Thursday, May 31, 2012

நடுநிசி ஓசைகள்

திடீரென யாரோ சுவர் தாண்டும் சப்தம் கேட்டது,புரியாத பேச்சுக் குரல்களும்.

வாசல் விளக்கைப் போட்டால், ஒரு பெரிய ஏணி எங்கள் காம்பவுண்டுக்குள் இறங்கியிருந்தது.
20அடி உயரம், அதன் உச்சியில் நின்று, பக்கத்து ஃப்ளாட்டின் பால்கனியின் க்ரில்லை திறக்க முயன்றபடி ஒருவர். காம்பவுண்டு சுவர் அருகே சில்ஹவுட்டில் சில தலைகள்.


’சாரி சார், உள்ள சாவிய வெச்சு லாக் பண்ணிட்டோம், இந்தப் பூட்ட ஒடச்சா, உள் பக்கமா தொறந்துரலாம்’ என்றார் இதுவரை பார்த்தேயறியாத பக்கத்து பில்டிங்காரர்.

சாட்டின் இரவு உடையில் இரண்டு இளம்பதின்பருவப் பெண்கள். அவ்வளவு உயரத்தில் ஒரு சுத்தியலுடன் தொற்றிக்கொண்டு
இருக்கும் அப்பாவைக் கலவரத்துடன் பார்த்தபடி. அவ்ர் க்ரில்லின் சிறிய இடைவெளியில் கையை நுழைத்து, பூட்டை உடைக்க முயல்வதாய் அதை மெலிதாகக் தட்டிக்கொண்டிருந்தார். பார்த்தால் ஏதோ பாராட்டுவது போலிருந்ததே தவிர, உடைப்பது போலில்லை. எனக்கு அவர் முதுகைக் காட்டிக்கொண்டு சுவற்றோடு ஒட்டி நின்றுகொண்டிருந்தால் இது தான் ‘பின் நவீனத்துவக் கட்டுடைப்பாக இருக்குமோ என்று எண்ணினேன்.


‘ஈஸியா ஒடக்கறதுக்கு நான் ஒரு வழி சொல்லட்டுமா’ என்றேன். ஹிந்தி பேசுபவர்கள் என்பதால் ஆங்கிலத்தில் சொல்லலாமென ஆரம்பித்ததில், கற்பூரத்துக்கு என்னமோ சொல்லுவாளே என்று நினைத்தபடி, ‘டு யு ஹேவ் கேம்ப் ஃபயர்’ என்றேன்; மிகுந்த டென்ஷனில் எவரும் பொருட்படுத்தவில்லை :)

’கொஞ்சம் கற்பூரத்த எடுத்து அந்த சாவித்வாரத்துல திணியுங்க, நல்லா... நெறயவே.. அப்புறம் அதப் பத்த வையுங்க. அந்த சூட்டுல, (நா)லாக்க புடிச்சுகிட்டு இருக்கற தகடு சூடாகிடும். அப்புறம் தட்டினா, கொஞ்சம் தட்டினாலே வளைஞ்சு குடுக்கும்’. (சேலத்தில் ஒரு முறை ‘எப்படித் திருடுவேன், சத்தமின்றிப் பூட்டை உடைப்பேன் என்று போலீஸ்காரர்களிடம் திருடன் கொடுத்த வாக்குமூலத்தை என்னுடன் படித்த ஜயந்திநாதனின் நண்பர் ஒட்டுகேட்டிருந்ததே, என்னுடைய ‘கொள்ளை’ ஞானத்திற்குக் காரணம்). அவர் மனைவி இரண்டாம் மாடிக்கு ஓடி, அவர்களை எழுப்பி கற்பூரம் தீப்பெட்டி வாங்கினாள். அதற்குள்ளாகவே, அவர்கள் திருடன் வந்துட்டான் ரேஞ்சுக்கு ஓசைகளால் கலவரமாகி இருந்தனர். 

ஏணி கொஞ்சம் கால் வைத்தாலே ஆடியது. ஏட்டய்யாவின் பிஞ்சு மூக்கு போல, குஞ்சு மூங்கிலில் செய்யப்பட்டிருக்கலாம். ஒரு பெரிய கற்பூர டப்பாவிலிருந்து எடுக்கபட்ட இரு சிறு வில்லைகளைச் செலுத்தி, அவர்.. பற்றவைக்கவில்லை; கொளுத்தினார். ஏனெனில், சின்ன வில்லையின் முன்னே தீக்குச்சியின் நுனியின் நெருப்பே தீப்பந்தம் போல இருந்தது. ’போதாது, நிறைய வையுங்கள்,’ என்றேன். இருட்டில் பூட்டின் பருமனை என்னால் யூகிக்க முடியவில்லை (கற்பூர டப்பாவில் இருந்ததைக் காட்டிலும், கட்டுரையில் எவ்வளவு வில்லை!). முயற்சி தோல்வியடைந்தாய் முடிவு செய்தோம்.

’ஹாக்ஸா ப்ளேடு இருக்கா’

’இல்லையே.. நீங்க ட்ரை பண்ணிகிட்டேயிருங்க, நான் ஒரு நிமிஷம் கூகிள், இல்ல ஜஸ்ட் டயல்ல பூட்டு தொறக்கறவா யாரானும் இருக்காங்களா பாக்கறேன்’

இப்படிச் சொன்னதற்கே விடிவு காலம் பிறந்துவிட்ட்தாய் அக்குடும்பமே மகிழ்ந்தது. ஆனால், ஒரு நம்பர் கூட வேலை செய்யவில்லை. ரிங் போயிருந்தால் கூட, நடு ராத்திரி அதான் எடுக்கல என்று சமாதானப் படுத்திக்கொள்ளலாம். ஆனால், உபயோகத்திலில்லை என்றே குரல் வந்துகொண்டிருந்தது. நல்ல வேளையாக ஷேம் ஷேம் ஐடியா மொபைல் போல எரிச்சல் இல்லை. அதற்குள் இரண்டாம் மாடிக்காரர் தன்னிடம் ட்ரில்லர், கட்டர் இருப்பது நினைவுக்கு வந்து, ஈந்துதவினார்.

கிளை நுனியில் அமர்ந்தபடி வெட்டும் காமெடி போல, க்ரில் கதவைப் பிடித்துக்கொண்டே, கம்பியை பூட்டை அறுக்க முயன்றார். வேறு இடத்தில் பிடித்துக்கொள்ள நினைவூட்டிக் கொண்டேயிருந்தேன். தீப்பொறிகள் கையை முகத்தைத் தீண்டிச்செல்ல, அவரை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தோம் நானும் அவர் பெண்களும். குழந்தையின் அழுகுரல் போல ஒரு பிரசவ விடுதலைக்கான சப்தமெழுப்பியபடி தரையில் விழுந்தது பூட்டு.

அவர் படியிறங்கி வந்து சிரித்ததில், கதவு திறக்கப்பட்டுவிட்டதை அறிந்துகொண்டேன்.
அகாலத்தில் தொந்தரவு செய்ய நேர்ந்ததற்கு வருந்தி, நன்றி கூறிச் சிரித்தபடி சுவறேறிக் குதித்தனர் குழந்தைகள். 

’Hope you have started saving a little bit of compassion for burglars from now' என்றேன்.

Monday, May 21, 2012

Invictus



நீ கொடுத்து வைத்தவன். இது, ஸ்ப்ரிங்பாக்ஸின் பயிற்சி உடை என்று சொல்லும்போது, அதை ஏமாற்றத்தோடு மறுக்கும் சிறுவன் காட்சியில் மொத்தக் கதையும் சொல்லப்பட்டுவிட்டதைப் போலிருந்தது. மார்கன் ஃப்ரீமன் என்று அவ்வப்போது புத்திக்கு உறைத்தாலும், நெல்சன் மண்டேலாவின் நிஜ முகம், தூரத்தில் தொலைந்து கொண்டேயிருந்தது. கூகிள் செய்து ஒரு முறை நிஜ முகத்தைத் தேடினேன்.

மதிபா என்றழைக்கும் போதெல்லாம் அது ஒரு குடும்பப் பெயர், ஒரு பரம்பரைக்கு அல்லது தனிமனிதனுக்கு உரியது என்று தோன்றவேயில்லை. ஐயன், அய்யா, அப்பா போன்று தான் உணர்ந்தேன். என் பலவீனமோ மார்கன் ஃப்ரீமனின் பலமோ தெரியவில்லை, அந்த உருவம் தான் மண்டேலா, அந்தக் குரல் தான் அவருடையது என்ற எண்ணம் அழிக்கவியலாது படியத் தொடங்கியது, நான் மறுப்பேதுமின்றிக் கிடந்தேன். என் தந்தையைக் கண்டேன் என்று வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மகன் சொன்னதாகப் படித்ததும், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் என்றெல்லாம் சொன்னதும் அப்பா, அண்ணாக்கள் தலைமுறையின் உணர்வுகளும் அவர்கள் நினைவிலாடும் சிவாஜி கணேசன் நினைவும் வந்தது.
தன் மனதில் படிந்துவிட்ட வன்மங்களைக் களைதலில் மனித்னாகிறான் என்றால், ஒரு சமூகத்தின் அத்தனை தனி மனங்களிலும் படிந்து நிலை கொண்டு விட்ட வன்மம் நீக்குவது?

ஆனால் படம் பாதிக்கு மேல், மாமன் மகளைக் கல்யாணம் செய்து கொள்ளும் சியெஸ்கேவை வென்ற கிங்க்ஸ் லெவன், காரவேலன்சிங் போல ஆகிவிடுகிறது. ரக்பி, அதன் பின்னுள்ள ’நுகபிநி’கள் தவிர காந்தி போன்ற ஒரு சீரியஸ் படம் பார்க்க்வேண்டும், மார்கன் நடித்து என்று மெல்லிய அசதியுடன் உறங்கப்போனேன்.

It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul.