிலும் கல் வைக்கும் வேலை ரவிக்கு, எட்டணா கிடைக்கும். 
அப்பாவுக்குத்தான் முதலில் நர்ஸிங் கோர்ஸ் பற்றித் தோன்றியது. அம்மா வேண்டாம் வேற எதுலயானும் சேக்கலாமே என்றாள். இன்னம்மை (அம்மாவின் அம்மா), “டீ... ஸ்வர்ணம் ரத்தமெல்லாம் தொடச்சுக்கிண்டாக்கும் இருக்கணும்... நமக்கொன்னும் வேண்டாம் அதெல்லாம்” என்றாள். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவேண்டும் என்பதும் ஒரு காரணம். ஆனால், அப்பா மாலாவுக்கு எடுத்துச் சொன்னார். ‘கவர்ன்மென்ட் போஸ்ட்டிங் வரும், காலாகாலத்துக்கும் பென்ஷன் வரும், நமக்கோ சொத்துபத்து ஒண்ணும் இல்லை, நல்ல வரனும் பாக்கலாம்’

ஹாஸ்டல் வாழ்க்கை தான் கடினம் சமாளித்துக்கொள்ளலாம் என்று போனவளுக்கு அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்தில் என்றொரு கஷ்டம் கண்முன்னே தெரிய வந்ததும் துவண்டாள். ஆனால், அடுத்த க்ஷணம் இந்தப் படிப்பை ஏற்றுக்கொண்டாகிவிட்டது எனவே என்னைத் தகுதிப்படுத்திக்கொள்வேன் என உறுதியேற்றாள். ‘ஸித்தார்த்த ஸித்த ஸங்கல்ப ஸித்தித ஸித்திஸாதனஹ’ என்று முன்னோர்கள் வாழ்த்தியிருக்க வேண்டும். பத்து பத்து வார்த்தைகளாக எழுதியெழுதி மீண்டும் மீண்டும் படித்து சாதகம் நடந்தது. கல்லூரி விழாவுக்கு தெருவை அடைத்து அவள் போட்ட கீதோபதேச ரங்கோலியைச் சுற்றி மருத்துவர்களும் மாணவிகளும் நின்று படமெடுத்துக்கொண்டனர்.

போஸ்ட்டிங் வரும் வரை, ஈரோடு சவிதா மருத்துவமனையில் இரண்டு வருடங்கள் போல வேலை. ஊருக்குத் திரும்பாத மாப்பிள்ளை, ஆஃபீசில் தூங்குவது, வேலைக்காரி-மச்சினி ஜோக்குகளில் மகிழ்ந்து பழகியிருந்த உலகத்தால் வகுப்பில் நர்ஸ் ஜோக் சொன்னவர்கள் என்னிடம் அடிவாங்கியதோடு ஐயையோ இனிமே பேப்பர் வேற இவன் கைக்குப் போகுமே என்று மேலதிகக்கவலையில் ஆழ்ந்தார்கள். அடுத்து அப்போலோ மருத்துவமனையில் பணி. வைஜயந்திமாலாவின் கணவர் டாக்டர் சமன்லால் பாலி அப்போலோவில் பார்த்துவிட்டு உன் போன்றவர்கள் இந்தப் பணியில் சிலரே. பம்பாய் ஹாஸ்பிடலுக்கு வந்துவிடுகிறீர்களா எனக்கேட்டார். 

கடலோரக்கவிதைகள் கடமை கண்ணியம் கட்டுப்பாடு படங்கள் வந்து சத்யராஜ் பிரபலமான நேரம், அப்போலோவில் ஷூட்டிங். அத்தனைபேரும் நடிகரை சுற்றியிருக்க கண்டுகொள்ளாமல் கடமையாற்றிய மாலாவைச் சுட்டிக்காட்டி அவங்களக் கூப்பிடுங்க என்றார். என்னம்மா ஒரு நடிகன் இங்க இருக்கேன் நீங்க பாட்டுக்கு உங்க வேலையப் பாக்கறீங்க என்று ஆச்சிரியப்பட்டதும் அதனாலென்ன? டாக்டர் மேனேஜர் டிரைவர்னு எத்தனையோ வேல.. ஒங்க வேல நடிக்கறது இதுல ஆர்வத்துக்கு என்ன இருக்கு என்று கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டாள். 

பிறகு கல்யாணம். சாம்பசிவ ஐயர் சிதம்பரத்தில் பிரபல ஜோதிடர். புலியூர் பாலு அவர் சம்பந்தி தான். பெண்ணை வந்து பார்த்ததும் நிச்சயத்துக்கு நாள் குறித்துவிட்டார். 87ல் ஈரோடு ராமசாமி சீரங்காயம்மாள் திருமண மண்டபத்தில் கல்யாணம். ‘கொடுவாயூர் மருதமுத்து சக்திவேல் வாசிப்பு ரொம்ப ஒசத்தி. அந்தக் கல்யாணவசந்தமும் பிந்துமாலினியும் இன்னிக்கெல்லாம் கேக்கலாம்’ என்று பல்லடம் வெங்கட்ரமணராவ் அறிமுகம் செய்தார். நாகைநல்லூர்க்காரா தான் சமையல்ல ஒசத்தி என்று சோமு மாமா அழைத்துவந்தார். நாட்டைக்குறிஞ்சியும் சாருகேசி ஷண்முகப்ரியாவும் ஜானவாசத்தில் அமர்க்களப்பட்டது. நாகைநல்லூர் ரசம் உறிஞ்சப்பட்டும் டம்ளர்களிலும் வாங்கிக் குடிக்கப்பட்டது. செஞ்சியில் இருந்து அப்பாவின் பெரிய சித்தப்பாவான தியாகராஜ ஐயர் வந்திருந்தார். எண்பது வயதில் கிணற்றிலும் குதித்து மேலேறி வருபவராக இருந்தார். ’கெணத்துத் தண்ணில குளிக்கலாம், ஆனா குளிச்சதும் அந்தக் கெணத்துத்தண்ணியையே கொஞ்சம் எறைச்சு ஒரு வாய் குடிச்சுட்டயானா புது எடம்னு ஒடம்புக்கு ஒரு காச்சல் சளி தொண்டக்கட்டு வராது. வெளில பட்ட தண்ணியே உள்ளயும் கொஞ்சம் போன ஒடம்பு அதுக்கு தோதா பண்ணிக்கும்’ என்றார். மாலா கல்யாணம் முடிந்து ஐந்து நாட்களில் கும்பகோணத்தில் மாது கல்யாணம். ஈரோட்டில் ரிசப்ஷன் முடிந்து எங்க சின்ன ராசா பார்த்தோம். போஸ்ட்டிங் வந்தால் சென்னைதான் என்பதால் அத்திம்பேருக்கு சிதம்பரத்திலிருந்து அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் ஏற்பாடானது. VRS வாங்கி கல்யாணத்தை முடித்துவிட்டு ஈரோடு Prompt Courier Service-ல் administrative officer ஆகப் பணிபுரிந்தார் அப்பா. 

"அவர் சூப்பரா சமைப்பார். நான் நாலு பேருக்குன்னா சமைச்சுடுவேன் அதுக்கு மேலன்னா அளவு கொஞ்சம் தடுமாறும்..

எட்டு பேருக்குன்னா நீ ரெண்டு வாட்டி சமச்சுடு", என்றேன். 


பெரம்பூர் திரு வி.க. நகர் அருகில் சிவலிங்கம் தெருவில் ஜாகை. நான் சென்னை வந்தால் அங்கு தான் தங்குவேன். மாதத்தில் சில நாட்கள் சாம்பசிவ ஐயர் சென்னை க்ளையண்ட்களை அங்கு தான் சந்திப்பார். எம்.எஸ். பாஸ்கர் அடிக்கடி வருவார். சிவாஜியோட மேக்கப்மேன் ஒரு முறை என்ன தான் நீங்க நடிப்புக்கே ராஜாவாயிருந்தாலும், என் குடைக்குக் கீழதான் நீங்க என்று சொல்லிவிட்டார் போன்ற கதைகள் கேட்கக்கிடைக்கும். 

89ல் என் பொருட்டு எல்லோரும் ஈரோட்டிலிருந்து சென்னை வந்துவிட்டோம். அப்பா வழி சொந்தக்காரர்கள் பெரும்பான்மையாக திரு வி. க. நகரில் தான் இருந்தனர். எதற்கு எந்த டாக்டரைப் பார்ப்பது, GHல் எந்த மருத்துவரைக் காண எப்போது OP, இந்த மாத்திரைக்கு பக்க விளைவுகள் என்ன, இந்த ஊசி போட்டுவிடறீங்களா என்று வீட்டுக்கும் உறவினர்களுக்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் ஒரு தேர்ந்த நர்ஸ் இருப்பது சௌஹர்யமானது. ப்ராம்ப்ட் கூரியரின் சென்னை கிளையை அத்திம்பேரும் நீலகண்டனும் பார்த்துக்கொண்டனர். 

கேஸ் விஷயமாக ஈரோட்டுக்கு அப்பா இரவுப் பயணம். பேருந்தில் முன்னிருக்கையின் அடியில் கால்களை நீட்டிக்கொண்டு அனைவரும் நன்கு உறங்க சேலம் அருகில் ஒரு T ஜங்க்‌ஷனில் வேகமாய் வந்த லாரி பேருந்தில் மோதி, அத்தனை இருக்கைகளும் கீழே இறங்க, அத்தனை பேருக்கும் காலில் கடுமையான எலும்பு முறிவு. அதற்குப் பிறகு எத்தனையோ ஏற்ற இறக்க பெரும் பள்ளங்கள். எல்லா நேரங்களிலும் பெற்றோர்களுக்கு மாலாவின் மாரல் சப்போர்ட்டும் உதவிக்கரமும் இருந்துகொண்டேயிருந்தது. 


’பிராமின்ஸ் பொண்ணுங்களுக்கெல்லாம் இருவத்தெட்டு முப்பதுல தான் கல்யாணம் ஆகுது. நீங்க இருவதுலயே நல்ல எடமா பாத்துட்டீங்க..’ க்ருத்திகாவுக்குக் கல்யாணமாகிப் பெண் குழந்தை, ஓமந்தூரார் மல்ட்டி ஸ்பஷாலிட்டி மருத்துவமனையில் nursing superintendent, கொஞ்ச நாளாவது ஓரளவுக்கு தாராளமா இருக்கற வீட்டில் இருக்கணும்னு பம்மலில் அப்பாசாமி ஃப்ளாட், அருணுக்கு வரன் பார்த்துக் கல்யாணம், சென்ற ஏப்ரலில் பணியிலிருந்து ஓய்வு, அருண் அபிநயாவுக்கு நாலு மாதப் பெண்குழந்தை என 2016 ஜனவரியிலிருந்து இருந்து 2019 ஆகஸ்ட் முடிய பரபரப்பாய் போனது நாட்கள். 

சென்ற ஆகஸ்ட் இருபது முதல் அப்பாவின் உடல்நிலை சரியில்லை. அதே மாதக் கடைசியிலிருந்து மாலா அனீமிக்காக இருந்தாள், மூச்சு விடுதல் இன்னும் சிரமம் ஆனது. க்ளோபல் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் வென்ட்டிலேட்டர், பிறகு டிஸ்சார்ஜ் செய்துகொண்டு மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்ட்டரில் சேர்த்து செப்டம்பர் ஏழு எட்டு தேதிகளில் நல்ல முன்னேற்றம், ஒன்பதாம் தேதி டிஸ்சார்ஜ் என்று இருக்கையில், அன்று மதியம் காய்ச்சல். மீண்டும் ஆக்ஸிஜன். பதினோராம் தேதி இரவு பத்தேமுக்காலுக்கு ஐம்பத்தொன்பதாவது வயதில் அவள் இவ்வுலகம் நீங்கினாள்.

கண்ணு முன்னாடியே போய்ட்டாளேடா என்று பெற்றோரும் கணவரும் குழந்தைகளும் அழ, க்ரோம்பேட்டை மயானத்தில் சாம்பலானாள். இப்ப நமக்கு இன்னும் நிறைய இடம் கிடைச்சிருக்கு என்று எவரும் மகிழாத வெற்றிடம் அது. அந்த வெற்றிடம் இனி ஒரு போதும் நிரம்பவும் செய்யாது.