Saturday, July 23, 2011

அல்ப தூறல்...


திருமணக் கூடங்களில்
திடீரெனத் தலையடைந்து
பட்டதுமே காய்ந்துவிடும்
பன்னீர்த் துளிகள் போல,
பரவலாய் நீர தெளித்து
நனைவதற்குள்
நின்று போனாய்.

மனிதர்கள் நாங்கள்,
வெப்பத்தைக் கிளப்பிவிட்டு
வேர்த்தது தான் மிச்சமென
பேசியோ
பரிமாறியோ
கவிதையாய்க்
குறுஞ் செய்தியாய்
நூற்றி நாற்பதுக்குள் கீச்சுகளாய்

சுழல்கின்ற இறக்கைகள்
வருடிச் செல்லும் காற்றில்
இந்த ஒரு இரவையும்
கடந்தோம் விழித்தோம்.

வான் நீரே உணவென்று
இலை பரப்பி மழையேந்தி,
கிளையடியே நனையவில்லை
வேரெங்கே நீரறியும்.

ஈரம் வாங்குதலின்
பூர்வாங்கம் முடிவதற்குள்
முத்தங்களில் தொடங்கி வைத்து
முடியுமுன்னே பிரிந்தாற்போல்
தாகமும் தீராமல்
தாமதமும் புரியாமல்
செடி மனங்கள் என் செயும்,
மரமொழிகள் என்ன கூறும்?

1 comment:

  1. ஈரம் வாங்குதலின்
    பூர்வாங்கம் முடிவதற்குள்
    முத்தங்களில் தொடங்கி வைத்து
    முடியுமுன்னே பிரிந்தாற்போல்
    தாகமும் தீராமல்
    தாமதமும் புரியாமல்
    செடி மனங்கள் என் செயும்,
    மரமொழிகள் என்ன கூறும்?

    இந்த உங்கள் கவிதையைக் காப்பியடித்துப் புலம்பும்.. :) :) :)

    ReplyDelete