ஒரு கல்யாணக் கச்சேரிக்காக நாகர்கோயில் சென்று வந்தேன். வள்ளியூர், ஆரல்வாய்மொழி என்ற பெயர்கள் எல்லாம் கேட்பதற்கும் இனிமையாகத்தான் இருக்கின்றன. என்னுடைய பார்வை உள்ளீடானதல்ல. வீல் சேரின் விளிம்பில் அமர்ந்து, ஜன்னலின் வழியே கடந்து செல்பவரைக் கணக்கெடுத்தால் போல விளிம்பு நிலை கொண்டதுதான்.
தென் தமிழகம் அழகாயிருந்தது; பயப்படாமல் பார்த்தேன்.
சமீப காலமாக நெல்லைச் சீமை ரவுடிகள் தேசமாக சித்தரிக்கப் பட்டாலும், இயற்கை அழகும் இலக்கியச் செறிவும் கொண்டபூமி அது. அங்கே நீர் வீழும்;நிலை கொள்ளும். காற்று வருடியும் துளைத்தும் போகும்.
அனந்தபுரி எங்களை நாகர்கோயில் சந்திப்பில் நழுவ விட்டபோது ஒன்பது மணியாகியிருந்தது. Collectorate (என்ன ஒரு வார்த்தை... கலெக்டர்-Ate! Secretary-Ate! Minister-Ate) எதிரில் வசந்த் கிருஷ்ணாவில் தங்கினோம். சாயங்காலம் ஐந்து மணிக்கே கச்சேரி.
அங்கே ரிசப்ஷனுக்கு டீ பார்ட்டி என்று தான் பெயர்... நாலரை மணிக்கெல்லாம் ஆரம்பித்துவிடும், ஒரு வாழைப் பழம் - tea or coffee - sweet -snack இது தான் வழக்கம், ஆனால், இப்போது சென்னை போல இரவு வரை reception and dinner என்று பழக்கம் மாறிவருவதாகச் சொன்னார்கள். பா.ஜ.க.வின் பொன்.இராதாகிருஷ்ணன், அ.தி.மு.க.வின் நயினார் நாகேந்திரன் எல்லாம் வந்திருந்தார்கள். "காலைல அஞ்சு மணிக்கெல்லாம் ரெடியா இருங்க.. கார் அனுப்பறேன், கன்யாகுமரி எல்லாம் போயிட்டு வந்திருங்க" என்றார் Dr. தாணப்பன்.
வசுதாவுடன் அவள் அப்பாவும் (இரவி) என்னுடன் அருணும் (nephew) வந்திருந்தனர். இருவரும் உடல் மண்ணுக்கு; உயிர் 20/20-க்கு என்று விடிய விடிய கிரிக்கெட் பார்த்து, கன்யாகுமரி போனபோது சூர்யோதயம் ஆகி 3 நிமிடங்கள் ஆகியிருந்தது. வழியில் ஜெப வீடுகளின் வாசல்களில் பிலோமினாக்கள் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை எல்லாம் கிட்டே போய் காலடி தேடாமல் கரையில் இருந்தபடி முழுதாகப் பார்த்தால் போதும் என்று சொல்லிவிட்டேன். அந்தக் கரையின் வளைவுகள் அழகாய் இருந்தன. விசாகப்பட்டினத்தின் பெரிய பாறைகளில் மோதும் அலைகள் இங்கே சிறிய பாறைகளின் இடுக்குகளில் சீறிக்கொண்டிருந்தன. அலைகளின் நீட்சி தான் மேகம் என்று கடல் பாஷையில் கதைத்தன.
இயற்கையும் செயற்கையும்... இரண்டுமே அழகுதான். இரண்டிலுமே, அந்தத் தருணத்திற்காய் காத்திருத்தல், தருணத்தை விட மிக அதிகம். அங்கிருந்து செல்லும்போது கீழ் மணக்குடி - மேல் மணக்குடி இரண்டு ஊர்களையும் இணைக்கும் பாலத்தைப் பார்த்தோம். இராணுவம் கட்டியிருக்கிறது. அதற்கு ஒரு வருடம் முன்னால் தான் சுமார் பத்து கோடிசெலவில் புதிய பாலத்தை அரசு கட்டியிருக்கிறது. சுனாமி வந்தபோது அதைமூன்றாய் உடைத்து வீசிவிட்டது.
அது, பழையாறு கடலுடன் கடக்கும் இடம். அங்கே தடுப்பதற்கு யாருமற்ற சுதந்திரத்தில் உள்ளே புகுந்து புரட்டிப் போட்டிருக்கிறது ஆழிப் பேரலை. ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் உன்னடிமை பாழில் திரிவதென்ன பாவம் பராபமே என்ற தாயுமானவரின் வரிகள் நினைவுக்கு வந்தன.
மாங்குரோவ் காடுகள் வளர்ப்பு திட்டம் என்று எழுதியிருந்த பாலத் துண்டுகள் பழையாற்றில் ஊறிக்கொண்டிருந்தன.
Wednesday, June 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பயணம்...!!!! அருமையான பதிவு......!!!!!
ReplyDeletethank you, have you read fully?
ReplyDeleteநல்லாருக்கு சார்..செம தமிழ் உங்களுது..
ReplyDeleteநன்றி. அப்படியே, 2,3,4 ஐயும் படித்துவிடவும் :)
ReplyDelete