Tuesday, January 24, 2012

நான்கு பேர்களாய்த் தூக்குங்கள்


நவீன கட்டிடக் கலையின் உச்சத்தில் எழுப்பப்பட்ட வானுயர் வடிவங்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இதே சமூகத்தில் தான் நாங்களும் வசிக்கிறோம்.
ஊனமுற்றோர் மையத்தையே இரண்டாவது மாடியில் நடத்தும் செம்மை அறிவு கொண்ட செயலற்ற வர்க்கங்கள் வழி நடத்திச் செல்லும் பாதையில் தான் விரதங்களும் வேண்டுதல்களும் இன்றியே முள்ளும் கல்லும் முட்டிக்கு மெத்தையெனக் காலம் தள்ளுகிறோம்.
கையை நீட்டியதும் தண்ணீர் சொரியும் குழாய்கள், விரலால் தொட்டதும் விவரங்களைத் தருகின்ற விஞ்ஞானம் வளர்ந்த சூழலில் தான் ஒவ்வொரு இடங்களிலும் படிக்கட்டுகளை சக்கர நாற்காலிகளால் கடக்க முடியாமல் கடின வாழ்க்கை நடத்துகிறோம். உதவி செய்வதில் பெருமைகொள்ளும் ஊர், தூக்கிவிட வந்துவிடுகிறது. இந்தச் சூழலில் எப்போது தவறான இடத்தில் கைவைத்துத் தூக்கி சக்கர நாற்காலி சேதமடைந்திடுமோ என்றும், கீழே விழுந்தால் எல்லோருக்கும் அடிபடுமே என்று கவலையுற்றும், ஒரு சாய்வுப் பாதை அமைத்தால் கௌரவமாகக் கடக்கலாமே என்றும் எண்ணுகிறோம். மேலும், இவன் இருந்தால் சற்று சிரமமோ என்று சுமையாகப் பார்க்கும் கருத்து மக்களிடையே உருவாகாமல் இருக்கவேண்டிய தேவையும் உள்ளது.
சக்கர நாற்காலிகளுக்கான சாய்வுப்பாதை அமைந்திடாத அலுவலகங்கள், அஞ்சல் துறை, தொலைபேசியகம், வங்கிகள், ஆங்காங்கு முளைத்து நிற்கும் பல்பொருள் அங்காடிகள், திரையரங்குகள், பொது இடங்கள், மின்தூக்கிகளை (lift) அடையவே ஆறேழு படிக்கட்டுகள் கொண்ட மாடிகள், ஏறிப் பயணிக்க இயலாத நடைபாதைகள், சாலையில் செல்லும்போது பெருமழை வந்தால் ஒதுங்க முடியாத நிழற்குடைகள், வீட்டிலிருந்து காலையே கிளம்பி மாலை தான் வீடு திரும்புவோமெனினும் இயற்கையுடன் மிகுந்த போராட்டத்தில் ஈடுபடுத்தும் பயன்படுத்த முடியாத கழிப்பிடங்கள்.
எத்தனை சொல்வது, ஏமாற்றுவதில் வல்ல ’எத்தனை’ச் சொல்லி என்ன பயன்?
***************************************************************************** 


நான்கு பேர்களாய்
எத்தனை பரந்த மனது…
வழிந்தோடும் கருணையில்
கழுத்து வரை நனைந்துவிடுகிறோம்.

இறுக்கிப் பிடியுங்கள்.
சங்கிலியொன்று நெருடுமிடம் தான்
என் கழுத்து.
சங்கென்றும் கூறுவர்.

கழுத்து வரை வந்த கருணையை
விழுங்கித்தொலைக்கப் போகிறேன்
சங்கை இறுக்கிப் பிடியுங்கள்.

யாரேனும் வைத்திருக்கக் கூடும்
இன்னுமொரு சங்கு – கிடைக்காவிடில்,
கொண்டுவாருங்கள் கொள்ளையடித்தேனும்
சும்மா தான் இருக்கிறதாம்
சுதாமனின் தோழனிடம்.

நான்கு பேர்களாய் வந்தால் போதாது
ஆட்கள் வேண்டும் – முன்னே
ஆடிச் செல்வதற்கு.
கனவான்களாகக் கண்டுபிடியுங்கள்,
அவர்களுக்கும்
பரந்த மனதாக இருக்கட்டும்;
கருணை வழிந்தோடட்டும்.

அன்றைய நாளின் அருஞ்செயலாய்
புண்ணியமொன்றைச் செய்யப்போவதாய்
ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும்
பகிர்ந்துகொள்ளுங்கள்.

நாக்கமுக்காவோ
யாத்தே யாத்தோ,
கொலவெறியோ
கற்பனை செய்துகொள்ளுங்கள்
குத்தான பாடலொன்றை,
கூடியிருக்கும் கனவான்கள்.

பெருவுடையான் கோயிலின்
உச்சிக்கல்லா என்ன
சாய்வுப் பாதை போட்டு
சந்தடியின்றி உருட்டிச் செல்ல…

நான்கு பேர்களாய்த் தூக்குங்கள்
காலிரண்டும் சூம்பிப் போய்
சவம் தானே இருக்கிறது
சக்கர நாற்காலியில்!



[http://www.katturai.com/?p=970 ல் சென்ற 16.1.12 அன்று வெளியிடப்பட்டது]

2 comments:

  1. எதுவும் செய்ய முடியாத இயலாமையின் உச்சகட்டத்தில் அழுகை தான் வருது.//

    :(((((((((( விரைவில் மாறப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. வார்த்தைகளற்று இதை எழுதுகிறேன்... என்னோடும் இருக்கும் இந்த சமூகத்திற்காக வருந்துகிறேன், அன்பரே...!

    ReplyDelete