Saturday, February 6, 2010

நைஜீரியா - 4


சீக்கிரம் வேலைகளை முடித்துக்கொண்டு இன்று நைஜீரியா-4 -ஐ முடித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நாலு மணிக்கு தொலைபேசியில் நல்ல புகைப்படம் வேண்டும் வெள்ளை பின்புலம் இருத்தல் நலம் என்று தகவல் வந்தது. தகவல் என்று தட்டியதும், இன்று வெள்ளிக்கிழமை; பெரியவா சொன்னது போல் விநாயகர் அகவல் சொல்லவிலையே என்று ஞாபகம் வருகிறது. ஒரு ஐந்து நிமிடம் இருங்கள்...

------------------------------------------


நன்றி.

கிருஷ்ணாவிற்கு தொலைபேசி, அவன் வந்ததும் முயன்றதில் (மனதில் தான் எப்பேர்ப்பட்ட தில்), சற்று காமெடியாக இருந்தன படங்கள். குட்டி சிஷ்யன் பிரணவ் குறுக்கும் நெடுக்கும் நடந்ததில் சுவற்றில் கட்டியிருந்த வேஷ்டி விழுந்துவிடும் போல இருந்தது.

அவிழ்ந்தால் எப்போதும்
கவலை தான், எங்கிருந்தாலும்
வேஷ்டி.

சிறிய அறைகளில் படம் எடுக்கும்பொழுது, கண்களால் லென்சை நேர் பார்வை பார்த்தால், இரண்டில் அரை  குறையும். அதைத் தவிர்க்க வேறு இடங்களைப் பார்த்தபடி எடுத்த படங்கள் நன்றாயில்லை. இதற்கிடையில், ஏழு மணி net -class -க்கு வைத்திருந்த reminder இடையிடையே குரல் கொடுக்க, ஒவ்வொருமுறையும் படத்தின் குறுக்கே ப்ரணவின் நீட்டிய கையும் அதில் பற்றியிருந்த அலைபேசியும் தெரிந்தது!

ஏழு மணிக்கு, ஃபிரான்ஸ் மகேன் தேவராஜனுக்கு ஸ்கைப்பில் ஹாய் சொல்லியதும் மின்சாரம் நின்று போய், எட்டரை மணிக்குத்தான் வந்தது. இன்று எழுத இயலாது என்று நினைத்தபடி, அயோத்யா மண்டபம் வரை சென்றபோது, சூர்யப்ரகாஷ் கச்சேரியில், ஸ்ரீமுஷ்ணம் ராஜ ராவ் மாமா தனி வாசித்துக் கொண்டிருந்தார். பக்கத்து கடையில் ஆனந்த விகடன் வாங்கியதும், எழுதத் தோன்றி விட்டது. இரண்டு சேனல்களிடையே முரண்பாடு வரும், ஆச்சிரியமில்லை. நான் கூட (96 -97 வருடங்களில்) சன் டிவியின் midnight   மசாலாவில் மட்டும் வரும் பாடல்களை, ராஜ் டிவியில் பகல் வேளைகளில் பார்த்திருக்கிறேன்!! ஆனால், விகடனின்  கடைசிப் பக்க கிசு கிசுவில் சானியாவின் திருமணம் நடைபெறாததின் காரணம், ஒரு(?) நடிகருடன் காதல் என்று போட்டுவிட்டு, உள்ளே inbox செய்திகளில் கல்யாணத்திற்குப் பிறகு டென்னிஸ் விளையாடத் தடை என்று சானியாவின் would be மாமனார் சொன்னது தான் காரணம் என்று எழுதியிருந்தார்கள்!

உபகதைகள் போதும்.



அந்த ஞாயிறு பரபரப்புகள் ஏதுமின்றி, சாதரணமாய் புலர்ந்தது. சென்னையில் இருந்திருந்தால் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை சீக்கிரமே ம்யூசிக் அகாடமியில் class எடுக்கச்  சென்றுவிடுவேன். அன்றைக்கு மதியம் அவியல் செய்வாள் ஆலிஸ் என்று சிவராமன் கூறினார். முன்தினமே அதற்குண்டான காய்கறிகள் வாங்கியிருந்தார். நம் மொழி தவிர அனைத்தும் அந்த வேலையாட்களுக்குத் தெரியும் என்றார்.   

Bankers Hall செல்லும் வழியில் சிக்னலில் எல்லாம் ஏதேனும் விற்றுக்கொண்டிருந்தார்கள். வாழைப் பழம், செய்தித் தாள்... ஏதாவது. "வாட்ச் எல்லாம் விப்பான், முன்னூறு ரூபாய்க்கு பாக்க நன்னாயிருக்கும், அதிஷ்டம் இருந்தா, ரெண்டு வருஷம் கூட ஓடும் இல்லாட்டி 5 ,6 மாசம்" என்று மணி சொல்லியிருந்தார்.

இரண்டு பேர் சக்கரம் வைத்த பலகையில் அமர்ந்து பிச்சை கேட்டபடியிருந்தார்கள். பெட்ரோல் பங்க்குகள் அனைத்திலும் பெரிய க்யூ இருந்தது. "இங்கயே பெட்ரோல் எடுக்கறா... இருபத்திரண்டு ரூபா தான்...
வெலை ஏத்தணும்னு பாக்கறான்... ஜனங்க விடமாட்டா.... அதனால, செயற்கையா ஒரு டிமாண்ட் க்ரியேட் பண்ணி, பெட்ரோல் வாங்கறது பெரிய பாடு.. க்யூல நிக்கணும், எங்க போனாலும் லேட் ஆகறது, அளவா தான் தரான்னு ஜனங்க ஸ்ரமப்பட்டுட்டா, வெலைய ஏத்திவுட்டுட்டு தாராளமா பெட்ரோலக்  குடுத்தா, இப்போ நிம்மதியா இருக்குன்னு வாய மூடிண்டு வாங்கீண்டு போவான்.. அதான் இப்படி..."





நிறைய கூட்டமிருந்தது. நீளமான வரிசைகள். ஒருவர் செய்தால் போதுமென்ற வேலையில் இருவர் அல்லது மூவர்.  ஒழுங்கற்ற ஒரு பெருங்கூட்டமும் முறையற்ற ஆட்சியும்...  "Building a stronger Nigeria..." என்று எழுதியிருந்த ஒரு பஸ் கடந்து போனது.

ஹால் நிறைந்த இரசிகர்கள். அமெரிக்கா போல் அடிக்கடி கச்சேரிகள் நடைபெறாததால், ஒவ்வொருவர் மனத்திலும் தனக்குப் பிடித்த ஒரு பாடலாவது இருக்கவேண்டும் என்ற தவிப்பு, என் மொழியில் ஏதுமுண்டா என்ற எதிர்பார்ப்பு,தென்னிந்திய முகங்களின் நடுவே, ஆங்காங்கே தெரிந்த வட இந்தியர்கள், சில நைஜீரியர்கள் என அனைவருக்கும் பிடித்தமானதாய் ஆனது மூன்றே கால் மணி நேரம் நடந்த அக்கச்சேரி. காகிதம் இல்லாததால், தான் விருப்பப் பாடலை செல்ஃபோனில் மெசேஜ் பகுதியில் எழுதி அதை ஒருவரிடம் கொடுத்து, எங்களிடம் காண்பிக்கச் சொன்னார் ஒரு ரசிகர், "ஸ்ஸாமஜ வர கமனா..."

 


அங்கிருந்து கம்பர்லேண்ட் என்ற உணவு விடுதியில் மிகுந்த கொட்டமடித்தோம். ஜோக்குகள் உணவு மேஜையின் இருமருங்கும் ஓடின. எங்களை அழைத்திருந்த ஃபைன் ஆர்ட்ஸின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் ஆளுக்கொரு பாட்டை பாட வேண்டும் என்று விளையாடினோம்.  காலங்களில் அவள் வசந்தம் பாடினார் சிவஸ்வாமி. அந்த சந்திப்பில், அவர்களுக்கே தெரியாமல் பல உறவுகள் இருந்தன. நெல்லை மண், ஒரே பள்ளி, தூரத்து உறவு, ஒரே கல்லூரி-விருப்பப் பாடம் என்று அங்கே ஒரு இனிய சங்கமம் நடந்தது. அங்கே இருந்தபடி, இத்தனை நாட்கள் தெரியவில்லையே என்று ஆச்சிரியம் கொண்டபடி, இன்னும் நெருங்கியவர்களாய் ஆனார்கள். சீதாராமன் சாரிடம் சென்னையில் CA படித்த  கதைகள் ஆனந்தமாய் விவாதிக்கப்பட்டன. இராஜாராமனும் சிவாவும் பஜனை சம்ப்ரதாயத்திலிருந்து இரு உருப்படிகள் பாடினர். பூர்ணஸ்ரீ, மோகன கல்யாணி தில்லானாவை கொஞ்சம் ஆடி காட்டினார்.

"நீங்க இந்த டிசம்பர் 22 அடையார் ஹம்சத்வநில ஷங்கர் ரமணிக்கு வாசிச்சேளா...  என் பையன் விக்னேஷ் சொல்லீண்டே இருந்தான், இந்த அங்க்கிள நாம பாத்திருக்கோம்னு... அப்புறம் சொன்னான், அங்க பார்த்தோம்னு... அன்னிக்கு, உங்க கச்சேரிக்கு அப்புறம் என்னோட டான்ஸ் தான் இருந்தது. அப்புறம் தான் எனக்கும் ஞாபகம் வந்துது. நான் ஷங்கரோட sister -in -law..."






Fanta-வையும் Sprite-ஐயும் கலந்து வெள்ளரித் துண்டும் எலுமிச்சையும் சேர்த்து, chapman என்று ஒரு நைஜீரியக் கோக் அருந்தினோம். பயப்படாமல் குடிக்கலாம், ஆல்கஹால் ஏதும் இல்லை என்று சொன்னார்கள். இரண்டு வாய் அருந்தியதும் ஒரு சுறுசுறுப்பு ஏற்பட்டது. இங்கே, வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.  திங்களன்று மதியம் விடைபெறும்போது வருத்தமாயிருந்தது. நரேன் வழியனுப்பி வைத்தார். எல்லோரும் ஃபோனில் பேசினார்கள்.

மீண்டுமொரு நீண்ட பயணத்திற்கு பின் சென்னை வந்தடைந்து, உடனே நாகர்கோவில் அருகே பூதப்பாண்டியில் இரண்டு நாட்கள் கச்சேரி முடித்து, இப்போது Back To Routine, ஆஃப்ரிக்கா என்ற தேசத்தின் எல்லா இடங்களையும் பார்க்க வேண்டுமென்ற ஆவலுடன்.

4 comments:

  1. ஒரு சில நாட்கள் தங்கியிருந்தாலும் நைஜிரியாவை மிகவும் அழகாக அவதானித்து இருக்கின்றீர்கள்.

    அருமையான பயணக் கட்டுரை.

    ஆப்ரிக்கா முழுவதும் சுற்றிப் பார்க்க எல்லாம் வல்ல என் அப்பன் முருகப் பெருமான் அருளுவாராக.

    ReplyDelete
  2. பிரான்ஸ் மகேன் தேவராஜனுக்கு ஸ்கைப்பில் ஹாய் சொல்லியதும் மின்சாரம் நின்று போய், எட்டரை மணிக்குத்தான் வந்தது.//

    ம்ம்ம்ம். இரண்டு நாளா இங்கேயும் இதே கதைதான், கணினியைத் திறந்து எந்த வலைப்பூவுக்காவது போகவேண்டியதுதான், மின்சாரம் நோ! நல்ல வர்ணனை, நைஜீரியாவில் இத்தனை இந்தியர்கள் அதிலும் தமிழ் பேசும் இந்தியர்கள் இருப்பது ஆச்சரியம்தான். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. படம் எடுத்துப் போடவேண்டுமென்று நினைத்தேன், ஆனால் நேற்று நைஜீரியா - 4ஐப் பதிவு செய்கையில், இரவு மணி இரண்டிருக்கும்.. பிறகு செய்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்...

    ReplyDelete
  4. நாகு சார்... இவ்ளோ நேர்த்தியா பயணக்கட்டுரை எழுதி இருக்கேளே... பேஷ்...பேஷ்...

    அட்டகாசமா “ராகவன் நைஜீரியா” வந்து ஆஜர் சொல்லிட்டார்... நீங்க அவரை மீட் பண்ணினேளா?

    ரொம்ப அழகா, கோர்வையா சொல்லி இருக்கற பாங்கு ரொம்ப நன்னா இருக்கு...

    உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நாகு அண்ணா...

    துபாய் வர்ற ப்ளான் எதாவது இருந்தா சொல்லுங்கோ...

    ReplyDelete