Tuesday, January 25, 2011

ஆடுகளம்...
படம் வந்து பல நாட்கள் கழித்து அதைப் பற்றிய விமர்சனம்
எழுதுவதில் நன்மைகள் உண்டு. கதை சொல்ல வேண்டாம்.
மேலும், அந்தப் படத்தை எல்லோரும் பார்த்து அவரவர்க்கும்
ஒரு கருத்து ஏற்பட்டபின்னர் அதை வம்புக்கிழுப்பதில் தான்
பகிர்தலின் உள்ளீடான சுவாரஸ்யம் இருக்கிறது. "என்ன இது!
தனுஷ் பேர் போடறாங்க... ஒரு கைதட்டல் கூட இல்லியே!"
ஆச்சிரியக் குரல் ஒன்று வெளிப்பட்டது, அருகிலிருந்து. ஆனால்,
ஏற்கனவே படம் பார்த்தவர்கள் உள்ளே இருந்தார்கள்; விசிலும்
அடித்தார்கள், டாப்ஸி என்ற பெயருக்கு. 

வெள்ளாவி வெச்சது மாதிரி இருக்க.. வெயிலே பட்டதில்லையா
ஒம்மேல என்ற வியப்பு நாடு முழுவதும் விரவிக்கிடக்கிறது.
இயக்குனர் வசந்த் கூட 'அழகு குட்டிச் செல்லம்' என்ற பாடலுக்காக (சத்தம் போடாதே) பின்புறங்கள் பிங்க் நிறத்தில் இருக்கும் குழந்தையைத் தேடியதைச் சொன்ன ஞாபகம். ஆனால், மனைவி கோதுமை நிறமாய் வேண்டும் என்ற ஆவலின் அடிப்படை,அப்படி ஒருத்தியை ஆளவேண்டும் என்ற வேட்கை.

***********************************************
ஊருக்குப் பொறாமை.


என்னவள்
அழகிய மனைவியாம் - அவள்
ஆங்கிலம் அருவியாம்...
அவள் முதுகுக் கீறல்களை
உறுத்தும் கரு கூந்தல்
என் கைப்பிடிக்குள்...


ஊருக்கு...
பொறாமை.

(கணையாழி ஜூன்  93).

**********************************************

மதிப்பீடுகளை முன்வைக்காமல் நிகழ்வுகளைக் காட்டிச் செல்லுதல் நன்றாகத் தான் இருக்கிறது. அது இயக்குனரின் முதிர்ச்சி. விமர்சகர்கள் அப்படி அல்ல. நாலும் சொல்ல வேண்டும். சாவலுக்காக அம்மாவிடம், 'ஒன்னைய கொண்டே போடுவேன்' என்று சொல்லும் தனுஷை அனேகமாக எல்லோரும் ரசித்தனர். அந்த ரசிப்பின் காரணம் வட்டார வழக்கு. அதை வேறு ஒரு இடத்தில் பிரயோகம் செய்திருக்கலாம்.  'அம்மா கூட படுத்தவன் எல்லாம் அப்பனா? வெரலப் புடிச்சு கூட்டிகிட்டு போய் நல்லது கேட்டது சொல்லித்தறவன் தான் அப்பன் என்ற விவரமான வசனமும் அப்படித் தான். விவாதமெனில், பதில் கேள்வி வரும்.  ஆனால், இது இப்படித்தான் என்ற, குடியரசு தினமானாலும் நாலு படம் டீவீல என்று சந்தோஷிக்கும் மனதில், சரி அப்பன் இப்படி இருக்கணும், ரைட்டு... புள்ள? என்ற கேள்வியை எழுப்பினால் தேவலை.  கிரிக்கெட், கபடி, சேவல் சண்டை, புறா பந்தயம், கோலி என்று களனுக்குப் பஞ்சமில்லை. வில்லனையும் விளையாட்டையும் அருகே வைத்து குறுக்கே காதலை ஓட்டி சேர்த்துவிட்டால் படம். மாறன், வெற்றி பெற்றது சரியான நடிகர் தேர்வினாலும் அதைச் சொன்ன விதத்தாலும். 

தொய்வில்லை என்ற போதும், பேட்டைகாரனை துரோகம் செய்பவனாய் தனுஷ் அறிந்துகொள்ளும் போதுதான் ரசிகனும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற லெவலில் மாறன் மெனக்கேட்டதில், பிற்பாதி நீண்டுவிட்ட தோற்றம் இருக்கிறது. சேவலையும் இன்னொன்றையும்,  ப(ய)ன்-படுத்தி, ஐரினிடமும்  (taapsee pannu)  அவள் பாட்டியிடமும்,  i am... cock வுட்டிங்... biggu.. என்று தனுஷை பண்ணவைக்கிற Blue Comedy-ஐ விட, மூராசில் சேவல் தோற்கும் போல இருக்கையில், "ஒங்க சாவல் ஜமீனாகப் போகுதுடியேய்.." என்ற கிண்டலுக்கு, "அடிக்கும்னு தான் சொன்னோம்..எந்த சாவல்னு சொன்னோமா?" முருகதாஸ் கேட்பது அருமை. 

குணா, அங்காடி தெரு, சுபிரமணிபுரம் மூன்றும் நினைவுக்கு வந்தன. கருப்பு, ஐரினைப் பின் தொடர்கையில் ஆடி ஆடி வருவது பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருந்தது. :P இரவில் ஊர் சுற்றுவது பெண் விடுதலையின் குறியீடாக, உன் கட்டுகளை நான் அவிழ்ப்பேன் (PI) என்ற உறுதிமொழியாகக் காட்டுவது இருக்கட்டும்;  அதை அவ்விதமாகவே பெண்கள் ஏற்கிறார்களா அல்லது traffic police பார்த்திபன் ஆட்டோ திருடிய வடிவேலுவிடம் "நெனச்சடா",  என்பது போல, ஏற்பாள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறதா? பேட்டைக்காரனிடம் வன்மம் கொண்ட இரத்தினசாமி இத்தனை கொலைகளுக்கிடையில் தலையே காட்டாதிருப்பது ஏன்?  கைல என்ன வெச்சிருக்கானோ என்ற  கிஷோரின் படபடப்பு நன்று. 

படம் முடிந்து வெளியே வந்ததும், அலைகள் ஓய்வதில்லைக்கும் இதற்கும் என்ன வித்யாசம் என்றேன். ஏற இறங்கப் பார்த்த அருணிடம், "அதுல சூர்ய அஸ்தமனத்தப் பாத்து காதலர்கள் ஓடுவாங்க;  இதுல இருட்டுக்குள்ள எங்கியோ! இது தான் வித்யாசம்...", என்றேன். (ஒரு வேளை இன்ஸ்பெக்டர் இருக்கும் தைரியமோ?) அதன் பிறகு காதலர்கள் எங்கே சிங்கியடித்தார்கள் என்பதை வசதியாக யாருமே காட்டுவதில்லை.  

இருமை, வாழ்வின் கவிதை என்று வரிகளை "யாத்த" ஜெயபாலன் படத்தின் பெரும்பலம். ராதா ரவியின் குரல் கொடுக்க, அம்முகம் காட்டும் அஹங்காரம்,  வஞ்சகம், வேண்டுதல், வெறுப்பு, மகிழ்ச்சி, பெருமை எல்லாமே அழகு.  ஆனால், சிலோன் கார அண்ணாச்சிய நம்பினா வெளங்குமா என்ற  பாத்திரத்துக்கும் மனிதருக்குமான (நம்பியார்) பிறழ் புரிதல் வெகுஜன அபிப்ராயமாக மாறாதிருக்கட்டும். 

எண்பத்தி ஒன்பதின் இறுதியில் பெரம்பூர் வந்ததும், ஈரோடு ரயில்வே காலனி போலவே இங்கும் நிறைய ஆங்கிலோ-இந்திய குடும்பங்கள் இருந்தன.  வேலையற்று வெட்டியாய், சிகரெட்-பீடியுடன் உடைந்த ஆங்கிலம் பேசித் திரியும், அழுக்கு ஜீன்ஸ்-கூலிங் கிளாஸ் இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன்.  திரு.வி.க. நகர் கழகக் கண்மணிகள் அவர்களை "பீத்தொற" என்று அடிக்குரலில் கிண்டல் செய்வார்கள்.  தனுஷுக்கு இப்படத்தில் பன்ச் டயலாக் இருக்கிறது. "நாங்க எல்லாம் சுனாமியிலே சும்மிங் போடறவங்க..." ஒரே ஒரு முறை வருவதாலும், ஜி.வி.பிரகாஷின் யாத்தே யாத்தேயின் புயல்-இடி-மின்னலிலும் 
அது கரைந்து விடுகிறது.

"அடுத்த சென்மமுன்னு ஒண்ணு இருந்திச்சின்னா, மவனே நீ (சே)சாவலா இல்ல, இதே மாதிரி ஒரு பக்கியும் இல்லாத எடத்துல அடி வாங்கணும்; நாந்தேன் ஒன்ன தூக்கிகிட்டு போய், துணியக் கொளுத்தி கரிச்ச பொடி ஒத்தடம் குடுக்க்கணும்டா..." என்று ஒரு க்ராப்போ, போந்தாவோ சபதமெடுக்கும் முன்பு வேறு படம் வந்துவிடும்.  அதற்குள், இன்னொரு முறைகூட பார்க்கலாம், ஸ்வாரஸ்யமான படம். 

Saturday, January 15, 2011

Subway-யை நெருங்கி வீடடைவதற்குள்...

இனிய பொங்கல் வாழ்த்துகள். 

படத்தின் முதல் காட்சியிலேயே கதாநாயகன் மூன்று உருவங்களாய்ப் பிரிந்து பின் ஒன்று சேர்வது, பன்ச் டயலாக் பேசும்போது பின்னணியில் குண்டு வெடிப்போ, சுனாமியோ தோன்றுவது எல்லாம் மிகச் சாதாரணம். ஏனெனில், இவைகளைப் பார்க்க முடியும், கேட்டுக்கொண்டே. ஆனால், வெறும் வசனத்தில் பில்ட் அப் அல்லது ஹைப் கொண்டு வருவதை தமிழ் கூறும் பண்பலை வானொலியில் கேட்க ஆளானேன்.

"பொங்கல் அன்னிக்கு, ஒபாமா இந்தியாவுக்கு வரார்.... தெரியுமா"

"...எதுக்கு...?"

"ஏன்னா, அன்னிக்கு தான் கலைஞரோட இளைஞன் ரிலீஸ்..."

தலைலெழுத்து என்று நிலையத்தை மாற்றினால், "யாத்தே.. யாத்தே... யாத்தே.. என்னாச்சோ...." அடியாத்தீ என்பதில் அடியை மறந்துவிட்டார்கள் போலும் அல்லது எழுதி எழுதி - இயற்றி இயற்றி என்ன கண்டாயோ... என்றிருக்குமோ என எண்ணஆரம்பித்து, 'டேய்... ரொம்ப வெட்டியா இருக்கியா, இப்ப்ப்பிடி யோசிக்கிற..' என்று சுய எள்ளல் செய்தபடி, அரங்கநாதன்-சுரங்கப் பாதையில், இறங்க ஆரம்பித்தேன் (மகனே, ராத்திரி ஒரு மணிக்கு என்ன rhyming!!)  

மீண்டும் மாற்றியதில், "எவண்டி ஒன்ன பெத்தான்(1) பெத்தான்(2) பெத்தான்(3)..." என்ற சிம்புவின் குரல் ஒழிக்க (இது பிழையல்ல, நிஜம்), வெறுத்துப் போய், இருட்டாய் இருக்கும் புதுத் தெருவில் நுழைந்து பால்மோர் (palmour ground) கிரௌண்டின் எதிரே, ஒற்றைப் பூட்டு தொங்கும் நூலகத்தைப் பார்த்தபடி செல்லுகையில், சட்டென்று வீடுகள் மறைந்து, மாடுகள் மேய்ந்துகொண்டிருப்பதாய் மயங்கினேன். 

சொற்பமான சந்ததிகளும் கூட அடங்கிவிட்ட கிராமம் போல இருட்டும் அமைதியும் அப்பிக் கிடந்தன. நூலகத்தை ஒட்டி குழந்தைகளுக்கான குட்டி திடல் இருந்தது. வழக்கமாக அங்கே நண்பர்கள் தாங்கள் முயல்கிற அல்லது மடக்கிவிட்ட பெண்கள் பற்றி இரண்டிரண்டு பேர்களாய் மூலைக்கொன்றாய் ஒட்டுகேட்க முடியாத பாதுகாப்பான இடைவெளியில் பேசியபடி, திடீரென பெரிதாய்ச் சிப்பார்கள். சில நாட்களில், மத்யம வயது ஆளாய் எவரேனும் தனியே அமர்ந்து, "ஏய்... வூட்டுக்குள்ள சிக்னல் (siknal) இல்லேன்னுதான்வுட்டு, இங்க வெட்டவெளியா வந்து பேசுது... இங்கயும் கேக்கலன்னு சொன்னா என்ன செய்ய..." என்று வ்ரக்தியாய் குரலெழுப்பி, ஞாபகமாய் யாரேனும் கேட்கிறார்களா என்று (மறுமுனை பேசுவதை இவர்கள் கேட்கும்போது), கண்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பதில் சொல்லுகையில் மறந்துவிட்டு அதே கத்தலைத் தொடருவார்கள்!

பூமிக்கு காதுகள் உண்டு; ஆனால், எல்லோரும் எதையாவது பேசி வைப்பதில் அதற்கு புரிவதில்லை. இங்கே, மயான அமைதி நிலவுகையில் இன்று கேட்டு விடலாம் என நிலம் தயாராகுகையில், பாலத்தைக் கடக்கும் இரயிலோ, எங்கோ ஒரு நாட்டில் தீயிறைக்கும் வெடிகுண்டின் சத்தத்திலோ the earth hears indistinctive noises alone, நல்ல வேளை என்று தோன்றியது.

மிஷிகனில் இருந்தபோது, செர்ரி ஹில் சாலையில் நடு இரவிலும் விரைந்து கொண்டிருந்த வாகன ஓசைகள், ஒரு கண்ணாடிக் கதவின் சின்ன நகர்த்தலில் மௌனமாயின. ஜனவரி ஒன்று, தீபாவளி தவிர இங்கே மற்ற இரவுகள் பெரும்பாலும் அமைதி தான். அமைதி இருக்கும்போது தான், விழிப்பு அதிகமாகி வேலை நடக்கிறது. ஆனால், காலையில் இரைச்சல்களும் மனிதர்களுடனே எழுந்துகொள்வதால், ஆழ்ந்த உறக்கம் சாத்யமில்லாது போய்விட்டது. உறக்கமில்லா இரவுகளின் விளைவாய் கண்ணெரிச்சல், அசதி... வருட ஆரம்பத்தில் உறுதி பூணுதலும் அதைக் கடைபிடிப்பதும் இயல்பெனில், இன்றைய இரவே இறுதியாக இருக்கட்டும், இனியேனும் தூங்கவேண்டும்.


அந்த நூலகமாகவே 
இருந்திருக்கலாம், 
நானும்,
எண்ணங்கள் ஏதுமின்றி 
சுவையறியா கொள்கலனாய் மட்டும்.

விருப்பமோ இல்லையோ,
நீள் குழல்களின் ஒளி நிறுத்தி  
நீண்ட நாக்குகள் கொண்ட 
பூட்டொன்றினால் அடைத்துவிட்டு 

விழிப்புக்கும் விழி மூடலுக்கும்
சரி சமமாய் நேரம் விட்டு, 
மக்கிப் போன பக்கங்களின்
மணம் தேக்கி முழுயிரவும்

உறங்குவதும் 
எழுப்பப்படுவதும்  
நூலகமா,
பக்கங்களா?

*************************************************

(அரங்கனாதனிடமிருந்து  அரைக் கிலோமீட்டர்தான் என் வீடு)