நல்ல பனிமூட்டம். ஐந்தரைக்கே நல்ல வெளிச்சம்.
பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனியே போல... Smog ஏதும் இல்லையென்றால் சட்டெனத் தெளியும் சாலைகள் கண்ட சென்னைக் கவிஞனின் மனதா அது. அல்லது, காலைச் சூரியனின் சாய்வான கதிர்களின் மெல்லிய தீற்றலுக்கே கரைந்து விடும் பனி அளவுக்குத்தான் பாவம் செய்யலாம் என்ற கட்டோ அனுமதியோவா? "சந்த்யாவந்தனம் பண்றபோது, காமம் தான் செய்தது; கோபமே செய்தது-ன்னு சொல்லத் தேவையில்லாத வாழ்க்கை வாழ்ந்துட்டா..." என்ற பெரியவாளின் குரல் கேட்டது.
அதிகாலையில் எழுந்து சும்மா இருப்பவர்கள் குறைவு. அசைவு தரும் வெப்பம் மிகமிகத் தேவையாயிருக்கும். விலங்குகளின் அதிகாலை அலைச்சல், துரத்தல், ஓடி ஓடி சூடான ரத்தம் பருகுதலுக்குக் கூட அதுவே காரணம் போலும். கிழச்சிங்கம், தானாக வந்து மாட்டிகொள்ளும் சிறு விலங்கைச் சாப்பிடுவது போல, மற்ற மூவரின் அனுசரணை மூவ்களில் வீல்ச்சேருக்கு ப்ரேக் போட்டுவிட்டு, Shuttle cock விளையாடினேன். சர்வீஸ் போட்டால் அது சைடில் எங்கோ சென்றது. கையுடன் பேட்டின் நீளத்தையும் சேர்த்து புரிந்துகொள்ள சில நிமிடங்கள் ஆகியது. தாச-குமார்கள் இறகுப்பந்து-வலை மட்டை எனப் படிக்கவும் (வாசிக்கவும் என்று எழுதினால் மிருதங்கம் ஞாபகம் வருவதால் Backspace).
சுற்றிலும் பலவிதமான பூக்களை ஸ்ருதி,கிருத்திகா, ராகவ் சுட்டார்கள். 'ஏய்..ப்ளீஸ் நா எடுக்கரண்டி', என்று எந்த படத்துக்குமே இரண்டு காப்பி இருந்தது கேமராவுக்குள். மூன்று சூரியகாந்திகள், மூன்று மலைச் சரிவுகள், மூன்று பூச்சிகள் அதோடு ஒரு நேர் பார்வை என்று சுலபமாக நாலும் தெரிந்தவனானேன்.
சுத்துப்பட்டு பதினெட்டு பட்டியிலும் பஞ்சாயத்து பண்ண கொஞ்சம் கஷ்டம். பறந்து விரிந்து இல்லாமல் மரங்கள் எல்லாம் ஒல்லியாக (stomach fire)
உயரமாக இருந்தன. அவலாஞ்சி அணை செல்லலாம் என்று கிளம்பினோம். கொஞ்ச தூரத்தில் Good Shepperd School வெண்மையாய் பரந்திருந்தது. அதற்கப்பால் சரிந்து இறங்கிய சாலையில் கேரட் சுத்தம் செய்யும் சிறிய ஆலை. விலைக்குத் தருவார்களா என்று கேட்டதில், அதெல்லாம் வேண்டாம் என்று பை நிறையத் தந்தார்கள். உடைத்தால் சாறு தெறிக்கும் கேரட். அனேகமாக, நாம் அண்ணாச்சியிடம் வாங்கும் கேரட்டுகள் இங்கே மாடுகள் சாப்பிடும். வழியில் காலிஃப்ளவர் கோஸ் எல்லாம் பயிராகியிருந்தன. உருளைக்கிழங்கு இருந்தது. நீங்களே கூட எடுக்கலாம் என்று நிலக்கிழார் கூறியதும் குழந்தைகள் ஆரவாரமாய் மண் கொத்தினார்கள்.
பீட்ரூட்டும் வாங்கினோம். வழியெங்கும் நிறைய ஹட்டிகள். ஹட்டி என்றால் கிராமமாம் (hutty places are villages, you know!).
ஆடவர் சுய உதவிக் குழு என்ற அறிவிப்புப் பலகைகளை நிறைய பார்த்தேன். ஜெயமோகனை லீனா அழைப்பது போல MCP-யா அல்லது இங்கெல்லாம் மதுரையா தெரியவல்லை. வழியில் பார்த்த ஒரு ஊரின் பெயர் காந்தி கண்டி. 'ம்மவனே... காந்தி கண்டி மெய்யாலுமே இத்த பாக்கறாருன்னுவெய்யி.. இன்னாடா, இப்படிக்கா வந்தா, அதும் நம்ம பேர்ல கருணாநிதி ஜெயலலதா எல்லாம் இருக்க சொல்லோ, இப்டி ஒரு ஊரு கீது.. தோடான்னு பெஜாராயிட மாட்டாரு!' என்று இதைப் படிப்பதற்கு ஆகும் விநாடிகளை விட குறைவான நேரத்தில் ஒரு குரல் கேட்டது. வீடுகளில், நிறைய இடங்களில் சாலையின் மட்டத்தில் நம்மை வரவேற்பது பால்கனி அமைத்த ஒரு திறந்த வராண்டா. அதன் மறு மூலையில் படிகள் கீழிறங்கி வீடு, அதன் கீழே இன்னொரு வீடு, இங்கிருந்து பார்த்தால். கீழிருந்து பார்த்தால் ரெண்டு மாடி வீடு. அதன் மொட்டை மாடி, சாலையோடு!
எமரால்டைத் தாண்டும் போது, அணைக்குச் செல்லும் வழி ஒன்று வலதுபுறம் மேலே ஏறியது;ஏறினோம். மண் சாலையாகவே பல இடங்கள். மூடியிருந்தது. பக்கத்தில் ஒரு புல் வழி இறங்கியது. ஒரு டாட்டா வேன் மானுடத்தில் நம்பிக்கையை அதற்குள் இழந்துவிடாமல் அதன் தலையில் நிறைய bag-கள் வெறுமே கட்டிவைத்திருக்க, ஓரமாக நின்றிருந்தது. கீழேயும் யாரும் தென்படவில்லை. மேலிருந்தே எட்டிப் பார்த்துவிட்டுக் கிளம்பினோம். மிகக் கொஞ்சமே தண்ணீர். மலைச் சரிவுகள் நீர்நிலைகள் இரண்டும் குறைவற இருப்பதால் நிறைய நீர்த்தேக்கங்கள் ( kundhaa, gedhdhai, emarald, avalaanchi, glenmorgan, paikkaaraa, mukkuruththi, மாயார், upper bhavaani ...) கனடாவின் தொழில்நுட்ப உதவி நிறைய பங்காற்றியுள்ளது. கனடா நீர்த் தேக்கம் என்றே ஒரு அணை உள்ளது.
அவலாஞ்சி பவர் ஹவுசுக்கு செல்லும் வழியில் ஒரு செக் போஸ்ட் இருந்தது. நல்ல காட்டு வழியாதலால் வனத் துறையினரின் அனுமதியின்றி செல்ல முடியாது என்றார்கள். சரி, நாளை அனுமதி பெற்று இதே வழியில் வருவோமென்று திரும்பினோம். ஏழு கிலோமீட்டர்கள் வந்த வழியிலேயே திரும்பினால் குந்தா செல்லும் சாலை. அது வழியே சுற்றிக்கொண்டு சென்றால் மஞ்சூர் வழியே Upper Bhavani செல்லலாம், அனுமதி வேண்டாம் என்றார்கள்.
Kundhaa, அதனருகில் இருக்கும் கெத்தே எல்லாம் 1960-70களில் மின்வாரியத்தில் என் தந்தை ஸ்ரீ.சுப்ரமணியன் பணிபுரிந்த (Head Clerk) இடங்கள். கெத்தே நான் பிறந்த ஊரும் கூட. குந்தா, சுற்றிலும் மலைகள் சூழ்ந்து நடுவே ஒரு அகன்ற பறக்கும் தட்டு இறங்கியது போன்ற பள்ள-சம வெளியில் இருந்தது. குறிஞ்சிக் காட்சிகளின் அழகில் ஆங்காங்கே நின்று ரசித்ததில், நேரம் ஆகிக்கொண்டிருந்தது. மலைகளின் வளைவுகளில் காரைச் செலுத்திப் பழகிவிட்டதால் அருண்குமார் i10 -ல் முன்னே சென்றான். மதிய உணவு, சைவர்களுக்குக் கஷ்டம். எல்லா இடங்களிலும் சைவ-அசைவ சிறு கடைகளே இருந்தன. கேரட், சாக்கலேட், பிஸ்கட் என்று காலந்தள்ளி வலது ஓரத்தில் குந்தா பவர் ஹவுசைப் பார்த்தபடி மெதுவே சென்றோம்.
ஓரிடத்தில் அருவி போல நீர் கொட்டியபடியிருக்க, அருகில் மரங்கள் சீராய் வெட்டி அடுக்கப்பட்டிருந்தன. iPhone அதன் சகல முனைகளிலும் வழுக்கியபடி இந்தப் பயணம் முடிவதற்குள் என் விரல்களுக்கிடையே நழுவிவிடுவதாய் பயங்காட்டிக்கொண்டே இருந்தது.
"சித்தப்பா.. wooden logs அடுக்கி வெச்சிருக்கறதால யானை வரும் இங்கெல்லாம்".
"அப்பா சீக்கிரம் படம் எடுத்துண்டு உள்ள வா, ஃபோன் ஜாக்ரத.."
அங்கிருந்து ஊட்டி சாலையில் திரும்புவதற்கு முன், மஞ்சக்கொம்பை -> மூன்று கிலோமீட்டர் என்று அறிவிப்புப் பலகை சொல்லியது. நாகராஜா கோவிலும் அம்மன் கோவிலும் இருப்பதாக அம்மா சொல்லுவாள். சென்றோம்.
மஞ்சக்கம்பை என்று சில இடங்களில் உள்ளது. (மஞ்சு-மேகம்/கம்பை-மலைத்தொடர்).
ஒரு நீரோடை, அதற்கடுத்த பரந்த புல்வெளி மைதானம், பக்கவாட்டில் நாகராஜா கோவில், படிகளில் மேலேறினால் ஹெத்தே அம்மன் கோவில். வாழும் பாம்பு உண்டு. நாகராஜா கோவிலிலிருந்து அம்மன் சன்னதி வரை அது சுரங்கப்பாதை வைத்திருக்கிறது, குடி-புகை பழக்கம் இங்கு வழிபட்டால் போகும், இராமர் இலங்கையிலிருந்து இந்த வழியாக வந்தார் என்பவை தலப் பெருமைகள்.
நான் காரின் உள்ளேயே இருந்தேன். சாலையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த முதியவர் பெருக்கி பெருக்கி, கூடைகளை நிரப்பிக்கொண்டிருந்தார். சாலை மேட்டில் இருந்து, யாரையோ பார்த்து இதோ வருகிறேன் என்று சொன்ன ஒரு மாது, சரிவில் இறங்கி, நீரோடை தாண்டி, புல்வெளி கடந்து, மறுபுறம் மேலேறி, மரங்களுக்கு இடையே மறைந்து போக பத்து நிமிஷம் ஆகியது. கூப்பிடு தூரம், ஒரே நிமிஷம் என்பதெல்லாம் பிரதேச வரைமுறைகளுக்கு உட்பட்டு மாறிக்கொண்டேயிருக்கும் அழகு.
அதே சமயம் உள்ளே, அம்மன் கோவிலில் சுமார் 75 வயதான சாமியாரை அண்ணா மன்னி குழந்தைகள் எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அவர் அங்கு வந்த ஒருவனை, "குடிக்காதன்னு சொன்னேன்ல.. மறுபடியும் குடிச்சா நான் கண்டுபிடிச்சிருவேன்" என்று சொல்லியபடி கன்னத்தில், அறையவில்லை, அடித்தார். தப்பு சாமியாம். ராகவைப் பார்த்ததும், பப்ளிமாஸ் என்று கூப்பிட்டார். குழந்தைகளை எல்லாம் நாளா படிக்கணும் என்று சொல்லி, கன்னத்தில் செல்லமாகத் தட்டினார். சன் டிவி நிஜம் நிகழ்ச்சியில் இவரைப் பார்த்திருக்கிறேன் என்று மன்னி சொன்னாள். சாலையின் மறுபுற மேட்டில் ஒரு மரம் டைனோசர் போல இருப்பதைக் காட்டி, படம் எடுத்து வரச்சொன்னேன். கிருத்திகாவும் ஸ்ருதியும் ஒருவரையொருவர் துரத்தியபடி ஓடினார்கள்.
நான் இங்கிருந்து நாகராஜா கோவிலைக் கூர்ந்து பார்க்க, இருட்டு மூலையிலிருந்து கற்பூர வெளிச்சத்துடன் ஒரு தட்டு ஏந்தி ஒரு கை மட்டும் வெளியே நீண்டது..
படங்கள் யாவும் மிக அருமை. பகிர்வும்.
ReplyDeleteபயணம் = செலவு. பதிவு = வரவு;-)
ReplyDeleteஅருமையா இருக்கு. படங்களும் தெளிவா நல்லா இருக்கு. குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!
முதலில் விவரங்களை படித்துவிட்டு போட்டோ பார்த்து எங்கெங்கு எடுத்தவை என்று மேட்சி செய்து திரும்ப நினைவு கூறுவது இன்னும் நிறையவெ ரசிக்க வைக்கிறது அவலாஞ்சி ரோடு டிரிப் :)
ReplyDelete//மூன்று சூரியகாந்திகள், மூன்று மலைச் சரிவுகள், மூன்று பூச்சிகள் அதோடு ஒரு நேர் பார்வை என்று சுலபமாக நாலும் தெரிந்தவனானேன். //
:))))))))))))))
யேய்.... நான் எடுக்கறேன் நான் எடுக்கறேன்னு கேமரா நண்பர்களிடத்தில் வலம் வரும்போது இது போன்றவை ஜகஜம் :)
Excellent narration. Makes one sit with you and enjoy all that you saw and absorbed.
ReplyDeleteWould have been great if have added "How to Reach" and where to stay also.
I am sure you, Ravi, Indu and the Kids had a lovely time.
இதற்கே இப்படியென்றால் கயிலாயக் குளிருக்கு என் செய்வேன் ஈசனே! //
ReplyDeleteஅதுவும் அருமையான குளிர்தான். தாங்கிக்கலாம். ஒண்ணும் பிரச்னை இல்லை.
படங்கள் அனைத்தும் அருமையாக வந்திருக்கின்றன. அதுவும் அந்த தேனீ! ரொம்ப அருமை, படமும், வர்ணனையும்.
ஆமாம், ஆமாம். வேறு எதற்கு - மேலே எழுதப்பட்டிருக்கும் பின்னூட்டங்களுக்குத் தான்! அழகிய நடை, சுவையான நடை, அநுபவித்து எழுதப்பட்டதால் படிப்பவர்களும் அந்த அநுபவத்தைப் பெற முடிகிறது. நல்ல படங்கள். நன்றி. - ஜெகன்னாதன்
ReplyDelete