Wednesday, August 17, 2011

இரையாகாமல் எதுவரை?

பன்னிரண்டு நிமிடங்களுக்கும் மேல் அசையாமல் வரவேற்பறையின் கதவோரம் கிடந்தேன். மயங்கியெல்லாம் விழவில்லை. அங்கிருந்து ஐந்தடி தொலைவில் வாசலில் கிரில் கதவு. கம்பிகளுக்கிடையே ஆன இடைவெளிகளில் நுழைந்து எதுவும் வந்திடாதிருக்க இரண்டடி உயரத்திற்கு ஒரு தகரப் பலகை. 

அதன் கூரிய விளிம்பை அலட்சியப்படுத்தி இரு கால்களை அதன் மேலும் முன்னிரண்டை ஒரு கம்பியிலும் வைத்தபடி எட்டிப் பார்த்த பூனையை விரட்டினேன். மதியம் இரண்டு மணி முதல் மூன்று வரை மின் வெட்டு. உணவுக்கு முன் உருளலோ அல்லது பின் உருளலோ அன்றி பெரிதாக ஏதும் வேலைகளற்ற வேளை. நிலைச்செய்திகள் கீச்சுக்கள் அற்ற வாழ்க்கை என எண்ணிக்கொண்டிருக்கும் போது, அந்தக் கீச்சொலி கேட்டது. 

மாடிப்படியின் அருகில் நிறுத்தியிருந்த சக்கரவண்டியின் அடியில் ஒரு மூஞ்சூறு.




அண்ணன் பூனையார் அவசரப்பட்டது ஏன் என்று விளங்கியது. க்ரில்லும் தரையும் சேருமிடத்தின் சந்தில் பொறுமையிழந்த நான்கு பாதங்களின் உலாத்தல் தெரிந்துகொண்டேயிருந்தது. தலையருகில் வைத்திருந்த கையைச் சற்றே நகர்த்தியதும் சுனாமி வந்துவிட்டதைப் போல் விழுந்தடித்துக் கொண்டு வாசல் பக்கம் திரும்பி, பின்னர் மனம் மாறி, சக்கரங்களின் அடியே காணாமல் போனது மூஞ்சூறு. 

ஒரே ஒரு நிமிடம் தான். அதற்குள் மீண்டும் வெளியில் வந்துவிட்டது. எங்கள் மூவருக்குமே நல்ல பசி போலும். இப்போது வாசலில் தெரிந்த பாதங்களைக் காணவில்லை. ஒரு சந்தேகம் உறைக்க, அண்ணாந்ததில், அங்கிருந்து கிணற்றுக்குத் தாவி, வாசல் கிரில்லின் மேல் sun shade-ல் குதித்து அங்கிருந்து மாடிப்படியின் மேல் பகுதியில் நீளும் சாளரத்தின் 'தின்' ஓட்டைகள் வழியே தலை நுழைக்க இடமுண்டா என்று தேடியபடி, பூனை முகம்.

"மண்டுவா இருக்கியே.. நான் லேசா வெரல ஆட்டினாக்கூட அவ்ளோ தெரியறதோன்னோ... அங்க உன்ன ஸ்வாஹா பண்ணிடணும்னு கங்கணம் கட்டிண்டு எட்டிப் பாக்கறது தெரியலையாக்கும்... என்ன பொறப்புடா நீ, மனுஷாளாட்டமே.. எங்க வேணுமோ, அங்க கண்ண மூடிண்டு," என மூஞ்சூறுடன் பேசிப்பார்த்தேன். 

இந்த வார்த்தைகளைக் கற்று தந்த அன்று அன்னா ஹசாரே அழைக்கிறார்  என்று பள்ளிக்குச் செல்லாமல் டெல்லிக்குச் சென்றுவிட்டதா அல்லது சமச்சீரில் அந்த பகுதிகள் வெட்டப்பட்டனவா என்று தெரியவில்லை. அது கண்டுகொள்ளாமல் தன் போக்கில் இருந்தது, சகலத்தையும் முகர்ந்தபடி.
நான் குறுஞ்செய்தி ஏதும் வருகிறதா என்று பார்ப்பதற்காக கைபேசியை ஏந்தியபடி படுத்தவாறு பார்த்துக்கொண்டிருந்தேன். கட்டை விரல் பூனைப் பாதங்கள் போன்று keypad-ஐ ஒற்றியபடி கேமராவை உயிர்ப்பித்தது. 

சாளரத்திலிருந்து மறைந்து போய் இப்போது வீட்டைச் சுற்றி வந்து ஜன்னல் வழியே இரை பிடிக்கலாமா என்று யோசித்து அங்கும் எட்டிப் பார்த்தது பூனை.
கண்ணெதிரே ஒரு உயிர் கசாப்புக் கடை சமாதானங்களோடு கீச்சுகள் அடங்கி, ஓரமாய் ரத்தம் சிந்தி, அவ்வுயிரின் அளவேயான அகந்தை மற்றொரு நாளின் மலமாகி விடும் நிகழ்வு இன்றைய பசியாறலாய் நடந்துவிடும் எனத் தோன்றியது. சட்டென்று யோசிப்பதைக் கூட நிறுத்தி விட்டு, சலனமற்று இருக்க முயற்சித்தேன். தேவராய் முனிவராய் வல் அசுரராகி, கணங்களாய்ப் பேயாய் மனிதனாய்.. கல்லாய் ஏழெட்டு நிமிடங்கள். நேரமானதும் இன்னும் நெருங்கி வரவேற்பறையின் கதவருகே வந்து வாசனித்தது மூஞ்சூறு. 

'ஒன் பேர் என்ன ராணி முகர்ஜியா'

ஓரிரு நிமிடங்கள் ஆனபின் அசையாச் சொத்தாகவே ஆகிவிட்டிருந்த என்னை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் வெறும் பொருளாய் மதித்து அருகே வந்து சட்டையின் ஓரங்களில் வெடிகுண்டோ போதைபோருளோ இருக்கிறதா என்று
தாற்காலிக மோப்ப squad போல ஏற இறங்கப் பார்த்துவிட்டு மேசைக்கடியில்  நுழைந்து இருளில் கலந்துவிட்டது.

இன்னமும் பூனை, பார்க்கிங்கில் டிக்கெட்டுக்குத் தவிக்கும் Mr. Bean போல, 'கிருத்திகா பள்ளி முடிந்து உள்ளே வரத்தானே போகிறாள், அட! ஒரு குரியர் கூடவா வராது இவர்களுக்கு... அப்போ தொறந்து தான ஆகணும்...' என்று வாசலில் அலைந்து கொண்டிருக்கிறது.


 . 

12 comments:

  1. 'eli'te writer thaan neenga.

    ReplyDelete
  2. பாவம் தான்.

    ReplyDelete
  3. ரசித்துப்படித்தேன். பிரபல பத்திரிகைகளில் உன் எழுத்து வர, நான் வாசிக்கவேண்டும்.

    பாரதி மணி

    ReplyDelete
  4. Dear mama,

    Thanks a lot for your aasirvaadham and wishes :)

    ReplyDelete
  5. யதிராஜ சம்பத் குமார்August 17, 2011 at 7:32 PM

    போட்டோ எடுக்கற வரை மூஞ்சூறு அங்கேயே நின்னது பெரிய விஷயம்.

    ReplyDelete
  6. சரி.. கடைசி என்ன தான் ஆச்சு?

    ReplyDelete
  7. "இலக்கை அடைவதின் முனைப்பையும், இரையாவதைப் பற்றி இப்போ என்ன.. அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கவலையற்றுத் திரிவதையும், ஆண்டான் அடிமை...."

    இதனால் தாங்கள் எமது மன்னருக்குக் கூறும் முடிவு.. என்பது போல எதாவது எழுதி, கடைசியில் எல்லோரும் குடும்ப குரூப் ஃபோட்டோவில் சிரித்து, சுபம் போடட்டுமா சுபா? :)

    ReplyDelete
  8. இல்ல..‘டாம் அன்ட் ஜெரி’ பார்த்துட்டு இருக்கும் போது கரென்ட் கட் ஆன மாதிரி இருந்தது :)

    ReplyDelete
  9. அய்ய... அதுங்கல்லாம் இன்டர்நேசனல் மேட்டரு... நான் இன்னா, கொயந்தப் பையன்.. என்னாண்ட போயி இம்மாங்கணக்கா சொல்ல சொல்லோ, சேமாக்குது..

    :)

    ReplyDelete
  10. பள்ளிக்குச் செல்லாமல் டெல்லிக்குச் சென்றுவிட்டதா அல்லது சமச்சீரில் அந்த பகுதிகள் வெட்டப்பட்டனவா என்று தெரியவில்லை//

    thanks

    ReplyDelete