Wednesday, January 23, 2013

சென்னைப் புத்தகக் கண்காட்சி - 2013



வாசனைத் திரவியங்களை வாங்கு முன் மெல்லிய சீறலாய்ப் புறங்கையில் படரவிட்டு,
 காற்றில் கையுதறி மணம் கண்டு, எதையோ இன்னும் தேடி, காப்பிக்கொட்டைகளை முகர்ந்து பார்த்து மூக்கின் திறனை மீட்டெடுத்து, தேர்வு செய்யக் கொஞ்சமாய் தவித்து, அருகில் இருப்பவளை இன்னும் அருகே அழைத்து உன் கையில் தெரியுமா இதன் வாசனை என்று கேட்பதிலெல்லாம் கூட காதலும் மயக்கமுமே விஞ்சி நிற்கும்.

புத்தகக் குவியலில் அப்படி இல்லை. குருவைப் பார்த்த சந்தோஷம், தகப்பனைக் கண்ட பரபரப்பு, நண்பர்களைச் சந்தித்த குதியல், அம்மாவின் ஒரு நிராகரிக்கவியலாத வார்த்தை, மனைவியின் ஒரு ரஹசிய ஆணை, குழந்தையின் ஆவல் ஆனந்தம் என அனேகமாய் அனைத்து உறவுகள் தரும் மகிழ்ச்சியும் ஒரே இடத்தில் கூடிவிடுகிறது, ஒரு திருமண நிகழ்வின்
 கலவையான சப்தங்கள் சுவைகள் உணர்வுகள் போல.

இந்த வருடம் தான் லபித்தது. வாரயிறுதிகள், பண்டிகைக்கால விடுமுறைகளற்ற ஒரு தினமே சரியாக இருக்கும் என எண்ணினேன். நீளக்குச்சி ஐஸ், அகன்று விரிந்த அப்பளம், கோல நோட்டு, சமையல் குறிப்பு, தாம்பத்தியம் என்ற பெரும்பான்மை வாசகக் கூட்டம் வடிந்து விடும் என்பதும், எல்லோருக்கும் கால அவகாசங்கள் இருக்கிற விடுமுறை தினங்களில் தான் மேடைகளிலும் வகுப்புகளிலுமாய் படைப்பாற்றலின் தேவை அதிகமிருக்கும் என்பதும் காரணங்கள். நண்பர்கள் கிரி, கோகுல் எல்லோரும் எப்போது அழைத்தாலும் அன்போடு அழைத்துச் செல்லவும் விழைந்தனர்.  

ஞாயிறன்று (20-1-13) சொக்கன் வருவதால் ஒரு சந்திப்பும் வைத்துக்கொள்ளலாமென பேச்சும் இருந்தது. அன்று அகாதமி பாடங்களை முடித்து கண்காட்சிக்கு வந்தேன். கண்ணே தெரியவில்லை என்றாலும் அவ்விடத்தை விட்டு தொலைந்து போக இயலாதவாறு பின் தொடரும் நிழலின் குரல் போல பின் தொடரும் கூவத்தின் சுழல் நல்லதொரு
 
நாசியடைப்பானாகி வளாகத்தின் எல்லைகளை வறையறுத்துக் கொண்டிருந்தது. ரங்கநாதன் சாலை போன்ற கூட்டம். சற்று நேரம் வெளியே இருந்து அவதானித்து, கூட வந்திருந்த கிரிதரனை மட்டும் உள்ளே போய் அமர்க்களப்படுத்து என்று வாழ்த்தி விடைபெற்றேன். சக்கர நாற்காலியால் அத்தனை பேரின் கணுக்கால்களையும் இடிக்க மனமில்லை. அதோடு, ஒரு வீல்ச்சேர் நிற்கும் இடத்தில் நால்வர் நிற்கலாம்.
கண்காட்சி மறுநாள் முடிவடையும் நிலையில் செவ்வாயன்று போனால் பல புத்தகங்கள் இருக்காது, சில கடைகளையே மூடிவிடுவார்கள் என்றெல்லாம் வேகமாய் உடைக்கும் ஒரு பதிவர் இன்னொரு வருடாந்திரத் தேரிடம் சொன்னதாகச் செவிவழிச் செய்தியும் வந்தது. இல்லையில்லை, காணும்பொங்கல் கூட்டங்களெல்லாம் கடற்கரை, லட்டு, வண்டலூர், மாமல் என்று போய்விட்டதால் ஸ்டால்களில் நல்ல நீள அகலங்கள் உணரப்பட்டது என்றும் கேள்விப்பட்டேன். ஐந்து ரூபாய் நுழைவுச்சீட்டை வாங்கியதும் ஒரு அரங்கத்தின் நுழைவுக்கட்டணம் உள்ளே விற்கப்படும் தேநீரின் விலையாவது இருக்கவேண்டும் என்று எண்ணினேன். பத்து ரூபாயாவது வைத்திருக்கலாம். பார்க்கிங் என்பது பெரிய மண்டைக்குடைச்சலாக இருந்ததாக அருண் சொன்னான். விட்டுச் சென்ற எந்த வண்டியையும் எடுக்கமுடியாமல் இப்படி இருந்ததாம். 
                                                                     
கண்காட்சிக்கான தளம் என்பது சமூஹத்தின் ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலித்துக்

கொண்டிருந்ததோடு, பல இடங்களில் நம்மை நன்கு அறிந்தவர்கள் நமக்காக ஆசையுடன் பறித்து வைக்கும் குழிகள் போல எதிர்பாரா இடங்களில் உள்ளே சென்றது. எங்கும் தடிமனான கேபிள்கள் நீண்ட பாம்புகளாய் மறிக்க தட்டுத் தடுமாறி என்றால் என்ன பொருள் என்பதற்கு ஒரு நமக்கு நாமே லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன் நடந்துகொண்டேயிருந்தது. கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு, விகடன் என்று முன்முடிவு செய்த பதிப்பகங்கள் நுழைவாயிலில் கடந்ததும் மறந்து போய், எல்லா அரங்குகளையும் பிறகு பிறகு என்று மனதில் குறித்தவாறு பார்த்துக்கொண்டே வந்தேன். 

எல்லா அரங்குகளிலும் ஒரு வீல்ச்சேர் நுழையும் அளவு இடமில்லை, அல்லது ஒரு பக்கம் நுழைந்தால் மறுபக்கம் வர முடியாமல் குறுகியிருந்தன. 
மூலைகளில் கார்ப்பெட்டைக் கைகளால் அமுக்கிப்பார்த்தே திரும்ப வேண்டியிருந்தது. அதற்கே கிழக்கின் உள்ளே ஒரு சக்கரம் மாட்டிக்கொண்டது. சில அரங்குகள் தவிர பெரும்பான்மையானவற்றில் நிறைய அலமாரிகளில் நின்றால் தான் தெரியும் வகையில் புத்தகங்களைப் பல மஹானு’பாவர்’கள் படுக்க வைத்திருந்ததனால், ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று கண்ணில் பட்டவற்றில் மட்டும் தேடினேன். பல இடங்களில் வாயிலில் இருந்தபடி தரிசன ப்ராப்தி மட்டுமே.

மனுஷ்யபுத்திரன் படபடப்பாக எதிரில் வந்தார். கை குலுக்கிவிட்டு மேலே ஏதும் பேசி, கேட்டு அவரைத் தொந்தரவு செய்யாமல் விடை பெற்றேன். ஹிண்டுவின் கேசவ் வெங்கடராகவன் அண்ணாவையும் சந்தித்தேன். சில்பியின் தொகுப்பை வாங்கிவிட்டதாகச் சொன்னார்.

நான்கு பாதைகளுக்கு ஒன்று என்றேனும் வயதானவர்கள் அமர டீக்கடை பெஞ்ச்சாவது போட்டிருக்கலாம். நிறைய பேர் கீழேயே அமர்ந்துவிட்டார்கள். நாங்கள் (நான்-அக்கா–அருண்) அப்படி ஒரு ஓரம் அமர்ந்தபோது (எனக்கென்ன, அட்டாச்ட் நாப்கின் போல அட்டாச்ட் நாற்காலி) சன் நியூஸ் சேனலில் இருந்து ஊனமுற்றோருக்கான அணுகும் வசதி, கழிவறை ஏற்பாடுகள் பற்றிக் கேட்டார்கள். சொன்னேன், இந்த அளவிற்கு செய்திருக்கிறார்கள், இனி வரும் காலங்களில் இதை மேம்படுத்தவேண்டும் என்பதையும் சேர்த்து.

வாங்கியவை:

1. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக 
- தியடோர் பாஸ்கரன்

2. குமரிக்கண்டமா சுமேரியமா 
- பா.பிரபாகரன்

3. இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் 
& ஏழாம் உலகம் - ஜெயமோகன்

4.
ஏன் இந்த உலைவெறி - ஞாநி

5.
ஆயிரத்தில் இருவர், மாயா & மலை மாளிகை - சுஜாதா

6.
ஜாலியா தமிழ் இலக்கணம் - இலவசக் கொத்தனார்

7.
ஜனவரி மாத உயிர்மை.


 கிருஷ்ணா சுஜாதாவின் கதைகள் வாங்கினான். அருண்குமாருக்கு அங்கிருந்த ‘மறுபிறப்பின் இரகசியமும் (சியங்கள் இல்லையா?) ஆவிகள் செய்யும் அற்புதங்களும்’ என்ற புத்தகத்தைக் காட்டி, 
’டேய்.. அத அம்மா கிட்ட காட்டு’
 
‘அம்மா இங்க பாரு…’
‘ச்சீ வெய் அத.. மெண்டலாயிடப்போற’ 

குழந்தைகளுக்காகச் சில புத்தகங்கள்,
 P.G.Wodehouse, Jathaka Stories, Perfect questions and perfect answers, அம்மாவுக்காக தேவி பாகவதம் மூன்று பாகங்கள் ஆதி சங்கரரின் கட் அவுட் இரண்டும் வாங்கினேன். சரஸ்வதி – ஒரு நதியின் மறைவை கிரிதரன் வாங்கினான். சுமேரியாவைக் கொடுத்து சரஸ்வதியைப் படித்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். (இரா.முருகன்) விஸ்வரூபம், விஷ்ணுபுரம், உடையும் இந்தியா இன்னும் பலவும் அடுத்த வருட பட்ஜெட்டுக்கு. பாரா, சொக்கன் மற்றும் பிற நண்பர்கள் எழுதியவை எல்லாம் Dial for Books-ல் வாங்கிக்கொள்ளலாம் என உத்தேசம். தியோடர் பாஸ்கரனின் இரண்டு அத்தியாயங்களும், ஏழாம் உலகத்தை ஒன்பது அத்தியாயங்களும் படித்தாகிவிட்டது.

புத்தகங்களுக்காகச் செலவு செய்தலையோ, வாங்கிய நூல்களை பேணுதலையோ ஒரு தகுதியாகக் கொண்டால் நானெல்லாம் வலைப்பதிவென்ன,
 #NowReading என்று hash tag கூடப் போடமுடியாது. 
தீவிர வாசிப்பில் இருக்கும் ஆர்வத்தின் அதே அளவு வாசிப்பில் சலிப்பும் இருக்கிறது. எனினும், வாங்கிப் பரப்பிய பட்டாசுக் குவியலை விதவிதமாக அடுக்கி, கைக்கொண்டு மகிழ்வதைப்போல, சுற்றிவந்து பார்த்துச் சில நூல்களையேனும் வாங்கவேண்டும் என்று சில வருடங்களாகவே கணன்று வந்த ஆவல் இவ்வருடம் பூர்த்தியானது. எரிகிற நெருப்பில் நெய் வார்த்து என்றைக்கு அணைப்பது, வருடா வருடம் ஜ்யோதி தான்.

Thursday, December 27, 2012

காகிதத்தில் பகிர்ந்தவை



எழுத்துருவைத் தேர்வு செய்து
ஆவலொன்றே மீந்திருக்க
ஆங்கிலத்தில் விசை தடவி



மொழியைச் சுருக்கி
விதிகள் புறந்தள்ளி
கணினித் திரையிலும் 
கைபேசியிலுமே பகிர்ந்து

மையெழுத்தே மறந்து போய் - வையகத்தே
வந்து சேர்ந்த வசதிகளால்


வரிகளே கானலாகிக்
கனவாகிப் போயிற்றோ,

கையெழுத்து பிடிபடாமல்
போனதொன்றும்

பெரிதல்ல; 

பேனாவில் மை நிரப்பி
பேப்பரில் எழுதி வைத்துக்
கடிதமாய் கையில் நிற்கும்
..

காகிதங்கள் சொல்லிவந்த
கதைகளும் போயினவே.

தவறாகப் பிரித்ததனால்
குறுக்காகக் கிழிந்ததில்
அப்பாவிடம் திட்டு,
‘அன் டூ’ செய்யவே முடியாது.

140-க்குள் முடியாமல் 
ட்விட்லாங்கர் போடுமுன்னே
முகவரிகள் நீங்கலாக
மூலையெல்லாம் நுணுக்கிக் கிணிக்கி
வலைப்பதிவே போட்டு விடுவார்
வைரமங்கலத் தாத்தா.

பத்திகளின் இடையில்,
பக்கங்களின் ஓரங்களில்
பட்டாம்பூச்சியோ கிளியோ

கிறுக்கலாய் வரைந்தவைகள்

கண்களை மட்டுமா வருடிக்கொடுக்கும்...

மனக்குரலில்
மழலையாய் ஒலித்துக்
காதுகளும் சற்றே கண்மயங்கும்.

சைக்கிளை நிறுத்தும் சத்தம் கேட்டாலே
முற்பகலில் மூச்சுத்திணறும்
மூளை பரபரக்கும்

மின்னஞ்சல் வந்ததாய்
மினுமினுக்கும் திரையில்லை,
கற்றையாய்க் கொண்டுவரும்
கவர்களில் தேடிடுவேன்.

பிரிவுணர்தலைச் சொல்லுமே
கண்ணீர்த் துளி பட்டு
கரைந்து போன 
வார்த்தையோ
எழுத்தோ ஒன்றேனும்...

தூக்கம் வந்ததெனப் பாதியில் நிறுத்தி
மற்றொரு நாளின் தேதியிட்டு,
அடுத்த பக்கம் ஆரம்பித்த
மீதிக் கடிதத்தின் வரிகளைப் 
படிக்கவே தோன்றவில்ல,

அதன் மீதே உறங்கிப்போன உன்

வாசம் தேடி காகித்தை முகர்ந்தேன்,
கணினித் திரையை என்ன செய்வது?





















Monday, December 3, 2012

Those who are behind the fence are not just safe...



In the age of padminis and savitris (iPad mini and save trees by e-communication), do you remember the ruled notebooks we used to write ’home works’ and not projects and assignments? I, even without knowing I am one, loved the space in the margin than the stuff that was spread all over the lines. What are important are the questions and answers which travel on the lines and at times touch the end of the paper, the font size getting smaller through the end and even trespass into the margin of the next page. I wonder why words like asafoetida, recommendations, appropriateness always occur at the end of the lines and people break it like endations will be hanging under recomm looking like ants running under a branch of a tree and there will be an |____ shaped boundary line too, to avoid cross country affairs with the word below. That is how we started reading between the lines, I presume!

God, let me write something seriously without these comical distractions or nostalgia of a novice.

The stories, the poetry and the answers, even the questions with wrong answers, lacking grammar and spelling, stood majestically inked on the lines, while the numbering either alphabetical or numerical stood behind the line of margin. I was an a), b) or c)… just like someone holding the door or fence and looking into the world without entering into it. The space behind those a, b, c’s were fully theirs. But, they cannot peep, poke or penetrate beyond the margin. I loved the space up to the margin, I used to try different fonts of my own, spread the wings of creativity in numbering or drawing smaller images and enjoy my restricted space as far as I could, without being aware that I am marginalized too.

Then, like everybody, I had grown up too. The whole country looked like a ruled notebook. The contents were there on the lines and the disabled were restricted to stay behind the margin.

We go to beach; stop at the sands.
We go to an office; stop at the stands. 
We wish to explore; stops us, the strands.

If we still struggle for access itself, how can we fight for opportunities? How long will it take for us to get rid of eating near the parking lot at restaurants, meeting officers near pathways and tweeting about it to let it go unnoticed?

Be it education or food; or be it travel or entertainment – in everything, we are just on the edge! We are marginalized. We can just see from a distance, but not mingle with others or participate!

Well, I drive my bike, then get into my wheelchair and go up to the steps and crawl the distance up to stage or a class. Unless I have a concert, I don’t go to temple, attend weddings, a birthday party of even close friends or relatives. We are sinners who are allowed to see the deity only during idol procession of temple festivals. I met The State Commissioner  for the Differently Abled Welfare Development and gave the applications for providing makeshift or permanent ramp for wheel chair access in the temples (of all religions) of our state. To begin with, they can introduce in some places which are famous like Madhurai, Chidhambaram, Kanchipuram, Pazhani, Srirangam, Mosques and Churches of our state. In addition to that, I had also given two separate applications for the Railways and Bus Services. 

In this piss-a- dominated (domino’s pizza)  nation, even kids have mobile phone, one can order and pizza will be delivered even if someone is sitting on a barricade right at the middle of mount road, you can call any bank from under Gemini Bridge and the agent will be obliged to see you there itself sanction a loan or credit card. I think, the government with good concern and noble intentions, is planning to launch facilities for the disabled like  ‘Dial A Toilet', ‘Call A Lift' &  'Ramps at Your Doorstep’ by 2099, just eighty seven years from now.

Some may have been born with a leadership quality with a capacity to be a role model, a guiding light and take hundreds of us to places. Even they will go unnoticed not because lack of opportunities and ability, but because Access is Denied. A ramp with proper angle of elevation and a handrail is what all of us want to make it possible.

Why let places where millions of people walk around be untrodden for us forever?

குனித்த புருவமும் பனித்த சடையும்
காணவென்றே
மனித்தப் பிறவியை வேண்டினான்
என் முப்பாட்டன் ஒருவன்

கால்நடைகளைப் போலவே
இப்போதும் உண்டு
நான்கு கால்கள்;
ஆனால்,
வட்டங்களாய் வளைக்கப்பட்டு
விளிம்புகளில் நின்றபடி.

கடலாய் ஒரு முறையும்
கடைகளாய் ஒரு முறையும்
கோவிலாய் ஒரு முறையும்
கோப்புகளாய் ஒரு முறையும்
தோட்டமாய் ஒரு முறையும்
ஹோட்டலாய் ஒரு முறையும்
கல்விகூடமாய் ஒரு முறையும்
கலவிக் கட்டிலா ஒரு முறையும்
காட்டிலே ஒரு முறையும்
மலையாக ஒரு முறையும்

மனித்தப் பிறவியின் ஊனங்களின்றி,
அதுவாகவே இருந்தேனும்
அறிந்தே கொள்கிறேன்
அச்சமில்லை பிறவிகள் பற்றி.

Wednesday, October 31, 2012

நீலப் புயல்


நேற்று இதே நேரம் ”வெட்சி புனையும் வேளே போற்றி” என, வெட்சிப்பூக்களைச் சுவைத்தபடி மின்னல் போல செடிகள், கொய்யா மரம், வேப்ப மரம் என அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்த  குருவித் தம்பதியை இன்று காணவில்லை.

உள்ளங்கையில் உருட்டி வைத்த சிறியதொரு பஞ்சுமிட்டாய் போல மொழுக்கென்ற தலை முதல் வால் வரை கருப்பாகவும், கழுத்தின் அடியிலிருந்து வாலின் அடி வரை மஞ்சளாகவும் இருக்கும் குருவியும் அதன் துணையும் .

காகங்கள் ஓரிடத்தில் அமர்கின்றன; சில விநாடிகளில் அவநம்பிக்கையுற்று அங்கிருந்து கிளம்பி மொட்டைமாடிகளின் பன்னீர் செம்புகளின் இடையே நெருக்கியமர்ந்து, அங்கும் நிம்மதியின்றி வேறு இடம் தேடுகின்றன. கிளிகளும் அவ்வாறே. ஆறேழு காகங்களும் நான்கு கிளிகளுமாய் பறக்க முயன்று, விசை போதாத வில்லிலிருந்து குறி தவறி எய்யப்பட்ட அம்புகளைப் போல் இடம் மாறி விழுகின்றன; காற்று அடங்குவதற்காய்க் காத்திருந்து மீண்டும் மீண்டும் எழுகின்றன.

சிங்கத்திற்கு அஞ்சி மரமேறிய மனிதன் போல, அம்மாவை அணைத்துக்கொண்டிருக்கும் குரங்குக் குழந்தைகள் போல,  முதிராத கொய்யாக் காய்கள் காற்றில் தழைந்து நிலம் உரசும் கிளைகளை இறுகப்பற்றி நிமிர்கின்றன. இன்னுமும், மரத்தின் அங்கமாய்த் தான் இருக்கிறோம் எனப் பசுமையாய் நீலம் நோக்கி நகைக்கின்றன.

பாகனைக் கீழே தள்ள உடல் உலுக்கிப் பிளிறும் மதம் கொண்ட யானை போல, வேப்ப மரம் சிகையை முடிந்துகொள்ளாத கோபமான முனிவன் போல் ஆடுகிறது. கால்கள் இறுக்கி வாரணத்தின் வயிற்றை அணைத்து, ஆவியை மீட்டுக்கொள்ள அலைபாயும் அங்குசமில்லாப் பாகன் போல, ஒரு காகம் தன்  கால்களால் ஒரு கிளையை அழுந்தப்பிடித்தபடி தன் கூடு விழுந்து விடுமோ என்று தியானம் போல அதையே நோக்கியபடி அமர்ந்திருக்கிறது. அது சொல்லும் செய்திகளின் ஓசைக்கு, வேறு மூலைகளிலிருந்து சில காகங்கள் இருந்த இடத்திலிருந்து பதிலளிக்கின்றன. இணையச் சூழலின் இம்சைகள் ஏதுமின்றி அவை ஆரோக்கியமாக விவாதிப்ப்பதைப் போலவே தோன்றுகிறது.

காகம் - கூடு
காற்றுக்கு மரம் சாய்ந்தபோது, காக்கையின் யாக்கையின் பின்னே வெளிச்சம்.



புதிதாகக் காரோட்டும் பக்கத்து வீட்டுக்காரர் ஹோண்டா சிட்டியின் ஆக்ஸிலரேட்டரில் வைத்த காலை பின் வைக்காமல், அநியாத்துக்கு அமுக்கியபடி, அடிப் பிரதக்ஷிணம் போல அதை காம்பவுண்டை விட்டு வெளியே எடுத்து, ஐந்து நிமிடங்களுக்கு ஐம்பதடி என்ற விகிதத்தில் காரைச் செலுத்தி நீலத்தின் வேகத்தைப் பகடி செய்கிறார்.

‘ஏண்டி கிருத்திகா.. அது என்ன எதாவது போர்வெல் ரிக் வண்டியா? இந்தக் கத்தல் கத்தறதே’, என்றேன். அவள் குறும்பாகச் சிரித்தபடி, ‘ மாமா... அது வூஃபர் கார்’ என்றாள்.

இதற்கிடையில் கேத்ரினா, ஸாண்டி, நீலம் (நிலமா நீலமா என்ற குழப்பம் வேறு) என்று புயலுக்கு ஏன் பெண்கள் பெயராகவே வைக்கிறார்கள் என்று ட்விட்டர்-ஃபேஸ்புக் மஹாஜனங்கள் கவலைப் பட்டார்கள். நானும் கற்பனை ஊற்று பொங்கி வாரியடிக்க என்னாலான ஸ்டேட்டஸ்களைப் போட்டேன்.

1. பயலா இருந்தா ஆம்பள பேர் வெக்கலாம். புயலாச்சே, அதான் பொம்பளங்க
பேர் வெச்சுட்டாங்க.

2. அட்லீஸ்ட், அடுத்த புயலுக்காவது ‘வெடிமுத்து’ சூனாபானா’ ‘வடக்குபட்டி
ராமசாமி’-ன்னு ஆம்பளங்க பேர் வெய்யுங்கப்பா.

3. கண்ணா, அடிச்சுப் பேஞ்சுதுன்னா அது நீலம்; தூறிட்டு விட்டுட்டா அது
சொட்டு நீலம் #Cyclone #Nilam

4. நாளைக்கும் இஸ்கோலு, காலேசு எல்லாம் லீவாம். விடுமுறை தின சிறப்பு
கண்ணறாவியெல்லாம் பாத்துக்கிட்டிருக்காம கத்திக்கப்பலாவது செஞ்சு
வெள்ளாடுங்க புள்ளகளா.

5. முன்பெல்லாம் ஏகபட்ட கட் அவுட்டுகள் இருக்கும்,காற்றும் தடுக்கப்பட்டு
பிரிக்கப்பட்டு திசைமாறி வலுவிழக்கும்.இப்போ எங்க அதெல்லாம் ஹ்ம்ம்..

6. நிலமா நீலமா என்று கேட்டால், புயல் பாதிப்புகள் அதிகமாக இருப்பின்,
நீலமா(க) நிலம் & நீல மாநிலம்.

7. It made the Sandy Marina into a Watery Beach and the beach road to Sandy Road.
#Nilam > Sandy.

8. 
இதுவும் கடந்து போகும்; This shall too pass.
#Nilam 
#Cyclone 
#Major :)))

9. 
மாமல்லபுரம் வழியாக வேலூர், தர்மபுரி வழியாக நிலத்தைக் கடந்து
செல்லும் - வானிலை மையம். 
அப்போ, நீலம் கடந்த நிலம்-னு ஒரு   கட்டுரை யாரானும் எழுதுவாங்களா?


அணில்களும் பூனைகளும் எங்கேயென்றே தெரியவில்லை. ஒரு வெட்டுக்கிளி பறந்து வந்து கதவில் அமர்ந்து என்னை சற்றே நோட்டம் விட்டபின், இங்க தங்கி உன்னையெல்லாம் என் ரூம் மேட்டாக வைத்துக்கொள்ள முடியாது என ஏற இறங்கப் பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டது.


Wednesday, October 17, 2012

மறதி


முந்தா நாள் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் கச்சேரிக்குக் கொண்டு சென்ற ஒலிம்பஸ் டிஜிட்டல் வாய்ஸ் ரெகார்டரை அங்கேயே மறந்துவிட்டு பாதி தூரம் வந்துவிட்டேன். திரும்பப் போய்த் தேடியும் விசாரித்தும் பார்த்ததில் இப்போது வரை கிடைக்கவேயில்லை; இனியும் கிடைக்க way இல்லை.
எங்கிருந்து ஆட்கொள்கிறது மறதி?

இப்போது தான் ஆனந்த விகடனில் மரம் கருணாநிதி பற்றிய கட்டுரை படித்தேன். பேட்டியின் முதல் வரியே ஆச்சிரியம். வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியே இல்லாத நாட்களில் போகிற வழியில் அரசல் புரசலாகக் காதில் விழுந்த பாடல் அது.

’தாய் நிலம் தந்த வரம் தாவரம்.. அது தழைக்கத் தழைக்க மகிழ்வார்கள் யாவரும்’

எம்.எஸ்.வி.யின் குரலோடு அதன் மெட்டும் திஸ்ர கதியும் சேர்ந்து மனதினுள் குரலாய் ஒலித்தது. எப்படியும் இருபது வருடங்களுக்குக் குறையாமல் இருக்கும் இப்பாடலைக் கேட்டு. எது நினைவில் இருத்தியது இதை, இவ்வளவு அழுத்தமாய்? இப்போது முணுமுணுக்கையில், ’பறந்தால் மேகங்கள் ஒடினால் வானங்கள் பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள் - இனிமை நிறைந்த உலகம் இருக்கு’ என்று ’மகிழ்வார்கள் யாவரு’மிற்குப் பிறகு கோத்துவிட்டால் தாளமும் மெட்டும் பொருந்துகிறது.  அதைச் ச்துஸ்ரமாக 4/4-ல் பாடினால் ’காடெல்லாம் பிச்சிப்பூவு... கரையெல்லாம் செண்பகப்பூவு.. நாடே மணக்குதுங்க - அந்த நல்ல மக போற பாதை...’ என்றும் கேட்கிறது. கிராமிய இசையின் மெட்டு அது.

எதற்குச் சொல்கிறேன் என்றால், எப்போதோ கேட்ட ட்யூனுக்குப் பொருத்தங்கள் கூட இப்போது தோன்றுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஐஃபோன் தொலைந்தது; அதற்குச் சில வருடங்கள் முன்பு வேறு ஒரு ரெக்கார்டர், பென் ட்ரைவ். இவை தவிர, அடிக்கடி தொலைக்கும் பேனா, பர்ஸ், புத்தகம், ரசீது மற்றும் எங்கே வைத்தோம் என்ற நினைவுப் பிழைகள் வேறு. எப்படியும் எதையாவது தொலைத்தோ மறந்தோ விடுகிறேன். பல வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு ஆண்டுப்பலனை மேய்ந்த பொழுது, ‘உங்கள் ராசிக்கு குடையை எங்கு வைத்தோம், கடிகாரத்தைக் கட்டிக்கொண்டு தான் வந்தோமா என்பன போன்ற விஷயங்களை நீங்கள் மறந்து விடுவீர்கள். ஆனால், முக்கியமானவற்றை மறக்க மாட்டீர்கள்’ என்று படித்துவிட்டு மகிழ்ந்ததை எண்ணிக்கொள்கிறேன். இப்போது, ’இதுல என்ன சிரிப்பும் சந்தோஷமும் வேண்டிக்கெடக்கு உனக்கு, புத்திகெட்டுப் போயிண்டு இருக்கே, தெரியறதோ... மான்கெட்’, என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

பார்த்தீர்களா... தலைப்பு வெக்கவே மறந்து, அப்படியே பதிவிட இருந்தேன்!

இன்னும் கொஞ்ச நாள் ஆனதும்,  Blog-லயா Twitlonger-லயா, 750words-லயா Facebook-இலா ட்விட்டரிலா... எதில் பகிர்கிறேன் என்றெல்லாம் குழப்பம் வருமோ?

Tuesday, October 2, 2012

வீட்டுக்கு வீடு வாசப்படி வேணாம் - என்.சொக்கன்

புதிய ‘புதியதலைமுறையில் நண்பர் என்.சொக்கன் எழுதிய கட்டுரை. #MustRead.


செப்டம்பர் 10-ஆம் தேதி என்னை அழைத்து www.axsmap.com என்ற இணையதளம் பற்றிச் சொன்னார். அதை உடனே பார்த்து, என் அபிப்ராயத்தையும் அவருக்கு எழுதினேன். ஆனால், அவர் கட்டுரையைப் படித்த பின் இன்னும் நன்றாகப் புரிவதுபோல் இருக்கிறது. அதனால் தான் அவர் எழுத்தாளர். :)

ஸ்கேன் செய்து விரைவில் பகிர்கிறேன், பு.த. அனுமதி கிடைத்தால். என்னுடைய கருத்தும் வெளியாகியிருக்கிறது. அதை இப்போது.

ஆக்ஸஸ்மேப் போன்ற ஒரு தளம் நம் நாட்டிலிருக்குமானால் உபயோகமாக இருக்கும்.  அதை எத்துணை பேர் உபயோகிப்பார்கள் என்றெல்லாம் ஆராய்ந்துகொண்டிராமல் ஆங்காங்கே, பயணிக்கின்ற என் போன்றவர்கள் அதில் இடங்களைக் குறிப்பிட்டு சிறு குறிப்பு எழுதும் வகையில், அந்நிறுவனங்கள் தாங்களே முன்வந்து விவரங்களைத் தரும் வகையில், Accessibility Unknown என்கிற இடங்களைத் தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ  தொடர்பு கொண்டு ஏன் இல்லை என்பது போன்ற கோரிக்கையோ, வலியுறுத்தலோ வைக்கும் வகையில் அவை இருக்கலாம். சுற்றுலா பற்றிக்கூட இதைஒருநாள் பார்த்தேன்.

பல இடங்களில், இதற்கான உணர்வு இருக்கிறது. ஐயோ, இவர்கள் சிரமப்படுகிறார்களே என்ற மனவருத்தத்தையும் சமூகம் பதிவு செய்கிறது. ஆனால், அது பெரும்பாலும் உபயோகமாய் ஏதேனும் நிகழ்வதற்காகவின்றி, சமூகம் தன் குற்ற உணர்வில் இருந்து மாயையாக தன்னை மீட்டெடுத்துக்கொள்வதற்காகவே உள்ளது. அப்படியே, ஒரு சாய்வுப் பாதையோ, அதற்குக் கைப்பிடியோ, லிஃப்டோ அமைப்பவர்கள், தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேல் அவை பற்றிய புரிதலே இல்லாதிருக்கிறார்கள். Angle of elevation, Space needed inside a lift, handrail with grip, how wide a ramp should be என்பதெல்லாம் (தெரியாமல் என்று சொல்லமாட்டேன்) அலக்ஷியப்படுத்தப்பட்டே அவை நிர்மாணிக்கப்படுகின்றன. 

கல்வி, உணவு, பயணம், கேளிக்கை போன்றவற்றில் நாங்களும் ’விளிம்பு நிலை மனிதர்கள்’ தான். மீனாட்சி கல்லூரிக்குக் கச்சேரி வாசிக்கப்போன போது, அங்கு பொறுப்பாளர்கள், லெக்சரர்களிடம் ramp குறித்துப்பேசினேன். நடக்கமுடியாத ஒரு பெண் தடைகளைத் தாண்டி தங்கள் கல்லூரியில் படிப்பதாகப் பெருமை பட்டுக்கொண்டார்கள். “ஏம்மா, ஒங்ககிட்டயெல்லாம் இவ்வளவு கல்வியறிவு இருக்கு. கம்யூனிக்கேஷன், அரசியல், கலாச்சாரம் எல்லாம் சொல்லித் தருகிறீர்கள். ஆனால், ஆயிரக்கணக்கான மாணவிகளின் சேற்றுக்காலடி மண்ணை உடலெங்கும் தீற்றிக்கொள்ளும் ஒரு பெண்ணைப் பெருமையாகப் பேசுவதை விடுத்து, சில ஆயிரங்கள் செலவுல வேணுங்கற எடங்கள்ல ரேம்ப் வெக்கக்கூடாதா என்று கேட்டேன்’ அவர்களின் பாரம்பரியப் பெருமைக்கு இழுக்கு சேர்க்கும் வினாவொன்றை விடுத்ததாய் வெறுப்புப் பார்வையொன்றை வீசியதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை அவர்கள்.

நாங்கள், விளிம்புநிலை மனிதர்கள். ரயில் நிலையங்களில் நுழையலாம்; ரயிலுக்குள் நுழைய முடியாது. கடலென்றால் மணலின் ஸ்பர்சம் கூட தெரியாது; தூரமாய்ச் சாலையில் இருந்து எட்டிப்பார்க்கவேண்டும். திரையரங்குகளின் வாசல் வரை செல்லலாம். தப்பித்தவறி உள்ளே நான்கு பேரகளாய்த் தூக்கிச் சென்றுவிட்டாலும், குளிர்பானம் ஏதும் குடித்து வைத்து இயற்கையின் அழைப்பை ஏற்க நேர்ந்தால், ப்ராரப்த கர்மம் என்பதை அநுபவித்துத் தெரிந்துகொள்ளலாம். உனவகங்களுக்குச் செல்லலாம்; பார்க்கிங் அல்லது பாத்ரூம் அருகே சாப்பிடவேண்டும். பாவமூட்டைகளால் நிரம்பிய முதுகோடு எந்தக் கோயில் படிக்கட்டையும் தாண்டவியலாது. வீதியுலா வந்தாலன்றி இறை தரிசனம் இல்லாது போகும். வீல்ச்சேர் இருந்தாலும் நடைபாதையில் ஏற முடியாமல், பல்லவன்களுக்கும் தண்ணி லாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்திப் பிழைக்கவேண்டும். ஏனெனில், நடை பாதைகள் சாய்வு அமைப்பின்றியும் போதிய அகலமின்றியோ, குறுக்கே ஒரு விளக்குக் கம்பமோ அல்லது அங்கும் திறந்தே கிடக்கும் ஒரு பாதாளச் சாக்கடைப் பள்ளமோ இல்லாமல் இருக்காது.

புதுதில்லியில் ஒரு இடம்
சென்ற மாதம் சென்னை வானொலி நிலையத்தில் கச்சேரிக்காக குறித்த நேரத்திற்கு முன்பே சென்றும், பாதையின் குறுக்கே நின்ற வாகனத்தால் வெகு நேரம் காத்திருந்தேன்.
தலைநகரம் முதல் தாய்நாட்டின் மறுகோடி வரை இது தான் நிலை. சாலையில் விரைந்துகொண்டிருக்கையில் பெய்கின்ற எந்த ஒரு மழையும் என்னை நனைத்து ஊற வைக்காமல் இருந்ததில்லை. கடைகளின் வாசல்களும் பேருந்து நிறுத்தங்களும் இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன கோவர்த்தன கிரிகள். அதைச் சுட்டு விரலில் தாங்கி மக்களை வாழ்விக்கும் அரசும் தனியார் நிறுவனங்களும், ஆள்காட்டி விரலை அரசியலுக்கும், மோதிர விரலை கூட்டணிகளுக்கும், கட்டைவிரலை நாமம் போடுவதற்கும் நேர்ந்துவிட்டதால், எங்களைப் போன்றவர்களுக்காக மீதம்வைத்திருப்பது நடு விரல் தான். 

மொபைல் இல்லா மனிதர்களே இல்லா இத்தேசத்தில், நடுத்தெருவில் நின்றபடி பீட்சாவும் பர்கரும் ஆர்டர் செய்து உண்ணமுடியும், ஜெமினி பாலத்தின் அடியில் இருக்கிறேன் வந்து பார் என்றால் வங்கி முகவர்கள் அங்கேயே வந்து கடன் கூட கொடுப்பார்கள். எது முக்கியமாக வேண்டுமோ அது தான் இருக்காது. எங்களுக்காக 'Dial A Toilet', 'Call A Lift', 'Ramps At Your Doorstep' போன்ற உன்னதமான திட்டங்களை மனதில் தேக்கி, அன்பு பொங்கக் காத்திருக்கக்கூடும் அரசுகள்.

உணவகங்களும், தியேட்டர்களும் இருக்கட்டும்; ஊனமுற்றோர்-வயதானவர்களின் அத்யாவசியத் தேவைகளுக்கான வசதிகள் இருந்தாலே, சமூகத்தில் சற்று கௌரவமாக வாழ்ந்துவிடுவோம். ஓட்டுப் போடுமிடங்களில் கட்டாயமாக்கப் படுகின்ற சாய்வுப் பாதைகள், வேறெங்கும் இல்லையெனினும் எவரும் கவலைப் படுவதில்லை.

அரசும் தனியாரும் சமூகமும் ’நான் கால் வெக்கற எடத்துல தான் நீ கை வெக்கற.. அடங்கு’ என்று பஞ்ச் டயலாக் பேச ஆசைப்படுகின்றனவோ என்னவோ.

Tuesday, August 14, 2012

என்ன லேங்க்வேஜுய்யா இது...


நான் தமிழை ஐயம் திரிபறக் கற்றவனில்லை. தமிழ் மீது தாய்மொழி என்ற மரியாதையும் பற்றும் உண்டு. சீர், அசை எல்லாம் கூடத் தெரியாது. சமீபத்தில் முயன்று, ஆனால், அதன் பிறகு கச்சேரிகள், பயிற்றுவித்தல் என திடீரென முனைப்பாக நேர்ந்ததால் அதுவும் இடையில் நின்றுபோனது :(

தமிழ் எழுத்துகளை வைத்துக்கொண்டு இந்தியாவின் ஏனைய மொழிகள் போல் உச்சரிப்பு வித்யாசங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. நாலு கா, சா, டா, தா, பா இல்லாமல் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என தமிழ்மொழி குறித்த தாழ்வு மனப்பான்மை அல்லது கவலையினால் துன்புறும் வாசகங்களை அவ்வப்போது கேட்க நேர்கிறது.

இவை பற்றி எனக்கு உள்ள கருத்துகளை எழுதிப்பார்த்தேன்.


1. பாருக்குள்ளே நல்ல நாடு என்று படிப்பதா, Bar-க்குள்ளே என்று பாடி மகிழ்வதா என்ற வினா எழும்புவது இயற்கையே.

thOtutai-ய சிவனா? thOdudaiya சிவனா? thOdutai? dhOdudai என்றெல்லாம் ’அகும்பதம்-அன்பு இதம்’ போட்டுப் பார்ப்பது கிண்டலுக்குத் தான் உதவும்.

தமிழில் வல்லினம் என்ற சொல்லின் பொருளை நான் வலிமை, பலம், சக்தி என்று பார்க்கிறேன். 100 கிலோ எடையைத் தூக்கும் அதே கரங்கள் தான் மலரையும் மழலையையும் ஏந்துகின்றன. எனவே, வல்லினம் என்பது எடைக்குத் தகுந்தாற்போல், நிறைக்குத் தகுந்தாற்போல் வரக்கூடிய ஒலி. காகம், பண்பு, தந்தை என்று அதில்  புரிந்துகொள்ளக்கூடிய பொதுத்தன்மையும் இருக்கும்.

எனவே, வல்லினம் என்பது இடத்தைப் பொருத்தது என்றறிக. Bar-the-fun அல்ல; pArththiban என்று common sense, பிற மொழியறிவு, பழக்கம், கற்றல் என்று பல காரணங்களால் புரிந்துகொள்ளப் படுவது.  பல வேடங்களில் பார்த்துப் பழகிவிட்டதால் ஒரு நடிகனை இமேஜ் வட்டங்களின்றி எளிதாக எடுத்துக்கொள்ளுதல் போல.  மனைவிக்குக் கூட கணவன் மேல் திகைப்பு ஏற்பட்லாம்; ஆனால் அப்பா தரும் ஆச்சிரியங்களை ஒரு குழந்தை திகைப்புகள் ஏதுமின்றி, மகிழ்ச்சி மட்டுமே கொண்டு ஏற்றல் போல. முதலிலிருந்தே பழகிவிடும்.

ஆங்கிலத்தின் G என்ற எழுத்து (god, gill, good) ga gA, gi gee, gu goo(gle) என்றும் அதே எழுத்து ஜி, ஜா என geography, gentle என்றும் வருவதைப் புரிந்துகொள்கிறோம்; But-பட், put-புட் என்றால் புரிந்துகொள்கிறோம். But, தமிழ் மட்டும் என்ன பாவம் செய்தது? ஒரே அலைபேசிக் கருவிக்குள் இன்று Diary, Organiser, Gamer, TV, FM, Internet, Media etc. அனைத்தும் இருப்பதை தொழில்நுட்ப வளர்ச்சி என்றால், ஒரே எழுத்தை நான்கு விதமாய் இடத்திற்கேற்றவாறு உச்சரித்தல் வளர்ச்சி தானே?

இணையம், பதிவு, வலைப்பூ, அலைபேசி எல்லாம் இல்லாத காலத்திலேயே நான் இக்கருத்துகளையெல்லாம் பேராசிரியர் நன்னனிடம் சொன்னேன். அவர் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. (அப்போது கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் இருந்தார்) :)

2. Pre-KG, Creche எல்லாம் வருவதற்கு முன், ஐந்து வயதிலிருந்து பதின் பருவம் வரை நாமெல்லாம் குழந்தைகளாகவே இருந்த வரை, இக்குழப்பங்கள் இந்த அளவிற்கு இல்லை என்று எண்ணுகிறேன். ‘நேத்திக்கு நாங்கெல்லாம் ஊருக்குப் போவோமே’ என்று சொல்கிற அதே குழந்தை அடுத்த மாதமே இலக்கணம் தெரிந்துகொள்வதைப் போல, மொழியறிதலின் சுகம் எங்களுக்கெல்லாம் இருந்ததோ எனத் தோன்றுகிறது. அனுபவ அறிவு, கேட்டலில் விளைவது என்னுமாப்போலே லக்ஷிய ஞானம் வந்த பின்னரே இலக்கணம், வரையறைகள் அறிந்த லக்ஷண ஞானம். அப்படிக் கைவரும் அறிவே இயல்பானது என்றும், தங்குவது என்றும் நம்புகிறேன்.

3. தமிழில் 247 எழுத்துகள் என்று பள்ளிக் குழந்தைகளை Gange Rape (சொல்லாடலுக்கு மன்னிக்கவும்) செய்யும் வன்முறையின் நுகபிநி என்ன என்று விளங்குவதேயில்லை. உயிர்-மெய்-உயிர்மெய், சில சிறப்பெழுத்துகள் தவிர மற்றவை குறியீடுகள் தான். அவற்றையும் எண்ணிக்கையில் வைத்து, ஊதிப் பெரிதாக்கி ஆத்தாடீ.. இம்புட்டு input-ஆ எனத் திகைப்படைய வைத்தலைத் தவிர்த்தல் நலம்; மொழிக்கும்-குழந்தைகளுக்கும்.

4.

5.

(நிரப்பப்படாத எண்களின் வரிசை நமக்குத் தான், இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, வாசிக்க, எண்ணிப்பார்க்க பலவும் பிடிபடும். எண்களுக்கும், எண்ணங்களுக்கும் ஏதய்யா முற்றுப்புள்ளி?)