Friday, July 29, 2011

காதலால்...

கடவுள் மட்டுமல்ல;

நானும்.
என்னை நோக்கி நீ
வைக்கும் ஒவ்வொரு அடிக்கும்
நான் பத்தடி வைத்துவிடுகிறேன்.

-------------------------------------------------------------

அர்த்தமற்றுப் போகின்றன
கூப்பிடு தொலைவு,
நாலே எட்டு,
இதோ... இங்கே தான்,
தொட்டுவிடும் தூரம்

எல்லா வார்த்தைகளும்
சாலையின் மறுமுனையில்
உன் முகம் தெரிந்த 
பரபரப்பில்.

-------------------------------------------------------------

அலைபேசி எதுவும்
அறியவில்லை அப்போது நாம்.
பஸ்ஸில் ஏறிவிட்டேன்,
பாரிமுனை கடந்துவிட்டேன் 
சந்து திரும்பிவிட்டேனென
அபத்தமாய் அனுப்பிக்கொள்ளா
தவிப்புக் காதல் 
வருமோடி?

-------------------------------------------------------------

உன் வீட்டிலோ 
என் வீட்டிலோ பார்ப்பதை விட
சந்தித்துக் கொள்கிறோமே 
வழியிலேயே எங்கேனும்,
பாதியாய்க் குறைந்த
பயண நேரத்தால்
கூடுதலாய்ப் கிடைக்கும்
அந்தச் சில நிமிடங்கள்...
அவைகளே நிற்கின்றன
அடி நாக்கில் இனித்தபடி.

-------------------------------------------------------------

கண் பார்த்த கணங்களும்
கை பிரிந்த பொழுதுகளுமே
எழுதியெழுதி
பேசிப்பேசி,
நடக்கவேயில்லையா
இடையிடையே...
எப்போதேனும்
எதுவும்? 
-------------------------------------------------------------

காற்று 
புகவில்லை;
ஓசை கூட  
கடக்கவில்லை.
எனினும்,
ஆரத் தழுவிய 
உணர்வில்லை
அப்போதைக்கு 
'அணைத்துக்கொண்டோம்'.

-------------------------------------------------------------

சூடாய் இருக்குமிடம் நழுவி 
குளிர் நோக்கியே 
குவியுமாம் 
வெப்பம். 
இருவருமே 
தஹித்திருக்க 
எப்படிக் குளிர்ந்தோம் 
நீயும் நானும்?

-------------------------------------------------------------

Saturday, July 23, 2011

அல்ப தூறல்...

திருமணக் கூடங்களில்
திடீரெனத் தலையடைந்து
பட்டதுமே காய்ந்துவிடும்
பன்னீர்த் துளிகள் போல,
பரவலாய் நீர தெளித்து
நனைவதற்குள்
நின்று போனாய்.

மனிதர்கள் நாங்கள்,
வெப்பத்தைக் கிளப்பிவிட்டு
வேர்த்தது தான் மிச்சமென
பேசியோ
பரிமாறியோ
கவிதையாய்க்
குறுஞ் செய்தியாய்
நூற்றி நாற்பதுக்குள் கீச்சுகளாய்

சுழல்கின்ற இறக்கைகள்
வருடிச் செல்லும் காற்றில்
இந்த ஒரு இரவையும்
கடந்தோம் விழித்தோம்.

வான் நீரே உணவென்று
இலை பரப்பி மழையேந்தி,
கிளையடியே நனையவில்லை
வேரெங்கே நீரறியும்.

ஈரம் வாங்குதலின்
பூர்வாங்கம் முடிவதற்குள்
முத்தங்களில் தொடங்கி வைத்து
முடியுமுன்னே பிரிந்தாற்போல்
தாகமும் தீராமல்
தாமதமும் புரியாமல்
செடி மனங்கள் என் செயும்,
மரமொழிகள் என்ன கூறும்?