Thursday, September 12, 2013

பல்லடம் ஸ்ரீ ராமச்சந்திரன் ஸார்



கோவையில் அவர் இல்லத்தில் சில ஆண்டுகள் முன்பு
--------------------------------------------------------------

மூன்றாவது முறையாக அந்த அனுபவம் ஏற்பட்டது இன்று. 90 களில் சித்தப்பா, பல வருடங்களுக்குப் பிறகு அம்மாவின் அம்மா...

த்யானம் செய்ய பெரியவாளின் எதிரில் அமர்ந்ததும் ஏதும் கோவையாகச் செய்ய விடாமல் முற்றிய இரவொன்றில் அடர்வனத்தின் ஆழ்ந்த கருமை, இமை மீது ஏறிப் படர்ந்ததைப் போன்ற உறக்கம் வந்து தள்ளியது. விளக்கேற்ற விடாமல், மந்திரத்தில் மனம் லயிக்க விடாமல், மயங்கிக் கிடக்கையிலும் ப்ரக்ஞை தோன்றும் நன்கறிந்த ஒரு பாராயணத்தின் வரிகளை மறந்துபோய் மலங்க மலங்க விழிப்பதைப் போன்று, தைல தாரையொன்று நீர்த்துப் போய் குழாய் ஜலமாய்த் தெறிப்பதைப் போல நிலைபடாமல் தவித்தது. மனதிற்கு உகந்த ஜீவனோ நெருங்கிய உறவோ உடல்நீத்த செய்தியொன்று வரப்போகின்றதென்று பாரம் சுமந்தபடி மதியம் ஒரு மணியிலிருந்து மனத்தின் ஓரத்தில் ஞாபகப் பட்டைகளை கொத்தியுரிக்கக் காத்துக்கிடந்தது ஒரு மனங்கொத்தி.

பல்லடம் ஸ்ரீ ராமச்சந்திரன் ஸார் தான் என்னுடைய முதல் குரு. மிருதங்கம் என்னை விடப் பெரியதாக இருந்த வயதில் வாஞ்சையுடன் வாரித் தந்தவர். குறும்பாக ஒரு பார்வை, எதையுமே 
எளிதாக எடுத்துக் கொள்ளும் தன்மை, அவர் சொல்லித் தரும் பாடங்களத் தவிர வேறு எதையேனும் சொந்தமாகவோ பெரிய வித்வான்கள் வாசித்துக் கேட்டதையோ முயன்றால் பாராட்டுவார். சுத்தமான நாதமும் கம்பீரமான கும்கியும் வாசிப்பார். என் மீது அலாதிப் ப்ரியம் உண்டு. நானும் அவரைக் காணுந்தோறும் நெகிழ்ந்திருப்பேன். கோவை செல்லும்போதெல்லாம் பார்த்து வருவேன். ’நீ எதுக்குப்பா கஷ்டப்படறே... வந்திருக்கேன்னு ஒரு ஃபோன் பண்ணினா நானே வந்து ஒன்னப் பாப்பேனே’, என்பார். சங்கீதத்திற்கு ஸ்நானப் ப்ராப்தியே இல்லாத ஒருவரைக் கொண்டு வந்து சேர்த்தால் கூட அவர் வகுப்பின் ஸ்வாதந்தர்யமும் சூழலும் அவர்களை மறுபடி வரவழைக்கும். சுரேஷ் நாராயணன், ரமேஷ், கண்ணன், மஹாதேவன், சௌரிராஜன், சென்னிமலை ஸ்ரீதர், சீனு, கோபாலகிருஷ்ணன், ரங்கராஜன், ஸ்ரீராம் எல்லோரும் அரை வட்டமாக அமர்ந்து குறைப்புகளுடன் ஒரு தனி வாசிக்க, கிருஷ்ணன் போல ஒரு விஷமப் புன்னகையுடன் மெல்லிய குரலில் கிண்டலாக ஏதேனும் சொல்லியபடி பொறுமையாகத் தாளம் போடுவார்.
லால்குடி ஸ்ரீ ஜயராமன் அவர்களுடன் ஊட்டியில். 70கள் என எண்ணுகிறேன்.





அவரும் சிங்காநல்லூர் ராதாகிருஷ்ணன் அவர்களும் சேர்ந்துவிட்டால் அந்த இடமே அமர்க்களப்படும், சங்கீதமும் கிண்டலும் தளும்பும். நாளொன்றின் முடிவில், தான் எங்கோ கேட்டதை ஒரு மாணவன் முயன்று பார்ப்பது, பயமின்றி ஒரு பாடத்தை அணுகுவது எல்லாம் அனிச்சை செயல் போல நிகழ்ந்து மனத்தில் ஊடுருவியிருக்கும்.

சிவராமன் ஸாரிடம் சேர்ந்து கற்றுக்கொள்ள ஆசையைச் சொன்னபோது மிகவும் ஊக்குவித்தார். கோவை செல்லும் ஒவ்வொரு முறையும் சிவராமன் ஸார் பல்லடம் சஞ்சீவி ராவ் அவர்களுக்கு வாசித்ததைப் பற்றி, அவரிடம் நான் இருப்பது பெரும்பேறு என்பதைப் பற்றியெல்லாம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். சிறந்த மிருதங்க வித்வானாக விளங்கி வரும் பல்லடம் ரவி அண்ணா அவருடைய மகன் தான். மதுரை வானொலியில் நிலையக் கலைஞராக இருக்கிறார். ராமச்சந்திரன் ஸாரின் இன்னொரு சிஷ்யர் ஸ்ரீனிவாசன் காரைக்குடி ஸ்ரீ மணி அவர்களிடம் சேர்ந்து சில வருடங்கள் சென்னையில் இருந்துவிட்டுப் பின் நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபாடு கொண்டு ஈரோட்டிலேயே இருந்து வருகிறார்.

எண்பத்தி நாலு வயதில் சிலகாலம் உடல்நலம் குன்றியிருந்துவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார். இந்த விஜயதசமிக்கு ராமச்சந்திரன் ஸாருக்கென்று எடுத்து வைத்த வேஷ்டியை எப்போது வாங்கிக்கொள்வார்? சென்ற ஜூலை ஐந்தாம் தேதி, ஒமஹாவின் Zorinsky Lake-ல் ஒரு பிரதோஷ வேளையில் அதன் உள்ளே சிறிது தூரம் இட்டுச்சென்ற மரத்தாலான பாதையில் விளிம்பில் இறங்கி அமர்ந்து நாராயணஸ்வாமி அப்பா, அழக நம்பியா பிள்ளை, தஞ்சாவூர் வைத்யநாத ஐயர், பாலக்காடு மணி ஐயர், ஆறுபாதி நடேச ஐயர், சாக்கோட்டை ரங்கு ஐயங்கார் போன்ற வித்வான்களின் பெயரைச் சொல்லி இரு உள்ளங்கைகளிலும் ஏந்தி நீர்வார்த்த ஞாபகம் வந்து, முதல் குருவின் வியோகத்தைக் கேட்ட சிஷ்யன் உடனே செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வி, நினைவலைகள் மண்ணுக்கு தள்ளிவிடப் பார்க்க, தேர்ந்த மீனவரைப் போல அதன் ஆற்றலை ஏமாற்றி மனக்கடலின் மையம் நோக்கிச் செல்கிறது, ஆனால் தளர்ந்தபடி.

ஸ்ரீ குருப்யோ நமஹ.

2 comments:

  1. வருத்தமாக இருக்கிறது. உங்கள் உணர்வுகள் புரிகிறது. விரைவில் மனம் ஆறுதல் அடையப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  2. ஸ்ரீ குருப்யோ நமஹ.

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
    http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_7.html

    ReplyDelete