Friday, February 13, 2015

முடிவுறாத் தியரம்



இணையத்-தொடல்"


அருகில் இருந்தால் மட்டுமா..
'நினை விட்டுவிட்டுப்
பல லீலைகள் செய்து - நின்
மேனி தனை விடலின்றி'?

நினை அழைத்து அழைத்துப் பல
கதைகளும் பேசி - நின்
"இணையத்-தொடல்" விடலின்றி...

படித்துத் தான் பாரேன் - நேற்று

பேசிக்கொண்ட மின்பேச்சுகள்
மொத்தமும்..


கூடிக் களித்த இரண்டாயிரத்து
நானூற்று அறுபத்தி ஆறு வரிகளையும்
கூட்டிக் கழித்துப் பார்க்கையில்,


நூறுக்கு மேல் தேறவில்லை
சரி, கெளம்பறேன்... இரு...
என்றவற்றை விடுத்து.

-----------------------------------------------------------------------------

உன் பெயர் தான் அதற்கும்


படுக்கையில் விழுந்ததும் 
அசதியை அறியும் - ஆயினும்
எண்ணாமல் மூடுவதில்லை 
இமைகள் 

எண்ணல் என்றது 
உன்னை மட்டுமல்ல 
சுற்றிலும் இரைந்த 
தலையணைகளையும் தான். 

எத்தனை நிறங்கள் எத்தனை மென்மை 

அன்று நீ என்ன நிறம் 
அணிந்திருந்தாய் அப்போது... 
அஃதொன்றே ஆடிடும் 
அறையெங்கும் நிறைந்து 

அந்நிறத்தில் ஆடை கொண்ட 
மென் தரத்தில் அணை தேடி 
என்னருகில் அமர்த்தியதும் 
என்னவாகும் நீ சொல்...

அன்று உய்யும் 
அஹம் கொள்ளும் 
அதற்குப் பெயராய் 
அழகி உன்னை சூட்டியதால்.

-----------------------------------------------------------------------------

சேமித்துக்கொண்டதற்கு


ஒரு தலையணை
கை பேசியின் முனை
சாய்ந்து நின்ற சுவர்
தேநீர்க் கோப்பை

வார இதழின் ஏதோ ஒரு பக்கம் 
சிறு கரண்டி ஒன்றின் பாதி உள்ளிருப்பு
காகிதங்கள் விலகிய மேஜை
மீசையை ஒதுக்கிய ஒரு விரல்

ஒரு கைக்குட்டை 
செலுத்துமுன் கிலுங்கியதோர் சாவி 
கையெழுத்திடவேண்டி
சட்டை துறந்த பேனா

புதியதாய் திறந்த கோப்பு 
மேலாளரின் மேசையில் நின்றிருந்த ஒரு பறவை
பாத்திரத்தை திறந்த பின்னும்
கீழே வைக்காத மூடி 

பிற்பகல் கலக்கத்தில்
வாய் மூடிய புறங்கை 
தூக்கிப்போடுமுன் விரலிடை தேங்கிய
மிட்டாய்க் காகிதம்
வீடடைந்ததும் சிரித்த 
பக்கத்து வீட்டுக் குழந்தை 
எதிர்பார்த்து தரையில் கிடந்த
அஞ்சல் உறை 

காய்ந்துவிட்டது என மடிக்கப்பட்ட
துணிகளில் ஒன்றிரண்டு 
இரவு உணவுக்குப் பின்
அருந்தாமல் 
பிடித்திருந்த தண்ணீர்க் குவளை

கை பேசியின் முனை
ஒரு தலையணை...

எப்படிச் செய்வாய் கைம்மாறு ஏதும் 
தொகுக்கப்பட்ட இத்தனைக்கும்,
தொட்டுயிர்த்த அத்தனைக்கும் 

உனக்கான என் முத்தங்களை 
சேமித்துக்கொண்டதற்கும்
சேர்தலில் தள்ளியதற்கும்.

--------------------------------------------------------------------------

முடிவுறாத் தியரம்


முற்பகல் ஆன பின்னும் 
முன் விரல் வீற்றிருக்கும்
முன்னிரவுக் கூடலின்
முன்-வந்த வாசனை

நெடிதுயர்ந்தும் தீண்டாது
எத்துணை எரிந்தும் 
பொங்கிடாது 
ஆறியும் ஆர்ப்பரித்தும் 
அடங்கினார்ப்போல் 
அறிவை மயக்கியும்

முற்றிலும் தீர்க்கவியலா
முடிவுறாத் தியரமாய் 
சிக்கலான கணக்குகளுடன் 
சிந்திக்க ஏதுமின்றி

விரல் நுனியில் தேங்கி நிற்கும்
தனிமையின் வாசனை. 

--------------------------------------------------------------------

கீழுதடு 


மௌனத்தில் சேர்ந்திருக்கலாம் என்று 
என் கீழுதட்டிற்கு வைத்துவிட்டேன்
உன் பெயரை, 
தலையணைகளுக்கு 
சூட்டிச்சூட்டி சலித்தே போனதாலும்.

மேல் தாடை அசையாதாம்; 
கீழ் தாடை தான் 
வந்து வந்து சேருமாம்.

கரை மோதும் அலை போல
பரவியே அணைக்கிறாய், 
பிரியும்போது கரைக்கிறாய். 

வாசல்வரை கூட வரும்
வழியனுப்புதலின்
வருடல் வேண்டி


மீறவே செய்கிறேன்
Constitution-னின் கட்டுப்பாடுகளை
நுரைத்துச் செல்லும் அலை பின்னே
கரைந்து செல்லும் மணல் போல
நானும்.

----------------------------------------------------------------------------

ஏதுமில்லை


தலை உதறித் தவிர்க்கும் வரை
தயை கொள்ளாது காமம்
பிடித்திழுக்கும்; பீடித்து நிற்கும் 
தப்பிக்க ஒரே வழி
தாண்டிவிடல்.

தரையிருக்கும் தப்படிகள் 
தருவதில்லை கலக்கங்கள்
உயர்ந்திருக்க உளமஞ்சும் 
உயிர் பயத்தில் சிற்றடிகள் 

முங்கலாம் - சற்றே
மூக்கினுள்ளும் செல்லலாம்
மூழ்கிவிட்டால் உயிரேது
மூவுலகிற்கும் அது உடம்பு.

உடலாய்க் காமம் கொள்ள
மனக் கரகம் சாய்கிறது
சாய்ந்துவிட்ட மனம் பற்றி
சார்த்திய கோல் நிமிர்கிறது 
சாகாது மீண்டும் மீண்டும்
தணிதலுக்காய் தவிக்கிறது.

எத்தனை கொன்றாலும்
எழுந்திருக்கும் மாயம் நீக்கக்
கொல்வதை நிறுத்தினேன்
சாவுமில்லை;பிறப்புமில்லை.