விடிந்த போது, என்னருகில் இருந்த கண்ணாடி மட்டும் நீளமாக இலலாமல் வெள்ளையாக இருந்தது, இரவில் கவனிக்கவில்லை. ரித்திகாவின் பெண், அவள்அப்பாவை தூங்கவிடாமல் கேள்விகளால் நிரப்பிக் கொண்டிருந்தாள். ஜன்னலுக்கு வெளியே மாறிக்கொண்டேயிருக்கிற காட்சிகள் ஒவ்வொன்றும்அவள் வினாக்களாய் விரிந்தன. பல சமயங்களில் ஒரு கேள்வி முடிவதற்குள், அடுத்த கேள்விக்கான காட்சி அவள் சிறிய கண்களின் முன்னே கடந்துபோனது. நல்ல பதிலை மட்டுமல்ல; நல்ல கேள்வியைக் கூட ஒரு நிலையான பொருள்தான் உருவாக்க முடியும். இதில் நிலை என்பது பொருள் மட்டும் பற்றியதல்ல, மனதின் நிலையும் தான்.
கற்றலின் கேட்டல் நன்று. அவள் கேட்டலில் நான் கற்றுக்கொள்ள முயன்றுகொண்டிருந்தேன். ராமநகரம் என்று ஒரு ஊர் நிறைய மசூதிகளுடன் தென்பட்டது.
ஊரில் இருந்தால் கச்சேரிக்கு வருமாறு தீபுவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்; ஸ்டேஷனுக்கே வந்திருந்தான். "இங்க இருந்து தாசப்பிகாஷ் பக்கம் தா.. ஆட்டோல போனா பதனாலு ரூபாய்க்கு மேல குடுக்க வேண்டா..." தீபுவின் தாத்தா சுந்தரராஜ ஐயங்கார் நகரின் பிரபல வக்கீல். வேத நூல் பிராயம் நூறுஎன்பதற்குச் சில மாதங்களே இருந்தபோது மறைந்தார். அத்தனை வயதிலும்நகரின்பெரிய பூங்காவை மூன்று முறைகள் சுற்றி நடப்பார்.
திருச்சி மாயவரம் லாட்ஜ் போலவே இருந்தது தாசப்பிகாஷ். மூன்று நாட்களுக்கு மேல் தங்கி, அக்ஷயாவில் உண்டு களித்தால், குண்டாவது உறுதி. நல்ல சுவையும் வயிற்றுக்கு கெடுதல் தராத உணவும் நன்றாக இருந்தது. முக்கியமாக டீ. ஆனந்த மயம்.
'மைசூர் வாசுதேவாச்சார் பவனா' கச்சேரி ஆரம்பிக்கும் முன்பே நிறைந்தது. ரேவதி கிருஷ்ணாவிற்கு (வீணை) இலஞ்சிமேல் சுசில்குமார் கடத்துடன் வாசித்தேன். கேதார கௌளை வர்ணம், விஜயநாகிரியில் 'விஜயாம்பிகே - விமலாம்பிகே'. பிறகு சங்கராபரணத்தில் பாபநாசம்சிவனின் மகாலக்ஷ்மி ஜகன் மாதா சற்று விவரமாக. அதில் தனியாவர்த்தனம். கடைசியாக மகாராஜபுரம் சந்தானம் இயற்றிய பஸந்த் (பஹார் ராகம்) தில்லானா.
தீபு வீட்டில் இரவு உணவு. அர்ச்சனா நெய் ஊற்ற முற்படுகையில் வேண்டாம்என்றேன். "டயட் ghee தான் சாப்டுங்கோ" என்றாள். சிரித்தபடிசாப்பிட்டுவிட்டேன். ஒரு கார் ஏற்பாடு செய்து, நாளை சாமுண்டீஸ்வரி ஹில்ஸ், கிருஷ்ண ராஜ சாகர், மைசூர் அரண்மனை எல்லாம் பார்த்துவிடலாம் என்றுமுடிவு செய்தோம். அருணும் கிருஷ்ணாவும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர், மலையில் தேரோட்டம் - ஏக கூட்டம் என்றறியாமல்.
1. தீபுவின் வீடு
2. வீணை ம்ருதங்கம் / தீபுவின்அப்பா கிருஷ்ணாவிற்கு தன்பஜாஜ் சேடக்கைக் காட்டுகிறார்.
3. தேரோட்டம்... !!
4. மகிஷாசுரன்...
5. ஆகாச வாணி சங்கீத சம்மேளனம்