![]() |
அட்டகட்டியில் இருந்தபோது (வால்பாறை அருகில்) |
’எட்டு மாசத்துலயே நீ ஓடவே ஆரம்பிச்சுட்ட, அதுலயும் கைல ஸ்கூல் பொட்டியையும் இழுத்துண்டு. பக்கத்தாத்துப் பாட்டி, ‘நாகா நடக்கறான்; நாகா நடக்கறான்’ன்னு பொலம்பிண்டே இருப்பா. அவ பேத்திக்கு ஒரு வயசாயிருந்துது, ஆனா அவ நடக்க ஆரம்பிக்கல... திடீர்னு மூணு நாள் காச்சல் வந்து எல்லாம் போயிடுத்து, போலியோன்னே தெரியாது. அதுக்கும் முன்னாடி இருந்ததெல்லாம் குந்தா, கெத்தேன்னு மலையும் காடுமா... ஆனை, கரடி, மானுன்னு இருக்கும். போலியோ ட்ராப்ஸ் ஆவது, ஒண்ணாவது... ஒண்ணும் தெரியவும் தெரியாது. ஃபேமிலி ப்ளானிங் ஆபரேஷன் பண்ணி, அஞ்சு வருஷம் கழிச்சு நீ பொறந்த.
ஒருநாள் மத்யானம் பன்னண்டு பன்னண்ட்ரைக்கு ஒன்ன கண்டுவும் நீலாவுமா ட்ரெஸ் எல்லாம் பண்ணி அவா ஸ்கூலுக்குக் கூட்டிண்டு போனா. போற வழில கொஞ்சம் ஒத்தையடிப் பாதையாட்டாமா எல்லாம் உண்டு. அந்த வழில நடு மத்யானத்துல போனதால, மேல காத்து கருப்பு போயிண்டிருந்துருக்கும். அதுந்நெழல் ஒம் மேல விழுந்து தான் தூக்கிவாரிப் போட்டு, இருளடிச்சிருச்சு ஒடம்புக்கு வந்துடுத்துன்ன்னு ஊர்க்காரா சொன்னா.
ஆனா, எதுக்கோ அந்தத் தெருல மணல் கொட்டி வெச்சிருந்தா. அதுல வெளயாடறபோது, அதுல இந்த சின்னசின்ன சங்கு, கிளிஞ்சல் எல்லாம் இருக்குமே, அதுல நாலஞ்சு குட்டி சங்கு, ஏதோ கிளிஞ்சல் எல்லாம் நீ வாய்ல போட்டுண்டு கறக்முறக்னு கடிச்சு முழுங்கீட்ட. மாதுவுக்கும் மாலாக்கும் ஏண்டி கொழந்தையப் பாக்கப்டாதா வெளையாடறச்சேன்னு அடி குடுத்தேன். அப்பறம் தான் ஃபீவர் வந்துது. இதெல்லாம் வேற தின்னுட்டயேன்னு, மொளகுக் கஷாயம் எல்லாம் வெச்சும் குடுத்தேன், வெஷ முறிவு; அதோட மலங்கட்டாதுன்னு. மலங்கட்டிடுத்துன்னா கை கால் இழுத்துக்கும்னு தாத்தா சொல்லுவா.
ஒனக்குக் காச்சல் வந்த மூணாண்ணாள் துணி ஒணத்தீண்டு இருந்தேன்; நீ டக்குன்னு தொவண்டு விழுந்து ”காலு வலிக்கறது காலு வலிக்கறதும்மா”-ன்னு தவழ ஆரம்பிச்சுட்ட. அப்பறம் காச்சலும் ஜாஸ்தியாச்சு.. பயமாப் போயிடுத்து. கோயம்புத்தூருக்கு ஒடனே போனாதான் முடியும்னு, ஆஃபீஸ்ல வண்டி (ஜீப்) கேட்டா அப்பா.
எம்.ஜி.ஆர். அப்போ கட்சி ஆரம்பிச்சு மொதமொதலா வெவசாயிகள் போராட்டம்னு அன்னிக்கு ஒரே அமளி. ரோடெல்லாம் தகராறு. வண்டி தர முடியாதுன்னுட்டா. அப்பா தான், நான் பொறுப்பேத்துக்கறேன், பெட்ரோல் போட்டுக்கறேன்னு சூப்ரவைஸர்ட்ட உறுதி குடுத்தா. ட்ரைவர் எல்லாம் தெரிஞ்சவா தான். கூட்டிண்டு போனா. அங்க பாப்பநாயக்கம் பாளயத்துல ஆஸ்பத்ரில டாக்டர் வந்து செக் பண்ணிட்டு, சுத்தி மாதிரி ஒண்ண வெச்சுண்டு கை, கால், முட்டின்னு ஒரு விடாம தட்டினார். வலிக்குதான்னு கேட்டார். ஒனக்கு வலில்லாம் ஒண்ணும் தெரியல.
டெஸ்ட்டு பண்ணினா, எவ்ளோ போயிடுத்துன்னு. கையெல்லாம் பொழச்சிருக்கான்னு பாக்க ஒரு மிட்டாய காமிச்சா, கைய நீட்டுவியோ தூக்குவியோன்னு... ஆனா, வெறும் நாக்க தான் நீட்டின, அதான் முடிஞ்சுது ஒனக்கு. ரெண்டு மூணு மாசத்துல மெட்ராசுக்குக் கூட்டிண்டு போகச் சொல்லிட்டா’. "This is Polio"ன்னு சொன்னா. ஒடனே நாலு கெட்டித்துண்டு பெருசா ஒரு டர்க்கி டவல் வாங்கிண்டு வரச் சொன்னார். ஒரு நர்ஸ் வந்து கொதிக்கக் கொதிக்க பக்கெட்ல தண்ணி கொண்டுவந்து நாலு துண்டையும் முக்கி கை காலெல்லாம் சுத்தினா. அப்பறம், பெரிய துண்ட முக்கி, ஒடம்பு பூரா சுத்தினா. சில்லிப்பே ஆகாது, சூடுபட்டு எவ்ளோ வரதோ வரட்டும்னு.. அப்பறம், மெட்ராஸ் போங்கோன்னுட்டா.’
’அங்க பெரிம்மாவாத்துல பொரசபாக்கத்துல (புரிசைவாக்கம்) தான் இருந்தோம். ராஜு தான் காலேஜ். மூர்த்தி, மஞ்சு, தாஸ் எல்லாம் சின்னவா. ஒன்ன தோள்லயே வெச்சுண்டு போவா வேடிக்கை காமிச்சுண்டு, வெளையாடிண்டு... செண்டை கொட்டு வரது, கல்யாண ஊர்வலம் வரது-ன்னு எத்தன நாள்... சேமியா பாயசம் பண்ணினா, ராஜு வந்து, டேய் நாகப்பாச்சம்... அது எல்லாம் புழு.. அய்யே-ன்னு கலாட்டா பண்ணுவான். சித்தீ, இதோ ஆட்டோ வந்தாச்சு, கெளம்பும்பான்.. நீ அழுவ. ஒனக்கு வேற திடீர்னு ஒடம்பு இப்படி ஆயிட்டதுல, அச்சாசோ.. நமக்கு என்னமோ ஆயிடுத்துன்னு பயத்துல எப்பவும் பொடவைய அழுத்திப் புடிச்சுண்டு இருப்ப.. ஒக்காத்தி வெக்கணும்னு பாப்போம். ஆனா, நெத்தில வெரல் வெச்சாக் கூட விழுந்துடுவ.. பேலன்ஸே இருக்காது. அதுனால, மூர்த்தியும் தாஸுமா ஒன்ன சேர்ல ஒக்காத்தி வெச்சு ஒரு துண்டால கட்டிவெப்பா விழாம.. ஒனக்குப் பாட்டெல்லாம் பாடி, தூக்கிண்டு அலஞ்சிருக்கா எல்லாரும். நீ கூட பாட்டெல்லாம் பாடுவ’



எப்படிம்மா? அதான் பேச்சுலேந்து எல்லாம் போயிடுத்தே?
‘அதாண்டா.. ரொம்பக் கவலையாயிருந்துது. பகவானே, இந்தக் கொழந்த வாயையும் பிடுங்கிடாதேன்னு ராத்திரியெல்லாம் அழுவேன்; வேண்டாத தெய்வமில்ல. போலியோ வந்து ஒரு மாசத்துல பேச்சு கொஞ்சம் வந்து, அப்பறம் நன்னா வந்துது மூணு மாசத்துல. மழலையே இருக்காது ரெண்டர வயசுல. ட்ரீட்மெண்ட்டுக்கு ஜிஹெச்சுக்கு கூட்டிண்டு போவேன், டெய்லி. தெனம் பஸ்சுல போறதப் பாத்துட்டு, பஸ் ஸ்டாப்புக்கு நடக்கற வழில, ‘வாம்மா காப்பி சாப்பிடலாம்னு’ கூப்ட்டான். ‘செருப்பாலயே அடிப்பேன்னு சொல்லிண்டே, கூட்டமா ஜனங்க இருக்கற எடத்துக்கு ஓடினேன். ஃபிஸியோதெரபில டாக்டர் ராமநாதன் இருந்தார், நம்ம பத்மாவோட அண்ணா...’
‘நீ பெட்டுல படுத்துண்டு என்னடி ராக்கம்மான்னு பாடுவ. அதக் கேக்க நேசகுமாரி, இன்னும் பத்துப் பாஞ்சு நர்ஸ் எல்லாம் கூட்டமா ஒன்னச் சுத்தி நிப்பா. டாக்டர் வந்து, ’என்னடா இங்க க்ரிஷ்ண லீலா பண்ணிண்டு இருக்கே-ம்பார்..
அங்கயே பெட்டுல படுத்துண்டு போரடிக்கும் ஒனக்கு. ஒரு நாள் டாக்டர் வந்தவொடனே, ’இங்க சொவத்துல ஒரு பெரிய கண்ணாடி மாட்டிடுங்கோ டாக்டர். ஜன்னல் வழியா ரோட்ல போற வண்டியெல்லாம் அதுல தெரியும், நான் வேடிக்க பாத்துக்கறேன்னு’ நீ அவர்கிட்ட சொன்னதும் அவர் அசந்து போயிட்டார்.
ஒரு தடவ அப்பா ஊர்லேந்து வந்திருந்தா. பக்கத்துல கார்ப்பெண்ட்டர் வேலையெல்லாம் நடந்துண்டிருந்துது. ஒன்னத் தூக்கிண்டு போய் வேடிக்கை காட்டிண்டிருந்தா. அப்போ, ’பார்... மரம் எல்லாம் அறுக்கறா பார்’-னு, அவர் சொன்னதும், நீ ஒடனே, ‘இது எல்லாம் மரம் இல்ல; கட்டை. இதுக்கு எல, கெளயெல்லாம் கெடையாது..அதான், அறுத்தாச்சேன்னு’ சொல்லிட்ட! நாங்கள்லாம் ஆச்சிரியப் பட்டுண்ட்டோம்’ என்றாள். எல்லா அம்மாக்களுக்கும் தன் பெண் தான் அழகி; தன் பையன் தான் புத்திசாலி என்று நினைப்பு.
கழுத்துக்குக் கீழே சகலமும் இழந்துவிட்ட குழந்தை, மழலையின்றிப் பேசுவதும், புத்திசாலியா இருக்கே என்ற ஆச்சிரியம், சந்தோஷமும் தான் அவள் அந்த கடினமான வருடங்களைக் கழிப்பதில் ஆறுதலாய் இருந்திருக்கிறது. நான் கூட நினைத்துக்கொள்கிறேன், புத்திசாலியாகவே எப்போதும் இருந்திருக்கலாமே என்று.