Saturday, April 18, 2009

திருவனந்தபுரமும் பெங்களூருவும்... 4


த்ருப்தி என்பது அடைதல் - எண்ணியது எண்ணாதது இரண்டையும்.

எண்ணாததை அடைந்தால் திருப்தியா? ஆம் என்றுதான் நினைக்கிறேன்.

இன்ப அதிர்ச்சி என்றோ அதிருப்தி என்றோ அதைத்தான் கூறுகிறோம். அதாவது, எண்ணியதைக் காட்டிலும் சிறப்பான ஒன்று, எதிர்பாராத, ஆனந்தம் மிகுதலைத் தருதல் இன்ப அதிர்ச்சி அல்லது ஆச்சிரிய ஆனந்தம்.

தவிர, அத்ருப்தியும் ஆனந்தமே.

ஒரு முறை, இரவு நேர பூஜைக்குப் பின், பெரியவாளின் பல்லக்கின் கதவைத் திறந்து வைத்தபடியே தி.நகர் வீட்டில் பேசிக்கொண்டிருக்கையில் (சரண், கௌஷிக் என்று ஞாபகம்) எதற்கோ ரொம்ப வருத்தமாயிடுத்து என்று சரண் சொன்னான்.

"அதுனால என்னடா... அதுவும் ஆனந்தம் தான்" என்றேன்.

"சார்... எப்படி சார்..," இருவரும்.

"VIBGYOR -னு சொல்றபோது எல்லா கலரும் வெள்ளைலேர்ந்துதான் வரதுன்னு சொல்றயோல்யோ? அது மாதிரி, எல்லா உணர்வுகளுமே சந்தோஷம் தான்... இப்போ உங்க ஆத்துலயோ, பிரெண்ட்ஸ்-கோ எதானும் ஆயிடுத்துன்னா, நீ வருத்தப்படுவே இல்லையா? "

"---------- ஆமாம்..."

"சிரிப்பு வருமோ?"

"வராது"

"அப்படி வந்துடுத்துன்னா, நீ ஒரு பைத்தியம்னு நீயே நெனச்சுப்ப.. இல்லாட்டி ஒம்மேலயே உனக்கு எரிச்சல் வரும்.... ம்ம்?

"ஆமாம்..."

"அதான்.... சோகமா இருக்கறபோது, கவலைப்பட்டுண்டு இருக்கோம்னு சொல்றோமே தவிர, அப்போ கவலையோ வருத்தமோ இல்லேன்னா, அது ஆனந்தம் இல்ல.. So, சந்தோஷங்கறது அந்தந்த உணர்வுகளோட இருக்கறது.... சிறுமை கண்டு பொங்கலேன்னா ஆனந்தமில்ல -ங்கறா மாதிரி, அங்க கோபம் வந்தாதான் சந்தோஷம்.. "

"சோகம், கோபம், வெறுப்பு, அருவருப்பு இவைகளின் காரணம் எதுவாயினும், அந்த உணர்வுகளோடு இருத்தல் அல்லது அவற்றை வெளிப்படுத்துதல் ஆனந்தமே. தேன் இனிப்பதாக நாக்கு உணர்ந்தாலும், உள்ளீடாக அதன் சுவை கசப்பும் துவர்ப்பும் என்பதைப் போல".

அதிருப்தியும் திருப்திதான். சகல உணர்வுகளும் சந்தோஷம் போல, சகல நிறங்களிலும் வெள்ளை ஆதாரம் போல, ஒன்று தான் எல்லாமாக இருக்கிறது. எனவே, இல்லாததாகவும் அதுதான் இருக்கிறது".

அடைதலின் ஆனந்தம், அதை அடைவதின் முயற்சியால் பெருகுகிறது. சாதாரண விஷயங்களில் கூட, சிரமப்படுவதன் மூலம் ஆனந்தத்தை அதிகரித்துக் கொள்கிறோம்.

கடவுள்களை கொண்டு மலை மீது வைத்த இரகசியம் அது தான். தெரு முக்கில், மரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை சுலபமாகப் பார்க்கும் மனது அடையும் மகிழ்ச்சி, அவரையே, எங்கேனும் மலை மீதோ, விரதமிருந்தோ பார்க்கும் போது பல மடங்காகிறது. அதையும் கூட, நீட்டித்தால் அருகிவிடும் ஆபத்தைத் தடுக்கவே, "ஜருகண்டிகள்" அவசரப்படுத்தி நகர்த்தி விடுகின்றன.

"என்னதான் சொல்லுங்க, நாப்பத்தெட்டு நாள் விரதம் இருந்து, இருமுடியோட காட்டு வழீல செருப்பிலாம போய்ட்டு வர்ற சந்தோஷம் வேற எதுலயும் வராதுங்க..."

அதற்குத்தான் இத்தனையும். அந்த விரதம் உடலையும், பாதங்களையும் ஒரு மூன்று நாள் சீரற்ற காட்டு வழிக்கு தயார் செய்யத்தான் எனினும், அந்த நியமங்கள் மட்டுமல்லாது, மேற்கொள்ளுகிற கஷ்டங்களாலும் இன்பம் கூடுவது உண்மை.

மலை மேல் கொண்டு வைத்தலும், உள்ளே நுழைந்ததும் காணப்படும் நீண்ட வெற்றுப் ப்ராகாரங்களும் நெடிய கோபுரங்களும், மறைமுகமாக கர்வத்தை அழிக்கும் தந்திரங்களோ உபாயங்களோ தான். நான் மிகச் சிறியவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவே இப்படி பிரம்மாண்டம்.

நுழைந்ததும் வெற்றிடம் கண்டு, வெறுமை மனதைத் தாக்கும். பெரிய கோபுரத்தின் அடியில், சிறிய உருவமாய் நின்று, மையப் பகுதியின் விமானத்தை அண்ணாந்து பார்க்கின்ற அந்த செய்கையிலே, ego கரைந்து, தான் எனும் அகந்தை தாழும்; கரையும்.

உடல் பற்றிய, இருப்பு குறித்த கர்வம் அழிவதால், மனம் ஓரிடத்தில் குவியம். மனமும் உடம்பும் 'husband and wife resemble each other' என்பது போல, ஒன்றையொன்று சார்ந்தவை தான்.

மனம் குவிதல்தான் தன்னைத் தானறிதலின் முதல் படி.

இதுவே தான் கேரளத்தில், வேறு விதமாய் காணப்படுகிறது. அங்கே, குறுகிய வாயில், அதிக வெளிச்சமின்மை போன்றவை அதைச் செய்கின்றன. உடம்பு குறுகினால் ஏனோ, எண்ணங்களும் அலைவதில்லை.. குறைந்த வெளிச்சம், இலக்கை மட்டும் மங்கலாகக் காட்டுவதில், கண்ணும் மனதும் கூர்மையாகி, இலக்குடன் ஒன்றுதல் இலகுவாகிறது.

[ Something secretly implied என்பதை அங்க ஒரு "இக்கு" வெச்சிருக்கேன் என்பார்கள். மனம் குவிதலில் அந்த "க்" அகன்று, இல'க்'கு 'இலகு'வாகிறது :) ]

ஆவுடையார் கோவில், சிதம்பரம், ஸ்ரீரங்கம் போல சிற்ப நுணுக்கங்கள் அதிகம் இன்றி, பிரமிடுகளை நினைவூட்டும் விதமாய் கோவில்கள். சிறிய படிக்கட்டைத் தாண்டி, ப்ரதக்ஷிணமாக கிழக்கு வாசல் வரை சென்று, அங்கே நின்றபோது, ஒரு பெரிய ஆஞ்சநேயரும் கருடனும் இருபுறமும் இருக்க, நடுவில் பெரிய peetam போன்ற அமைப்பிருந்தது. அந்த இடத்தில் வீல் சேரை இறக்கி, சற்று நேரம் இருந்தபோது, பீடத்தின் மறுபுறம் சற்று தொலைவே உள்வட்டம் தெரிந்தது. அங்கே, மேடையில் ஏதோ யக்ஞ கார்யங்கள் போல் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. அதையும் தாண்டி, ஸ்வர்ணமும் விளக்குகளுமாய் தெளிவற்றதாய் தெரிந்தது.

என்ன என்று புரியவில்லை-அது சன்னதி என்பதைத் தவிர...

"ஏன் பெரியவா எனக்கு இதெல்லாம் தெரீல.. நான் என்ன பாக்கறேன் - நீ எங்க இருக்கேன்னு தெரியாம இது எதுக்கு.. நான் ஏன் இந்த மாதிரி இங்க வரணும்....", என்று எண்ணங்கள்....

"சார்.. நீங்க தமிழா - மலையாளமா?"

பின்னாலிருந்து குரல் கேட்டது, யாரோ ஒரு மாமா.

"தமிழ் தான்"

"ஓ... அதாவது, நீங்க பார்த்துண்டு இருக்கறது, ஸ்வாமியோட நாபி பாகம். பதினெட்டு அடி நீளத்துல படுத்துண்டிருக்கார். பூரா, ஆயிரத்தெட்டு சாளக்ராமங்கள்ல பண்ணினது. வைஷ்ணவ சம்ப்ரதாயப்படி, பன்னண்டு சாளக்ராமம் இருந்தா, ஒரு கோவிலுக்கு சமானம். அதனால இங்க தரிசனம் பண்ணீண்டோம்னா, ஆயிரம் திவ்ய தேசங்கள்ல தரிசனம் பண்ண மாதிரி... சேர்த்து பாக்க முடியாது.... மூணு வாசலா வெச்சு, ஸ்வாமியோட தலை, வயிறு, பாதம்னு... இது நாபி பாகம்.... நன்னா பாருங்கோ"

.............................

அங்கிருந்து வந்ததும் ஆட்டோ கிடைக்கவில்லை... ஒரே ஒரு ஆட்டோ. கொஞ்சம் நிறம் கூடி, தலையில் முடியோடு, கலாபவன் மணி சற்று இளைத்தார்போல இருந்த ஓட்டுனரிடம், ஆத்துக்கால் பகவதி டெம்பிள் போகணும் என்றேன். பிள் (ple) என்று அழுத்தினாலும் அவன் காதில் temble என்றுதான் விழுந்திருக்கும்.

ஏறுவதற்குச் சிரமமாய் இருந்தது. சீட் முன்னால் நீட்டியபடி இருந்ததால், இடைவெளி குறைச்சல். உள்ளே என்னைப் பொருத்திக்கொள்ளக் கொஞ்சம் நேரமானது. வீல் சேர் பாதி தான் உள்ளே போனது. அருண் டிரைவரின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மீட்டரைச் சுற்றி கையைக் கொண்டு வந்து, வீல் சேரைப் பிடித்துக்கொண்டான்.

ஆத்துக்கால் பகவதி கோவிலுக்குப் போனோம். அருணை மட்டும் போகச் சொன்னேன். "சார், இங்க கோவில் எல்லாம் எறக்கத்துல இருக்கும்... நல்ல மழை வரும்... தண்ணி உள்ள வரும்... அதுனால நிறைய படிக்கட்டு உண்டு..." என்றார் ஆட்டோக்காரர்.

ஹரிஹரன் வீடு, அங்கிருந்து தொலைவே இருந்தது; ஆனால், நாஞ்சில் அருள் சொன்னது போல கால் மணி நேரத்தில் போனோம் - தேடியலைந்த பத்து நிமிடங்களைக் கழித்தால்.

கொல்லூர் பகவதி தான் அவர்கள் இஷ்ட தெய்வம். ஹரிஹரனின் அப்பா - sanskrit scholar. பாகவதம் எல்லாம் மலையாளத்தில் மொழி பெயர்த்தவர். அக்கா, நல்ல violinist. அத்திம்பேர் கிருஷ்ணன், ப்ரோஹிதர். Online-ல் விவரங்கள் கொடுத்தால், சகல விதமான ஹோமங்களிலிருந்து removal of black magic வரை செய்யும் பிரபலஸ்தர்.

காயத்ரி சகஸ்ரநாமம், அச்சிட்டு ஓலைச்சுவடி போலவே pack செய்து வைத்திருந்ததைக் கொடுத்தார். சுந்தரின் அக்கா வீட்டிற்கும் சென்றோம். கணவர் ISRO-வில் வேலை செய்கிறார். பஜனை, ஜபம் நிறைந்த தொல்லைக்காக்ஷிகளற்ற குடும்பம்.

இரண்டு மணி நேரம் சுற்றிய பின், விநாயகா டூரிஸ்ட் ஹோமை அடைந்தால், 72 ரூபாய்தான் காட்டியது மீட்டர். waiting charge 80 ரூ. சேர்த்துக் கொடுத்தேன். மதிய உணவை விழுங்கி, ரூமைக் காலி செய்து, ரயிலில் பார்த்துகொள்வோம் இரவு உணவை என்ற, "ஆனந்த" முடிவுடன் ஏறிவிட்டோம். விதி சிரித்தது!

இந்த முறையும் பெட்டியில் சாமிகள் பல. எங்கோ பார்த்தவராக இருவர். நினைவுக்கு வந்தது. ஈகா தியேட்டர் சிக்னலில் நிற்கும், traffic police. அதில் ஒருவர் அண்ணா நகர் crime branch ஆசாமி. பெருக்குவதாகச் சொல்லியபடி விடலைப் பையன்கள் குனிந்து எல்லா இருக்கைகளுக்கு அடியிலும் பார்வையில் மேய்வதைக் காட்டினார்.

"சாப்பிடறீங்களா சாமீ", என்று கை நிறைய இட்டிலிப் பொட்டலங்களுடன் கேட்டார்கள். "அடுத்த ஸ்டேஷன்ல வாங்கிக்கறோம்... மத்யானம் சாப்பிட ரொம்ப லேட் ஆயிடுத்து", என்று சொன்னேன். அடுத்த ஸ்டேஷனில் வண்டி நுழையும் போதே, 200,300 சாமிகள் பிளாட்பாரம் எங்கும் பரவியிருந்தார்கள். எல்லா சாமிகளும் பசியாறியது போக non-veg மட்டுமே மீதமிருந்தது. அதற்குப் பின் வந்த ஸ்டேஷன்கள் எல்லாம் இதே கதைதான். எர்ணாகுளம் தாண்டி ஏதோ ஊர் வந்தபோது பதினொரு மணிக்கு மேல் ஆகியிருந்தது. GoodDay biscuit pocket - ஐ "மாமா...பிஸ்கோத்து.." என்று சொல்லாமல் நீட்டினான் அருண்.

பெட்டியில் unreserved போலக் கூட்டம். TTE கண்டபடி கத்தினார். 400 ரூபாய் fine என்று மிரட்டியே காலி செய்தார். உரத்த குரலில் இந்தப் பாடாவதி வேலைக்கு வந்ததை ஒரு பாடு அழுதார். அதையும் மீறி அவ்வப்போது தூங்கினேன்...

தென்னை மரங்களின் ஒண்டுக்குடித்தனமாய் இருந்த கேரளாவை தண்டவாளத்தின் கட்டைகளை விழுங்கியபடி கோயம்புத்தூரில் தொலைத்துவிட்டு அதிகாலை மூன்று மணிக்கு ஏதோ ஒரு ஊரில், மூடியிருந்த புத்தகக் கடையின் நிழலில் கட்டிக்கொண்டிருந்த ஜோடியைப் பார்த்து, higgin bothams - hug in both arms என்று அரைத்தூக்கத்தில் உளறியது pun-பட்ட மனது....

3 comments:

  1. // சுந்தரின் அக்கா வீட்டிற்கும் சென்றோம். கணவர் ISRO-வில் வேலை செய்கிறார். பஜனை, ஜபம் நிறைந்த தொல்லைக்காக்ஷிகளற்ற குடும்பம்.//

    ஆச்சரியம் தான். தொல்லைக்காட்சி இல்லை என்பது.


    //ஆயிரத்தெட்டு சாளக்ராமங்கள்ல பண்ணினது. வைஷ்ணவ சம்ப்ரதாயப்படி, பன்னண்டு சாளக்ராமம் இருந்தா, ஒரு கோவிலுக்கு சமானம். அதனால இங்க தரிசனம் பண்ணீண்டோம்னா, ஆயிரம் திவ்ய தேசங்கள்ல தரிசனம் பண்ண மாதிரி... சேர்த்து பாக்க முடியாது.... மூணு வாசலா வெச்சு, ஸ்வாமியோட தலை, வயிறு, பாதம்னு... இது நாபி பாகம்..//

    இன்னும் போகலை, பார்க்கலாம் எப்போக் கூப்பிடறார்னு!



    //புத்தகக் கடையின் நிழலில் கட்டிக்கொண்டிருந்த ஜோடியைப் பார்த்து, higgin bothams - hug in both arms என்று அரைத்தூக்கத்தில் உளறியது pun-பட்ட மனது....//

    பானகத் துரும்பு????????

    ReplyDelete
  2. paanagam illai, pannagam. pannaga is snake, naan naagaraajan! For the interest I have in pun, this might be pun-naga-thurmbu :)

    ReplyDelete
  3. அண்ணா! நீங்க அடங்கவே மாட்டேளா? :-D :-)

    ReplyDelete