Tuesday, February 21, 2012

காதலர் தினம்:


ஃபிப்ரவரி 14 வந்தாலே ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் நிரம்பி வழிகின்றன.
என் ஜன்னலில்
பகலிலும்
நிலா!
நீ!!
போன்ற ‘அ ஆ’ கவிதைகளாலும் (அடடே ஆச்சிரியக்குறி) ஒரிஜினல் அக்கவுண்ட் தவிர வேறு பெயரிலும் கடை நடத்துபவர்களின் ‘உன் குழந்தை பெயரில் நானும், என் மகள் பெயரில் நீயும் இன்னும் வாழ்கிறோம்’ போன்ற மனம் திறந்த கீச்சுகளாலும் எவ்வளவு தான் கணினித்திரையை மங்கலாக்கி வைத்தாலும், கண்கள் கூசுகின்றன. தேர்தல் காலங்களுக்கும் வேலண்டைன் டேவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு; இரண்டுமே காது+அலர் தினங்கள். மடிக்கணினி வாழ்க்கையில் இமை கூட அலறுகிறது.
நீங்கள் காதலர் தினம் – நவம்பர்14 குழந்தைகள் தினம் என்று ’வலுக்கட்டாயமாக பொருத்தி மகிழ்வோர் சங்க’ உறுப்பினராக இருந்தால், ‘ஆமா, இதப் பெருசா சொல்றதப் பாத்தா என்னவோ, மத்த தேதில பொறக்கறவங்களோட பெற்றொர்கள் காதல் ஏதுமின்றிக் காமமே, ச்சீ…. ட்டங்கு சிலிப்பு, கருமமே கண்ணாயினர் போல தோணுதுங்களே…’ என்று யாராவது கேட்டால், கவலை வேண்டாம், வுட்ருங்க’.
மனைவியிடம் கல்யாண நாள், பிறந்த நாளை மறந்துவிட்டு செமத்தியாக ’வாங்கிக் கட்டிக்கொள்ளும்நண்பர்கள் சமாதானத்திற்கு ஆலோசனை கேட்கும்போதெல்லாம் அவரவர் முதலில் சந்தித்த நாள் காதலைச் சொல்லி கன்ஃபர்ம் பண்ணிக்கொண்ட நாள் இப்படி ஏதாவதொன்றை ஞாபக அடுக்குகளில் இருந்து உருவி, ஒரு பரிசையும் வழங்கிவிட்டால் சரியாகிவிடும்; வாங்’கிக்’ ‘கட்டிக்’கொள்ளலாம்’, என்பேன். அதை மறந்து தொலச்சதுக்குப் போன மாசம் தான் டின்னு கட்டினா என்று பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்.
இல்ல, தெரியாம தான் கேக்கறேன். ஒருத்தன் எவ்ளோ தேதிகளத் தான் ஞாபகம் வெச்சுக்கறது? இந்தத் தொல்லைக்கு இப்படி பொதுவாக ஒரு நாளை வைத்துக்கொண்டு அதையே எல்லோரும் கொண்டாடிவிட்டால் பிரச்சினை இல்லை பாருங்கள் என்போர் உண்டு. ஆனால், நமக்கென்று ஒரு நாள், பொருள் பொதிந்த ஒரு நினைவு, பிறருக்குச் சாதாரணமாக இருக்கும் ஒரு பொழுது நமக்கு மட்டும் அதிமுக்கியமாயிருக்கும் ஒரு ஜாலம், அதில் தொடர்புள்ள இரு மனங்கள் மட்டுமே அறிந்திருக்கும் மெல்லிய உணர்வுகளும், கூடி நிறைக்கும் அதன் கனமும், பேசியும் பேசாமலும் பகிர்ந்துகொள்ளும் வார்த்தைகளும், ‘யேய்.. அன்னிக்கும் இதே மாதிரி தான நம்ம பக்கத்து சீட்டு காலியா இருந்துது.. எப்படி இப்படி’ என்று நிகழ்தகவின் ஆச்சிரியங்கள் நிரலிகளை எழுதும் மகிழ்ச்சி… இதை எல்லாம் வேண்டாம் என்கிறீர்களா?
லவ் என்ற வார்த்தயை ப்ரத்யேகமாக உனக்கென்றே சொல்வேன், மற்றவர்களிடம் அன்பு, அஃபெக்‌ஷன் என்ற சொல்லாடலையே பயன்படுத்துகிறேன் என்பதிலிருக்கும் ஒரு வரையறை தான் உறவை பலப்படுத்துவதாகத் தோன்றுகிறது. ப்ரத்யேகமான வார்த்தைகளோ பொருட்களோ தான் நீ முக்கியம், யாரையும்-எதையும் விட என்ற விசேஷ உணர்வைத் தருகிறது.
ரோஜாப்பூவிலிருந்த்து லிப்ஸ்டிக் வரை எல்லாம் விற்பனையாகட்டும்; வணிக தந்திரங்களை விடுங்கள். உங்கள் காதலைக் கொண்டாடுங்கள், இன்னும் கொஞ்சம் பெருமிதத்துடன். சற்று முன்னால் எழுந்திருந்து காதலை/இணையை மனங்கவர்ந்த கவிதையை, இருவருமாய்க் கேட்ட இசையை, பரிசளிப்பதற்காக வாங்கிய புதியதொரு பாடலை ஒலிக்கவைத்து எழுப்புங்கள். தூக்கம் கலைப்பதாக இல்லாமல் இமை திறப்பதற்காய் இருக்கட்டும் அந்த நாள்.
***
சட்டசபையில் செல்ஃபோன்:
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஒரு நீதிபதி வழக்கு நடைபெறும்போது தூங்கிவிட்டார் என்பதால் ‘ங்’ஐ ‘க்’ ஆக்கி வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள். அவையின் மாண்புமிகு உறுப்பினர்கள் செய்யத்தகாதன செய்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் ஆபாசப் படம் பார்த்ததினால் தான் இவ்விஷயம் ஊடகங்களிலும் இணையத்திலும் பெரிதாக விவாதிக்கப்படுகிறது. எவரேனும் ஒரு குறுஞ்செய்தியை படித்தபடி இருந்திருந்தாலோ, தன் ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரின் ஒரு செய்தியைப் படித்துக்கொண்டோ அப்டேட் செய்துகொண்டு இருந்திருந்தாலோ அது ஊடகங்களை ஈர்த்திருக்குமா, நாம் பதற்றம் கொள்வோமா என்றால் இல்லையென்றே எண்ணவேண்டியுள்ளது. ஆபாச வீடியோ பார்த்தனர் என்பது பெருங்குற்றமாகக் காணப்படும் அளவிற்கு மற்ற எதுவும் உறைப்பதில்லை. உண்மையில், சபையில் தாங்கள் ஆற்றவேண்டிய கடமை தவிர வேறு எதைச் செய்திருந்தாலும் அது எத்தனை சிறிய விஷயமாயிருந்திருந்தாலும் அது தவறு தான். ஆனால், அலுவலகத்திலிருந்தே கீச்சும் சமூகத்தில் செய்ய வேண்டியதைத் தவிர வேறு எதைச் செய்தாலும் குற்றமே என்பது எந்த அளவிற்கு முக்கியமாகத் தோன்றும் என்று சொல்லமுடியவில்லை. வீடியோ இல்லையென்றால், இருக்கவே இருக்கிறது சட்டசபையிலேயே புடவையைப் பிடித்து இழுப்பதும், நாக்கை மடித்து முஷ்டியை உயர்த்தி விரல் நீட்டியும் வெட்கப்பட்டும் பொழுதைக்கழிக்க ஆயிரம் வழிகள்.
***
CCL
மிஸ் யுனிவர்ஸ் – உலக அழகி – மிஸ் இந்தியா – மிஸ் சென்னை – மிஸ் அரக்கோணம் – மிஸ் கூடுவாஞ்சேரி….
ஐந்து நாள் டெஸ்ட் மாட்ச், ஒரு நாள் போட்டிகள், 20/20 – IPL, Celebrity Cricket League, அலங்காநல்லூர் அலம்பல்கள் V காட்டுமன்னார்கோயில் கண்ணிவெடிகள் என்று இது வளரக்கூடும். ஐபிஎல்லோ, சிசிஎல்லோ அது பெரும் பணம் விளையாடும் வியாபார விஷயம். இன்று மோதிக்கொண்டாலும் நாளை லாபம் பார்த்து சேர்ந்துகொள்வர்.
ஊர்ப்பக்கம் இது போல ஆனால், அங்கே வியாபாரம், லாபம், மச்சான் நீயும் முக்கியம் நானும் முக்கியம் என்ற மனோநிலைகளெல்லாம் இல்லாது நிஜப் பகையும் அடிதடியும், ஜெயிச்சவன் சந்தோஷத்துலயும் தோத்தவன் கவலையிலும் ஒரே பாரில் குடித்து பரஸ்பர கோவத்தில் அடிதடி போடும் காட்சிகள் சகஜமாகக் கூடும். அப்படியெல்லாம் ஆகாதிருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்.

[http://www.katturai.com/?p=2436  ல் சென்ற 13.2.12 அன்று வெளியிடப்பட்டது]

1 comment: