Saturday, January 30, 2010

நைஜீரியா பயணம் - 1
ஒட்டகப்பால் வேணுமா?  அல்லது ஓட்ட, கப்பல் வேணுமா?

விவேகானந்தர் தெரு இவ்ளோ நீளமா!!பனை போல வீடு கட்டி... இது தான் துபாய் குறுக்கு "sand"hu

பெண்மையில் தோன்றும் ஒயில்..
ஆண் மயில் போன்றும் எழில்..
ஆயிரம் மைல்கள் வழியில்,
ஆயினும் நில்லாத நைல்.

இருநூறு ப(ண்)டங்கள்; இரு சதமும் தண்டங்கள்!!
முகமது விமான நிலையம், எனில் உடலது கோபுரமோ?
(Murtala Mohammed Airport, Lagos)


 

நுண் மாண் நுழைபுலம் இல்லான் 
கண் காண்  எழில்-நலம் இல்லான்
துஞ்சான் துயர் தரு சொல்லால்,
மிஞ்சான் தன் அடையாளத்தே.   

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கிருத்திகா திடீரென "தோன்றி", இந்த சென்ட் நல்லா இருக்கா என்று என் மூக்கில் தேய்த்தபோது, மாகாணிக் கிழங்கின் வாசனை மீசையில் படிந்து, Estee Lauder, Royal Pearls of Avon, Stetson Black, Eternity, Forever Elizebath, Kamasutra-வின் செண்பகப்பூ மணம் அனைத்தையும் ஒரு கணம் நகையாடியது. சட்டென்று Facebook-ல் இருந்து நிமிர்ந்தேன். 


கடந்திருந்த வருட இறுதி, கழிந்ததெப்படி என்று எண்ணங்கள் முகாமிட்டன.


மார்கழிக்கும் முன்னே நவம்பர் அஸ்தமிக்குமுன் உதயமாகிவிட்ட இசை விழா பொங்கல் கடந்தும் தீர்ந்துவிடாமல் இருந்ததது. சென்னை சங்கமத்தில் காயத்ரி வெங்கடராகவனின் கச்சேரி. தி.நகர் நடேசன் பூங்காவில் இருந்தது. மறுநாள், பொங்கலன்று பின் மதிய வேளையில் சிவராமன் சாரைப் பார்க்கப்போனேன்.


"வா.. நாகராஜா..."


"இன்னிக்கு நைட்டு நைஜீரியாவுக்குக் கெளம்பறேன் சார்... நமஸ்காரம் பண்றேன்..."


சார் வீட்டிலிருந்து சிருங்கேரி ப்ரவசன மண்டபம்; அங்கே, வசுதா ரவி பாட்டு. வீடு வந்து சேர்ந்த போது ஏழரை மணி. இன்னும் ஒரு துரும்பு கூட எடுத்து வைத்துக் கொள்ளவில்லை!  தோராயமாக ஒரு packing. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அதிகாலை மூன்றரை மணிக்கு கிளம்புகிறது. வீல் சேரையும் செக் இன் செய்த பின் நிம்மதியாகக் காத்திருந்தோம்.


துபாய் காலை 6 மணிக்கு நல்ல குளிராயிருந்தது. பின் தூங்கி முன்னெழுவாள் பத்தினி என்று தங்கவேல் காமெடி நினைவிற்கு வந்தது ("அது எப்படிங்க... ஒங்க முதுகுக்குப் பின்னால தூங்கி, மூஞ்சிக்கு முன்னால முழிக்கறது?").
அதற்கு நேர் மாறாக, Disability Priority-ல் எல்லோருக்கும் முன்னால் ஏற்றி விடப்பட்டு, கடைசியாய் இறங்கினேன்.


வீல் சேர் உதவியாளர் பாவதாரிணியையும் சந்திரனையும் பார்த்து, "எவ்வளவு வேகமாக ஓட முடியும் உங்களால்... இன்னும் இருபது நிமிடத்திற்குள் நாம் வெகு தூரம் செல்ல வேண்டும்" என்று ரசம் வைத்தார் (புளியைக் கரைச்சு கரைச்சு போரடிக்கறது; அதான் டெவலப்பிங்...) என் மின்னஞ்சல் முகவரி (kalyaani@gmail.com) நினைவிற்கு வர, வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடியதும், மனிதர்களை இரஹசியமாய் உள்வாங்கும் குழாயின் வாயில் தெரிய, வாயிலில் நுழைந்தோம். இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன எனினும், உன்னால தான் லேட்டு என்ற ஸ்னேஹம் குறைந்த பார்வைகள் தென்பட்டன.


ஐக்கிய அரபு நாடுகளை குறுக்காய்க் கடந்து, jedda -வைத் தாண்டியதும் கீழே செங்கடல்.  கீழே மேகங்கள், குடும்பப் பாங்கான கதாநாயகிகளின் அருவி டூயட் போல மெல்லியதாய் திரைபோட்டதில் Red Sea, செங்க-dull-ஆகத் தெரிந்தது.


கரை முடிந்து கடல் தொடங்கி, கடல் முடிந்து கரை தொட்டதும் 'புனரபி ஜனனம் - புனரபி மரணம்' என்ற வரிகளும் இதே போல்  மனக்கரையில் மோதி மோதி அரித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். ஈஜிப்டின் லக்சோரைத் தொடுவது போல் ஜாலம் செய்து சூடானைக்கடக்கையில் நைல்  நதி விழிகளைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. அடுத்து திபெஸ்தி எரிமலைகளையும் சஹாராவையும்  கடந்து மாலை மதியம் ஒன்றரைக்கு முர்தாலா முஹம்மத் விமான நிலையத்தை அடைந்தோம்.


பழைய தோற்றமும் பழையதொரு வாசனையும் சூழ்ந்த நிலையம். என்னை வரவேற்ற நைஜீரியன் விடாமல் பாடிக்கொண்டேயிருந்தான். நைஜீரியா ஒரு நல்ல நாடு; அதன் மக்கள் அன்பானவர்கள். யாரோ சிலர் ஏதோ செய்வதால் என்னுடைய நாட்டைப் பற்றிக் கேவலமாக நினைத்துவிடாதீர்கள் என்று சொன்னான்.  ஆங்கிலத்தை அழகாகப் பேசுகிறீர்கள், ஏனோ, தப்புத்தப்பாய் ஆங்கிலம் பேசினால் பிடிக்கவில்லை என்றான். Lift இல்லாத விமான நிலையம். எஸ்கலேட்டரின் அருகில் இன்னொரு வரிசைப் படிகள் இறங்கிக்கொண்டிருந்தன. அதில் சின்ன மேடை சேர்த்து அதை இயக்கி மேலே கொணர்ந்து, அதில் வீல் சேரை நிறுத்தி, கேட்டைப் போட்டார்கள். மெல்லக் கீழிறங்கியதும், சட்டென மேடையாக்கி அரசியல் பேசலாம் போல ஒரு இடமும், கீழே நிறைய மஹா ஜனங்களும் குழுமியிருந்தனர். அங்கிருந்து நம்ம ஊர் இரயில் நிலையம் போல சரிவுப்பாதை (ramp) இறங்கியது.


நைஜீரியா என்றதும் ஐம்பது ரூபாய்க்காக AK47-களை இடுப்பில் நெருடி கொள்ளையடிப்பார்கள்; தங்கம் போலிருந்தாலும் தலை போகும் தருணமுண்டு போன்ற தகவல்களை பார்த்தவரெல்லாம் சொல்லியிருந்தார்கள், மணி அண்ணாவைத் தவிர. மூவரின் Hand Luggage-களும் கைகளுக்கிடையில் நசுங்கிக் கொண்டிருந்தன. அவன் இன்னமும் பாடிக்கொண்டிருந்தான்.


தமிழகத்தின் கீற்றுக் கொட்டகை திரையரங்கின் பாத்ரூமில் கூட, அடக்கி வைத்திருந்ததை அவிழ்த்துவிட்ட சுகத்தில் அசூயை சற்று நேரம் மறையும், ஆனால், Immigration-ல் காத்து நின்ற வெள்ளையர்களும் கொரிய-சீன முகங்களும் நிற வெறியை பூசியபடி நின்று கொண்டிருந்தன. எனக்குக் கோபம் கோபமாக வந்தது.  அங்கிருந்த நைஜீரியா காவலர்கள் என்ன சொன்னாலும் அது மதிக்கப்படவில்லை. அப்படி நேர்ந்துவிடக்கூடாது என்பதில் அந்தப் பயணிகள் கவனமாய் இருந்தார்கள்.


4 comments:

 1. rasanaiyaana payanam!!!arumaiyanaa vaarthai koorvaigal!!!

  ReplyDelete
 2. ஆனால், Immigration-ல் காத்து நின்ற வெள்ளையர்களும் கொரிய-சீன முகங்களும் நிற வெறியை பூசியபடி நின்று கொண்டிருந்தன.//

  :(((((((

  ReplyDelete
 3. இன்னைக்குத் தான் படிச்சேன். ஈ நா.
  நல்லா இருக்கு. வர்ணனைகளும், நகைச்சுவையும்.

  ReplyDelete