சென்ற ஜூலை மாதம் 28-ஆம் தேதி காஞ்சிபுரம் சென்றிருந்தேன். பவதாரிணி பாட்டு - காரைக்கால் வெங்கடசுப்பிரமணியன் வயலின். கச்சேரிகளுக்காய் காஞ்சிக்கு செல்லுகையில் "நீ என்ன பெரியவாளை தரிசனம் பண்ணவா வந்த? ஏதோ காரியமா வந்துட்டு, இங்க எட்டிப்பாக்கறே" என்றுதோன்றும்.
அப்படியில்லாமல் ஒருநாள் வரவேண்டும் என்று எண்ணியபடியிருந்தபோது, "ஹலோ..நாகராஜனா... நான் ................... பேசறேன்.. ஆகஸ்ட் 15 அன்னிக்கு ஈரோடு பிக்ஷை... வந்துடறியாப்பா?
"ஆமாம் மாமா... ரெண்டு வருஷமா நான் பெரியவாகிட்ட வாசிக்கற போதெல்லாம் ஈரோடு பிக்ஷைனு நாம meet பண்ணோம்... அப்பவே மனசுல நெனச்சுண்டுட்டேன்... வந்துடறேன்.."
"நாகராஜ்... நீ எங்க அண்ணா KNS புள்ள... நீ ஒண்ணும் கொண்டு வர வேணாம்... எல்லாம் நாங்க ஒரு பஸ்சுல வரோம், கொண்டு வரோம்... நீ ஒரு ஆயிரத்தொரு ரூபா கட்டினா போதும்... காலேல எட்டே முக்காலுக்கு எல்லாம் வந்துடு. அங்க ஒரு முன்னூறு ரூபா பணம் கட்டினா கோடி அர்ச்சனை பண்ணலாம், நானே உன்கிட்ட வாங்கி office-ல ரசீத் வாங்கித் தரேன். அதில்லாம சகல பிரசாதங்களும் சம்ருத்தியா வாங்கித் தரேன். நீ வரேன்னு பரிமளா கிட்ட எல்லாம் சொல்லுப்பா, அவாளும் அப்போ வருவா..."
பாலாஜி-மணி, ரமணன்-வைனி, பரிமளா-தனா, கோமதி-லக்ஷ்மி எல்லோரும் நினைவிற்கு வர, சொல்லுகிறேன் மாமா என்று கூறிவிட்டு, கச்சேரிகளுக்கிடையே மறந்து போனேன். 14-ஆம் தேதி reminder ஒலித்தது... book car for kanchi என்று. கும்பலாய் ஒரு இன்னோவாவில் ஏறி காஞ்சியை அடையும்போது எட்டே முக்கால். வேதபுரி சாஸ்த்ரிகள் அமர்ந்திருந்தார். எட்டு வயதிலிருந்து பெரியவாளோடிருப்பவர். அவரிடம் பேசிவிட்டு பிருந்தாவனத்தில் நமஸ்கரித்துவிட்டு பூஜா மண்டபம் சென்றதும் ................. தெரிந்தார். பதற்றமாக இருந்தார். ஒரு பத்து நிமிடங்களேனும் வாசிக்கலாம் என்று எடுத்துச் சென்றிருந்த மிருதங்கம் காரில் இருந்தது.
"இந்தா சங்கல்பத் தேங்காயை நீ வெச்சுக்கோ" என்றவர், அருகிலிருந்தவர்களிடம் "அப்பவே இவன் அனுஷத்துக்கு மௌன விரதம் இருப்பான்... எங்களுக்கெல்லாம் அந்த பக்குவம் வரலியே" என்று அழுதார். திகைப்பாயிருந்தது; சங்கடப்பட்டேன். வெளியில் காண்பதெல்லாம் முதிர்ந்த பக்தியா.. எனக்கு நான் அப்போது என்ன செய்தாலும் அது அகந்தையின் வெளிப்பாடுதான் என்று தோன்றியது. மெளனமாக சிறிது நேரம் தலை குனிந்திருந்தேன்.
ஆயிரத்தொரு ரூபாயை அவரிடம் கொடுத்தேன். அவர் வாங்கி வைத்துக்கொண்டு, இதுல கொஞ்சம் அங்கே போறது என்று சிரித்தார். அங்கே என்பது நாமக்கல் போன்ற ஒரு இடமாக இருக்கலாம்.
யாரோ ஒருவர், சிவசிவ சிவசிவ சிவாய நம ஓம் என்று பெருங்குரலில் பாட, பின்னாலிருந்து வாங்கிப் பாடியவர் நமநம நமநம நமாய நம ஓம் என்று பாடினார். யாரோ ஒரு மாமி, முன்னாள் அமர்ந்திருந்தவரைப் பார்த்து நீங்க பாடுங்கோளேன் மாமா என்றாள். அவர், இவர்கள் முடிக்கட்டும் என்று சைகை செய்துவிட்டு, சுருதி பாஃக்ஸை எடுத்து வைத்தார்.
வெறுமே வாசிக்கலாம் என்று வந்த நான் ஸ்ருதியோடு வித்வத் களையாக ஒருவரைப் பார்த்ததும், "கிருஷ்ணா, வாத்யத்தை எடுத்துண்டு வந்துடு", என்றேன். திரும்பியவர், "ஈரோடு நாகராஜன்... எப்பிடி இருக்கேள் ரொம்ப சந்தோஷம்... ரொம்ப வருஷம் முன்னாடி உங்களைப் பார்த்தது.. டெய்லி சிவராமன் சார் ஆத்துக்கு, கே.கே.நகர்லேர்ந்து போவேள்" என்றார். நான் அவர் பெயரை யோசித்துக்கொண்டே சிரித்தேன், காசிராமன்.
பத்து நிமிடம் வாசிக்கலாமா என்று போய், மிகச் செறிவான கீர்த்தனைகளுக்கு வாசித்தேன். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி - சங்கராபரணம் - மிஸ்ர ஜம்பை தாளத்தில் வீச்சில் அரை இடத்தில் தனி ஆவர்த்தனத்தோடு. பூஜை முடிந்து, ஈரோடு பிக்ஷை யாரெல்லாம் எனக்கேட்ட தருணத்திலிருந்து என்னை ...................... மறந்து போனார்.
அங்கிருந்து பால பெரியவர் அறைக்கு அருகில் அநுக்ஞ கணபதி, ஆதி சங்கரர் சன்னதி, சுரேஸ்வராச்சார்யாள் சன்னதிகளைப் பார்த்துவிட்டு மண்டப மேடையேறியபோது அருகில் நடந்துகொண்டிருந்த ஹோமம் இன்று பத்தாவது நாளுடன் முடிவடைகிறது என்றனர்.
பூர்ணாஹுதிக்குப் பின் பால பெரியவரை தரிசிக்க நல்ல கூட்டம். என்னுடன் கார்த்திக், கிருஷ்ணா, ரங்கு,அருண், ராகவ் என்றொரு கூட்டமே இருந்தது. அங்கும் ....................... வந்தார். அவர் நோக்கம் ஈரோடு வாசிகளுக்கு நடுவே, பெரியவாளுக்கு தான் மிகவும் நெருங்கியவன் எனக்காட்டும் ஒரு வேகம் இருந்தது. கட்டைகளைத் தாண்டி உள்ளே சென்று நின்று கொண்டிருந்தார். அங்கிருந்து சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டார். கடைசியாக எல்லோரும் சென்ற பிறகு நாங்கள் சென்றோம்.
"பூஜைல வசிச்சாச்சா? சாரி கிட்ட சொல்லி ஒரு நாள் கார்த்திக்க வாசிக்கச் சொல்லு"
சரி பெரியவா..
"இவா கிட்ட அந்த form-க் குடுத்து fill பண்ணச்சொல்லு"
கொடுத்தார்கள். அதில் எங்கள் விவரங்களும், வேதம் ஸ்லோகம் போன்ற ஏதேனும் படிக்க விருப்பமுண்டா என்பன போன்ற விஷயங்களும் கேட்டிருந்தார்கள். நிரப்பிக் கொடுத்துவிட்டு
ஒரு நிமிடம் புதுப் பெரியவாளைப் பார்த்துட்டுப் போகலாம் என்று சென்றால் அங்கே காசிராமன் பாடிக்கொண்டிருந்தார். அங்கேயும் வாசித்து விட்டு வநது பார்த்தால் பிருந்தாவனம் மூடியிருந்தது.
என்னவோ போல் இருந்தது. என்மேலேயே எனக்குச் சந்தேகம் வந்தது. அங்க இங்க சுத்தீட்டு, பெரியவா கிட்ட வரவேயில்லல்ல நீ... அதோடு, ....................... மேல் சற்று வருத்தம் வந்தது. இப்படி தீர்த்தப் பிரசாதம் கூட வாங்கித் தரலியே... எங்க சாப்பிடறதுன்னு தெரியலையே என்று. என்னுடன் வந்தவர்கள் ஒருவரும் அதிகாலையிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு .................... ஐக் காணவில்லை. அலைபேசியில் அழைத்தாலும் கிடைப்பதில்லை.
இங்கதான் சந்தர்ப்பணை இருக்கு, அங்க போய் பாக்கலாம். இல்லாட்டி பரவாயில்லை, பிஸ்ஸா சாப்டுக்கலாம்... சரவணா பவன் இருக்கே... அபிப்பிராயங்கள். மூன்றரைக்குச் சரவணபவனில் சாப்பிட்டு முடித்தோம். அங்கிருந்து தேனம்பாக்கம் சென்றோம்.
அது பெரியவாள் ஆனந்த தவம் செய்த இடம். அங்கே அதிசயமாக பெரியவாள் அறைக்குள்ளே அழைத்துச் சென்று காட்டினார் குமார் மாமா. "இதுக்கு உள்ளேயே தான் இருப்பா... யார் வந்தாலும் அந்த கெணத்துக்கு அந்தப்பக்கம் தான் இருக்கலாம். அவாளுக்குக் கைங்கர்யம் பண்றவா கூட இங்க உள்ள வரமுடியாது. இந்த ஜன்னல் வழியா, அதோ அந்தப் பிள்ளையாரைப் பாப்பா..இந்த படிக்கட்டுல ஏறி, பிரம்மபுரீஸ்வரர் கோபுரத்த பாப்பா... உள்ள போய்டுவா... எப்பவும் தபஸ் தான்..."
அங்கிருக்கும்போது தான் ஒருநாள் இரவு எட்டு மணிக்கு மேல், "என்ன சத்தம்" என்றார் பெரியவா.
"காமாக்ஷி ரதம் வராது... வேட்டு போடறா.."
"எல்லாரும் போய் அம்பாளப் பாத்துட்டு வரலாமா?"
"ம்ஹூம்.. முடியாது... தேர் சுத்தி வநது கச்சபேஸ்வரர் கோவில் கிட்ட வந்தாதான் வேட்டு போடுவா. அங்கேந்து அம்பாள் காமாக்ஷி கோயிலுக்குள்ள போக பத்து நிமிஷம் தான் ஆகும். நாம இங்கேந்து அங்க போகணும்னா ஒரு மணி நேரம் ஆகும் (ஏழு கிலோமீட்டர்கள்)..."
சரி என்று எழுந்த பெரியவா, நேரே பிள்ளையாரிடம் ரகசியமாய் சொல்லிவிட்டு, நடக்க ஆரம்பித்து விட்டார். ஓட்டமாகத் தொடர்ந்தனர் தொண்டர்கள். அங்கே போனால், ரதம் கச்சபேஸ்வரர் கோவில் வாசலிலேயே இருந்தது. பெரியவாள் தரிசனம் முடிந்த பின்பு தான் தேர் உள்ளே சென்றது. தொண்டர்கள், அங்கிருந்தவர்களைக் கேட்க, "அது என்னவோ.. இந்த கோயில் யானை நாங்க தேரை இழுக்கலாம்னு வந்தாலே குறுக்க வநது நிக்குது... நவுரவேயில்ல.. வுட்டுப் புடிப்போம்னு, அந்த பக்கம் வந்தா அதுவும் சாதுவா நகந்துக்குது... கிட்ட வந்தா குறுக்க வநது கத்துது"
அந்த அறையிலேயே அமர்ந்து சிறிது நேரம் ஜபம் செய்தோம். அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வரும்போது எட்டரை மணியாகியிருந்தது. ஆனால் விஷயம் அதுவல்ல.
மனதிற்குள் ஒரு வருத்தம் இருந்துகொண்டேயிருந்தது. இரண்டு, மூன்று நாட்களுக்குப் பின், "இதோ பாருங்கோ பெரியவா... இவ்ளோ தூரம் வந்துட்டு, பிருந்தாவனத்துல வாசிக்கலயேன்னு தாபமா தான் இருக்கு. நான் என்ன, என் சவுரியப்படிஎல்லாம் நடக்க முடியறதா.. கூட வரவாளை எல்லாம் அனுசரிச்சு தானே போக வேண்டியிருக்கு? நிம்மதியா அங்க வந்தோம், அதிஷ்ட்டானத்துல வாசிச்சோம், பெரியவளோடையே இருந்தோம்னு இருந்தாதானே எனக்கு நிம்மதி? பிக்ஷைன்னு வந்துட்டு வெளீல சாப்பிடறதும், உத்தரவு வாங்கிக்காம கெளம்பறதும் ஆசைப்பட்டா பண்றேன்?" என்றெல்லாம் பல்லக்கினுள்ளே பார்த்து, நினைக்கவில்லை... பேசிக்கொண்டிருந்தேன்.
ஏனெனில் அதற்கு மறுநாள் அகாடமியில் நுழையும்போதே என் வண்டியிலிருந்து கீழே விழுந்தேன். அன்று மாலை, கிருஷ்ணா கான சபாவில் என் recorder-ஐத் தொலைத்தேன். மனம் ஒரு நிலைப்படவில்லை.
"sir... send me ummaachi thatha stories" என்று மெசேஜ் வந்தது, அடுத்த நாள். கௌசிக் அனுப்பியிருந்தான். "when can I call you sir... I have a lot to tell you..." மறு நாள் கூப்பிட்டேன். வீடு வாங்கியிருப்பதையும், கல்யாணம் நிச்சயம் ஆகியிருப்பதையும் சொன்னான். அலுவலகத்தில் மேலதிகாரி திடீரென பிரச்சனைகள் கொடுப்பதாகவும் சொன்னான்.
"நீ... பெரியவா அதிஷ்டானத்துக்கு போயிட்டு வந்துடேன் கௌசிக், ஒரு தடவை..."
"போகணும் சார்"
அன்றிரவு பன்னிரண்டு மணிக்கு அவனிடமிருந்து மெசேஜ்கள்!
"சார்.. இன்னிக்கு செலதெல்லாம் நடந்தது... திடீர்னு, ட்.ஷர்ட் வாங்கணும்னு தோணித்து சார். சேகர் எம்போரியம்னு ஒரு கடைக்குப் போனேன். அங்க ஒரே பெரியவா படமா இருந்துது. அங்க பாத்தா, சம்பந்தமேயில்லாம ஒரு சின்ன ஸ்டாண்டுல சிடியெல்லாம் வித்துண்டிருந்தான். அதுல ஒன்னே ஒண்ணு பெரியவா படம் போட்டு இருந்துது. ஏதோ devotional song-னு வாங்கினேன். சார், சத்தியமா அதத் தவிர மத்த எல்லாம் சினிமா சிடி சார்... ராத்திரி, ipod- ல பாட்டு கேட்டுண்டே தூங்கலாம்னு நெனச்சா, battery down-னு காமிச்சுது. சரி இதயானும் கேப்போம்னு, போட்டா, அவர் சிரித்துக் கொண்டிருந்தார்... நீ மடத்துக்கு வந்தே ரொம்ப நாள் ஆச்சேன்னு கேட்டார்.. அப்படீன்னு, அதுல வாய்ஸ் ரெக்கார்டிங் வந்துது. அதான், உடனே உங்களுக்கு sms பண்றேன்"
"ம்ம்... சொல்லு..."
"சார்.. நாளைக்கு மீட்டிங் இருக்கு.. அது நல்லபடியா முடிஞ்சுதுன்னா, அடுத்த நாளே லீவ் போட்டுடறேன்... போயிட்டு வந்துடறேன்..."
அடுத்த நாள் இரவு பத்து மணிக்கு கௌசிக்கிடமிருந்து அழைப்பு. "எல்லாம் நல்ல படியா முடிஞ்சிருச்சு சார்... காலைல ஒரு ஆறு மணிக்கெல்லாம் போலாம்னு இருக்கேன்... கார்ல தான் போறேன்.. நீங்க free யா இருக்கேளா? அங்க எனக்கு ஒண்ணுமே தெரியாது..."
"கௌசிக், நான் வரேன். ஆனா, அங்க வந்தா நான் அதிஷ்ட்டானத்துல தான் உக்காந்திருப்பேன், இங்க பூஜை அங்க பூஜை அதுக்கெல்லாம் வரலை. இப்படி தான் மிஸ் ஆயிடறது."
25-ஆம் தேதி, ஒன்பதரைக்கு உள்ளே போனோம். வீல் சேரில் நின்றிருந்தேன். காரை ஓரமாக பக்கத்து சந்தில் நிறுத்திவிட்டு உடை மாற்றிக்கொண்டு வருகிறேன் என்றான் கௌசிக். கதவைப்பெரியதாகத் திறக்கும் ஓசை, யானை வந்தது. "காலையிலேயே, பாலபெரியவா சீக்கிரமா பூஜைய ஆரம்பிச்சு முடிச்சுட்டா" என்றார்கள். அந்த யானை அருகில் வந்தது. துதிக்கையால் வீல் சேரை தடவி முகர்ந்து விட்டு, என் பின்னே உரசினார்ப்போல் சென்று, ஒரு தேங்காய் நாரை எடுத்து தின்னத் தொடங்கியது.
கௌசிக் வந்ததும், பூஜா மண்டபத்துக்குப் போய் பார்த்துவிட்டு, "இந்த படிக்கட்டுல தான் மேல நான் இருந்தேன்... எல்லாரும் நின்னுண்டு இருந்தா. திடீர்னு பெரியவா, "என்னடா இது.. பூஜக்கட்டு... எல்லாரும் ஏறீண்டு..." அப்படீன்னா. எல்லாரும் எறங்கினா. என்னை பாத்து, சிரிச்சு கை காமிச்சுண்டே, நீ உக்காந்துக்கோ என்றார் பெரியவர், அப்போது சென்னை வந்த புதிது", என்றேன்.
ஆனநதமாய் பிருந்தாவனத்தின் அருகில் நின்று ஜபித்துவிட்டு பாத பூஜைக்குப் போனோம்.
"கௌசிக்... உனக்கும் ப்ரீத்திக்கும் வேண்டிக்கறதோட அம்மா அப்பா தம்பிக்கும் நெனைச்சுக்கோ, சங்கல்பம் பண்ணிவெக்கும்போது".
"சரி சார்"
சற்று நேரம் வாசித்தேன். பிரசாதம் கொடுக்கக் கூப்பிட்டார்கள். கௌசிக் அதை வாங்குகையில், நீண்ட நாட்களாக சிரமப்படும் ஒரு பாடத்தில் தம்பிக்கு நல்ல மதிப்பெண்கள் வந்திருப்பதாய் ஃபோன்.
பின்னர் சந்தர்ப்பணையில் சாப்பிட்டோம். "அவாளுக்கு ஏதாவது கொடுக்கணுமா சார்"
"இல்லை..."
காஞ்சிபுரத்திலிருந்து கிளம்பி மெயின் ரோடுக்கு வரவேண்டுமென்று.
"சார்.... நான் காரைத் திருப்பப்போறேன்..."
ஏன்?
"reebok chappal சார்... ஆயிரத்தைநூறு இருக்கும்... சாப்ட எடத்துலயே வுட்டுட்டேன். இருக்குமா சார்?"
"கவலைப் படாதே... அங்க சாப்ட எடத்துல ஒரு நூறு ரூபா குடுத்திரு.."
கொடுத்துவிட்டு வந்தான்.
மிக நிம்மதியாய் வந்தோம், எனினும்..
__________________
அப்படியில்லாமல்...
__________________
வரத்தான் போகிறேன் ஒரு நாள்...
உன்னை மட்டுமே பார்க்கவென்று.
காண்பதைத் தவிர
கோரிக்கைகளில்லாது
ஏதோ வேலையாய்
எங்கோ செல்லும் வழியில்
எட்டிப் பார்க்கும் கால்களற்று,
கதவுகளைச் சார்த்திய பின்னும்
கவனம் விலகாது
நகரத் தோன்றாது
நகர்ந்தாலும் முடியாது...
எங்கேயோ இருந்துகொண்டு
எப்போதோ தேடாமல்
எப்போதும் இருந்தபடி
என்றேனும் வீடு(உ)வந்து...
மயக்கத்திலிருந்து விடுபடல் போல்
உன்னருகே உண்டு கண்ட
உன்மத்தங்கள் தீர்ந்து போய்,
கண்டலும் கேட்டலும்
செப்பலும் எண்ணலும்
செறிவிழந்து சலித்துப் போய்
நீயும் நானுமென
இரண்டு பேர்
இருப்பெதற்கு?
ஒருவனே போதுமே,
நீ மட்டும்.
Tuesday, September 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
படித்தேன்.
ReplyDeleteகடைசிப் பகுதி :-(
வேற என்ன சொல்றது? :-(
follow up :D
ReplyDeleteஅருமை சார். இன்றுதான் உங்களது ப்ளாக் முகவரியை அறிந்து கொண்டேன். நன்றி.
ReplyDelete