Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts

Wednesday, April 29, 2015

Miss you even when you be with me - படக்கதை











இது ஒரு... இல்ல, ஆறு படக்கதை. படங்கள ஏன் இப்பிடி... இல்ல, ஒண்ணும் சொல்லல. புரியாதவங்க கீழ படிச்சுக்குங்க. 















என்ன பண்ற?
......

என்ன பண்றன்னு கேட்டேன்

ச்சு.. ஒண்ணுமில்ல

ஒண்ணுமில்லன்னா

சும்மா இருக்கேன்

ஏன் சும்மா இருக்க?என்ன மிஸ் பண்ணலியா

 
வெட்டியா இருக்கும் போது ஒன்ன மிஸ் பண்ணா பரவாயில்லயா

 
ஏன்?

அப்ப, வேலையா இருக்கும்போது உன்ன மிஸ் பண்ணலன்னு ஆயிடுமே

அப்பவும் பண்ணு, சும்மா இருக்கும் போதும் பண்ணு..

ஏன்...

நீ என்ன எப்பவும் மிஸ் பண்ணிகிட்டே இருக்கணும்

இருந்தா..

இருந்தா... அது சந்தோஷம்

அதுல என்ன சந்தோஷம்

அளவு எல்லாம் சொல்லாம, சொல்லவே முடியாத அளவுக்கு நீ என் மேல பிரியமா இருக்கேன்னு..

மிஸ் பண்ணனும்னா நீ இல்லாம இருக்கணும். அப்ப என்ன பண்ணட்டும். ஒனக்கு, பிரியமா இருக்கணுமா பிரியாம இருக்கணுமா

போடா.. எதாவது சொல்லி என்ன மயக்கற

நான் ஒண்ணும் ஒன்ன மயக்கல, மேடம் இப்ப மயங்கற மூடுல இருக்கீங்க

......
ம்ம்....

......................... :)

ஆமா.. இருக்கேன்... தெரியுதா..

தெரிஞ்சு தான சொல்றேன்

அப்புறம் ஏன் அங்க இருக்க

மிஸ் பண்ணணுமே..

வேணாம் மொத எழுத்த மாத்திக்கலாம்

..............

..........................................................

...................

மண்டு
... யு நோ வாட்?

இப்ப பேசாத..

பேசுவேன்.. யு நோ வாட்?

ஸ்... ஸ்ஸொல்லு...

I miss you even when I be with you

..
ம்ம்..சரி... தெரியுதா, நீ தான் இப்படி எதாவது சொல்லி மயக்கறன்னு

........
ம்ம்.......

ஏ.. இரு..

முடியாது பேசாதன்னு நீ தான சொன்ன

இல்ல பேசலாம்

ம்ஹூம்...

இத சொல்லு...

என்...ன...

அது எப்பிடி நான் இருந்தாலும் என்ன மிஸ் பண்ணுவ?

நேத்து நம்ப என்ன பண்ணினோம்?

ம்முவ்வா.. சொல்ல மாட்டேன் போ..                               

சொல்லுடி..

இப்ப எதுக்கு பேச்ச மாத்தற, சொல்லு எப்பிடி நான் இருந்தாலும் என்ன யு வில் மிஸ் மீ?

அதான் சொல்றேன், சொல்லு நாம என்ன பண்ணினோம்

சினிமாக்குப் போனோம்... ஆ... ம்மெதுவா.. வெளில சாப்பிட்டோம்..

அப்புறம்..

வீட்டுக்கு வந்தோம்

வந்து...?

<3 <3 <3

என்ன பேசினோம்?

எங்க பேசினோம்..

பேசவேயில்லல்ல.. அதான். உன் கூட இருக்கும் போதே உன்ன மிஸ் பண்றது.

என்ன ஒளர்ற.. ஒண்ணும் புரில

புரிலயா, நான் ஒளர்றனா?

சரி. புரில.

இப்ப உன் கூட இருக்கேன்; உன்னோட தான் இருக்கேன். ஆனா, நேத்துப் பேசாம இருந்த ஒன்ன மிஸ் பண்றேன்.. புரியுதா?

....
     .......

            .
            .
            .
            .
            .

         டேய்.



  

Friday, February 13, 2015

முடிவுறாத் தியரம்



இணையத்-தொடல்"


அருகில் இருந்தால் மட்டுமா..
'நினை விட்டுவிட்டுப்
பல லீலைகள் செய்து - நின்
மேனி தனை விடலின்றி'?

நினை அழைத்து அழைத்துப் பல
கதைகளும் பேசி - நின்
"இணையத்-தொடல்" விடலின்றி...

படித்துத் தான் பாரேன் - நேற்று

பேசிக்கொண்ட மின்பேச்சுகள்
மொத்தமும்..


கூடிக் களித்த இரண்டாயிரத்து
நானூற்று அறுபத்தி ஆறு வரிகளையும்
கூட்டிக் கழித்துப் பார்க்கையில்,


நூறுக்கு மேல் தேறவில்லை
சரி, கெளம்பறேன்... இரு...
என்றவற்றை விடுத்து.

-----------------------------------------------------------------------------

உன் பெயர் தான் அதற்கும்


படுக்கையில் விழுந்ததும் 
அசதியை அறியும் - ஆயினும்
எண்ணாமல் மூடுவதில்லை 
இமைகள் 

எண்ணல் என்றது 
உன்னை மட்டுமல்ல 
சுற்றிலும் இரைந்த 
தலையணைகளையும் தான். 

எத்தனை நிறங்கள் எத்தனை மென்மை 

அன்று நீ என்ன நிறம் 
அணிந்திருந்தாய் அப்போது... 
அஃதொன்றே ஆடிடும் 
அறையெங்கும் நிறைந்து 

அந்நிறத்தில் ஆடை கொண்ட 
மென் தரத்தில் அணை தேடி 
என்னருகில் அமர்த்தியதும் 
என்னவாகும் நீ சொல்...

அன்று உய்யும் 
அஹம் கொள்ளும் 
அதற்குப் பெயராய் 
அழகி உன்னை சூட்டியதால்.

-----------------------------------------------------------------------------

சேமித்துக்கொண்டதற்கு


ஒரு தலையணை
கை பேசியின் முனை
சாய்ந்து நின்ற சுவர்
தேநீர்க் கோப்பை

வார இதழின் ஏதோ ஒரு பக்கம் 
சிறு கரண்டி ஒன்றின் பாதி உள்ளிருப்பு
காகிதங்கள் விலகிய மேஜை
மீசையை ஒதுக்கிய ஒரு விரல்

ஒரு கைக்குட்டை 
செலுத்துமுன் கிலுங்கியதோர் சாவி 
கையெழுத்திடவேண்டி
சட்டை துறந்த பேனா

புதியதாய் திறந்த கோப்பு 
மேலாளரின் மேசையில் நின்றிருந்த ஒரு பறவை
பாத்திரத்தை திறந்த பின்னும்
கீழே வைக்காத மூடி 

பிற்பகல் கலக்கத்தில்
வாய் மூடிய புறங்கை 
தூக்கிப்போடுமுன் விரலிடை தேங்கிய
மிட்டாய்க் காகிதம்
வீடடைந்ததும் சிரித்த 
பக்கத்து வீட்டுக் குழந்தை 
எதிர்பார்த்து தரையில் கிடந்த
அஞ்சல் உறை 

காய்ந்துவிட்டது என மடிக்கப்பட்ட
துணிகளில் ஒன்றிரண்டு 
இரவு உணவுக்குப் பின்
அருந்தாமல் 
பிடித்திருந்த தண்ணீர்க் குவளை

கை பேசியின் முனை
ஒரு தலையணை...

எப்படிச் செய்வாய் கைம்மாறு ஏதும் 
தொகுக்கப்பட்ட இத்தனைக்கும்,
தொட்டுயிர்த்த அத்தனைக்கும் 

உனக்கான என் முத்தங்களை 
சேமித்துக்கொண்டதற்கும்
சேர்தலில் தள்ளியதற்கும்.

--------------------------------------------------------------------------

முடிவுறாத் தியரம்


முற்பகல் ஆன பின்னும் 
முன் விரல் வீற்றிருக்கும்
முன்னிரவுக் கூடலின்
முன்-வந்த வாசனை

நெடிதுயர்ந்தும் தீண்டாது
எத்துணை எரிந்தும் 
பொங்கிடாது 
ஆறியும் ஆர்ப்பரித்தும் 
அடங்கினார்ப்போல் 
அறிவை மயக்கியும்

முற்றிலும் தீர்க்கவியலா
முடிவுறாத் தியரமாய் 
சிக்கலான கணக்குகளுடன் 
சிந்திக்க ஏதுமின்றி

விரல் நுனியில் தேங்கி நிற்கும்
தனிமையின் வாசனை. 

--------------------------------------------------------------------

கீழுதடு 


மௌனத்தில் சேர்ந்திருக்கலாம் என்று 
என் கீழுதட்டிற்கு வைத்துவிட்டேன்
உன் பெயரை, 
தலையணைகளுக்கு 
சூட்டிச்சூட்டி சலித்தே போனதாலும்.

மேல் தாடை அசையாதாம்; 
கீழ் தாடை தான் 
வந்து வந்து சேருமாம்.

கரை மோதும் அலை போல
பரவியே அணைக்கிறாய், 
பிரியும்போது கரைக்கிறாய். 

வாசல்வரை கூட வரும்
வழியனுப்புதலின்
வருடல் வேண்டி


மீறவே செய்கிறேன்
Constitution-னின் கட்டுப்பாடுகளை
நுரைத்துச் செல்லும் அலை பின்னே
கரைந்து செல்லும் மணல் போல
நானும்.

----------------------------------------------------------------------------

ஏதுமில்லை


தலை உதறித் தவிர்க்கும் வரை
தயை கொள்ளாது காமம்
பிடித்திழுக்கும்; பீடித்து நிற்கும் 
தப்பிக்க ஒரே வழி
தாண்டிவிடல்.

தரையிருக்கும் தப்படிகள் 
தருவதில்லை கலக்கங்கள்
உயர்ந்திருக்க உளமஞ்சும் 
உயிர் பயத்தில் சிற்றடிகள் 

முங்கலாம் - சற்றே
மூக்கினுள்ளும் செல்லலாம்
மூழ்கிவிட்டால் உயிரேது
மூவுலகிற்கும் அது உடம்பு.

உடலாய்க் காமம் கொள்ள
மனக் கரகம் சாய்கிறது
சாய்ந்துவிட்ட மனம் பற்றி
சார்த்திய கோல் நிமிர்கிறது 
சாகாது மீண்டும் மீண்டும்
தணிதலுக்காய் தவிக்கிறது.

எத்தனை கொன்றாலும்
எழுந்திருக்கும் மாயம் நீக்கக்
கொல்வதை நிறுத்தினேன்
சாவுமில்லை;பிறப்புமில்லை.  

Thursday, March 7, 2013

ஆரும் அறியக்கூடாதென...


Happened to see this photo in Facebook. A heart with head phones! The picture reminded me the sweet nothings, the whispers of heart to the wishful ears of love...  





அர்த்தமற்ற வார்த்தைகள் அவர்களுக்கு 
அந்தரங்க உச்சாடனமது நமக்கு.

அஹம் தொலைத்த காதலில் தான் 
ஆழ்மனத்தின் நினைவைக்கூட
ஆவலாய் அறிகின்றன காதுகள்,

ஆரும் அறியக்கூடாதென 
இயர் ஃபோனில் இனிக்கின்றன 
இயம்பிடாத சேதிகள்.

ஈருயிர் அற்றுப்போனதில் 
ஈற்றடிகள் தோன்றியதில்
உளமுவந்த காதலொன்று
உலகளந்து மிதக்குதடி. 

ஊசிமுனைக் கூராய் 
ஊனெங்கும் உழுதுபோட்டு 
ஊர் உறவு மறந்துபோய்
ஊடுருவிக் கூடுதடி.

ஊட்டுதலின் அன்பொன்றை
ஊர்ச்சிதம் செய்தபின்
ஊண் தேடும் நா-வயிறும்.
ஊமையாகிப் போனதடி.

எடுத்தே வைத்துக்கொள்ள
எப்போதும் விழைவேனே,
என்னாவாயிற்று எனக்கு
எல்லாமே உனதென்றேன்.

ஏந்திழையைக் கண்டபின்னே
ஏதுமில்லை வேறொன்றாய்
ஏகத்துவப் பேச்செல்லாம் 
ஏய்ப்பதற்கே இல்லையடி.
ஐம்பொறிகள் அனைத்திற்கும்
ஐந்திரியாய் நீயிருக்க
ஐங்கணைகள் துளைத்ததில்
ஐயையோ! எனையிழந்தேன்.

ஒருவருக்கும் தெரியாமல்
ஒளிந்தபடி பேச்செல்லாம்,
ஒரு பார்வை பரிமாறும்
ஓராயிரம் கதை சொல்லும்.

ஓயாது அன்பு செய்யும்
ஓடையெனக் குளிர்ந்திருக்கும்
ஓராட்டில் அமைதிகொள்ளும்
ஔவுதலில் அமுதுண்ணும்

ஔடதமாய் இதம் செய்யும்
ஔவியம் பேசாமல்
ஔசித்தியம் வார்த்தையாகும்
அஃதொன்றே வாழ்க்கையாகும்.

[ஆரும் - யாரும்
ஊன் - தசை, உடல்
ஊர்ச்சிதம் - உறுதிப்படுத்துதல் - make sure
ஊண் - உணவு
ஏந்திழை - அழகிய பெண்
ஐந்திரி - ஐந்திரன் = இந்திரன்; ஐந்திரி = இந்த்ராணி 
( you are the queen, ruling all my senses)
ஐங்கணைகள் - மன்மதனின் ஐந்து அம்புகள் தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, நீலோற்பலம்)
ஓராட்டு - தாலாட்டு
ஔவுதல் - கவ்வுதல் (லிப் லாக்)
ஔடதம் - ஔஷதம் = (காதல்) நோய் தீர்க்கும் மருந்து
ஔவியம் - பொறாமை, தீவினை
ஔசித்தியம் - something which is apt and acceptable]

BTW, கண்ணுக்கு அணிவதை மூக்குக்கண்ணாடி என்பது போல அது என்ன காதுகளுக்காக அணிவதை ஹெட்ஃபோன்ஸ் என அழைப்பது ஏன்? தாங்கிக்கொள்வதாலா? என்னமோ, ஒன்று நிச்சயம், மேலே எழுதிய வரிகளில் அணி-வதை, படிக்கின்ற இ(ல)க்கணமே வதை எல்லாம் உண்டு. :)


Tuesday, February 21, 2012

காதல் பத்து வகைப்படும் - ஒரு (comedy) ஆராய்ச்சியும், நீட்சியும்


சூப்பர் ஸ்டார் பஞ்ச் டயலாக் சொன்னா மட்டும் தான் அதுக்கு ஒரு M.A.Philosophy ரேஞ்சுக்கு விளக்கம் சொல்லணுமா? நாங்களும் விடமாட்டோம்ல.. விஷயத்துக்கு வருவோம்.
காதல் தெரியும். ஒரு தலைக் காதல் கேள்விப்பட்டிருப்போம். தறுதலைக் காதலும் தெரியும். வேற என்னென்ன தலைக் காதல் எல்லாம் இருக்குன்னு அதை அப்படியே கொஞ்சம் டெவெலப் பண்ணலாமா?
  • காதல்: எத்தனை தலை என்பது இருக்கட்டும், ஒரு கால் தான் இருக்கு. அத கவனிச்சீங்களா? அதுனால தான் ஒருத்தர ஒருத்தர் சொமந்துகிட்டு திரியறாங்க போல. #காதல்

  • ஒரு தலை: ஒரு உறைல ரெண்டு கத்தி not allowed. ஒரு தல தான் இருக்கலாம், ஓகே? #DecisionMaking
  • இரு தலை: ஜஸ்ட்டு மிஸ், ஒரு கமா. தல என்ன சொன்னாலும் அந்தம்மா இருன்னு ப்ரேக் போடுவாங்களே அதான் #இரு,தலைக் காதல்.
  • முத்தலை: இங்க தான் பிரித்தாளும் சூழ்ச்சி தேவைப்படுது. மூணு பேரு லவ்வு, முக்கோணக்காதல்னு டெண்ட்டு கொட்டாய்ல பாத்த படத்தையோ பாலச்சந்தரையோ நெனச்சு கொழப்பிக்காதீங்க. இது lover loving the kiss of love. இப்போ புரியுதா? #முத்த+லைக்+காதல்.
  • நாலுதலை: நான்கு தலைன்னு சில பேர் சொல்லலாம். அப்படிச்சொன்னா, அவங்கள நீ இன்னும் வளரவேயில்ல வயசுக்கே வல்லன்னு காமெடி பண்ணி அனுப்பிச்சிருங்க. குதலைன்னா மழலைன்னு ஒரு அர்த்தம். அதோட, அறிவிலான்னு ஒரு பொருள் இருக்கு. ஆகவே, நான் கடவுள் மாதிரி யாராவது நான் குதலைன்னா இப்போ காதல் தானே, நீ சொல்றது கல்யாணத்துக்கு அப்புறந்தான்னு அந்த அகோரிகளிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடுங்கள். (உபரி அறிவேற்றல்: ’கேப்’ இருந்தால் தானே ’எஸ்’ ஆக முடியும். அதனால தான் ரெண்டையும் பிரிக்க முடியாம எஸ்கேப்-புனு சேர்ந்தே வருது.) ஆக்சுவலா, ரெண்டு பேர் லவ் பண்ணினாலும் வீட்ல சொல்லாம பீச், பார்க்குன்னு சுத்த முடியாது. ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பாங்க. எட்டு எனக்கு தெரியும்; ஆயிரம் உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க) அதனால, தோழியோட இவளும், தோழனோட அவனும் தனித்தனியா வந்துட்டு, கடற்கரைல தோழனையும் தோழியையும் கைவிட்டுட்டு கைகோத்துப்பாங்க. அவங்க பிக் அப் ஆயிக்கறது அவங்க பாடு. இது தான் #நாலுதலை.
  • அஞ்சுதலை: யாராவது பாத்துட்டா என்ன பண்றதுன்னு பைக்ல பின்னாடி ஒரு பொண்ணு உ.கால் to உ.தலை கவர் பண்ணி ட்ராவல் பண்ணுதே, அவள பின்னாடி ஒக்கார வெச்சு முன்னாடி ஒரு முகமூடிக் கொள்ளக்காரன் ஓட்றானே அந்த பயம் கலந்த பரவசக் காதல் தான் இந்த #அஞ்சு(ம்)தலை.
  • ஆறுசிரம்: அறு சிரம் இல்லை, கவலை வேண்டாம். ரெண்டு காதல் தோல்வி பார்ட்டிகள் லவ் பண்ணினா அது தான் ஆறுதலைக்காதல். அந்த ஆறுதல் உங்க இருவருக்குமே பிடிச்சிருக்கு. #ஆறுதல், லைக் ஆதல்.
  • ஏழ்தலை: ஏழு தலைக்கு என்னடா சொல்லப் போற மாட்டிக்கினியான்னு நீங்க குரூரமா சிரிக்கறது எனக்குத் தெரியுது. ஹாமில்டன் வாராவதி அம்பட்டன் வாராவதி ஆனா மாதிரி, ஒப்பிலி உப்பிலியானாற் போல, எழுதலை தான் உங்களுக்குப் புரியறதுக்காக ஏழ்தலைன்னு இறங்கி அருள் பொழிகிறது. எதை எழுதல? நீ எனக்கு உயிர், நான் உனக்கே உனக்கு… மன குடும்ப்பா மஞ்சி குடும்ப்பா;நூவே நாக்கு ப்ரேமா, ப்யார் கர்த்தி இப்படிப் பல மொழிகள்லயும் யாரோ யாருக்கோ பாட்டெழுதி எவரோ ட்யூன் போட்டு யார் பணத்துலயோ யார் யாரோ ஆடினாங்களே, அந்த பாட்ட இவிங்க ரெண்டு பேரும் பாடினாங்களே, அத எழுதி வெச்சு கையெழுத்து எல்லாம் போடல. பய புள்ளங்க, ரெண்டும் இப்போ வெவ்வேற எடத்துல கண்ணாலம் கட்டிக்கினு பரம சந்தோஷமா இருக்கு. #ஏழுதலைக் காதல்.
  • எட்டுதலை: Activity to aim at achievement of Goal – ங்கற Principle of Commerce (kAmA+errs) இருக்கே, அது தான் இந்த எட்டுதல். அது பரவசமா கூட இருக்கலாம்; குறிக்கோளாவும் இருக்கலாம். கை நீளமா இருக்கறவங்களுக்கு பக்கத்து சீட்டுக்கு அடுத்த சீட் கூட எட்டலாம் :P அதான் #எட்டுதலை விரும்பும் மனது.
  • நவதலை: ஒன்பது = நவ. But, நவ = புதிய. மலர் தேடி தேன் பருகி, மலர் விட்டு மலர் தாவும் வண்டே, நீ ’கண்ட’ மலர்களிலும் அருந்துவதை எப்போது நிறுத்திவிட்டு சிங்கிள் புய்ப்பத்தில் சிங்க் ஆகி சிறப்புறுவாய் என்ற ஒலகமெகா Sinதனை சடன் ப்ரேக் போட்டு சம்மட்டியால் அடிப்பது தான் #நைன்லவ். (நயன்+ப்ரபு அல்ல).
  • 10Heads: ஒடனே ராவணனன் நெனப்பு வந்தா உங்கள ஒரு பய காப்பாத்த முடியாது. அம்மா ஆட்சி நடக்குது, ஞாபகம் இருக்கட்டும். 10 = பத்து. பத்து = பற்று, பந்தம், பாசம். அதனால, உங்க காதல் மேல பற்றுதலை வையுங்க. வரவு சரியாகும். சௌக்கியமா இருங்க. காதல் = காதலன்/காதலி = #பத்துதலை வை.
(படங்கள் உதவி: இணையம்)
[http://www.katturai.com/?p=2477 ல் சென்ற 14.2.12 அன்று வெளியிடப்பட்டது]

காதலர் தினம்:


ஃபிப்ரவரி 14 வந்தாலே ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் நிரம்பி வழிகின்றன.
என் ஜன்னலில்
பகலிலும்
நிலா!
நீ!!
போன்ற ‘அ ஆ’ கவிதைகளாலும் (அடடே ஆச்சிரியக்குறி) ஒரிஜினல் அக்கவுண்ட் தவிர வேறு பெயரிலும் கடை நடத்துபவர்களின் ‘உன் குழந்தை பெயரில் நானும், என் மகள் பெயரில் நீயும் இன்னும் வாழ்கிறோம்’ போன்ற மனம் திறந்த கீச்சுகளாலும் எவ்வளவு தான் கணினித்திரையை மங்கலாக்கி வைத்தாலும், கண்கள் கூசுகின்றன. தேர்தல் காலங்களுக்கும் வேலண்டைன் டேவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு; இரண்டுமே காது+அலர் தினங்கள். மடிக்கணினி வாழ்க்கையில் இமை கூட அலறுகிறது.
நீங்கள் காதலர் தினம் – நவம்பர்14 குழந்தைகள் தினம் என்று ’வலுக்கட்டாயமாக பொருத்தி மகிழ்வோர் சங்க’ உறுப்பினராக இருந்தால், ‘ஆமா, இதப் பெருசா சொல்றதப் பாத்தா என்னவோ, மத்த தேதில பொறக்கறவங்களோட பெற்றொர்கள் காதல் ஏதுமின்றிக் காமமே, ச்சீ…. ட்டங்கு சிலிப்பு, கருமமே கண்ணாயினர் போல தோணுதுங்களே…’ என்று யாராவது கேட்டால், கவலை வேண்டாம், வுட்ருங்க’.
மனைவியிடம் கல்யாண நாள், பிறந்த நாளை மறந்துவிட்டு செமத்தியாக ’வாங்கிக் கட்டிக்கொள்ளும்’நண்பர்கள் சமாதானத்திற்கு ஆலோசனை கேட்கும்போதெல்லாம் அவரவர் முதலில் சந்தித்த நாள் காதலைச் சொல்லி கன்ஃபர்ம் பண்ணிக்கொண்ட நாள் இப்படி ஏதாவதொன்றை ஞாபக அடுக்குகளில் இருந்து உருவி, ஒரு பரிசையும் வழங்கிவிட்டால் சரியாகிவிடும்; வாங்’கிக்’ ‘கட்டிக்’கொள்ளலாம்’, என்பேன். அதை மறந்து தொலச்சதுக்குப் போன மாசம் தான் டின்னு கட்டினா என்று பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்.
இல்ல, தெரியாம தான் கேக்கறேன். ஒருத்தன் எவ்ளோ தேதிகளத் தான் ஞாபகம் வெச்சுக்கறது? இந்தத் தொல்லைக்கு இப்படி பொதுவாக ஒரு நாளை வைத்துக்கொண்டு அதையே எல்லோரும் கொண்டாடிவிட்டால் பிரச்சினை இல்லை பாருங்கள் என்போர் உண்டு. ஆனால், நமக்கென்று ஒரு நாள், பொருள் பொதிந்த ஒரு நினைவு, பிறருக்குச் சாதாரணமாக இருக்கும் ஒரு பொழுது நமக்கு மட்டும் அதிமுக்கியமாயிருக்கும் ஒரு ஜாலம், அதில் தொடர்புள்ள இரு மனங்கள் மட்டுமே அறிந்திருக்கும் மெல்லிய உணர்வுகளும், கூடி நிறைக்கும் அதன் கனமும், பேசியும் பேசாமலும் பகிர்ந்துகொள்ளும் வார்த்தைகளும், ‘யேய்.. அன்னிக்கும் இதே மாதிரி தான நம்ம பக்கத்து சீட்டு காலியா இருந்துது.. எப்படி இப்படி’ என்று நிகழ்தகவின் ஆச்சிரியங்கள் நிரலிகளை எழுதும் மகிழ்ச்சி… இதை எல்லாம் வேண்டாம் என்கிறீர்களா?
லவ் என்ற வார்த்தயை ப்ரத்யேகமாக உனக்கென்றே சொல்வேன், மற்றவர்களிடம் அன்பு, அஃபெக்‌ஷன் என்ற சொல்லாடலையே பயன்படுத்துகிறேன் என்பதிலிருக்கும் ஒரு வரையறை தான் உறவை பலப்படுத்துவதாகத் தோன்றுகிறது. ப்ரத்யேகமான வார்த்தைகளோ பொருட்களோ தான் நீ முக்கியம், யாரையும்-எதையும் விட என்ற விசேஷ உணர்வைத் தருகிறது.
ரோஜாப்பூவிலிருந்த்து லிப்ஸ்டிக் வரை எல்லாம் விற்பனையாகட்டும்; வணிக தந்திரங்களை விடுங்கள். உங்கள் காதலைக் கொண்டாடுங்கள், இன்னும் கொஞ்சம் பெருமிதத்துடன். சற்று முன்னால் எழுந்திருந்து காதலை/இணையை மனங்கவர்ந்த கவிதையை, இருவருமாய்க் கேட்ட இசையை, பரிசளிப்பதற்காக வாங்கிய புதியதொரு பாடலை ஒலிக்கவைத்து எழுப்புங்கள். தூக்கம் கலைப்பதாக இல்லாமல் இமை திறப்பதற்காய் இருக்கட்டும் அந்த நாள்.
***
சட்டசபையில் செல்ஃபோன்:
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஒரு நீதிபதி வழக்கு நடைபெறும்போது தூங்கிவிட்டார் என்பதால் ‘ங்’ஐ ‘க்’ ஆக்கி வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள். அவையின் மாண்புமிகு உறுப்பினர்கள் செய்யத்தகாதன செய்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் ஆபாசப் படம் பார்த்ததினால் தான் இவ்விஷயம் ஊடகங்களிலும் இணையத்திலும் பெரிதாக விவாதிக்கப்படுகிறது. எவரேனும் ஒரு குறுஞ்செய்தியை படித்தபடி இருந்திருந்தாலோ, தன் ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரின் ஒரு செய்தியைப் படித்துக்கொண்டோ அப்டேட் செய்துகொண்டு இருந்திருந்தாலோ அது ஊடகங்களை ஈர்த்திருக்குமா, நாம் பதற்றம் கொள்வோமா என்றால் இல்லையென்றே எண்ணவேண்டியுள்ளது. ஆபாச வீடியோ பார்த்தனர் என்பது பெருங்குற்றமாகக் காணப்படும் அளவிற்கு மற்ற எதுவும் உறைப்பதில்லை. உண்மையில், சபையில் தாங்கள் ஆற்றவேண்டிய கடமை தவிர வேறு எதைச் செய்திருந்தாலும் அது எத்தனை சிறிய விஷயமாயிருந்திருந்தாலும் அது தவறு தான். ஆனால், அலுவலகத்திலிருந்தே கீச்சும் சமூகத்தில் செய்ய வேண்டியதைத் தவிர வேறு எதைச் செய்தாலும் குற்றமே என்பது எந்த அளவிற்கு முக்கியமாகத் தோன்றும் என்று சொல்லமுடியவில்லை. வீடியோ இல்லையென்றால், இருக்கவே இருக்கிறது சட்டசபையிலேயே புடவையைப் பிடித்து இழுப்பதும், நாக்கை மடித்து முஷ்டியை உயர்த்தி விரல் நீட்டியும் வெட்கப்பட்டும் பொழுதைக்கழிக்க ஆயிரம் வழிகள்.
***
CCL
மிஸ் யுனிவர்ஸ் – உலக அழகி – மிஸ் இந்தியா – மிஸ் சென்னை – மிஸ் அரக்கோணம் – மிஸ் கூடுவாஞ்சேரி….
ஐந்து நாள் டெஸ்ட் மாட்ச், ஒரு நாள் போட்டிகள், 20/20 – IPL, Celebrity Cricket League, அலங்காநல்லூர் அலம்பல்கள் V காட்டுமன்னார்கோயில் கண்ணிவெடிகள் என்று இது வளரக்கூடும். ஐபிஎல்லோ, சிசிஎல்லோ அது பெரும் பணம் விளையாடும் வியாபார விஷயம். இன்று மோதிக்கொண்டாலும் நாளை லாபம் பார்த்து சேர்ந்துகொள்வர்.
ஊர்ப்பக்கம் இது போல ஆனால், அங்கே வியாபாரம், லாபம், மச்சான் நீயும் முக்கியம் நானும் முக்கியம் என்ற மனோநிலைகளெல்லாம் இல்லாது நிஜப் பகையும் அடிதடியும், ஜெயிச்சவன் சந்தோஷத்துலயும் தோத்தவன் கவலையிலும் ஒரே பாரில் குடித்து பரஸ்பர கோவத்தில் அடிதடி போடும் காட்சிகள் சகஜமாகக் கூடும். அப்படியெல்லாம் ஆகாதிருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்.

[http://www.katturai.com/?p=2436  ல் சென்ற 13.2.12 அன்று வெளியிடப்பட்டது]