Wednesday, January 30, 2013

Viswaroopam அளிக்கும் “நடந்தாலும் நடக்குங்கோவ்”இனி எந்த வழக்கானாலும் நீதிபதியானவர் தான் அளிக்கப்போகும் தீர்ப்பை, அமைப்புகளிடம் காட்டி கருத்துக் கேட்ட பின்பு திருத்தி எழுதி அதைக் கோர்ட்டில் ஒட்டிவைக்கலாம்; ஊடகங்களில் வெளியிடலாம்.

பிறகு SMS ஓட்டு அடைப்படையில் தீர்ப்பை இறுதி செய்யலாம்.

அதிலும், எதிர்ப்பு ஓட்டுகளைப் பதிவு செய்தவர்கள் மனம் புண்படாமலிருக்க காலையில் அவர்கள் அக்கவுண்ட்டில் நூறோ இருநூறோ செலுத்தி மாலையில் டாஸ்மாக்கில் திரும்ப வசூலித்துக்கொள்ளலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘அமைப்புகள்’ (எந்த மதம், சங்கம், யூனியன் ஆனாலும்) சார்ந்தவர்களை அருகில் வைத்துக் கொண்டே கதை எழுதும்போதோ படமெடுக்கவோ கொலை கொள்ளையடிக்கவோ பாலியல் வன்முறையோசெய்யலாம்.

Twitter Facebook-ல் கூட முதலில் அமைப்புகளுக்கு மெயில் அனுப்பி Moderator அனுமத்தித்தால் நேரடியாக நம் அக்கவுண்ட்டில் போஸ்ட் ஆகும்படி லின்க் செட் செய்துவிடலாம்.

மூன்றே வாரங்களில் உணர்வுகளைப் புண்படுத்தாமல் கதை, திரைக்கதை, காவியம், புதினம், வலைப்பக்கம் எழுதுவது எப்படி என்று புத்தகம் வெளியிடலாம்.

கோர்ட்டுகளை எல்லாம் குழந்தைகள் மருத்துவம், ஆரம்ப சுகாதார நிலையம், பால் வாடிகளாக மாற்றிவிடலாம்.

தலைமைச் செயலகம் என்ற நாமதேயத்தை தலைமைச் செயல் அகலும் என்றோ The-Lie-My செயற்கலகம் என்றோ மாற்றிவிடலாம்.

நாற்றம் ஒன்றே.. ச்சீ.. மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது.

Wednesday, January 23, 2013

சென்னைப் புத்தகக் கண்காட்சி - 2013வாசனைத் திரவியங்களை வாங்கு முன் மெல்லிய சீறலாய்ப் புறங்கையில் படரவிட்டு,
 காற்றில் கையுதறி மணம் கண்டு, எதையோ இன்னும் தேடி, காப்பிக்கொட்டைகளை முகர்ந்து பார்த்து மூக்கின் திறனை மீட்டெடுத்து, தேர்வு செய்யக் கொஞ்சமாய் தவித்து, அருகில் இருப்பவளை இன்னும் அருகே அழைத்து உன் கையில் தெரியுமா இதன் வாசனை என்று கேட்பதிலெல்லாம் கூட காதலும் மயக்கமுமே விஞ்சி நிற்கும்.

புத்தகக் குவியலில் அப்படி இல்லை. குருவைப் பார்த்த சந்தோஷம், தகப்பனைக் கண்ட பரபரப்பு, நண்பர்களைச் சந்தித்த குதியல், அம்மாவின் ஒரு நிராகரிக்கவியலாத வார்த்தை, மனைவியின் ஒரு ரஹசிய ஆணை, குழந்தையின் ஆவல் ஆனந்தம் என அனேகமாய் அனைத்து உறவுகள் தரும் மகிழ்ச்சியும் ஒரே இடத்தில் கூடிவிடுகிறது, ஒரு திருமண நிகழ்வின்
 கலவையான சப்தங்கள் சுவைகள் உணர்வுகள் போல.

இந்த வருடம் தான் லபித்தது. வாரயிறுதிகள், பண்டிகைக்கால விடுமுறைகளற்ற ஒரு தினமே சரியாக இருக்கும் என எண்ணினேன். நீளக்குச்சி ஐஸ், அகன்று விரிந்த அப்பளம், கோல நோட்டு, சமையல் குறிப்பு, தாம்பத்தியம் என்ற பெரும்பான்மை வாசகக் கூட்டம் வடிந்து விடும் என்பதும், எல்லோருக்கும் கால அவகாசங்கள் இருக்கிற விடுமுறை தினங்களில் தான் மேடைகளிலும் வகுப்புகளிலுமாய் படைப்பாற்றலின் தேவை அதிகமிருக்கும் என்பதும் காரணங்கள். நண்பர்கள் கிரி, கோகுல் எல்லோரும் எப்போது அழைத்தாலும் அன்போடு அழைத்துச் செல்லவும் விழைந்தனர்.  

ஞாயிறன்று (20-1-13) சொக்கன் வருவதால் ஒரு சந்திப்பும் வைத்துக்கொள்ளலாமென பேச்சும் இருந்தது. அன்று அகாதமி பாடங்களை முடித்து கண்காட்சிக்கு வந்தேன். கண்ணே தெரியவில்லை என்றாலும் அவ்விடத்தை விட்டு தொலைந்து போக இயலாதவாறு பின் தொடரும் நிழலின் குரல் போல பின் தொடரும் கூவத்தின் சுழல் நல்லதொரு
 
நாசியடைப்பானாகி வளாகத்தின் எல்லைகளை வறையறுத்துக் கொண்டிருந்தது. ரங்கநாதன் சாலை போன்ற கூட்டம். சற்று நேரம் வெளியே இருந்து அவதானித்து, கூட வந்திருந்த கிரிதரனை மட்டும் உள்ளே போய் அமர்க்களப்படுத்து என்று வாழ்த்தி விடைபெற்றேன். சக்கர நாற்காலியால் அத்தனை பேரின் கணுக்கால்களையும் இடிக்க மனமில்லை. அதோடு, ஒரு வீல்ச்சேர் நிற்கும் இடத்தில் நால்வர் நிற்கலாம்.
கண்காட்சி மறுநாள் முடிவடையும் நிலையில் செவ்வாயன்று போனால் பல புத்தகங்கள் இருக்காது, சில கடைகளையே மூடிவிடுவார்கள் என்றெல்லாம் வேகமாய் உடைக்கும் ஒரு பதிவர் இன்னொரு வருடாந்திரத் தேரிடம் சொன்னதாகச் செவிவழிச் செய்தியும் வந்தது. இல்லையில்லை, காணும்பொங்கல் கூட்டங்களெல்லாம் கடற்கரை, லட்டு, வண்டலூர், மாமல் என்று போய்விட்டதால் ஸ்டால்களில் நல்ல நீள அகலங்கள் உணரப்பட்டது என்றும் கேள்விப்பட்டேன். ஐந்து ரூபாய் நுழைவுச்சீட்டை வாங்கியதும் ஒரு அரங்கத்தின் நுழைவுக்கட்டணம் உள்ளே விற்கப்படும் தேநீரின் விலையாவது இருக்கவேண்டும் என்று எண்ணினேன். பத்து ரூபாயாவது வைத்திருக்கலாம். பார்க்கிங் என்பது பெரிய மண்டைக்குடைச்சலாக இருந்ததாக அருண் சொன்னான். விட்டுச் சென்ற எந்த வண்டியையும் எடுக்கமுடியாமல் இப்படி இருந்ததாம். 
                                                                     
கண்காட்சிக்கான தளம் என்பது சமூஹத்தின் ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலித்துக்

கொண்டிருந்ததோடு, பல இடங்களில் நம்மை நன்கு அறிந்தவர்கள் நமக்காக ஆசையுடன் பறித்து வைக்கும் குழிகள் போல எதிர்பாரா இடங்களில் உள்ளே சென்றது. எங்கும் தடிமனான கேபிள்கள் நீண்ட பாம்புகளாய் மறிக்க தட்டுத் தடுமாறி என்றால் என்ன பொருள் என்பதற்கு ஒரு நமக்கு நாமே லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன் நடந்துகொண்டேயிருந்தது. கிழக்கு, உயிர்மைகாலச்சுவடு, விகடன் என்று முன்முடிவு செய்த பதிப்பகங்கள் நுழைவாயிலில் கடந்ததும் மறந்து போய், எல்லா அரங்குகளையும் பிறகு பிறகு என்று மனதில் குறித்தவாறு பார்த்துக்கொண்டே வந்தேன். 

எல்லா அரங்குகளிலும் ஒரு வீல்ச்சேர் நுழையும் அளவு இடமில்லை, அல்லது ஒரு பக்கம் நுழைந்தால் மறுபக்கம் வர முடியாமல் குறுகியிருந்தன. 
மூலைகளில் கார்ப்பெட்டைக் கைகளால் அமுக்கிப்பார்த்தே திரும்ப வேண்டியிருந்தது. அதற்கே கிழக்கின் உள்ளே ஒரு சக்கரம் மாட்டிக்கொண்டது. சில அரங்குகள் தவிர பெரும்பான்மையானவற்றில் நிறைய அலமாரிகளில் நின்றால் தான் தெரியும் வகையில் புத்தகங்களைப் பல மஹானு’பாவர்’கள் படுக்க வைத்திருந்ததனால், ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று கண்ணில் பட்டவற்றில் மட்டும் தேடினேன். பல இடங்களில் வாயிலில் இருந்தபடி தரிசன ப்ராப்தி மட்டுமே.

மனுஷ்யபுத்திரன் படபடப்பாக எதிரில் வந்தார். கை குலுக்கிவிட்டு மேலே ஏதும் பேசி, கேட்டு அவரைத் தொந்தரவு செய்யாமல் விடை பெற்றேன். ஹிண்டுவின் கேசவ் வெங்கடராகவன் அண்ணாவையும் சந்தித்தேன். சில்பியின் தொகுப்பை வாங்கிவிட்டதாகச் சொன்னார்.

நான்கு பாதைகளுக்கு ஒன்று என்றேனும் வயதானவர்கள் அமர டீக்கடை பெஞ்ச்சாவது போட்டிருக்கலாம். நிறைய பேர் கீழேயே அமர்ந்துவிட்டார்கள். நாங்கள் (நான்-அக்கா–அருண்) அப்படி ஒரு ஓரம் அமர்ந்தபோது (எனக்கென்ன, அட்டாச்ட் நாப்கின் போல அட்டாச்ட் நாற்காலி) சன் நியூஸ் சேனலில் இருந்து ஊனமுற்றோருக்கான அணுகும் வசதி, கழிவறை ஏற்பாடுகள் பற்றிக் கேட்டார்கள். சொன்னேன், இந்த அளவிற்கு செய்திருக்கிறார்கள், இனி வரும் காலங்களில் இதை மேம்படுத்தவேண்டும் என்பதையும் சேர்த்து.

வாங்கியவை:

1. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக 
- தியோடர் பாஸ்கரன்

2. குமரிக்கண்டமா சுமேரியமா 
- பா.பிரபாகரன்

3. இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் 
& ஏழாம் உலகம் - ஜெயமோகன்

4.
ஏன் இந்த உலைவெறி - ஞாநி

5.
ஆயிரத்தில் இருவர், மாயா & மலை மாளிகை - சுஜாதா

6.
ஜாலியா தமிழ் இலக்கணம் - இலவசக் கொத்தனார்

7.
ஜனவரி மாத உயிர்மை.


 கிருஷ்ணா சுஜாதாவின் கதைகள் வாங்கினான். அருண்குமாருக்கு அங்கிருந்த ‘மறுபிறப்பின் இரகசியமும் (சியங்கள் இல்லையா?) ஆவிகள் செய்யும் அற்புதங்களும்’ என்ற புத்தகத்தைக் காட்டி, 
’டேய்.. அத அம்மா கிட்ட காட்டு’
 
‘அம்மா இங்க பாரு…’
‘ச்சீ வெய் அத.. மெண்டலாயிடப்போற’ 

குழந்தைகளுக்காகச் சில புத்தகங்கள்,
 P.G.Wodehouse, Jathaka Stories, Perfect questions and perfect answers, அம்மாவுக்காக தேவி பாகவதம் மூன்று பாகங்கள் ஆதி சங்கரரின் கட் அவுட் இரண்டும் வாங்கினேன். சரஸ்வதி – ஒரு நதியின் மறைவை கிரிதரன் வாங்கினான். சுமேரியாவைக் கொடுத்து சரஸ்வதியைப் படித்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். (இரா.முருகன்) விஸ்வரூபம், விஷ்ணுபுரம், உடையும் இந்தியா இன்னும் பலவும் அடுத்த வருட பட்ஜெட்டுக்கு. பாரா, சொக்கன் மற்றும் பிற நண்பர்கள் எழுதியவை எல்லாம் Dial for Books-ல் வாங்கிக்கொள்ளலாம் என உத்தேசம். தியோடர் பாஸ்கரனின் இரண்டு அத்தியாயங்களும், ஏழாம் உலகத்தை ஒன்பது அத்தியாயங்களும் படித்தாகிவிட்டது.

புத்தகங்களுக்காகச் செலவு செய்தலையோ, வாங்கிய நூல்களை பேணுதலையோ ஒரு தகுதியாகக் கொண்டால் நானெல்லாம் வலைப்பதிவென்ன,
 #NowReading என்று hash tag கூடப் போடமுடியாது. 
தீவிர வாசிப்பில் இருக்கும் ஆர்வத்தின் அதே அளவு வாசிப்பில் சலிப்பும் இருக்கிறது. எனினும், வாங்கிப் பரப்பிய பட்டாசுக் குவியலை விதவிதமாக அடுக்கி, கைக்கொண்டு மகிழ்வதைப்போல, சுற்றிவந்து பார்த்துச் சில நூல்களையேனும் வாங்கவேண்டும் என்று சில வருடங்களாகவே கணன்று வந்த ஆவல் இவ்வருடம் பூர்த்தியானது. எரிகிற நெருப்பில் நெய் வார்த்து என்றைக்கு அணைப்பது, வருடா வருடம் ஜ்யோதி தான்.