Showing posts with label Film Review. Show all posts
Showing posts with label Film Review. Show all posts

Monday, May 21, 2012

Invictus



நீ கொடுத்து வைத்தவன். இது, ஸ்ப்ரிங்பாக்ஸின் பயிற்சி உடை என்று சொல்லும்போது, அதை ஏமாற்றத்தோடு மறுக்கும் சிறுவன் காட்சியில் மொத்தக் கதையும் சொல்லப்பட்டுவிட்டதைப் போலிருந்தது. மார்கன் ஃப்ரீமன் என்று அவ்வப்போது புத்திக்கு உறைத்தாலும், நெல்சன் மண்டேலாவின் நிஜ முகம், தூரத்தில் தொலைந்து கொண்டேயிருந்தது. கூகிள் செய்து ஒரு முறை நிஜ முகத்தைத் தேடினேன்.

மதிபா என்றழைக்கும் போதெல்லாம் அது ஒரு குடும்பப் பெயர், ஒரு பரம்பரைக்கு அல்லது தனிமனிதனுக்கு உரியது என்று தோன்றவேயில்லை. ஐயன், அய்யா, அப்பா போன்று தான் உணர்ந்தேன். என் பலவீனமோ மார்கன் ஃப்ரீமனின் பலமோ தெரியவில்லை, அந்த உருவம் தான் மண்டேலா, அந்தக் குரல் தான் அவருடையது என்ற எண்ணம் அழிக்கவியலாது படியத் தொடங்கியது, நான் மறுப்பேதுமின்றிக் கிடந்தேன். என் தந்தையைக் கண்டேன் என்று வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மகன் சொன்னதாகப் படித்ததும், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் என்றெல்லாம் சொன்னதும் அப்பா, அண்ணாக்கள் தலைமுறையின் உணர்வுகளும் அவர்கள் நினைவிலாடும் சிவாஜி கணேசன் நினைவும் வந்தது.
தன் மனதில் படிந்துவிட்ட வன்மங்களைக் களைதலில் மனித்னாகிறான் என்றால், ஒரு சமூகத்தின் அத்தனை தனி மனங்களிலும் படிந்து நிலை கொண்டு விட்ட வன்மம் நீக்குவது?

ஆனால் படம் பாதிக்கு மேல், மாமன் மகளைக் கல்யாணம் செய்து கொள்ளும் சியெஸ்கேவை வென்ற கிங்க்ஸ் லெவன், காரவேலன்சிங் போல ஆகிவிடுகிறது. ரக்பி, அதன் பின்னுள்ள ’நுகபிநி’கள் தவிர காந்தி போன்ற ஒரு சீரியஸ் படம் பார்க்க்வேண்டும், மார்கன் நடித்து என்று மெல்லிய அசதியுடன் உறங்கப்போனேன்.

It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul.

Thursday, September 1, 2011

மங்ககாத்தா, will become மானங்காத்தா?

Disclaimer: 1. 'தெய்வ திருமகள் திரையிடப்பட்டதும் 'அந்தப் படத்த பாத்ததுல எனக்கு Rs.875 மிச்சம்.  ஏன்னா, 125 ரூபா தான் டிக்கெட்டு; விக்ரம் ஆயிரம் ரூபாய்க்கு நடிச்சிருந்தாரு' என்று சிரிக்க வைத்த குறுஞ்செய்தி பாதிப்பில் என்னைக் கேட்டால், நிச்சயம்... மங்காத்தாவை, அதுவும் வெளியிடப்பட்ட அன்றே பார்த்ததில் எனக்கு  
எவ்வளவு மிச்சம் என்பதை, இப்பதிவின் ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் சொல்வேன். 

2. அனேகமாக அனைத்து முற்றுப்புள்ளிகளுக்குப் பிறகும் ஒரு :P சேர்த்துப் படிக்கவும்.

கிரிக்கெட் சூதாட்டம், அதை முறியடிக்கவும் பெருந்தொகையைக் கைப்பற்றவும் காவல் துறை (பிரிதிவிராஜ் என்ற அர்ஜுன்) மேற்கொள்ளும் நடவடிக்கைகள், விநாயக் மகாதேவன் (அஜித்) என்ற பணி இடைநிறுத்தம் செய்யப்பட ஒரு காவல்துறை அதிகாரி, தாராவியின் ஒரு தாதாவான ஆறுமுகச் செட்டியார் (ஜெயப்ரகாஷ்), அவர் பொறுப்பில் வரும் ஒரு பெரும் பந்தயத் தொகையைக் (500 கோடி) கைப்பற்றி தப்பியோட நினைக்கும் கையாட்கள்(வைபவ் மற்றும் மஹத் ராகவேந்திரா), ஒரு சப் இன்ஸ்பெக்டர் (அஸ்வின் ககுமனு)ஒரு கம்ப்யூட்டர் தில்லாலங்கடி (பிரேம்ஜி அமரன்) ஆகியோர் செய்யும் தந்திரங்கள்-துரோகங்கள்-துரத்தல்கள் நிரம்பிய ஒரு கடைசி நேர திருப்பம் நிறைந்த உன்னதக் காவியம் தான் "மங்காத்தா". த்ரிஷா, லக்ஷ்மி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, துளசி என நடிகைகள்.



தாவுகின்ற ஒரு டாட்டா சுமோ அல்லது பொலீரோவின் மூக்கு மட்டும் திடீரெனத் தெரிகிறது எல்லோரின் கண்களுக்கும், அதுவும் ஒரு வெட்ட வெளி மைதானத்தில்!  அங்கே என்கவுன்ட்டருக்காக பின்னங்கைகள் கட்டப்பட்ட அரவிந்த், சுற்றிலும் போலீசார். குதித்து, சண்டையிட்டு, சுட்டு அவனைத் தப்பவைக்கிறார் அஜித். தொடர்வது லக்ஷ்மி ராயின் குறைச்சலான உடைகளுடன் ஒரு build up song. காலையில் தன் அறையில் கண்விழிக்கும் அஜித்தின் அருகிலேயே லக்ஷ்மி ராய். அவருடன் இருந்த 'இருப்பு' புரியாத நிலையில் hangover-ல் 'இனிமே சத்தியமா குடிக்கக் கூடாது' என்று சொல்லும் அஜித்துக்கு காதலி வந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறாள். அந்தக் கால சிவாஜி மற்றும்  ரஜினி கமல் ரேஞ்சுக்கு காலில் ஆரம்பித்து, நகப்பூச்சு, சுடிதார் கழுத்து என வளர்ந்து முகத்தில் முடியும் கேமரா. 

அட! த்ரிஷா :) 

ஒருவரைத் துரத்தி இன்னொருவரை சமாளிக்கும் தவிப்பில் நிமிர்ந்து உட்கார்ந்து அதன் பிறகு ஜிவ்வென்று பறக்கும் என நினைத்தால், அணிவகுத்து நிற்கும் நக்ஷத்திர கூட்டத்தில் அனைவரையும் அறிமுகப்படுத்தி ஆளுக்கொரு சீன் வைத்து முடிப்பதற்குள்ளேயே 40% படம் முடிந்துபோகிறது.  

இருங்கள். முழுப் படமும் அனேகமாக நினைவிருப்பினும், காட்சிக்குக் காட்சி இங்கே எழுதப்போவதில்லை. ஆனால் சில விஷயங்களை சேர்ந்து கிண்டல் செய்யலாம்.

அர்ஜுன் அறிமுகமாகும் போது, பின்னால் தாயின் மணிக்கொடி போன்ற பாடல்கள் எல்லாம் இல்லை; பாவம் யாரும் விசில் கூட அடிக்கவில்லை (ஆனால் ஆண்ட்ரியா அறிமுகமாகும் காட்சியில் ஒரே கைதட்டல்கள்). ஆகஸ்ட் 15 தான் ரிலீஸ் செய்யவேண்டுமென்று அவர் பிடிவாதம் செய்யவில்லை என்பதும் ஆச்சிரியமே. விசாரணை அதிகாரி சுப்பு பஞ்சு தற்கொலை செய்துகொண்டதும் அர்ஜுன் தான் ஒரு ஆக்க்ஷன் கிங் என்று நிரூபித்து bokkies-ஐ மடக்கி, அது செய்தித்தாள்களில் வரும்போது, அண்ணா ஹசாரேவும் முதல் பக்கச் செய்திகளில் இருக்கிறார். தயாநிதி அழகிரி தயாரிப்பு என்பதால் கலைஞர் நியூஸ் தெரிகிறது. பிரேம் ஒரு காட்சியில் 'Angry Birds" விளையாடுகிறார்.

வசூலாகப் போகும் ஐந்நூறு கோடியை அடிக்கத் திட்டம் போடும் அஜித், பிரேம்ஜியை அழைத்துக்கொண்டு நன்கு ஏற்றிவிட்டு, இருவருமாய் குழறலாய் நடிக்குமிடத்தில் பிரேம்ஜி ஓவர் ஆக்டிங் செய்து அஜித்துக்கு நல்ல பெயர் வாங்கித்தருகிறார். 

Shutter Island - லியனார்டோ போல, முகத்தை அலம்பினால் சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது அஜித்துக்கு. Italian Job போல அரசு அலுவலக கம்ப்யூட்டர்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து போக்குவரத்து சிக்னலைக் கடத்தலுக்குச் சாதமாக்குகிறார் பிரேம். அந்த பெரிய கண்டெய்னர் லாரியை குறுக்கே நிறுத்தி மறுபக்கம் பணம் இருக்கும் சிறிய Container -ஐ மாற்றும் யுக்தி ஏதோ Just for Laughs, Gags நிகழ்ச்சியைத் தான் பார்க்கிறோமா என எண்ணத்தூண்டுகிறது. எதற்கும் இருக்கட்டும் என்று குருவி, வில்லு போன்ற படங்களை முன்னேற்பாடாய்ப்  பார்த்துவிடுங்கள்; உதவியாய் இருக்கும் இந்தப் படம் தேவலை என்று எண்ணுவதற்கு.

படம் முழுவதும் கிண்டல்கள் அள்ளித் தெளிக்கும் முயற்சியில், இளையராஜாவின் கொடி பறக்க வைக்கும் வகையிலும் ரஹ்மானைக் கிண்டலடிக்கும் வகையிலும், தீ படம் போல 786 என்றெழுதிய உலோகப் பட்டை பிரேமைக் காப்பாற்ற, எல்லாப்புகழும் இறைவனுக்கே என்கிறார்.   அஜித் வசந்த்&கோ பையனைக் கலாய்க்கிறார். அதுக்கு நான் என்ன இளிச்சவாயனா என்று சொல்லவேண்டிய இடத்தில், நான் என்ன சந்தானமா என்கிறார். சாம் ஆண்டர்சனையும் விட்டு வைக்கவில்லை. 

கோடிகள் கடத்தப்பட்ட விஷயமாய் அர்ஜுனிடம் பேசும் அஜித், 'ஏஏ.... ராஸ்ஸா...' எனச் சொல்வதும், ஜெயப்ரகாஷ் அஞ்சலியிடம், 'அம்பத்தஞ்சு வருஷ உழைப்பை ஒரு நாளில் அடைய ஆசைப்படுகிறான் உன் கணவன்' என்று சொல்லும் போதும், சம கால திஹார் அரசியல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

த்ரிஷாவுடனான டூயட் பாட்டு படமாக்கப்பட்ட விதம் அருமை. ஒரே அறையில் கொஞ்சமாக உடைமாற்றிக்கொண்டு இருவரும் ஆட, அவர்களுக்கு ஏற்றாற்போல் வீட்டின் உள்ளழகு, நிறம் எல்லாம் மாறுவது நன்றாக இருந்தது. சில காட்சிகளில் த்ரிஷா எலிக்குஞ்சு போல இருக்கிறார். அந்தப் பாடலில் கதி மாறுவதும் (சதுஸ்ரம்-திஸ்ரம்) குறிப்பிடத் தக்கதே. 

நகரங்களைக் காட்டும்போது அதன் பெயரும் மாநிலமும் காட்டப்படுகின்றன. மக்களுக்கு உருப்படியான தகவல் தரும் இது போன்ற சேவைகளை வியக்கும் அதே வேளையில், அறிவிப்பின்றி காண்பிக்கப்படும் ஒரு காட்சியில் வரும் கடற்கரை சென்னையா, மும்பையா அல்லது மயாமி கடற்கரையா என்று குழம்ப வேண்டியுள்ளது. :P 

மாதவன் மன்மதன் அம்பு-வில் செய்வதைப் போல குடித்தபடி திட்டம் போடும் காட்சி வருகிறது. தசாவதாரம் போல அஜித்தின் நிறைய முகங்கள் கொண்ட தொகுப்பு ஒன்றும் thala 50 என்றெழுதிய காயினும் காட்டுகிறார்கள்.  இடைவேளையில்,  'மங்ககாத்தா- will become மானங்காத்தா? என்று செய்தி அனுப்பினேன் நட்புகளுக்கு. இடைவேளை முடிந்து தாமதமாய் வருகிறவர்களை என்ன செய்வது? சற்று நேரம் என்ன சீன் போச்சு என்ற கவலை விசாரிப்புகள்.

ஒரு சோகப்பாட்டில் த்ரிஷா அமர்ந்திருக்க மற்ற நாற்காலிகளை மேசைகளின் மீது  கவிழ்த்து வைத்திருப்பது ஒரு சிம்பாலிக் ஷாட்டோ (கடையக் கட்டியாச்சு, ஓடீரு...) என எண்ண வைக்கிறது. அஞ்சலி இன்னும் ஒரு சுற்று வளமாகி இரண்டு வரிகளுக்குக் காதல் செய்து, நான்கு வரிகளில் அழுது காணாமல் போக, அதில் சரி பாதி ஆண்ட்ரியாவுக்கு. லக்ஷ்மி ராயைக் கொல்லும் அஜித், பாடல் காட்சிகளின் சிவாஜி ரேஞ்சுக்கு வாயசைப்பதில் 'அந்த' வார்த்தை ஒலி நீக்கம் செய்யப்பட பின்னும் தெளிவாகக் கேட்கிறது. தொழில் முறைப் பெண்ணாக வரும் பாத்திரம் என்றாலும், பெண்களைக் கேவலப்படுத்துவது போல இருந்தது :( 

அஜித் காரும் கையுமாக அலைவதால், Chasing சீன்களில் கதாநாயகனுக்கென்றே ஒருவர் பைக்கை சாவியுடன் சாய்த்து வைத்துவிட்டு, மர மறைவில் அல்லது சரிவில் ஒன்றுக்குப் போவதற்கு பதிலாக, தேவையான இடத்தில் U-turn வந்து விடுகிறது.

அஜித் ரஜினி போல சிரிக்கிறார், ராமன் ஆண்டாலும் பாடப் படுகிறது, குணா கமல் போலப் பேசுகிறார், குண்டுகள் குறுக்கும் நெடுக்கும் பறக்கையில் கவலையின்றி மணி மணி மணி என்று கண் மூடிக் கிறங்கி அழைக்கிறார். ஓரிருவர் நாய் ஏதேனும் வந்துவிடுமோ என்று ஏதோ திரையில் பாம்பு சீன் வந்தது போல காலைத் தூக்கி மேலே வைத்துக்கொண்டார்கள். விஜய் படக்காட்சியும் ஒருமுறை வருகிறது.

Feets, Childrens என்பது போல அர்ஜுன் Informations வந்திருக்கு என்கிறார். 
#வெங்கட்டு பிரபூ.. கவனிப்பா...

ரிவர்ஸ் கியரில் செல்லும் காரில் எல்லாமே புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் போலிருக்கிறது. அர்ஜுன் சுடாமல் வெறும் துப்பாக்கி சத்தம் மட்டும் செய்ய, அஜித்தும் அதே போல் செய்து மடக்குவதில், 'ஒரு போலீஸ் மனசு இன்னொரு போலீசுக்கு தான் தெரியும்' என்ற பின்நவீனத்துவம் வேறு நிறுவப்படுகிறது. வேகமாய் காரில் வந்து கதவைத் திறந்து வைத்தபடி ஸ்கிட் செய்து, நிற்பவனை வாரிக்கொண்டு போகும் காட்சி நன்றாக இருந்தது. அதுவும் சுட்டதாக இருக்கலாம். இருந்தால் லிங்க் கொடுக்கவும். சுமாரான ஒரு படத்தை பார்க்கிங் ரூ.ஐம்பதும் டிக்கெட் ரூ.நூற்றினார்பதும் கொடுத்துப் பார்த்ததில், நூறு ரூபாயாவது தண்டம், என்னை அழைத்துச் சென்றவனுக்கு.
மீதி தொண்ணூறில் ஒரு சாக்கலேட் டிரிங்கும் பாப்கார்னும்.   :D

ஒரு மாகசீனுக்கு இத்தனை குண்டுகள் என்று கணக்கெல்லாம் பார்க்காமல் வெடித்துக் கொண்டேயிருப்பதில் தீபாவளி ரிலீசோ என்ற சந்தேகம் வருகிறது.

'போலீஸ் இல்ல; பொறுக்கி' என்ற ஒரு வசனத்தை நீளப் படமாக்கியிருக்கிறார்கள். (ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கும் நீல வண்ணம் தான் தீம் கலர் போலிருக்கிறது). சண்டைக் காட்சிகள் பரபரப்புக்கு பதிலாக சோர்வடைய வைக்கின்றன. மொக்கை ஆளுங்களோட தீவிர சண்டை போடுமளவிற்கு பாவம் அஜித். 'தண்ணியடிச்ச ஒடனே ஆம்பிளையாயிருந்தாலும் பொம்பளையாயிருந்தாலும் மொக்கை ஜோக் அடிப்பாங்க' என்பது போல வரும் வசனம், முழுப்படத்தையுமே தண்ணியில் தான் எடுத்தார்களோ என எண்ண வைக்கிறது.


Tuesday, January 25, 2011

ஆடுகளம்...




படம் வந்து பல நாட்கள் கழித்து அதைப் பற்றிய விமர்சனம்
எழுதுவதில் நன்மைகள் உண்டு. கதை சொல்ல வேண்டாம்.
மேலும், அந்தப் படத்தை எல்லோரும் பார்த்து அவரவர்க்கும்
ஒரு கருத்து ஏற்பட்டபின்னர் அதை வம்புக்கிழுப்பதில் தான்
பகிர்தலின் உள்ளீடான சுவாரஸ்யம் இருக்கிறது. "என்ன இது!
தனுஷ் பேர் போடறாங்க... ஒரு கைதட்டல் கூட இல்லியே!"
ஆச்சிரியக் குரல் ஒன்று வெளிப்பட்டது, அருகிலிருந்து. ஆனால்,
ஏற்கனவே படம் பார்த்தவர்கள் உள்ளே இருந்தார்கள்; விசிலும்
அடித்தார்கள், டாப்ஸி என்ற பெயருக்கு. 

வெள்ளாவி வெச்சது மாதிரி இருக்க.. வெயிலே பட்டதில்லையா
ஒம்மேல என்ற வியப்பு நாடு முழுவதும் விரவிக்கிடக்கிறது.
இயக்குனர் வசந்த் கூட 'அழகு குட்டிச் செல்லம்' என்ற பாடலுக்காக (சத்தம் போடாதே) பின்புறங்கள் பிங்க் நிறத்தில் இருக்கும் குழந்தையைத் தேடியதைச் சொன்ன ஞாபகம். ஆனால், மனைவி கோதுமை நிறமாய் வேண்டும் என்ற ஆவலின் அடிப்படை,அப்படி ஒருத்தியை ஆளவேண்டும் என்ற வேட்கை.

***********************************************
ஊருக்குப் பொறாமை.


என்னவள்
அழகிய மனைவியாம் - அவள்
ஆங்கிலம் அருவியாம்...
அவள் முதுகுக் கீறல்களை
உறுத்தும் கரு கூந்தல்
என் கைப்பிடிக்குள்...


ஊருக்கு...
பொறாமை.

(கணையாழி ஜூன்  93).

**********************************************

மதிப்பீடுகளை முன்வைக்காமல் நிகழ்வுகளைக் காட்டிச் செல்லுதல் நன்றாகத் தான் இருக்கிறது. அது இயக்குனரின் முதிர்ச்சி. விமர்சகர்கள் அப்படி அல்ல. நாலும் சொல்ல வேண்டும். சாவலுக்காக அம்மாவிடம், 'ஒன்னைய கொண்டே போடுவேன்' என்று சொல்லும் தனுஷை அனேகமாக எல்லோரும் ரசித்தனர். அந்த ரசிப்பின் காரணம் வட்டார வழக்கு. அதை வேறு ஒரு இடத்தில் பிரயோகம் செய்திருக்கலாம்.  'அம்மா கூட படுத்தவன் எல்லாம் அப்பனா? வெரலப் புடிச்சு கூட்டிகிட்டு போய் நல்லது கேட்டது சொல்லித்தறவன் தான் அப்பன் என்ற விவரமான வசனமும் அப்படித் தான். விவாதமெனில், பதில் கேள்வி வரும்.  ஆனால், இது இப்படித்தான் என்ற, குடியரசு தினமானாலும் நாலு படம் டீவீல என்று சந்தோஷிக்கும் மனதில், சரி அப்பன் இப்படி இருக்கணும், ரைட்டு... புள்ள? என்ற கேள்வியை எழுப்பினால் தேவலை.  கிரிக்கெட், கபடி, சேவல் சண்டை, புறா பந்தயம், கோலி என்று களனுக்குப் பஞ்சமில்லை. வில்லனையும் விளையாட்டையும் அருகே வைத்து குறுக்கே காதலை ஓட்டி சேர்த்துவிட்டால் படம். மாறன், வெற்றி பெற்றது சரியான நடிகர் தேர்வினாலும் அதைச் சொன்ன விதத்தாலும். 

தொய்வில்லை என்ற போதும், பேட்டைகாரனை துரோகம் செய்பவனாய் தனுஷ் அறிந்துகொள்ளும் போதுதான் ரசிகனும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற லெவலில் மாறன் மெனக்கேட்டதில், பிற்பாதி நீண்டுவிட்ட தோற்றம் இருக்கிறது. சேவலையும் இன்னொன்றையும்,  ப(ய)ன்-படுத்தி, ஐரினிடமும்  (taapsee pannu)  அவள் பாட்டியிடமும்,  i am... cock வுட்டிங்... biggu.. என்று தனுஷை பண்ணவைக்கிற Blue Comedy-ஐ விட, மூராசில் சேவல் தோற்கும் போல இருக்கையில், "ஒங்க சாவல் ஜமீனாகப் போகுதுடியேய்.." என்ற கிண்டலுக்கு, "அடிக்கும்னு தான் சொன்னோம்..எந்த சாவல்னு சொன்னோமா?" முருகதாஸ் கேட்பது அருமை. 

குணா, அங்காடி தெரு, சுபிரமணிபுரம் மூன்றும் நினைவுக்கு வந்தன. கருப்பு, ஐரினைப் பின் தொடர்கையில் ஆடி ஆடி வருவது பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருந்தது. :P இரவில் ஊர் சுற்றுவது பெண் விடுதலையின் குறியீடாக, உன் கட்டுகளை நான் அவிழ்ப்பேன் (PI) என்ற உறுதிமொழியாகக் காட்டுவது இருக்கட்டும்;  அதை அவ்விதமாகவே பெண்கள் ஏற்கிறார்களா அல்லது traffic police பார்த்திபன் ஆட்டோ திருடிய வடிவேலுவிடம் "நெனச்சடா",  என்பது போல, ஏற்பாள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறதா? பேட்டைக்காரனிடம் வன்மம் கொண்ட இரத்தினசாமி இத்தனை கொலைகளுக்கிடையில் தலையே காட்டாதிருப்பது ஏன்?  கைல என்ன வெச்சிருக்கானோ என்ற  கிஷோரின் படபடப்பு நன்று. 

படம் முடிந்து வெளியே வந்ததும், அலைகள் ஓய்வதில்லைக்கும் இதற்கும் என்ன வித்யாசம் என்றேன். ஏற இறங்கப் பார்த்த அருணிடம், "அதுல சூர்ய அஸ்தமனத்தப் பாத்து காதலர்கள் ஓடுவாங்க;  இதுல இருட்டுக்குள்ள எங்கியோ! இது தான் வித்யாசம்...", என்றேன். (ஒரு வேளை இன்ஸ்பெக்டர் இருக்கும் தைரியமோ?) அதன் பிறகு காதலர்கள் எங்கே சிங்கியடித்தார்கள் என்பதை வசதியாக யாருமே காட்டுவதில்லை.  

இருமை, வாழ்வின் கவிதை என்று வரிகளை "யாத்த" ஜெயபாலன் படத்தின் பெரும்பலம். ராதா ரவியின் குரல் கொடுக்க, அம்முகம் காட்டும் அஹங்காரம்,  வஞ்சகம், வேண்டுதல், வெறுப்பு, மகிழ்ச்சி, பெருமை எல்லாமே அழகு.  ஆனால், சிலோன் கார அண்ணாச்சிய நம்பினா வெளங்குமா என்ற  பாத்திரத்துக்கும் மனிதருக்குமான (நம்பியார்) பிறழ் புரிதல் வெகுஜன அபிப்ராயமாக மாறாதிருக்கட்டும். 

எண்பத்தி ஒன்பதின் இறுதியில் பெரம்பூர் வந்ததும், ஈரோடு ரயில்வே காலனி போலவே இங்கும் நிறைய ஆங்கிலோ-இந்திய குடும்பங்கள் இருந்தன.  வேலையற்று வெட்டியாய், சிகரெட்-பீடியுடன் உடைந்த ஆங்கிலம் பேசித் திரியும், அழுக்கு ஜீன்ஸ்-கூலிங் கிளாஸ் இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன்.  திரு.வி.க. நகர் கழகக் கண்மணிகள் அவர்களை "பீத்தொற" என்று அடிக்குரலில் கிண்டல் செய்வார்கள்.  தனுஷுக்கு இப்படத்தில் பன்ச் டயலாக் இருக்கிறது. "நாங்க எல்லாம் சுனாமியிலே சும்மிங் போடறவங்க..." ஒரே ஒரு முறை வருவதாலும், ஜி.வி.பிரகாஷின் யாத்தே யாத்தேயின் புயல்-இடி-மின்னலிலும் 
அது கரைந்து விடுகிறது.

"அடுத்த சென்மமுன்னு ஒண்ணு இருந்திச்சின்னா, மவனே நீ (சே)சாவலா இல்ல, இதே மாதிரி ஒரு பக்கியும் இல்லாத எடத்துல அடி வாங்கணும்; நாந்தேன் ஒன்ன தூக்கிகிட்டு போய், துணியக் கொளுத்தி கரிச்ச பொடி ஒத்தடம் குடுக்க்கணும்டா..." என்று ஒரு க்ராப்போ, போந்தாவோ சபதமெடுக்கும் முன்பு வேறு படம் வந்துவிடும்.  அதற்குள், இன்னொரு முறைகூட பார்க்கலாம், ஸ்வாரஸ்யமான படம்.