Saturday, April 15, 2017

T.K.மூர்த்தி – காலத்தின் பொக்கிஷம்

(சென்ற மார்ச் மாதம் வலம் இதழில்  பெருங்கலைஞரான மிருதங்க மேதை ஸ்ரீ டி.கே.மூர்த்தி அவர்களைப் பற்றி வெளிவந்த கட்டுரை).




இரண்டு கைலயும் வாசிப்பிங்களா?

இல்ல பத்து விரல்லயும்

என்ன வித்யாசம்?

பத்து விரல்களும், நாலு யுனிட்டா, மூணு யுனிட்டா, ரெண்டு யுனிட்டா, ஒரே யுனிட்டா, ஒரே விரல் மட்டும்… இப்படியெல்லாம் பிரிஞ்சு வாசிக்கும். உதாரணமா, ஒரு தனி ஆவர்த்தனத்தோட க்ளைமாக்ஸ்ன்னு வெச்சுக்குங்களேன், அப்ப வலது கைல நாலு விரல், இடது கைல நாலுவிரல் சேர்ந்து, ஒரே நேரத்துல ரெண்டு பக்கமும் தித், தாம் கிட-ன்னு ஆரம்பிக்கும்.

ஓ.. பொதுவாத் தெரிஞ்சுக்கறத விட, இன்னும் நுணுக்கமா இருக்குன்றீங்க.

ஆமாம். நிறைய இருக்கு, ஆனா ஸங்கீதம் பாருங்க; பாடற விஷயத்த பேசினாலே கொஞ்சம் தான் புரியும், எழுதினா சொல்லவே வேணாம்.

அப்ப, இசை, இசைக் கலைஞர்களப் பத்தியெல்லாம் படிக்கும் போது இதுலேந்து ஒண்ணும் புரியாதுன்னு நெனச்சுகணுமா

அப்படியில்ல, இதுல சொன்னது, நமக்கு புரிஞ்சது போக, இன்னும் நிறைய இருக்குங்கற ஞாபகத்தோட படிச்சா சொன்னா எழுதினா போதும்
J




அவர் சற்று உயரம் குறைவாக இருந்தார். மேடையில் அமர்ந்து, இருகைகளையும் மூன்று யுனிட்டுகளாகக் கொண்டு, வாசிக்கவே கடினமாகத்தோன்றும் ’நம்,கிடதக தின்,கிடதக தின’ என்ற சொல்லை அதிவேகமாய் ஒரே கையின் வெறும் மூன்று விரல்களால் போட்டதும் நான் ப்ரமித்தேன். என் சிறுவயதில் முதன்முதலில் ஈரோட்டில் அவர் கச்சேரி கேட்க, முன்னதாகவே பந்தலில் சென்று அமர்ந்திருந்த போது, என் சீனியரான சீனிவாசன், ‘மூர்த்தின்னு அவர் பேர வெறும்ன கூட சொல்லக்கூடாது. மூர்த்தி சார்னு தான் சொல்லணும். என்ன கணக்கெல்லாம் வாசிப்பார் தெரியுமா’ என்றான்.

தா,,,,,, தீ,,,,,, கி,,,,,, ண,,,,,, தொம்,,,,,, என்று நீண்ட கார்வைகளில் ஆரம்பித்துக் குறைத்துக்கொண்டே வந்து அது ’ததிகிணதொம் ததிகிணதொம் ததிகிணதொம்’ என்று ஆதி தாளத்தின் கடைசி மூன்று அடியில் விரலுக்குவிரல் வந்ததும்  தான் அது கண்ட கதி என்றே தெரிந்தது (கண்டம் என்றால் ஐந்து. ஐந்தைந்தாக வாசிப்பது கண்டகதி, தகதகிட தகதகிட என்பது போல்).

அவர் ’தரிகிட கிடதக தாத் தொம்’ என்று மூன்று முறைகள் வாசித்து ஒரு தீர்மானம் வைத்தால் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கேட்கும். அத்துணை பளீரிடும் தெளிவு, எந்த சொல்லாயினும். இருபது வருடங்களுக்கு முன் வாணிமஹாலில் சேஷகோபாலனுக்கு அவர் வாசித்த கச்சேரி இன்றும் நினைவில் உள்ளது. முக்கிய காரணம், அன்று நகுமோமு கனலேனியை ஆரம்பிக்கும் பொழுது காலப்ரமாணம் 72 pulses per minute. (RPM போல ஒரு நிமிடத்திற்கு எத்தனை துடிப்பு/தாளத்தின் விரல் எண்ணிக்கை என்ற கணக்கு). பிறகு ஒரு மணி நேரத்துக்கும் மேல் அசாத்ய சங்கதிகளுடன் அந்தப் பாடல், கீழ்க்கால மேல்க்கால ஸ்வரங்கள் முடிந்து தனியாவர்த்தனம் வாசித்து முடித்து மீண்டும் பாடலின் முதல் வரியை எடுக்கும் போது அதே 72. அத்துணை காலப்ரமாண சுத்தம்.

இயல்பான மனித உள்ளம் கால ஒழுங்கை சீராக ஆரம்பித்த வேகம் போலவே இறுதிவரை தக்கவைக்க மிகவும் ப்ரயத்தனப் படவேண்டும் (அனேகமாக முடியாது என்பதன் இடக்கரடக்கல்). ஆரம்பித்ததில் இருந்து கொஞ்சமாகவோ நிறையவோ ஓடிவிடும் (வேகம் அதிகரித்துவிடும்) அல்லது இழுத்துவிடும்(குறைந்துவிடும்). அது, வெகு சிலருக்கே கைகூடும். அவ்வெகுசிலரில், மூர்த்தி மாமா ஒருவர். சென்ற ஜூன் 2016-ல், தன் 92 வயதில் அவர் வாசித்த கச்சேரியும் தனியும் அத்தனை சிறப்பு. ஸங்கீதமானது, நிறைய நிறைய ஞாபகமும், புத்தி கூர்மையும், விரலோ குரலோ மங்காத வித்தையையும், அனிச்சையாய் ஆனால் சரியான மற்றும் சிறப்பான முறையில் உடனுக்குடன் க்ரஹித்து, க்ரஹிக்கும் போதே மேலும் அழகு செய்து, பாட்டுடன் இணைந்து வினையாற்றும் பண்பு போன்ற தன்மைகளை இன்றியமையாததாகக் கொண்டது. எனக்கு இப்போதே எதை எங்கே வைத்தோம் என்று மறந்துவிடுகிறது. ஆனால், என் குருநாதர் ஸ்ரீ சிவராமன் சாருக்கு 82 வயதாகிறது; மூர்த்தி மாமாவுக்கு 93 ஆகிறது. அவர்களின் சுறுசுறுப்பும் விழிப்பும் லயம் வழிந்தோடும் கச்சேரிகளையும் கேட்டால் வாழ்வில் அவர்கள் கைக்கொண்ட ஒழுங்கு, சின்ன வயதிலேயே செய்த அசுர சாதகம், எடுத்துக்கொண்ட கலையே மனமாயிருத்தல் என நம்மை வியக்க வைக்கும், நாம் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளம்.
Thanjavur Shri Vaidhyanatha Iyer - Palakkadu Shri Mani Iyer - Shri T.K.Murthy-
Umayalpuram Shri K.Sivaraman Sir - Kanjira Shri V.Nagarajan

மிருதங்கக் கலையின் தந்தை எனப் போற்றப்படும் தஞ்சாவூர் ஸ்ரீ வைத்யநாத ஐயரவர்களின் சிஷ்யருள் மிகுந்த புகழும் ஸ்தானமும் அடைந்தவர்கள் என பாலக்காடு ஸ்ரீ மணி ஐயர், ஸ்ரீ T.K.மூர்த்தி, என் குருநாதர் ஸ்ரீ உமையாள்புரம் K.சிவராமன், கஞ்சிரா ஸ்ரீ V.நாகராஜன்  என பலரைச் சொல்லலாம். முதல் மூவருமே ஸங்கீத கலாநிதிகளும் கூட. ஆகஸ்ட் 13, 1924ல் தாணு பாகவதர்-அன்னப்பூரணி அம்மையாரின் மகனாக திருவனந்தபுரத்தில் பிறந்தார் மூர்த்தி. அவர் தமையனார் கோபாலகிருஷ்ணன் லய வித்வான் என்பதால், காதுகளின் கண்களின் வழியே தன்னையறியாமல் லயம் உண்டு வளர்ந்தது சிறுவனின் மனம்..

முதலில் பாட்டு தான் பயின்றார்
. பள்ளி விழாக்களில் தன் நண்பனான செல்லமணியுடன் (பாடகர் ஹரிஹரனின் தந்தை) பாடுவது வழக்கம். ஆனால் விரல்கள் ஸ்லேட்டில் வாசித்து வாசித்து அடிக்கடி உடைந்து போனதை கவனித்த ஆசிரியர் ஒரு விழாவில் ’செல்லமணி பாடட்டும்; நீ மிருதங்கம் வாசி’ என்று சொல்லிவிட்டார். அன்று அங்கு வந்திருந்த ஸ்வாதித் திருநாள் மஹாராஜா அவ்வாசிப்பில் மகிழ்ந்து யாரிடம் பயில்கிறாய் எனக்கேட்க, ’யாருமில்ல நானே வாசிக்கறேன்’ என்றார். மஹாராஜா ஒரு தங்க மெடல் பரிசளிக்கிறார். மூர்த்தியின் தந்தை எதையோ உணர்ந்து மூன்று ரூபாய்க்கு (இப்பொழுது வாங்கவேண்டுமென்றால் பதினைந்தாயிரம் ஆகும்) ஒரு மிருதங்கத்தை வாங்கித் தருகிறார். இந்நிலையில் ஒரு முறை, தஞ்சாவூர் ஸ்ரீ வைத்யநாத ஐயர் முன்னிலையில் வாசிக்க நேர்கிறது.

நல்ல கையும், பரிமளிக்கக்கூடிய அம்சங்களும் தென்பட்டால் அவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுகொண்டு பின்  ஸ்புடம் போட்டு மின்ன வைக்கும் பேராற்றல் வாய்ந்த வைத்யநாத ஐயரவர்கள், ஒன்பது வயதான மூர்த்தியைத் தன் தத்துப் புத்திரனாகவே தஞ்சைக்கு அழைத்து வருகிறார். ‘அப்பவே கேட்டார்; இன்னும் ரெண்டு மாசம் ஆகட்டும்னு அம்மா சொன்னா. அந்த ரெண்டு மாசத்துல என்னோட அம்மா காலமாயிட்டா. அப்பா என்னை வைத்தா அண்ணாவாத்துல விட்டா’. அவரை விட பன்னிரு அகவைகள் மூத்தவரான பாலக்காடு மணி ஐயர் அச்சமயம் அங்கே பயின்று வந்தார்.
இரு வருடங்கள் கழித்து, தன் பதினோராவது வயதில் குருவுடன் சேர்ந்து துக்காராம் படத்துக்காக கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பாடிய முசிறி ஸ்ரீ ஸுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்கிறார். பிறகு மைசூர் சமஸ்தானத்தில் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் கச்சேரியில் சௌடய்யா வயலினுடன் குரு ஸ்ரீ வைத்தா அண்ணா வாசிக்க, மூர்த்தியும் உடன் வாசிக்கிறார். சிட்டு என்று செல்லாமாக அழைக்கப்பட்ட மூர்த்தியின் வாசிப்பில் மகிழ்ந்து மைசூர் மஹாராஜா அந்நாளில் ஆயிரம் ரூபாய் சன்மானம் தருகிறார். அதோடு, தேர்ந்த பக்கவாத்தியக் கலைஞனாக தனியே இவர் வாசித்துக் கேட்கவேண்டும் என்ற ஆவலில் மறுநாள் ஒரு கச்சேரியை ஏற்பாடு செய்து கேட்டு உவந்து அன்றும் ஆயிரம் ரூபாய்கள் வழங்கினார். பதினைந்து வயதில் மாஸ்டர் மூர்த்தி என்ற பெயர் ஸங்கீத உலகில் வ்யாபிக்கிறது.



ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிலிருந்து அரியக்குடி, செம்பை, ஆலத்தூர், மதுரை மணி, ஜி.என்.பி., மாலி, எம்.எஸ்., மேண்டலின் என்று அவர் பக்கவாத்யம் வாசித்த உன்னதக் கலைஞர்களின் பட்டியல் வெகு நீளம். ஒரு முறை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி வைத்தா அண்ணாவின் இல்லத்துக்கு வர, ’இது யாரு தெரியுமா, ரொம்ப நன்னா வாசிப்பான்’ என்று அறிமுகப்படுத்தி அன்று மாலை வீட்டிலேயே ஒரு கச்சேரியை நடத்தினார் வைத்தா அண்ணா. அதன் பின் ஐம்பத்தைந்து வருடங்கள் மூர்த்தி தொடர்ந்து எம்.எஸ்ஸுக்கு வாசித்திருக்கிறார். UNO-வில் வாசித்திருக்கிறார்.  அந்நாளில் பெண்களுக்கு வாசிப்பதில் இருந்த மனத் தடைகளைக் கடந்து D.K. பட்டம்மாள்,  M.L. வசந்தகுமாரி, K.B. சுந்தராம்பாள், பிருந்தா-முக்தா எனப் பலருடைய கச்சேரிகளையும் தன் வாசிப்பினால் அலங்கரித்திருக்கிறார்.
                   


குரு சிஷ்ய பரம்பரை என்று எடுத்துக்கொண்டால், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் – ராமனாதபுரம் சங்கர சிவம் – மதுரை T.N. சேஷகோபாலன் - நெய்வேலி சந்தானகோபாலன் – ஸ்ரீராம் பார்த்தசாரதி என்று ஐந்து தலைமுறைக்கு வாசித்த பெருமையையுடையவர். அவரின் கச்சேரி அனுபவத்துக்கே இப்போது ஸதாபிஷேகம் ஆகிவிட்டது. ’நாங்க எல்லாம் அப்புறம் நிறைய மாத்திண்டோம், (தனக்கென ஒரு பாணி உருவாகி வந்ததைச் சொல்லுகிறார்)ஆனா மூர்த்தி வாசிப்பு இன்னைக்கும் அண்ணா (ஸ்ரீ வைத்யநாத ஐயர்) சொல்லிக்குடுத்ததெல்லாம் அப்படியே இருக்கும்’ என்று மணி ஐயர் ஒருமுறை பேசியதாக மூத்த கலைஞர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். லய ரத்னாகர, ம்ருதங்க பூபதி, தாளவிலாஸ், சங்கீத நாடக அகாதமி, ஸங்கீத கலாநிதி என்று விருதுகளின் நீண்ட வரிசைக்குச் சொந்தக்காரர் மூர்த்தி அவர்கள்.



மனோபலம் மிக்கவர். தொண்ணூறுகளில் ஒரு கச்சேரியில் வாசித்துக்கொண்டிருக்கும்போது ஸ்ட்ரோக் வந்து, வலது கையும் காலும் ஸ்வாதீனமில்லாமல் போயிற்று. ஆபரேஷன் செய்யவேண்டும் எனக்கூறிய நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தியிடம், ’டாக்டர்… நான் ம்ருதங்கம் வாசிக்கறத்துக்குத்தான் பொறந்தேனேயொழிய, சாப்டுட்டுத் தூங்கறத்துக்கில்லை. நான் வாசிக்கமாட்டேன்னு உங்களுக்குத் தெரிஞ்சுடுத்துன்னா, என்ன அனுப்சிருங்கோ… நான் போறத்துக்கு ரெடியா இருக்கேன். நான் கவலப்படலேன்னேன்’ என்றார்.
அதன்பின் மனம் தளராது சில மாதங்கள் பயிற்சிகள்; பிறகு அதே கம்பீரமாய் வாசித்துக்கொண்டிருக்கிறார். அவ்வளவு நேசம் தன் கலையில்.


மூர்த்தி மாமாவின் பேச்சு அலாதியான ரசிப்பும் போலச் செய்தலும் கிண்டலும் அன்பும் நிறைந்தது. ஒரு முறை சென்ட்ரல் ஸ்டேஷனில் வந்து இறங்கிய போது மழை பெய்துகொண்டிருந்தது. ஆட்டோக்காரர்அதையே காரணமாகச் சொல்லி அதிகம் பணம் கேட்டார், இவரும் ஏறி அமர்ந்துவிட்டார். ஸ்டார்ட் செய்யக் குனிந்த நேரம், ‘இரு… மழை விடட்டும்’ என்றார். எக்மோரில் நிறைய பணம் கேட்டவரிடம், ’நீ என்ன கொண்டுவிட்டா போறும்; திருப்பியும் இங்க கூட்டிண்டு வரவேண்டாம்’.


அவருக்கு சிஷ்யர்கள் ஏராளம். ம்ருதங்க தத்வம் என்ற கருத்துருவாக்கத்தின் முயற்சியாய் அவருக்கும் முன்பிருந்த மேதைகள் பற்றியும் தஞ்சாவூர் பாணி என்பதனை உலகெங்கும் மூர்த்தி அவர்களின் பார்வையில் கூறியும் வாசித்தும் ஆவணப்படுத்தியுள்ளனர். நான் முதல் முதலாய் வாங்கிய தனியாவர்த்தன கேஸட் இவருடையது தான். அதில் கொன்னக்கோலும் சொல்லியிருப்பார். அதிலும் அவர் வித்தகர். கடம் கஞ்சிராவும் வாசிப்பார். 35 தாளங்கள், 108 தாளங்கள் என்று பலவித தாள அமைப்புகளுக்கும் வாசித்துள்ளார். நிறைய கோர்வைகள் கம்ப்போஸ் செய்திருக்கிறார்.

குறிப்பு: கொன்னக்கோல் என்பது மிருதங்கத்தில் வாசிக்கப்படும் சொற்களை ஜதிகளாகச் சொல்லி, பாட்டுக்குப் பக்கவாத்யமாக சொல்லி இசைக்கும் கலை. நத்தின்தின்னா நணதின்தின்னா / தகதிமிதகஜணு என்பது போல.

நேற்று (Jan 25) பத்மஸ்ரீ விருது அறிவித்திருக்கிறது மத்திய அரசு. சந்தோஷம், நன்றி. ஆனால், மூர்த்தி மாமா அந்த நிலைக்கும் மேலே வந்து, எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. ஐம்பதிலிருந்து அறுபது வயதிற்குள்ளேனும் சரியான சமயத்தில் அவரவர் கலைகளையும் தாம் சார்ந்திருக்கும் துறைக்கு அவர்கள் அளித்த கொடையையும் அங்கீகரித்து விருது வழங்கவேண்டும். பிறகு இன்னும் சற்று வயதான பின், அதற்கும் மேலுள்ள பத்மபூஷன் பத்மவிபூஷன் விருதுகளை அளிக்கட்டும் பரவாயில்லை. விருது பெற்ற அன்றோ, அதற்கடுத்த நாளோ அவர்கள் அங்கே வாசிப்பதாய்க் கொள்ளுவோம். தன் கலையின் சிறப்புகளை முழுவதுமாய் வெளிப்படுத்தும் உடல்-மன நிலையுடன் அவர்கள் இருந்தால் தன் கலையை அங்கே நிகழ்த்துபவருக்கும் கேட்பவர்களுக்கும் எத்தனை ஆனந்தம். பருவத்தே பயிர், காலத்தினால் செய்வது, ஞாலத்தின் மாணப் பெரிது என்பதையெல்லாம் தருண்விஜய் போன்றோர் தானும் பயின்று அரசுக்கும் எடுத்துச் சொல்வாராக. நான் ஹிந்தி கற்றுக்கொண்டு மோடியிடம் பேசி முறையிடுவதை விட அது எளிது.




(நன்றி: அவர் வாசிப்பையும் பேச்சையும் கேட்டு அனுபவித்ததனால் எனக்கும், மூர்த்தி மாமாவின் பத்திரிகைப் பேட்டிகளுக்கும், யுட்யூபுக்கும். T.K.Murthy, Mridanga Tatvam என்று கூகிள் செய்து அவர் வாசிப்பின் துளியை நுகரலாம்)
                                                                             
-ஈரோடு நாகராஜன்