Wednesday, July 31, 2013

The crow and the Fox story in madras slang!

நம்ப காக்கா இல்ல காக்கா, அதாம்பா... எதுனா கொத்திக்கினு
கருப்பா பறக்குமே, அது இன்னா பண்ச்சு... சொம்மா கெடந்த கெயவி, tiger பிஸ்கட்ட பிரிச்சுக்கினு இருக்கும்போது, அத்த சுட்டுரலாம்னு ப்ளான் பண்ணி, 

நைஸ்ஸா கெயவி அப்டிக்கா திரும்ப சொல்லோ, அப்பீட்டுன்னு அள்ளிக்கினு பூட்ச்சு.... இத்த பாத்துக்கினே இருந்த ஒரு நரி, சுகுரா நூல் புட்ச்சா மேரி காக்காவ ஃபாலோ பண்ணிக்கினே வந்து, மரத்தடீல குந்திகிச்சு.

காக்காவ டபாய்க்க, “இந்தா மே காக்கா, ஷோக்காக்குற நீ...அத்தொட்டு நம்போ எலவசம் போட்டோ கானா ஒலகநாதன் கணக்கா ஒரு ஸாங் எட்த்து வுடு”ன்னுச்சு.

நரியப்பாத்தும் கூட மெரசல் ஆவாத தெகிரியமா, விஜயஷாந்தி கணக்கா குந்திக்கினிருந்த காக்கா, "டாய்... இன்னாடா.... யாரப்பாத்து இன்னா வார்த்த சொல்ட்ட நீ... கமல் தாண்டா நம்ம தல.. அவுரு ஆக்ட் குடுத்த பாட்டு எதுனா பீராஞ்சு பாடுவனே கண்டி, வேற பலான பலான ஆளுங்க ஒண்யும் வாயால கூடப் பாட மாட்டேன்" ன்னு உதார் வுட்டுச்சு.

தோடா... பாவமாக்குதுன்னு அப்பால, "இளமை... இதோ... இதோ.. இனிமை..... இதோ இதோ.. காலேஜு டீனேஜு காக்கா அல்லாருக்கும் யெம்மேலதான் லுக்கு"ன்னு பாடிச்சாம்பா.

ஆனா ஒண்ணுப்பா... மெய்யாலுமே பாவதர் கணக்கா காக்கா ராகத்த வலிக்க சொல்லோ, ’இதென்னடா அக்குறும்பு... கேட்டா gare ஆவுற மேரி பாட்தே இதுன்னு’, பேஜாரா பூட்ச்சுபா நரி.

இப்போ இன்னா ஆவும்றே? அங்கதான் வெக்கறேன் டுவிஷ்ட்டு... காக்கா பாடிக்கினே போச்சா.. ராஜா சார் ஃபேனுங்கோ மேரி, எப்டி பாட்து பார் இதுன்னு நரி கண்ண மூட்ச்சா? ஒரு நாய் நரிக்கே தெரியாம, ம்ம்மவனே.. மவுண்ட் ரோட்ல தண்ணிலாரி முதுகு மோந்துக்கினு வர்ற கணக்கா வந்துக்குது...

அது கபால்னு உள்ள பூந்து. ‘ நாந்தான்.. அது இன்னாது.. மச்சானா.. இல்லபா, சகல கலா வல்லவன்னு’ அத்த சுட்டுக்கினு ஓடீருச்சு’
-------------------------------------------------------------------------

நான்கு வருடங்களுக்கு முன் (10-2-2009) பொழுதுபோகாத வேளையில் எழுதியது. வா வா கருப்பாட்டை நினைத்துக்கொண்டேன்

Sunday, July 21, 2013

தேநீர்.




விளிம்புகள் தொட்டதும் ரணமாகும் உதடுகளால்
புறக்கணிப்பின் ஆற்றவொண்ணா வலிகள்
நிரம்பிய கோப்பையை
நிதானமாய்ப் பருகுகிறேன்.

கண்களால் அளந்தோ
கனத்தால் கணித்தோ
கரண்டி  ஒன்றின் காம்பினாலோ
ஆழமறிய முற்படுகையில்

இரண்டு மிடறுகளுக்கிடையேயான 
இடைவெளிகளில் எல்லாம்
நாசிக்குள் நுழைந்து
நெருப்பாகிறது அமில மணம்.

ஆற்றிக்கொள்ளவென அடியில் தட்டோ
அகன்றதொரு பாத்திரமோ
அருகில் இல்லை; அமிலத்தின் கரைப்பில் 
குளிரென்ன சூடென்ன.

அருந்தாதே வேண்டாமென அனுபவங்கள் அடித்துக்கொள்ள
அவ்வளவுதான் ஆயிற்றென்று அமுதமாய் மனம் மயக்க
புத்தியின் அடிக்குரலை இடக்கையால் புறந்தள்ளி 
கோப்பையின் பிடியை இன்னமும் இறுக்கி 
விரல் கடுக்க ஏந்தியபடி
வீம்பாய் அருந்துகிறேன்

வலிகளும் ரணங்களும் வாழ்ந்துகொண்டேயிருக்க
பிழைக்கவென்றே சாகவோ
சாகவென்றே பிழைப்பதோ
செய்தபடி.