Saturday, January 15, 2011

Subway-யை நெருங்கி வீடடைவதற்குள்...

இனிய பொங்கல் வாழ்த்துகள். 

படத்தின் முதல் காட்சியிலேயே கதாநாயகன் மூன்று உருவங்களாய்ப் பிரிந்து பின் ஒன்று சேர்வது, பன்ச் டயலாக் பேசும்போது பின்னணியில் குண்டு வெடிப்போ, சுனாமியோ தோன்றுவது எல்லாம் மிகச் சாதாரணம். ஏனெனில், இவைகளைப் பார்க்க முடியும், கேட்டுக்கொண்டே. ஆனால், வெறும் வசனத்தில் பில்ட் அப் அல்லது ஹைப் கொண்டு வருவதை தமிழ் கூறும் பண்பலை வானொலியில் கேட்க ஆளானேன்.

"பொங்கல் அன்னிக்கு, ஒபாமா இந்தியாவுக்கு வரார்.... தெரியுமா"

"...எதுக்கு...?"

"ஏன்னா, அன்னிக்கு தான் கலைஞரோட இளைஞன் ரிலீஸ்..."

தலைலெழுத்து என்று நிலையத்தை மாற்றினால், "யாத்தே.. யாத்தே... யாத்தே.. என்னாச்சோ...." அடியாத்தீ என்பதில் அடியை மறந்துவிட்டார்கள் போலும் அல்லது எழுதி எழுதி - இயற்றி இயற்றி என்ன கண்டாயோ... என்றிருக்குமோ என எண்ணஆரம்பித்து, 'டேய்... ரொம்ப வெட்டியா இருக்கியா, இப்ப்ப்பிடி யோசிக்கிற..' என்று சுய எள்ளல் செய்தபடி, அரங்கநாதன்-சுரங்கப் பாதையில், இறங்க ஆரம்பித்தேன் (மகனே, ராத்திரி ஒரு மணிக்கு என்ன rhyming!!)  

மீண்டும் மாற்றியதில், "எவண்டி ஒன்ன பெத்தான்(1) பெத்தான்(2) பெத்தான்(3)..." என்ற சிம்புவின் குரல் ஒழிக்க (இது பிழையல்ல, நிஜம்), வெறுத்துப் போய், இருட்டாய் இருக்கும் புதுத் தெருவில் நுழைந்து பால்மோர் (palmour ground) கிரௌண்டின் எதிரே, ஒற்றைப் பூட்டு தொங்கும் நூலகத்தைப் பார்த்தபடி செல்லுகையில், சட்டென்று வீடுகள் மறைந்து, மாடுகள் மேய்ந்துகொண்டிருப்பதாய் மயங்கினேன். 

சொற்பமான சந்ததிகளும் கூட அடங்கிவிட்ட கிராமம் போல இருட்டும் அமைதியும் அப்பிக் கிடந்தன. நூலகத்தை ஒட்டி குழந்தைகளுக்கான குட்டி திடல் இருந்தது. வழக்கமாக அங்கே நண்பர்கள் தாங்கள் முயல்கிற அல்லது மடக்கிவிட்ட பெண்கள் பற்றி இரண்டிரண்டு பேர்களாய் மூலைக்கொன்றாய் ஒட்டுகேட்க முடியாத பாதுகாப்பான இடைவெளியில் பேசியபடி, திடீரென பெரிதாய்ச் சிப்பார்கள். சில நாட்களில், மத்யம வயது ஆளாய் எவரேனும் தனியே அமர்ந்து, "ஏய்... வூட்டுக்குள்ள சிக்னல் (siknal) இல்லேன்னுதான்வுட்டு, இங்க வெட்டவெளியா வந்து பேசுது... இங்கயும் கேக்கலன்னு சொன்னா என்ன செய்ய..." என்று வ்ரக்தியாய் குரலெழுப்பி, ஞாபகமாய் யாரேனும் கேட்கிறார்களா என்று (மறுமுனை பேசுவதை இவர்கள் கேட்கும்போது), கண்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பதில் சொல்லுகையில் மறந்துவிட்டு அதே கத்தலைத் தொடருவார்கள்!

பூமிக்கு காதுகள் உண்டு; ஆனால், எல்லோரும் எதையாவது பேசி வைப்பதில் அதற்கு புரிவதில்லை. இங்கே, மயான அமைதி நிலவுகையில் இன்று கேட்டு விடலாம் என நிலம் தயாராகுகையில், பாலத்தைக் கடக்கும் இரயிலோ, எங்கோ ஒரு நாட்டில் தீயிறைக்கும் வெடிகுண்டின் சத்தத்திலோ the earth hears indistinctive noises alone, நல்ல வேளை என்று தோன்றியது.

மிஷிகனில் இருந்தபோது, செர்ரி ஹில் சாலையில் நடு இரவிலும் விரைந்து கொண்டிருந்த வாகன ஓசைகள், ஒரு கண்ணாடிக் கதவின் சின்ன நகர்த்தலில் மௌனமாயின. ஜனவரி ஒன்று, தீபாவளி தவிர இங்கே மற்ற இரவுகள் பெரும்பாலும் அமைதி தான். அமைதி இருக்கும்போது தான், விழிப்பு அதிகமாகி வேலை நடக்கிறது. ஆனால், காலையில் இரைச்சல்களும் மனிதர்களுடனே எழுந்துகொள்வதால், ஆழ்ந்த உறக்கம் சாத்யமில்லாது போய்விட்டது. உறக்கமில்லா இரவுகளின் விளைவாய் கண்ணெரிச்சல், அசதி... வருட ஆரம்பத்தில் உறுதி பூணுதலும் அதைக் கடைபிடிப்பதும் இயல்பெனில், இன்றைய இரவே இறுதியாக இருக்கட்டும், இனியேனும் தூங்கவேண்டும்.


அந்த நூலகமாகவே 
இருந்திருக்கலாம், 
நானும்,
எண்ணங்கள் ஏதுமின்றி 
சுவையறியா கொள்கலனாய் மட்டும்.

விருப்பமோ இல்லையோ,
நீள் குழல்களின் ஒளி நிறுத்தி  
நீண்ட நாக்குகள் கொண்ட 
பூட்டொன்றினால் அடைத்துவிட்டு 

விழிப்புக்கும் விழி மூடலுக்கும்
சரி சமமாய் நேரம் விட்டு, 
மக்கிப் போன பக்கங்களின்
மணம் தேக்கி முழுயிரவும்

உறங்குவதும் 
எழுப்பப்படுவதும்  
நூலகமா,
பக்கங்களா?

*************************************************

(அரங்கனாதனிடமிருந்து  அரைக் கிலோமீட்டர்தான் என் வீடு)

11 comments:

  1. //உறங்குவதும்
    எழுப்பப்படுவதும்
    நூலகமா,
    பக்கங்களா?//

    நூலகம் உறங்குவதும் எழுப்பப்படுவதும் ஓ.கே.

    பக்கங்கள்...? திருப்பப்படாமல் இருக்கும் புத்தகத்தின் பக்கங்களை யாரோ எப்பொழுதோ புரட்டிப்படிப்பதைக் குறிக்கிறதா?

    ReplyDelete
  2. //ஒற்றைப் பூட்டு தொங்கும் நூலகத்தைப் பார்த்தபடி செல்லுகையில், சட்டென்று வீடுகள் மறைந்து, மாடுகள் மேய்ந்துகொண்டிருப்பதாய் மயங்கினேன்//

    Any உள்குத்து?

    ReplyDelete
  3. நல்ல கேள்வி, சுபத்ரா.

    நூலகங்கள் எழுப்பப்படுதல் என்பது, உறக்கத்திலிருந்து மட்டுமல்ல; அவைகள் நிர்மாணிக்கப் படுதலும் தான்.

    எனவே, பல இடங்களில், "எழுப்பப்படுவது" நூலகம்; உறங்குவது மக்கிய மனம் வீசும் புத்தகங்கள். :)

    ReplyDelete
  4. மக்கிய மனங்களால் வீசப்படும் புத்தகங்கள் மக்கிய மணம் வீசத் தொடங்குகின்றன :))

    ReplyDelete
  5. "அந்த நூலகமாகவே
    இருந்திருக்கலாம்,
    நானும்,
    எண்ணங்கள் ஏதுமின்றி
    சுவையறியா கொள்கலனாய் மட்டும்."
    - சுமத்தலின் கனமின்றி, கனமறியா அறியாதலின் வெறுமையும் இன்றி, சுவை நிறைந்தும் அது அறியாமலா?

    ReplyDelete
  6. "அந்த நூலகமாகவே
    இருந்திருக்கலாம்,
    நானும்,
    எண்ணங்கள் ஏதுமின்றி
    சுவையறியா கொள்கலனாய் மட்டும்."
    - சுமத்தலின் கனமின்றி, கனமறியா அறியாதலின் வெறுமையும் இன்றி, சுவை நிறைந்தும் அது அறியாமலா?

    ReplyDelete
  7. எழுப்பப்படும் பக்கங்கள் உறங்கும் மனங்களுக்காக அல்லவா?

    ReplyDelete
  8. இலக்கிய வாடை நிறைய வீசுகின்றது. எனக்கும் இலக்கியத்திற்கும் ரொம்ம்ம்ம்ப தூரம். அதனால நான் எஸ்கேப்.

    ReplyDelete
  9. இன்னிக்குத் தான் பார்த்தேன், நல்ல ஆழ்ந்த யோசனை, தூக்கத்திலா? :D

    ReplyDelete