Monday, October 24, 2011

ரஜினி, விஜய் யாரேனும் கண்ணா அண்ணா என்று விளித்து...

வழவழப்பானது முதல் சாணிப் பேப்பர் வரை விதவிதமாக எம்.ஜி.ஆர்., ரஜினி எல்லாம் தொங்கிக் கொண்டிருப்பார்கள். ஆங்காங்கே முகத்திலும் உடையிலும் வருடினால் நெருடும் ஜிகினாக்களை ஒட்டியிருப்பார்கள். இயற்கைக் காட்சிகள், உம்மாச்சிகள், பூக்கள் என்று மளிகைக் கடைகளில் கூட படங்கள் பரப்பிவைக்கப்பட்டிருக்கும். ஓரமாக வெவ்வேறு அளவுகளில் கவர்கள் அடுக்கப்பட்டிருக்கும். 

எட்டணாவிலிருந்து ஏழெட்டு ரூபாய் வரை விலையிருக்கும் வாழ்த்துகளை நழுவிக்கொண்டே இருக்கும் 'டவுசரை' சமாளித்தபடியோ, பின்புறத்தைத் தடவிக்கொண்டோ, டயரையும் குச்சியையும் ஒரே கையில் பிடித்தபடி, வண்டி நிறுத்தும் இடம் தேடும் சிக்கலின்றி சிறுவர்கள் மூவரேனும் வேடிக்கை பார்த்தபடி இருப்பார்கள்.


பட்டாசு எத்தனை ரூபாய்க்கு என்பதைப் போலவே, வாழ்த்து அட்டைகளுக்கான ஒதுக்கீடும் முடிவு செய்யப்படும். தீபாவளிக்கு பத்து பதினைந்து நாட்கள் முன்னமே மெல்லிய பரபரப்பு தொடங்கிவிடும். வெளியூர், வேறு மாநிலம் என முக்கியமான முகவரிகள் கொண்ட பழைய நாட்குறிப்பொன்று ஒரு வாரத்திற்கு சோ.அய்யர், ப்ரவீண் குமார் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் பெற்றுவிடும். எந்த உறைக்கு எத்தனை ரூபாய் தபால் தலை யாருக்கு வெறும் கார்டு மட்டும், யாருக்கு சற்று விலை கூடிய வாழ்த்து என்று குழப்பம் வரும். எட்டாம் வகுப்பில் என்னிடம் நிறைய தகராறு செய்து கொண்டிருந்தார் சாமிநாத வாத்யார். 

கணக்கு பீரியட் வந்தாலே, சற்று சுணக்கம் வரும். ஏனோ, என்னைப் பிடிக்கவில்லை அவருக்கு. விபூதி ரேஞ்சுக்கு சந்தனம் வைத்துக்கொண்டு கலர் கலரான சட்டைகள், சற்று தொளதொளா காற்சட்டை, கையில் மஞ்சப்பை, சில ஜாதகக் குறிப்புகள் என்று வகுப்பில் வந்தமர்வார். நான், மூர்த்தி, மேகலனாதன், மாதேஸ்வரன் எல்லோரும் முதல் வரிசையில் இருப்போம், படிப்பினால் அல்ல;உயரத்தால்.

பொங்கலுக்கு சில நாட்கள் முன்பாக, சாமிநாத வாத்யார் எம்.ஜி.ஆர். ரசிகர் என்று தெரிய வந்தது. A4 சைசில் ஒரு எம்.ஜி.ஆர். வாங்கி, (தலையின் நீட்சியாகவே இருந்த வெள்ளை புசுபுசு தொப்பி, கண்ணிலொன்றும்  கையிலொன்றுமாக அந்தக் கறுப்புக் கண்ணாடி, முழுக்கை சட்டை-வேட்டி மட்டுமின்றி முகத்திலும் தென்பட்ட ஜிகினாக்கள், சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் முதல்வர்) அவருடைய முகவரியை ஜோசியப் புத்தகத்திலிருந்து திருடி(?), அனுப்பி வைத்தேன். அதில் மிகவும் ஃபீலாகி, 'நாகராஜனுக்கு.. ரொம்ப நல்ல உள்ளம்' என்று வெகு காலம் கூறிக்கொண்டிருந்தார். பாராட்டுகளும் வாழ்த்துகளும் மகிழ்வின் பகிர்தலும் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும், வாழ்க்கையில் அவற்றின் இடம் என்ன என்பதை அறிந்து கொண்டேன். 

லியோனிகளிடத்தும் நமீதாக்களிடமும் நாள் முழுவதும் சிந்தை தொலைக்கும் சமூகத்தையும் 'விடுமுறை நாள்' நிகழ்ச்சிகள் வழங்கும் தொலைக்காட்சிகளையும் பார்க்கையில், சின்னப் பையனா லக்ஷணமா இல்லாமல் அப்போதெல்லாம் ஏன் முதல் பக்கத்தில் கையில் மத்தாப்புடன் சிரிக்கும் நடிகையின் படத்தோடு இருக்கும் 
தினசரிகளை கிண்டல் செய்தோம் என்று இப்போது வருத்தம் மேலிடுகிறது. 

Book-Post க்கு தமிழில் நூல் அஞ்சல் என்று தெரிந்துகொண்டதும் அப்போது தான். சில பெயர்களை எழுதும்போதே சொல்லொணா உணர்வு மேலிடும். பிரிவுணர்தல் தான் அது என்று இப்போது தோன்றுகிறது. வேண்டுமென்றே ரஜினி ரசிகனுக்கு கமல் வாழ்த்து அனுப்புபவர்கள் உண்டு. சில மாமாக்கள் அலுவலகச் சுற்றுலா சென்ற போது, தங்கள் தலையில் கட்டப்பட்ட பிருந்தாவன் கார்டன், குதுப்மினார், தாஜ்மஹால் எல்லாம் அனுப்பித் தொலைப்பார்கள். கிருஷ்ணராஜ சாகர் பரவாயில்லை, தாஜ்மஹால் ஒரு நினைவிடம் தானே, பண்டிகைக்கும் அதற்கும் என்னய்யா ஸ்நான ப்ராப்தி என்று கேட்பாரில்லை. ஸ்டெப் கட்டிங் அண்ணாக்கள் தங்கள் பெல் பாட்டம் எங்கே புரளுகிறது என்றறியாமல் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியாவைஎல்லாம் எக்ஸ்சேஞ் செய்துகொள்வார்கள். 'எனக்கு அனுப்பாத, என் தம்பிக்கு கமல் படம் வாங்கி அனுப்பிச்சிரு.. என்ன..' என்று பெண்கள் குறிப்பு தருவார்கள். வாழ்த்து வாங்க காசில்லாத என் நண்பன், தினத்தந்தியில் வந்த சில படங்களை ஓரத்தில் பேனாவால் எழுதி விடுப்பு முடிந்து பள்ளி தொடங்கியதும் நேரில் கொடுத்தான். ஒவ்வொருவர் பையிலும் இருபது வாழ்த்துகளேனும் இருக்கும். மதிய உணவு இடைவெளியில் கடை பரப்பி, 'சோடி போட்டுப்' பார்த்துக்கொள்ளுவோம். பெயர் போடாமல் வந்தவற்றைக் கூட பெரும்பாலும் அனுப்புனர் யாரென்று கண்டுபிடித்துவிடுவோம். எப்படியும் முத்திரை அடிக்கப்படாத சில தபால் தலைகளேனும் கிடைக்கும்.

திறந்தால் happy birthday பாடும் விசேஷ வாழ்த்து அட்டைகள் பிறகு தான் வந்தன. இப்போதும் அதை தீபாவளி பொங்கல் காலங்களில் விற்கலாம். திறந்தால் ரஜினி, கமல், அஜித், விஜய் யாரேனும் கண்ணா.. அண்ணா... என்று விளித்து வாழ்த்துமாறு செய்து விற்கலாம். ஆனால், அவர்கள் ஏதோ ஒரு குடும்ப தொலைக்காட்சியில் நாயகிகள் சஹிதம் ரசிகனை க்ளோஸ் அப்பில் பார்த்துக் கையசைத்து வாயும் அசைத்துவிடுகிறார்கள்.

பெரிய பாக்கெட் மணியெல்லாம் இல்லாத காலமது. ஆனாலும், வாழ்த்துகள் அனுப்புவது நின்றதேயில்லை. இப்போது ஐம்பது பைசாவிற்கு என்ன மதிப்பு என்றே தெரியவில்லை; ஆனால் பண்டிகைக் காலங்களில் குறுஞ்செய்திகளை யாரும் அனுப்புவதில்லை. உதவாத வெற்று forward -கள் அனுப்புபவர்களாய் இருக்கும் நல்ல உள்ளங்கள் நிரம்பிய missed call  சமூஹம் அன்று கைபேசியைக் காதிலேயே கட்டித் தொங்கவிட்டுக்கொண்டு அலையுமோ, யார் அழைத்தாலும் உடனே சொல்லிவிடவேண்டும், 'இனிய தீபாவளி வாழ்த்துகள்' என்று...

இப்போது குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் 'க்ரீட்டிங்க்ஸ் டாட் காம்'களும் நம்மை சுவீகரித்துக்கொண்டு வருடங்கள் ஆகிவிட்டன. போதாக்குறைக்கு மிஸ் யுனிவர்சிலிருந்து மிஸ்- கூடுவாஞ்சேரி போல் புதுவருட வாழ்த்து முதல் காதலர், அன்னையர், தந்தையர், வருத்தப்படாத வாலிபர் தினங்கள் வரை கொண்டாடுவதற்கான காரணிகள் பெருத்துப் போய், வெறுத்துப்போன கூட்டமும். 

போகட்டும், அன்றேனும் செல்லிடத்துக் காப்பான் செய்தி காப்பானாக இருக்கட்டும் அந்த பாவப்பட்ட வஸ்துவாகிய மொபைல். என்ன விளங்கவில்லை என்றால், பலரும் இப்போதிருந்தே குறுஞ்செய்தி அனுப்பிய கையோடு ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வாழ்த்திக்கொண்டேயிருக்கிறார்கள். விழாக்கால நாட்களில் இவைகளுமா கட்டணம் கேட்கின்றன அல்லது யாரேனும் தண்ணீர் குடித்தால் நமக்கும் குடிக்கத்தோன்றுமே, அது போல?