Thursday, April 16, 2009
திருவனந்தபுரமும் பெங்களூருவும்... 2
எதிரிலும் அருகிலும் காலியாயிருந்த இருக்கைகளை யூகிக்க முடியவில்லை. சட்டென மேலே சென்ற பார்வையில் அப்பர் பர்த்தில் வரிசையாய் இருமுடிகள். அது, விஷுவிற்கு சபரி மலை செல்லும் சீசன். இடது புறம் காலியானதால் வலது ஃபிளாட்பாரத்தை மேய்ந்ததில் [இப்போதுதான் அசை போடுகிறேன்], அதைத் தாண்டி ஒரு வண்டியிருந்தது. வருஷம் பூரா விரதம் இருந்தாலும் குறைக்க முடியாத குண்டாக ஒரு "சாமி" அந்த இரயிலின் கதவருகில் கால்களை, அக - - - ட்டி நின்று, மறுபக்கத் தண்டவாளத்தில் நீர்பாய்ச்சியபடி க்ஷண நேரம் சகல கவலைகளும் துறந்து சமாதியானான். “Indians eat in private; ease in public” என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.
முகம் தவிர வேறு அடையாளங்களின்றி ஆறு பெண்கள், ஃபர்தாவில் மறைந்து, வந்து அமர்ந்ததும் செல் போனில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்கள். பாவப்பட்ட கிழவர் போல (குருசாமி) ஒருவர் பிரசன்னமாகி, "இது பூரா ரிசர்வ்டு... எல்லாம் எங்க சீட்டு..." என்றார். அதையே ஆங்கிலத்தில் நான் இரண்டு முறை சொன்னதும், “yeah.. we will go..” என்று சடுதியில் மதம் மாறி, "பீட்டருடன்" சென்றனர்.
"ஏறக்குறைய ரெண்டு ரயில்லயும் ஒரே ப்ராப்ளம் தான்... வசதி, படிப்பு, நாகரீகம் தான் வித்யாசம்", என்று கிளறியதில் அருண் யோசிக்க ஆரம்பித்தான். இரயில் கிளம்பும் நேரம், சொல்லிவைத்தாற்போல குருசாமியின் அனைத்து சிஷ்யர்களும் கையில் கொரியன் மொபைல்களுடன் உட்கார்ந்தார்கள்.
கல்லூரி மாணவர்கள்.
இயர் ஃபோனில் தீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுத்தபடி, அபிமான நாயகிகளின் அசைவுகளுக்கிடையே, கருப்பு வேஷ்டியில் கற்பைக் காப்பற்றிக்கொண்டிருந்தார்கள்.
எல்லா முகங்களிலும் நீண்ட விரதத்தை முடித்து, விரும்பியதை உண்ணும் ஆவலும், தள்ளிவைத்தவற்றை [இத்தனை நாளாக “தள்ளிவை-தவற்றை”?] ஓரிரு தினங்களில் ஸ்பர்சிக்கப்போகும் ஆசையும், மெல்லிய சிரிப்பாய் இரகசியக் குரலாய் அவ்வப்போது மின்னியது. பேன்ட்ரி கார்னர் ஆசாமிகள், சிக்கன் பிரியாணி - முட்டை வகையறாக்களை உரத்த குரலில் விற்றுத்தொலைக்க, "டேய்..மாமா...அவன்கிட்ட சொல்லி வெய்.. இங்கியே வந்து கொரலு குடுத்து என்னை டென்ஷன் பண்றான்..."
த்ராக்ஷையைத் தின்று தன் மேலேயே விதையைத் துப்பிக் கொண்டது ஒன்று. தன் கைகளில் துப்பியதை, ஜன்னலோர முகம் தாண்டி நீட்டி, வெளியே போட்டது ஒன்று.
வெளிநாட்டில், ஃபிரிஜ்ஜிலிருந்து தண்ணியை அப்படியே குடித்து விட்டு, மீதியை வைத்து, அடுத்து வருபவன் அதையே - அதே போல் குடிப்பதும் எதையேனும் தின்று விட்டு, கை அலம்பாமல் இருப்பதும், ஆச்சிரியமில்லை. ஆனால், ஞானபூமி - ஆச்சாரத்தின் பிறப்பிடம், மற்றைய தேசங்களிலே ஆதிவாசிகளாக மனிதர்கள் உலவியபோது, நாகரீகம் தழைத்தோங்கிய பாரதப் பெருநாட்டில்.... இன்னும் பல விஷயங்கள் இவ்வாறு இருப்பது கவலையாய் இருந்தது.
சில நாட்களுக்கு முன், மயிலாப்பூர் ஜூஸ் கடைக்கருகில் இருக்கும் chat corner-இல், விஸ்காம் முடித்த என் சிஷ்யனும் அவன் தோழ-தோழியரும் பானி பூரி, பாவ் பாஜி என்று சகலத்தையும் உள்ளே இறக்கிகொண்டிருந்தார்கள். இவள் பாதி கடிதத்தைத் தான் இன்னொருவன் சாப்பிட்டான். ஒரே பாவ் பாஜி பலரால் கடிக்கப்பட்டது. பேல் பூரியை கையில் எடுத்துச் சாப்பிட்டபின் அதுவே இன்னொருத்திக்கு ஊட்டிவிடப்பட்டது. சரி, இதெல்லாம் ஒரே இளநீரில் ரெண்டு குழாய்கள் கதை என்று பார்த்தால், அதுவும் இல்லை.
எல்லோரும் எல்லோரையும்.
உதட்டோர மீதங்கள் தவிர எல்லாவற்றையும் பகிர்ந்து நட்பின் மேன்மையை கொண்டாடும் அறியாமையோ (அல்லது குரூப் செக்ஸ் போன்று ஒரு மறைமுகக் காமமமோ... ஏதோ ஒன்று...
இரண்டு முறை தன் வேஷ்டியில் துப்பி, நைசாக அதைக் கீழே தள்ளிய மாதவனிடம்,
"துப்பாதபா.. நடக்கற இடம்.." என்றேன்.
"அப்பிடியா.." கிண்டலோ அல்லது ஏதோவொன்று த்வநித்தது.
"வ்ரதம் இருந்துண்டு, மாலை போட்டுண்டு இப்படி எச்சல் பண்றியே... "
வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். ஆனால், அப்புறம் துப்பவில்லை. அவன் பெயர் மாதவன் என்று திருவந்தபுரத்தில் இறங்கும்போது தெரிந்து கொண்டேன். அதற்கு பல ஸ்டேஷன்கள் முன்பே, இரயிலின் சகல சாமிகளும் இறங்கியிருந்தார்கள். சீட்டுக்கு அடியில், எதையாவது விட்டிருக்கிறேனா என்று பார்த்தபோது அவன் படம் ஒட்டிய லைசென்ஸ் கிடந்தது.
"அருண்... இத அதுல இருக்கற அட்ரசுக்கே கூரியர் பண்ணிடலாம், ரூமுக்குப் போனதும்" சற்று நேரம் ஆராய்ந்து விட்டு, "வேணாம்... இது டூப்ளிகேட் தான்" என்றான் அருண்.
Subscribe to:
Post Comments (Atom)
கண்ணை மூடிண்டு தான் போகணும், பல விஷயங்களிலேயும், என்றாலும் இந்தக் கொடுமைகள் இன்னும் இத்தனை அனுபவிக்கலை என்றே தோணறது.
ReplyDeleteம்ம்ம்ம்ம் ஆனால் இந்த எச்சல் விஷயம் சுகாதாரக் கேடு என நினைக்காமல், எல்லாரும் எல்லாரிடமும் வாங்கிச் சாப்பிடுவது தொலைக்காட்சிகளின் மறைமுகப் பிரசாரங்களினாலே தான். இது இப்போ தான் அதிகம் ஆகி இருக்கிறது.
my revered guru, shri umayalpuram sir used to say, AchAram is nothing but hygiene. i felt that these facts are needed to be emphasised in younger minds.
ReplyDelete