வெறுப்பை உமிழ்தலிலும்வெகுண்டே கத்தலிலும்
உறவுகளைக் கேவலப்படுத்தி
உறுப்பைச் சொல்லித் திட்டிவிட்டு
இருட்டின் தவிப்பிலும்
ஈருடல் தகிப்பிலும்
குறிகளே குறியாய்
குற்றமின்றிச் சுவைத்தல் போல
உன்னதப்படுத்தலின் உச்சமொன்றில்
விளிம்பில்
பசுவென்றும் தாயென்றும் பகட்டாய்
விளித்தபடி
நாளொன்றை நல்கிவிட்டு நரியொன்றின்
தந்திரமாய்
பசுக்களாய் எருமைகளாய் ஆடுகளாய்ப்
பிரித்தாண்டு
இல்லத்தின் உள்ளே இறையென்று
கும்பிட்டும்
இழுத்தே அறுத்துப்பின் இரையென்று
கும்பி நிறைத்தும்
என்ன செய்யப் போகின்றாய்,
எனக்கென்று நாளெதற்கு?
எனக்கென்று நாளெதற்கு?

