தமிழ் மட்டுமல்ல, எந்த மொழியுமே இனி மெல்ல சாகும்.
Facebook status message-ல் (முக நூலின் நிலைச்செய்தி என்று சொன்னால் நீங்கள் இந்தச் சாளரத்தை [விண்டோ] மூடிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக):
"வாழ்த்துகள் என்று சொல்வதில் பெரிய தத்துவமே இருக்கிறது.. அது இன்னாது? இந்த பிரபஞ்சமோ என்னவோ சொல்றாங்களே, அது எம்மாம் பெர்சு... ஆனா கண்டி, நீ தம்மாதுண்டு... மெரசல் ஆவாத... வாய்த்து... இந்த தபா வாயுன்றேன்.. தெர்தா.." என்று போட்டிருந்தேன்.
நண்பர் ஆர்.கே. பதிலுரையாக, "மெல்ல சாகும் தமிழ், இதைப் பார்த்தால் மெல்ல நகைக்கும்" என்றார்.
புத்தகங்களைப் பற்றிச் சொல்லும்போது, books to be glanced, chewed and digested என்று அப்பா எப்பொழுதுமே சொல்லுவார். மொழியை இப்போது பெரும்பான்மையோர் மெல்லுதல் செய்கின்றனர். அகாதமியின் மிருதங்க வகுப்பகளில் கூட நான் அடிக்கடி சொல்ல நேரிடுகிறது. மெல்ல மெல்லப் பேசுகிறார்கள். அதோடு, வார்த்தைகளின் ஓரங்கள் வலிமையாய் இருப்பதில்லை. விளிம்புகள் தேய அவர்கள் பேசுவதில் (அவர்களே அறியாத ஒரு ஒழுக்கம்!) ஒற்றை வார்த்தையாய் இருந்தால் அதன் ஈற்றெழுத்தும் ஒரு வாக்கியமெனில் அதன் கடைசிச் சொல்லும் கரைந்துபோகும்.
"ஒழுங்கா சாதகம் பண்றயா?"
"சாதகம் பண்..."
"நேத்திக்கு எங்க போயிருந்த?
"நேத்திக்கு வெளில போயிரு....ன்"
இப்படி ஆகிவிடுகிறது.
மெல்லுகிற எதுவும் விழுங்கப்பட்டு செரிமானம் ஆகி இரத்தத்தில் கலந்தால் பரவாயில்லை. மொழி வெறுமே ஒரு ச்சூயிங்கம் போல அரைபடுகிறது. விளைவாக இரண்டிலுமே இனிமை விழுங்கப்படுகிறது.
சிலர் விழுங்கி அவர்களின் குருதியில் கலந்துவிடும் மொழி, வாழ்கிறது. சிலரைப் பார்த்தால், "நீங்க மென்னது போதும்.. ப்ளீஸ் துப்பீட்டீங்கன்னா அது எப்படியாவது பொழச்சிக்கும்.. ஏன்னா, நீங்க முழுங்கீட்டு எதாவது ஒரு டிவி ஸ்டேஷன்ல வேல கீல கெடச்சு வாழ்ந்துடுவீங்க.. பாவம் அது செத்துப் போயிரும்" என்று சொல்ல நேரிடுகிறது. தமிழ் என்று இல்லை. எந்த மொழிக்குமே இது தான் நேர்கிறது.
தமிழ் வளர்க்கும் கழகங்கள் காலகாலமாய் தங்கள் தானைத் தலைவர்களை வருக-விலிருக்கும் ர-வை (ராவாக அடித்திருப்பார்கள்!) ஒரு பொருட்டாகவே மதிக்காமல் வ(ர்ர்ர்)றுக வ(ர்ர்ர்)றுக என்று மறு மாற்றத்திற்கு (சைடு டிஷ்) 'அடி' போடுகிறார்கள், அவன் வரும்போதே!
நீங்கள் கடித்துத் துப்பினாலும் பரவாயில்லை, மெல்லினமாய் இருந்தால் கூட.
மெல்லாதீர்கள், அது சாகும்.
தம்பி.. தற்போது கொஞ்சம் ரௌத்ரம் பழகு.
very good and very much needed
ReplyDeleteசரியான நேரத்தில் வந்திருக்கிறது. நீங்க எழுதி இருப்பது முற்றிலும் உண்மை. என்னமோ மொழிக்கு வலிக்குமோ என்கிறாப் போல் தான் பேசுகிறார்கள். அதிலும் சில செய்தி வாசிக்கும் பெண்மணிகள் உச்சரிக்கும் விதத்தையும் அதுக்கு அவங்க படற கஷ்டத்தையும் பார்த்தால்! :(((((((((((
ReplyDelete