மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். ப்ரொஃபைல் ஃபோட்டோவில்
ஹரிஹரன் சிரித்தபடியிருந்தான், அவன் நண்பர்கள் ஃபேஸ்புக் சுவற்றில் அவனைக் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். சற்று உயரம் குறைவாய், ஒரே பையன், உச்சந்தலையில் சிறியதாய் ஒரு பள்ளம் உண்டு என்ற கூடுதல்
சலுகையில் எல்லா அபிலாஷைகளும் நிறைவேற்றப் பட்டுவிடும் பூரிப்பில் சிரித்துக் கொண்டிருந்தான்.
‘இல்ல சார்.. இதோ பாருங்க. சர்டிஃபிகேட்
ரெடி, அவர் கையெழுத்து போட்டுட்டார்னா குடுத்திருவோம்’
‘அதுக்காக இவ்ளோ ரூபா கேக்கறீங்களேப்பா…
திடுதிப்னு எங்க போறது, ஆத்துல அவ வேற தனியா தவிப்பா’
ஒரு முன்னணி நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை. அம்மாவிற்கு சங்கீத ஞானம்
உண்டு. சில குழந்தைகளுக்குக் கற்பிக்கவும் செய்தாள். என் அக்காவின் மகன் அருணுக்கு
கல்லூரித் தோழன். கிரிக்கெட்டில் கொள்ளை ஆசை. உயரக்குறைவினால் தடைகள் இருந்தன. நல்ல
திறமையிருந்தாலும், செலவு செய்து கற்றுக்கொண்டாலும் பிரயோஜனமில்லை, எந்த டிவிஷனிலும் சேர்த்துக்கொள்ள
மாட்டார்கள் என்று சொன்னார் கோச்.
‘நாங்க என்ன, எங்களுக்கா கேக்கறோம்.
எங்களுக்கு என்ன சார்.. அங்க, அவருக்குக் குடுக்கணும். குடுத்தீங்கன்னா கையெழுத்து
ஆயிரும்.. போய் ஆகவேண்டியதப் பாக்கலாம்’
ஒரு மத்திம வயதுக்காரர், பையனின்
மாமாவாக இருக்கக்கூடும், விரைந்தார். அங்கே போய், செலவைப் பற்றிக் கவலையில்லை. சர்டிஃபிகேட்
கிடைத்தால் போதும் என்று சொல்லி, விரைவாக முடிக்க ஏதுவான கார்யங்களில் இறங்கினார்.
தகுதிக்குறைவானால் என்ன, எனக்கு விளையாட வேண்டும் முறையான பயிற்சி தான் வேண்டும்,
என்னை சேர்த்துக்கொள்ளுங்கள், கற்றுக்கொள்கிறேன். கிரிக்கெட்டை எவ்வளவு காதலிக்கிறேனென்று
உங்களுக்குத் தெரியாது, என்று சேர்ந்துவிட்டான். வேலை, வார இறுதிகளில் உடற்பயிற்சி,
கிரிக்கெட், கொஞ்சம் மிமிக்ரி, வெளியாகும் படங்களை உடனுக்குடன் பார்ப்பது எனப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் அலமாரியில் படுத்திருந்த மிருதங்கம் அவன் கண்ணில் பட்டது. பல வருடங்களுக்கு
முன் கொஞ்சமே கொஞ்சம் கற்றுக்கொண்டது.
அங்கேயும் மத்திம வயதுக்காரரிடம்
அதைத்தான் சொன்னார்கள். ’நாங்க ஒண்ணும் வாங்கறதே இல்ல சார். அவங்க தான். குடுத்திருங்க,
இல்லாட்டி இழுத்தடிப்பாங்க… கெடைக்கமுடியாமப் போக என்ன உண்டோ எல்லாம் பண்ணுவானுக’.
‘சார் பணத்தைப் பத்திக் கவலையில்ல..
சீக்கிரம் கையெழுத்துப் போட்டுட்டீங்கன்னா…’ முடிப்பதற்குள் அவரின் குரல் உடைந்தது.
சின்ன வயதில் கற்றுக்கொண்டது. அருணின் மாமா வாசிப்பார். எப்பொழுது அருண் வீட்டிற்குப்
போனாலும் மிருதங்கம் கேட்டுக்கொண்டேயிருந்தது. யாராவது பாடிக்கொண்டோ, வாசித்துக் கொண்டோ
இருந்தார்கள். அவரிடம் கேட்கவேண்டும். சேர்த்துக்கொள்வாரா தெரியவில்லை. வீட்டிலிருக்கும்
மிருதங்கத்தை சரி செய்ய வேண்டும். ‘……………… அவர்கள் வயலின், மிருதங்கம் – ஹரிஹரன் சிவசங்கரன்’….
இமைகளை மூடியதும் அகில இந்திய வானொலியின் அறிவிப்பு கேட்டது, கனவில், யாரோ ஒரு சாஸ்திரிகள்
மாலை போட்டு, பொன்னாடை போத்தினார். ஒரு கோவில் உத்ஸவத்தின் கச்சேரி போன்று இருந்தது.
ஹரிஹரனுக்கு தூக்கத்தின் இடையே இதழோரம் ஒரு புன்னகை அரும்பியது.
சர்டிஃபிகேட் கிடைத்துவிட்டதா என மத்திம வயதுக்காரரைப் பார்த்தால் தெரியவில்லை. அவர் சற்றே இறுகிய முகமாயிருந்தார். அங்குமிங்கும்
ஓடிக்கொண்டேயிருந்தார். எல்லோருமே இரும்பு கேட்டிற்கு வெளியே நின்றபடி காத்திருந்தார்கள்.
யாருடைய அலைபேசியாவது அடித்துக்கொண்டேயிருந்தது. ஒவ்வொரு அழைப்புமே எல்லோரையும் சற்று
பரபரக்க வைத்தது. மாமாவுடைய ஃபோனுக்கும் கால் வந்தது. யாரோ பதில் சொன்னார்கள். அவர்
வீட்டிலிருப்பவர்களைப் பார்த்துக்கொள்ளும்படி யாரிடமோ கட்டளையும் இல்லாமல் கோரிக்கையும்
இல்லாமல் ஏதோ சொன்னார்.
மறுநாள் மிருதங்கம் மாஸ்டரை சந்தித்துவிட்டேன். அவர் சிரிக்கச்சிரிக்கப் பேசினார்.
இடையிடையே சீரியஸாக ஒரிரு வரிகள் வந்து விழுந்தன. கிரிக்கெட் விளையாடுவதைப் கூட பரவாயில்லை,
ஜாக்கிரதை என்று சொல்லிவிட்டார். சகஜமாக உணர்ந்தேன். தல படத்துக்கு ரிஸர்வ் செய்திருப்பதைக்
கூட தைரியமாய்ச் சொன்னேன். அடுத்த சில நிமிடங்களுக்கு எந்த டாபிக் பேசினாலும் அதில்
அஜித்தை டேமேஜ் செய்துகொண்டேயிருந்தார். எல்லோரும் சிரித்தோம். வந்து அம்மாவிடம் சொன்னேன்.
‘வர்ற பதினஞ்சாம் தேதி நாள் நல்லாயிருக்காம், அன்னிக்கு என் நக்ஷத்திரத்துக்கு சந்தாஷ்டமோ
என்னவோ சொன்னார், அது இல்லையாம்.. மத்யானம் வரச்சொன்னார்’ அம்மாவின் முகம் எல்லாம்
சந்தோஷம். இன்று இரவு எனக்கு மிகவும் பிடித்ததான ஒன்றைத்தான் அவள் சமைப்பாள் என்று
தெரிந்தது.
’மொதல்ல இட்டாந்தவரு ஒரு கையெழுத்துப்
போட்டு எழுதிக்குடுத்துட்டாருங்க. இப்ப, நீங்க தான் சொந்தக்காரங்கன்னு எழுதிக்குடுக்கணும்.
ஒண்ணும் ஆபத்து இல்ல, வில்லங்கம் இல்லன்னு மேற்படி அதான், நம்ப …………. அவரு சர்டிஃபிகேட் குடுப்பாரு..
இந்தாம்மா… அன்னாண்ட போ… பேசிக்கினு இருக்க சொல்லோ இங்க வந்து மூக்க சீந்தறியே.. அதனால,
நீங்க எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அமவுண்ட்ட கொண்டாந்துருங்க.. அப்புறம் அஞ்சு மணி,
ஆறு மணி ஆயிடுச்சுன்னா, எதுனா டூட்டி கீட்டி மாறிச்சுன்னா கஸ்டமாயிரும்… ஒரே புள்ளன்றீங்க’
அடுத்த வாரம் முழுவதும் நைட் ஷிஃப்ட். மாஸ்டர் ரெண்டு கிளாஸ் சொல்லித்தந்துவிட்டார்.
கொஞ்சம் பழசெல்லாம் ஞாபகம் வருகிறது. வெள்ளிக்கிழமை மியூசிக் அகாடமியில்அவர் வாசித்த
கச்சேரிக்குப் போனேன்; நன்றாக இருந்தது. கச்சேரியை விட, அது முடிந்து கீழே வந்து எல்லோரிடமும்
ஒரு ஸ்பீச் போட்டார். அதை நினைத்து இரவெல்லாம் சிரித்துக்கொண்டேயிருந்தேன். சனிக்கிழமை
காலையில் ஹவுஸ் கிரிக்கெட் விளையாடவாவென்று அருண் கூப்பிட்டான். ஆனால், வெள்ளி இரவு
ஷிஃப்ட் முடிந்ததும் அடையார் அருகில் க்ரவுண்டுக்கு வருமாறு ஆஃபீஸ் டீம் சொல்லிவிட்டது.
பழனி என்னிடம் வந்து போலாமா எனக்கேட்ட போது மணி 4.30AM இருக்கும். இருவரும் ஒரே காலேஜில்
படித்து இப்போது ஒரே இடத்தில் ஒரே மாதிரி வேலை. நான் மிகுந்த சந்தோஷமாக இருப்பதற்குப்
பொறாமைப் படாதீர்கள். சிலருக்கு அப்படித்தான், எல்லாம் பிடித்த விதமாக அமைந்துவிடும்.
பழனி எப்போதும் என்னுடன் தான் வருவான். நான் தான் ஓட்டுவேன், அவனுடைய டிஸ்கவரில் சென்றால்கூட.
அதுவும் அவனை ஓட்டச் சொன்னால் 40, 50–ஐத் தாண்டமாட்டான். அன்று ஏனோ, நான் பின்னால்
உட்கார்ந்துகொண்டேன். பீச் ரோடு சில்லென்று காலியாக இருந்தது. காலையில் கிழவர்கள் பீச்சுக்கு
வருவதைத் தடை செய்யவேண்டும். நைட் ஷிஃப்ட் முடிந்து வருபவர்களுக்காக ஸ்டெல்லா மாரிஸ்,
எதிராஜ், எம்.ஓ.பி. யில் படிப்பவர்கள் டென்னிஸ் விளையாடலாம். யோகாசனம் கூடச் செய்யச்
சொல்லலாம். சில்லென்று விசிலடித்தேன்.
’இந்த ஹைட்டுக்கு பல்ஸர் எல்லாம்
ஓட்டக்கூடாது சார். அது பிக்கப் வேற தாஸ்தி. சட்டுனு மேனேஜ் பண்ணி கால் ஊன்றதெல்லாம்
கஸ்டம் பாருங்க… அதுலயும் இப்பத்தி பைக் எல்லாம் பின்னால தூக்கினு இருக்கு. சின்னதா
ஒரு ப்ரேக் போட்டா கூட, பின்னால இருக்கறவன் நம்ம முதுகுல வந்து வீள்றான்… என்னமோ டிஸ்க்கு
ப்ரேக்காமே அத்த வெச்சுகினு இதுங்களும் சல்லு சல்லுனு போவசொல்லோ பயமாயிருக்கு…’
’இன்னும் எவ்ளவோ பேரு இருக்காங்க. அமவுண்ட் கொண்டாந்திட்டீங்களா? வூட்ல கஸ்டம் பாருங்க…
வந்திருச்சா வந்திருச்சான்னு… எத்தினி பேர் சார் ஒங்களுக்கு?’
அருண்… அருண்… என்று என்னை மாமா கூப்பிட்ட போது ஹவுஸ் கிரிக்கெட்டை பாதியில் இருங்க
என்று சொல்லிவிட்டு வந்தேன். கார்ப்பொரேஷன் பேங்க்குக்கு தாத்தாவைக் கூட்டிண்டுபோய்
என்று ஏதோ வேலை சொல்லிவிட்டு அவர் மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த நத்தின்தின்னாக்கள்
பழகிவிட்டது, எனக்கும். ஆனால், பேங்க்குக்கும் போகமுடியாமல் கிரிக்கெட்டும் ஆட முடியாமல்
ஃபோன் வந்தது. உடனே ராயப்பேட்டை போக வேண்டும். நானும் வருகிறேன் என்று மிதுன் சொன்னான்.
இருவருமே பதட்டமாக, கவனமாக அண்ணா சாலையில் விரைந்தோம்.
’ஃப்ரெண்டு தான் வண்டி ஓட்டீருக்காரு.
எங்களுக்கு நாலரை, அஞ்சுக்குத் தான் தகவல் வந்தது. பின்னாடி கொஞ்சம் குள்ளமா ஒருத்தரு,
அவர ராயப்பேட்டைக்கு அனுப்பிச்சிட்டு, ஓட்டினவர ஆழ்வார்பேட்டைக்கு அனுப்பிச்சிட்டோம்.
ஃபார்மாலிட்டீஸ் முடிஞ்சிருச்சின்னா, ரிப்போர்ட் வந்திரும். ஒண்ணும் பயப்பட வேணாம்,
விபத்துன்னு எழுதியிருப்பாங்க, என்ன சாப்டாங்க, எத்தன மணிக்கு உயிர் போச்சுன்னு சொல்லுவாங்க.
நீங்க பையனுக்கு அப்பாங்களா? தைரியமா இருங்க. ஒரே பையனா… அடடா……’
’மாமா… ஹரிஹரனுக்கு ஆக்சிடெண்ட்டுன்னு இங்க வந்தோம்… அவன் பீச் ரோட்டுல லாரி
இடிச்சு ஸ்பாட்டுலயே செத்துட்டானாம்… பழனி
வருவான்ல, நம்மாத்துக்கு.. கிரிக்கெட் வெளயாட, அவன் தான் ஓட்டினானம். அவனுக்கு மூளையெல்லாம்
அடி, ப்ளட் க்ளாட் ஆயிடுத்தாம். வேற ஹாஸ்பிடல்ல இருக்கான். எங்கள எல்லாம் பாத்துப்
பாத்து ஹரி அப்பா அழறார். எங்களுக்கும் அழுகையா வர்றது…. அவருக்கு ஷுகர் வேற. மயங்கி
விழுந்துட்டார். இங்க மார்ச்சுவரில பத்தாயிரம், இல்லன்னா… அதுக்கு மேல பணம் புடுங்கறத்துக்காக
என்னென்னமோ சொல்லி லேட் பண்றான்…’ என்று உடைந்த குரலில் சொன்ன போது, என்னுடைய கனவிலும்
‘………………… அவர்கள் வயலின், மிருதங்கம் –எஸ். ஹரிஹரன்….’ என்ற அறிவிப்பாளரின் குரல் ஒலித்தது,
தேய்ந்தபடி அறுத்தது.