Thursday, June 18, 2009

நாகர்கோயில் பயணம் - 2


google image of the broken bridge, maNakkudi.

மீட்டெடுக்கவியலா
மனிதர்களின்
மரண ஓலம்,

அலைகளின் பேரிரைச்சலில்

மௌனமாகவே கொள்ளப்பட்டிருக்கும்.

அழுவான் என்று
நம்பியிருந்த உறவுகள் கூட,
வயிற்றுக்குள் மண்ணடைத்து,
வருந்துதற்கு ஆளின்றி

வந்துசேர்ந்த அதிர்ச்சியில்
மாண்டதே மறந்து போகும்;
மறுஜன்மம் வெறுத்துப் போகும்.


பாலங்கள் தாங்கிக்கொண்டிருந்தாலும் மனம் கனத்தது. War Memorial -கள் நினைவில் ஆடின. கூடை கூடையாய் கோயம்பேடு மார்க்கெட்டில் அழுகிவிடும் காய்கறிகள் போல, கொத்து கொத்தாய் உணர்வின்றி மனிதர்கள் மரித்துப் போனது துக்கமாயிருந்தது

காதுகளை வெளிமுகமாய்த் திருப்பிய காலம் தான் மனிதன் உள்ளுணர்வைத் தொலைத்ததின் ஆரம்பமாய் இருந்திருக்கும் எனத் தோன்றியது.
உள்ளே ஏற்படும் நுண்ணிய சலனங்களை, உணர்வுகளை அறியாமல் போன க்ஷணத்தை மனிதன் உணராமல் இருந்திருக்க வேண்டும்.




"போற வழியில தொட்டிப்பாலம் இருக்கு, பாக்கலாமா", என்றார் டிரைவர் சுதர்சன்.

தொட்டிப்பாலம் ஒரு தொங்கும் பாலம் என்று ரவி சொன்னார், ஆசியாவின் மிகப்பெரிய என்று சேர்த்து. ஆனால் அது தொங்கும் பாலம் அல்ல - "அதனுயரக் கால்கள்" அதைத் தாங்கிக்கொண்டிருந்தன என்று அங்கே போனதும் தெரிந்தது. (ஆளுயர என்றால் மாலை; வானுயர என்றால் மிகை! இது சௌகர்யம், உண்மையும் கூட :) )


வீல் சேர் செல்லுமளவு அகலம்,
ஒரு கிலோ மீட்டர் நீளம், இரு மருங்கும் அடர்ந்த பசுமை ஆகிய காரணங்கள் போதுமானதாக இருந்தன, நான் அதைக் கண்டதும் காதல் கொள்ள.

"அருண், இந்த canal மேல இருக்கற குறுக்குக் கட்டைல கால வெச்சு, அந்த ஓரம் போயி, அந்த மரத்துல இருக்கற காயையோ எலையையோ நீ தொடறா மாதிரி ஒரு ஃபோட்டோ எடுக்கலாமா", என்று நான் கேட்டபோது, பாலத்தின் மறுமுனையில் இருந்தோம்.

"ம்ஹும்... வழீல கார்ல தூங்கீண்டே வந்ததுனால தூங்கு மூஞ்சியா இருக்கு" என்றான்.


விதவிதமான வேடங்களில் வந்தாலும் கொண்டையை மறைக்காது, மாட்டிக்கொள்ளும் வடிவேலு போல, மரங்கள் சூழ்ந்து, சற்று தூரத்தில் மறைந்து போன ஆற்றின் பாதையை தென்னை மரங்களின் உச்சிகள் காட்டிக் கொடுத்தபடியிருந்தன. ஆற்றின் கரையில் ஆனை படுத்தாற்போல பெரியதொரு பாறை இருந்தது. அருகே போனால் ஒன்பதாம் வகுப்பில் மூன்று வருடம் தங்கிய ஏதோ ஒரு
பெண்ணை, எத்தனை பேர் காதலித்தார்கள் என்ற கல்வெட்டுகள் கண்ணில் படக்கூடும்! கரையில், முன்குளியலாய் துணி அலசிய இருபெண்களின் பின்னால், இயற்கையாய்ச் செதுக்கிய நீர் நிறைந்த பள்ளங்களில் முகங்களாய்த் தெரிந்த பாறைகள்...












2 comments:

  1. ஒரு நல்-கலைஞனின் "கலா(கலர்)ரசனை மிக்க போஸ்ட்.

    பச்சையாக எழுதும் பல பிளாக்கர்கள் மத்தியில் வெளிர் "பச்சை" சொக்கா போட்டுண்டு "குமரியின்" "பசுமையைப்" பதிவேற்றிய "மேரு-தங்கத்திற்கு" வாழ்த்துகள்.

    லிங்க்-ல போட்ட "தொட்டிப் பாலமும்" பச்சைலதான் இருக்கு!

    ஒரு சந்தேகம். நீங்க "பச்சையம்மா" கட்சியா?

    ReplyDelete
  2. enna"paa.. chai.. ammaa katchiyaa" naanaa? no way...

    ReplyDelete