Monday, June 29, 2015

Kodumudi in Texas






முடிவெட்டிண்டதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்டா, இதெல்லாம் ஒனக்கே ரொம்ப ஓவராத் தெரியலயா என்ற ஆழ்மனத்தின் குரலோசை Alt+2 (NHM) அழுத்தும்போதே கேட்கத்தான் செய்தது. ஆனால் சலூன் என்கிற ஆணுலகை, சிறுவயதின் மிஷின் கட்டிங் அச்சங்களை, பதின்பருவ ஞாயிறுகளை இரு மாதத்திற்கொருமுறை கிளர்ச்சியாக்கவென்றே காற்றில் படபடத்த காலண்டர் (பிரித்துப்படித்து இன்புறவேண்டாம்) பக்கங்களை, படிக்கவேண்டிய செய்தித்தாள்களும் புத்தகங்களும் நுரை துடைக்கவும் நடுப்பக்கம் பார்க்கவும் மட்டும் பயனுறும் விந்தையை, பையனை அமரவைத்து ‘ஒட்ட வெட்டி வெச்சுரு.. இந்தா வாரேன்’ என்று சொல்லிவிட்டு சைக்கிளில் விரையும் அப்பாக்களை எல்லாம் பிரிந்து, கத்திரி சப்தம் காதில் விழும்போதே கண்ணாடியில் முகம் தெரிந்து இருபது வருஷங்கள் ஆகிவிட்டதால் ’எழுதேன், பரவாயில்ல’ என்று அமெரிக்க அபார்ட்மெண்ட் சுவரான ப்ளைவுட்டில் என் முதுகை நானே மூன்று முறை இடித்துக்கொண்டேன், தட்டிக்கொடுக்க அருகில் யாருமில்லாததால்.

ஈரோட்டில் இருந்தவரை, அண்ணா தூக்கிச்சென்று விடுவான்; +2 படிப்பு வரை பள்ளிக்குச் சென்றதும் அப்படித்தான். 89 ஆகஸ்ட் இறுதியில் சென்னை திரு.வி.க.நகர் வந்ததும் முடிவெட்டிக்கொள்ளுதல் கடின கார்யங்களில் ஒன்றாயிற்று. கண்ணாடிக் கதவுகளில் சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டி,
‘இங்கெல்லாம் நாப்பது ரூபா கேப்பான்’ நடைபாதை ஏறி, படிக்கட்டுகள் தாண்டி உள்ளே சென்று சிந்திக்கிடக்கும் முடிக்குவியல்கள மிதித்துக் கடந்து உயரமான சுழல் நாற்காலிகளில் ஏறி அமரும் வித்தை ஏதும் கைவரப்பெற்றிருக்கவில்லை எனக்கு. எனவே, முக்கிய சாலைகளில் இல்லாமல் சந்துகளில் இருக்கும் முதியவர்களின் கடைகளில் நண்பர்களோ அண்ணாவோ ஃப்ரீயாக இருக்கும் பொழுது தலைக்கனம் குறைத்துவிடுவேன். பிறகு சில நாட்கள் எளிமையான வாழ்க்கை. இரு மாதங்களில் மீண்டும் செருக்கு சேர்ந்துவிடும். எப்போதும் வெட்டிவிடும் வேலு திடீரென உடல்நலக்குறைவால் இறந்துபோனார். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அவர் மகன் பாரம் சுமக்கலானான். மாதமொருமுறை முடிவெட்டிக்கொள்ள வேண்டுமென முடிவெடுத்தேன்.

சென்னையில் எப்படியேனும் மாம்பலம் தி.நகர் அல்லது மைலாப்பூரில் குடியிருக்கவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே இருந்தது. வீட்டுவாடகை ஏற்றங்களினால் அவ்வாசையைச் செயல்படுத்த எண்ணி ஆனால் சக்கரவியூகத்துக்குள் புகவியலாது சக்கரத்தின் ஓரமாக நகர்ந்து திரு.வி.க.நகர், கொளத்தூர் என்றிருந்த ஜாகை, வளசரவாக்கத்திலிருந்து வாள்வீசத் தொடங்கியது. அங்கு தான் முதன்முதலில் வீட்டின் பின்புறம் இருந்த குறுகலான இடைவெளியில், ‘முடி தான.. பரவாயில்ல பார்பர வரச்சொல்றேன் இங்கயே வெட்டிக்கோங்க, அப்புறம் பெருக்கிடலாம்’ என்று அன்பாய் உரைத்தார் வீட்டுக்காரர். அதன் பின்பு திரைப்படங்களில் பார்த்தது தான் சலூன். முடிவெட்ட வந்தவர் நாதஸ்வரமும் நன்றாக வாசிப்பார். எனவே சில பாடல்கள், ராகங்கள் என்று ஸ்வாரஸ்யமாய்ப் போனது பொழுது. ஆனால் பாட்டிலில் இருந்து காதுகள் சிலிர்க்கப் படரும் தண்ணீர், முகமும் பின்னந்தலையும் பார்க்க முடிகிற பெரிய கண்ணாடிகள், வேறு மனிதர்கள், என்றைக்கு எந்தப் படம் ரிலீஸ் என்று பேசுகிற தினசரிகள் எதுவுமற்று கடைசியாய் ஒருமுறை மட்டும் கையிலேந்திய சிற்றாடியில் முகம் பார்த்து, ‘இப்ப மூஞ்சி நல்ல்ல்லா இருக்கு பாருங்க’ சரியாகத்தான் இருக்கிறது என்று குளிக்கச்சென்றுவிடும் மகத்தான மனிதனானேன். சஹ மனிதர்களிடம் நம்பிக்கை கொண்டவன் மஹத்தானவனாகத்தானே இருக்கவேண்டும்.

கி.பி.  இரண்டாயிரத்தொண்ணில் மன்மத ஆண்டு (காமன் எரா) வியூகம் துளைத்துத் தி.நகர் மங்கேஷ் தெருவில் குடிபுகும் பாக்கியம் ஏற்பட்டது. அங்கு வடிவேல்.

‘வீட்டுக்கெல்லாம் வந்து வெட்ட மாட்டேன் சார்’

பணம் எக்ஸ்ட்ராவா தரேம்ப்பா

வாணாம் சார், கடய வுட்டுட்டு வந்துகினு பேஜாரு..

ஏம்ப்பா.. யாராவது வயசானவங்க, ஒடம்புக்கு முடியாதவங்க இருந்தா செய்யமாட்டியா. அது மாதிரி வெச்சுக்கோயேன்.

அது ஒரு தபா தான் சார். இது மாசாமாசம் தபாக்குதபா வரணுமே, கடய வுட்டுட்டு.

சரி பரவாயில்ல. உன்னப் பாத்தா நாலாம் நம்பர்ல பொறந்தா மாதிரி இருக்கு. ஆனா, ஒத்து வல்லியே..

ஸ்ஸார்! நாலாந்தேதி தான் பொறந்தேன் ஸ்ஸார்!! ஒங்க்ளுக்கு அதெல்லாம் தெரியுமா ஸ்ஸார்?

எல்லாம் நான் சொல்றேன், வா.

பிறகு வெஸ்ட் மாம்பலம் - சைதாப்பேட்டை - அஷோக் நகர் மூன்றும் சந்திக்கும் குழப்பமான நிலப்பரப்பிற்கு மாறும் வரை வடிவேல் நான்கு வருடங்கள் தொண்டாற்றினான்.


சென்னையின் பகுதிகளிலெல்லாம் கச்சேரி வாசிக்கவோ, கேட்கவோ, ஊர் சுற்றவோ அலையும் போதெல்லாம் எந்தக் கடையில் சாலை விளிம்பருகிலேயே தொலைபேசி இருக்கிறதென்று பார்க்கும் பழக்கமிருந்தது எனக்கு. செல்ஃபோன்கள் இல்லாத காலங்களில் அத்தியாவசிய சூழல்களில் வீட்டையோ நண்பர்களையோ அழைக்கவேண்டி கண்கள் குறிப்பெடுத்துக்கொண்ட காலம் அது. அக்னி நக்ஷத்திரம் படத்தில் ஜன்னலின் கண்ணாடியொன்றின் சில்லு பெயர்ந்து விழும் ஒரு காட்சிக்குக் குறியீடு ஏதுமில்லை, சும்மா தான் என்று மணிரத்னம் ஒரு பேட்டியில் சொன்னதைப் போல சலூன், துணிக்கடை, உணவகங்களின் மீது அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத போதும் ஒரு கண் இருந்தது எனக்கு.  இத்தனை மால்கள் வீல்ச்சேர் ஆக்ஸசுடன் வரும் வரை ஷாப்பிங்கில் எனக்குப் பெரும் ஆர்வம் இருப்பதை அறியாமலேயே தான் இருந்தேன்; அல்லது காஞ்ச மாடு கம்புல புகுந்தாற்போல ஒன்றாகவும் அது இருக்கலாம். அதுவரை படிக்கட்டுகள் இருந்த இடத்திற்கு ஒரு சாய்வுப்பாதை போடப்பட்டதும் அங்க ஒருநாள் போகணும் என்ற எண்ணம் வரிக்கப்பட்டுவிடுகிறது மமோபாத்த சமஸ்த துரித க்ஷயத்வாரா என்று ஸங்கல்பிக்காதபோதும், சல்லடை மனத்தில்.

2005-ல் (அங்கல்லாம் எப்டி சார் வெட்டிப்ப - வடிவேல்) மிஷிகன் வந்தபோது, ’வாங்கோ க்ரேட் க்ளிப்ஸ்க்கு அழைச்சுண்டு போறேன், ரொம்ப ஓஹோன்னு எல்லாம் நாம சொல்றபடி வெட்டமாட்டான், ஆனா தேவல’ என்று சொன்னதை மறுத்து, ‘இல்லல்ல.. ஊருக்குப் போயே வெட்டிக்கறேன். அதான் வரபோதே ஒண்ட வெட்டிண்டு வந்துட்டேனே’ என்று சொல்லி, ஆறுமாத மகசூலை மதராஸப் பட்டினம் அடைந்தபின்னரே அள்ளினேன். பிறகு, பல பயணங்கள் அதே போல் அந்நிய நிலத்தின் கத்திபடாமல் இதுவும் கடந்து போகுமென்று போனது.

இம்முறை க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனைக்காக விமானமேறுவதற்கு இரு தினங்களுக்கு முன் வியாழனுக்கும் ஞாயிறுக்கும் திதி தோஷமில்லை என்று தலையைக் கொடுத்ததில், சகட்டுமேனிக்கு தாத்தா விளையாடிவிட, சீப்பிலிருக்கும் பற்களைவிடக் குறைவான முடிகளே கூடுவாஞ்சேரிக்கு மிக அருகில் நிலம் போலக் குழுமியிருந்ததை உணர்ந்துகொண்டேன். ஃபேஸ்புக்கின் ப்ரொஃபைல் படங்கள், கச்சேரி ஃபோட்டோஸ் எல்லாம் டாலடிப்பதை நிறுத்த இரு மாதங்களாயின. வாஷிங்டன், க்ளீவ்லேண்ட், சேக்ரமெண்ட்டோ, க்யூப்பர்ட்டினோ, ஒமஹா என்று ஸ்வாமிகள் முகாம் போல மாறிமாறி இப்போது ஹ்யூஸ்டனில் இருக்கிறேன். இரண்டு நாட்களாக தலையில் எந்நேரமும் ஒரு பூனை அமர்ந்திருக்கும் உணர்வு. ’அடி மாங்கொளத்துக் கரை மேல... ஏ ஏஏ.... மயிருணத்தும் சின்னவளே ஏ.. மயிருணத்தும் சின்னவளே’, என்று எவரேனும் எசப்பாட்டு படித்துவிடும் அபாயம் அச்சுறுத்த, 90•F உஷ்ணம் ’K7 அல்ல நீ - .கேடிந்த oven’ என்று பாடியபடி நிலவெப்பமயமாதலுக்கு என் கழுத்திலிருந்து கான்ட்ரிப்யூஷன் எதற்கென்று Great Clips- ஐ கூகிளினேன்.

$20, 30 என்றெல்லாம் அதிர்ச்சியளித்த கடைகளை விடுத்து,

'அந்த ஹில்க்ராஃப்ட் போற வழில ஆறு டாலர்னு ஒருத்தன் போட்ருந்தானே, அங்க போலாம்’

“சார் அப்படியெல்லாம் யாரவேணா நம்ம்ம்பி ஒங்க தலையக் குடுத்துராதீங்கோ’

‘பரவால்ல போலாம் வா. முடி தான. கோணாமாணையா வெட்டினான்னா, வளந்தா சரியாப்போறது’





எல்டர்ஸ் ரிட்ஜ் சாலையில் வியட்நாமிஸ் நூடில்ஸ் கிச்சனின் அருகிலிருந்தது L&Y Salon. காரிலிருந்து இறங்கி வீல்ச்சேரில் எளிதாய் உள்ளே சென்றேன். அங்கிருந்த போஸ்டரில் ஐம்பது தலைகள் என்னைப் பார்த்து இதில் எந்தத்தலை உன்னுடையதாக ஆகப்போகிறதெனச் சிரித்தன. சுழல் நாற்காலியின் உயரத்தை எனக்கு வாகாக இறக்கி, மாறி அமர்ந்ததும் எப்படி என்ன விதமாய் வெட்டவேண்டும் எனப் பொறுமையாகக் கேட்டு, செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் நிதானமாய்ச் செய்தார் அக்கலைஞர்.

இருபது வருடங்களுக்குப் பின் என் பின்னந்தலையைப் பார்த்தேன். பின்னங்கால் பிடரியில் பட ஓடியதேயில்லையாதலால் அடிகளேதுமின்றி எவரும் ரிட்வீட் செய்யாத உள்குத்துகளற்ற கீச்சு போல் 140-க்குள் இருந்தன எஞ்சியிருந்த முடிகள். வம்புகள் பேசாது திரைச்சுவை, வண்ணத்திரை, குமு-குங்கு-ஆவிகள், அந்தரங்கம் பகுதிக்கு கடிதங்கள் நிரம்பிய அந்த மாதிரிப் புத்தகங்கள் இல்லாமல் எம்மா வாட்சனின் ப்ளோ-அப் கூட இல்லாத வெற்றுச் சுவர்கள் சூழ்ந்திருக்க, Mr.Bean-ல் வருவது போல ஒரு பெரிய கண்ணாடியைத் தலைக்குப் பின்னே பிடித்துக் காட்டி, திருத்தங்களை இன்முகமாய் ஏற்று பத்து டாலர்கள் மட்டும் வாங்கிகொண்டு சிரித்தபடி வழியனுப்பினார். யூ விசிட்? வியட்னம் ஆல்சோ ஹாட் லைக் இண்டியா என்று அவர் மனைவி சொன்னதை ஆமோதித்தேன். இந்தியாவும் வியட்நாமும் என்பதை உடனே ’we at - நாமும்’ என இருமொழிகளில் எழுதிப்பார்த்தது மனம்.





’யூ வாண்ட் திஸ் ஸ்ப்ரே?

“எத்தையானும் தெளிச்சு விட்ராதப்பா மகராசா’ என்று மைண்ட் வாய்ஸ் அவருக்குக் கேட்காத வண்ணமாய் எண்ணியபடி, நோ நோ.. ஐ ஹவ் ஹேர் செட்டிங் ஜெல்’ என்று புளுகிவிட்டுக் கிளம்பினேன்.

அஃதல்ல விஷயம். ஊனமுற்றவர்கள் அவர்களால் செய்ய முடியாததைச் செய்ய இயலும்போதோ, சமூகமோ அரசோ அதற்குரிய வசதி வாய்ப்புகளைத் தரும்போதோ அடைகின்ற திருப்தி ஞாலத்தின் மாணப்பெரிது. அம்மா உணவகம், குடிநீர் எல்லாம் அளிக்கப்படும் இக்காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில வழிபாட்டுத் தலங்கள், பூங்கா, நதி-கடற்கரை, திரையரங்கம், துணிக்கடை என்று சில இடங்களேனும் எனக்கு வேண்டியதை நானே தேர்ந்தெடுத்தேன் என்ற நிறைவைத் தருமாறு அமைவது அவசியம். இப்போதைக்கு பள்ளிகளில் கூட அல்ல, மயானங்களுக்கு மட்டுமே இருக்கிறது சக்கர நாற்காலிகளுக்கும் அதை உபயோகிப்பவர்களுக்குமான சாவுப்பாதை.


6 comments:

  1. Lovely experience. Excellent narration.

    ReplyDelete
  2. பிரமாதம்.. சரளமாக வருகிறது எழுத்து உங்களுக்கு!

    ReplyDelete
  3. வணக்கம்.. உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?

    இலக்கியமும், மிருதங்கமும் சேர்ந்த வித்தியாசமான பொருத்தம் எனைத் தவிர இன்னொருவருக்கு இருப்பதைப் பார்த்த ஆச்சரியத்தில் கேட்கிறேன்..

    சிவராமன் சாரின் சிஷ்யராக உங்களை நீண்ட நாட்களாகத் தெரியும்.. ஆனால் நீங்கள் எழுதுவது இப்போதுதான் தெரியவந்தது..

    உங்கள் முகவரியை இங்கே பிரசுரிக்க விருப்பமில்லையென்றால், mathansri@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.. ப்ளீஸ்!

    ReplyDelete
  4. முப்பது முதல் ஐம்பது வரைன்னு போர்டு மாட்டியிருக்கானே.. அது விலையில்லை, வயசா?

    - முகமூடி

    ReplyDelete
    Replies
    1. அப்படி அது வயசா இருந்தா, நமக்கெல்லாம் குறைந்தபட்ச வயசே ஆகலியே :)

      Delete