நேற்று இதே நேரம் ”வெட்சி புனையும் வேளே போற்றி” என, வெட்சிப்பூக்களைச் சுவைத்தபடி மின்னல் போல செடிகள், கொய்யா மரம், வேப்ப மரம் என அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்த குருவித் தம்பதியை இன்று காணவில்லை.
உள்ளங்கையில் உருட்டி வைத்த சிறியதொரு பஞ்சுமிட்டாய் போல மொழுக்கென்ற தலை முதல் வால் வரை கருப்பாகவும், கழுத்தின் அடியிலிருந்து வாலின் அடி வரை மஞ்சளாகவும் இருக்கும் குருவியும் அதன் துணையும் .
காகங்கள் ஓரிடத்தில் அமர்கின்றன; சில விநாடிகளில் அவநம்பிக்கையுற்று அங்கிருந்து கிளம்பி மொட்டைமாடிகளின் பன்னீர் செம்புகளின் இடையே நெருக்கியமர்ந்து, அங்கும் நிம்மதியின்றி வேறு இடம் தேடுகின்றன. கிளிகளும் அவ்வாறே. ஆறேழு காகங்களும் நான்கு கிளிகளுமாய் பறக்க முயன்று, விசை போதாத வில்லிலிருந்து குறி தவறி எய்யப்பட்ட அம்புகளைப் போல் இடம் மாறி விழுகின்றன; காற்று அடங்குவதற்காய்க் காத்திருந்து மீண்டும் மீண்டும் எழுகின்றன.
சிங்கத்திற்கு அஞ்சி மரமேறிய மனிதன் போல, அம்மாவை அணைத்துக்கொண்டிருக்கும் குரங்குக் குழந்தைகள் போல, முதிராத கொய்யாக் காய்கள் காற்றில் தழைந்து நிலம் உரசும் கிளைகளை இறுகப்பற்றி நிமிர்கின்றன. இன்னுமும், மரத்தின் அங்கமாய்த் தான் இருக்கிறோம் எனப் பசுமையாய் நீலம் நோக்கி நகைக்கின்றன.
பாகனைக் கீழே தள்ள உடல் உலுக்கிப் பிளிறும் மதம் கொண்ட யானை போல, வேப்ப மரம் சிகையை முடிந்துகொள்ளாத கோபமான முனிவன் போல் ஆடுகிறது. கால்கள் இறுக்கி வாரணத்தின் வயிற்றை அணைத்து, ஆவியை மீட்டுக்கொள்ள அலைபாயும் அங்குசமில்லாப் பாகன் போல, ஒரு காகம் தன் கால்களால் ஒரு கிளையை அழுந்தப்பிடித்தபடி தன் கூடு விழுந்து விடுமோ என்று தியானம் போல அதையே நோக்கியபடி அமர்ந்திருக்கிறது. அது சொல்லும் செய்திகளின் ஓசைக்கு, வேறு மூலைகளிலிருந்து சில காகங்கள் இருந்த இடத்திலிருந்து பதிலளிக்கின்றன. இணையச் சூழலின் இம்சைகள் ஏதுமின்றி அவை ஆரோக்கியமாக விவாதிப்ப்பதைப் போலவே தோன்றுகிறது.
காகம் - கூடு |
காற்றுக்கு மரம் சாய்ந்தபோது, காக்கையின் யாக்கையின் பின்னே வெளிச்சம். |
புதிதாகக் காரோட்டும் பக்கத்து வீட்டுக்காரர் ஹோண்டா சிட்டியின் ஆக்ஸிலரேட்டரில் வைத்த காலை பின் வைக்காமல், அநியாத்துக்கு அமுக்கியபடி, அடிப் பிரதக்ஷிணம் போல அதை காம்பவுண்டை விட்டு வெளியே எடுத்து, ஐந்து நிமிடங்களுக்கு ஐம்பதடி என்ற விகிதத்தில் காரைச் செலுத்தி நீலத்தின் வேகத்தைப் பகடி செய்கிறார்.
‘ஏண்டி கிருத்திகா.. அது என்ன எதாவது போர்வெல் ரிக் வண்டியா? இந்தக் கத்தல் கத்தறதே’, என்றேன். அவள் குறும்பாகச் சிரித்தபடி, ‘ மாமா... அது வூஃபர் கார்’ என்றாள்.
இதற்கிடையில் கேத்ரினா, ஸாண்டி, நீலம் (நிலமா நீலமா என்ற குழப்பம் வேறு) என்று புயலுக்கு ஏன் பெண்கள் பெயராகவே வைக்கிறார்கள் என்று ட்விட்டர்-ஃபேஸ்புக் மஹாஜனங்கள் கவலைப் பட்டார்கள். நானும் கற்பனை ஊற்று பொங்கி வாரியடிக்க என்னாலான ஸ்டேட்டஸ்களைப் போட்டேன்.
1. பயலா இருந்தா ஆம்பள பேர் வெக்கலாம். புயலாச்சே, அதான் பொம்பளங்க
பேர் வெச்சுட்டாங்க.
2. அட்லீஸ்ட், அடுத்த புயலுக்காவது ‘வெடிமுத்து’ சூனாபானா’ ‘வடக்குபட்டி
ராமசாமி’-ன்னு ஆம்பளங்க பேர் வெய்யுங்கப்பா.
3. கண்ணா, அடிச்சுப் பேஞ்சுதுன்னா அது நீலம்; தூறிட்டு விட்டுட்டா அது
சொட்டு நீலம் #Cyclone #Nilam
4. நாளைக்கும் இஸ்கோலு, காலேசு எல்லாம் லீவாம். விடுமுறை தின சிறப்பு
கண்ணறாவியெல்லாம் பாத்துக்கிட்டிருக்காம கத்திக்கப்பலாவது செஞ்சு
வெள்ளாடுங்க புள்ளகளா.
5. முன்பெல்லாம் ஏகபட்ட கட் அவுட்டுகள் இருக்கும்,காற்றும் தடுக்கப்பட்டு
பிரிக்கப்பட்டு திசைமாறி வலுவிழக்கும்.இப்போ எங்க அதெல்லாம் ஹ்ம்ம்..
6. நிலமா நீலமா என்று கேட்டால், புயல் பாதிப்புகள் அதிகமாக இருப்பின்,
நீலமா(க) நிலம் & நீல மாநிலம்.
7. It made the Sandy Marina into a Watery Beach and the beach road to Sandy Road.
#Nilam > Sandy.
8. இதுவும் கடந்து போகும்; This shall too pass.
#Nilam
#Cyclone
#Major :)))
9. மாமல்லபுரம் வழியாக வேலூர், தர்மபுரி வழியாக நிலத்தைக் கடந்து
செல்லும் - வானிலை மையம். அப்போ, நீலம் கடந்த நிலம்-னு ஒரு கட்டுரை யாரானும் எழுதுவாங்களா?
அணில்களும் பூனைகளும் எங்கேயென்றே தெரியவில்லை. ஒரு வெட்டுக்கிளி பறந்து வந்து கதவில் அமர்ந்து என்னை சற்றே நோட்டம் விட்டபின், இங்க தங்கி உன்னையெல்லாம் என் ரூம் மேட்டாக வைத்துக்கொள்ள முடியாது என ஏற இறங்கப் பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டது.