Sunday, September 28, 2014

மேண்டலின் ஸ்ரீநிவாஸ் – அஞ்சலி


mandolin-exponent-u-srinivas-passes-away
மேண்டலின் ஸ்ரீநிவாஸ்
(பெப் 28,1969 – செப் 19,2014)
எசக்கியப்பன் உள்ளே வரும்போதே, ‘அடாடாடா.. என்ன கச்சேரி என்ன கச்சேரி… ஏய்… குன்னக்குடியெல்லாம் ஒண்ணும் பண்ணமுடியாது பாத்துக்க.. இந்தச் சீனிவாஸன்ட்டு ஒரு ச்சின்னப்பய.. எப்பிடி மேண்டலின் வாசிக்குதான் கேட்டயா’, என்று சொல்லிக்கொண்டே வந்தார். என் தந்தையுடன் மின்சாரவாரியத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது நான் ஏழாம் வகுப்பில் இருந்தேன். அப்போதெல்லாம் டேப்ரெக்காடர் வைத்துக்கொள்வதே ஆடம்பரம்; வானொலி மட்டும்தான் என்ற நிலை.
ரேடியோவில் கச்சேரி ஆகட்டும், டிசம்பர் இசை விழாவிலிருந்து நேரடி ஒலிபரப்பாக இருக்கட்டும் அறிவிப்பு வந்தநாள் முதலே காத்திருப்பது ஒரு ஆனந்தம். ‘மொத பாட்டே கஜவதனா-ன்னு ஸ்ரீரஞ்சனில வாசிச்சா நல்லாயிருக்கும்’, என்று பிடிவாதமான எதிர்பார்ப்புகளோடு கச்சேரி கேட்க உட்காருபவரைக் கூட, அதற்கு வேறாக, ஒரு அட தாள வர்ணமோ அதுவரை அவர் கேள்விப்பட்டிராத விவர்த்தனி ராகத்தில் வினவே ஓ மனஸா என்பது போன்ற ஒரு கீர்த்தனையையோ வாசித்தால் கூட, அதன் நாலாவது சங்கதிக்குள் தன்னோடு அவரையும் நடத்திக்கொண்டு செல்ல முடிந்த வாசிப்பு. கேள்விஞானத்தால் ராகங்களைத் தெரிந்து கொள்பவர்களுக்கு, அவர்களுக்குள்ளேயே சில விதிமுறைகள் உண்டு. லதாங்கி என்ற ராகத்தைக் கல்யாணி மாதிரி இருக்கும்; ஆனா, கல்யாணி இல்ல என்று புரிந்துகொள்வார்கள். பிறவா வரம் தாரும், வெங்கட ரமணா என்று கீர்த்தனை ஆரம்பித்து அதை உறுதிசெய்யும்போது அவர்கள் முகத்தில் அரும்பும் புன்னகை அலாதியானது. அப்படிப்பட்டவர்களையும் ரசிகப்ரியா, ஸ்வர்ணாங்கி என்று வாசித்தால்கூட கொஞ்ச நேரத்தில லயிக்க வைத்துவிடும் வாசிப்பு அவருடையது. ‘ரேவதி மாரி ஒண்ணு வாசிச்சான் நாகு. பாத்தா, ரமணி வாசிப்பரே, பிந்துமாலினி… அதான்… என்னமா கொழைஞ்சு உருக்கிட்டான். பூர்வஜன்மாலயே சாதகியா இருந்திருக்கணும் இவாள்லாம்’ என்று மாமாக்கள் அபிப்ராயம் சொல்லிக்கொள்வார்கள்.

சேலம், கோவையில் மேண்டலின் ஸ்ரீநிவாஸ் கச்சேரி என்றால் ஈரோட்டிலிருந்து ஒரு கும்பலே கிளம்பிப் போகும். ’அவன் சின்னப்பையன்; சுத்தி எல்லாம் பெரிய்ய ஆளுங்க; ஜாம்பவான்…’ வேட்டிநுனியைக் கையில் பிடித்துக்கொண்டோ மடித்துக் கட்டிக்கொண்டோ, ‘எப்பிடி சிரிச்சுகிட்டே வாசிச்சான்… தாளம் போட்டான்… தெரியுமா?’ என்று பேசியபடி ஆச்சிரியம் தாங்கவொண்ணாது வீடு திரும்புவார்கள். மறுநாள் காலைதான் அவையெல்லாம் மறந்து, நின்று விளையாடிய பைரவி ஆலாபனையோ வேகமான காலப்ரமாணத்திலும் தெளிந்த நீரோடையாய் உள்ளம் நிறைத்த கதனகுதூகலமோ நினைவுக்கு வரும். அப்புறம் எப்ப வருவான் என்பதுதான் அடுத்த சந்திப்பின் முதல் கேள்வி.
முதல் டேப்ரெக்காடர் வீட்டுக்கு வந்தபோது அப்பா பத்து கேஸட்டுகள் மெட்ராசிலிருந்து வாங்கி வந்தார். மஹாராஜபுரம், பாலமுரளி, ரமணி, லால்குடி (அப்பா இதுல சிவராமன் சார்து எத்தன?) என்று வித்வானுக்கு ஒன்றாய் இருக்க, மேண்டலின் மட்டும் இரண்டு.
மேண்டலின் ஸ்ரீநிவாசன் வாசிப்பது மேண்டலின் அல்ல, மினி கிடார் தான் என்று சுப்புடு தன் விமர்சனங்களில் குறிப்பிட மறந்ததே இல்லை. ஸ்ரீநிவாஸ் அதை எலக்ட்ரிக் மேண்டலின் என்றார். எது ஈர்த்தது இத்தனை இசை ரசிகர்களையும்? மடியில் கிடந்து மயக்கும் குழந்தை போன்று இருந்தது அக்காட்சி. அந்த வாசிப்பில் இருந்த சுநாதம், ராக பாவம், விறுவிறுப்பு, லயம், வர்ணத்திலிருந்து ராகம் தானம் பல்லவி வரை, அதன் பின்னான சின்ன உருப்படிகள் எனப்படும் சின்னஞ்சிறு கிளியே முதல் பஜன்கள் வரை, எதை வாசித்தாலும் எல்லாமே அதன் கட்டமைப்புக்கு மேல் ஒரு மேதையின் வருடலால் சிறப்பு பெறும் தன்மையோடு காதுகளை வலிக்காமல் நிரப்பின.

மேதைத் தன்மை என்றதும் உன் உலகைச் சேர்ந்தவன் நானில்லை என்ற பார்வையோ, இது எப்பேற்பட்ட தவம் தெரியுமோ என்ற த்வனியோ, கஜப்பிரசவம் முடித்த களைப்பாகவோ இல்லாமல், இயல்பாக வெளிப்படும் அழகு. Embodiment of Effortlessness என்பதை சிலரிடம் தான் காணமுடியும். அதன் விசேஷம் என்னவென்றால், அவர்கள் அதைச் செய்யும்போது மிக எளிதாகத் தோன்றுவதால் அடடே, இதை நாமும் செய்யலாமே என்று செய்யப்போய், ஐயையோ.. ரொம்பக் கஷ்டம்.. எப்படி விழுந்துதுல்ல அந்த சங்கதி என்று கற்றறிந்த வித்வான்களும் வியந்து, அது அவருக்கு ரத்தத்துல ஊறியிருக்கு என்று பிரமித்து நிற்றல். இயல்பான ஆற்றல் என்பது இலவசமாக வந்துவிடவில்லை. ஆங்கிலத்தில் சொல்வது போல to make something bone of your bones and flesh of your flesh என்ற அந்நிலைக்குத் தேவையான கடும் உழைப்பும் தேடலும் அவருக்கு இருந்தது. வாத்ய சங்கீதத்திற்கே பொருந்தி வரக்கூடிய அடுக்கடுக்கான சிறிய கணக்குகள், பொருத்தங்கள் யாவையும் விரவிக் கிடந்தன அவர் கச்சேரிகளில்.
இளம் மேதைகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் பெயர் வாய்ந்த மிருதங்க வித்வான் தஞ்சாவூர் ஸ்ரீ உபேந்த்ரன் ஸ்ரீநிவாஸை நாடெங்கும் அழைத்துச் சென்றார்.
  • சிக்கில் பாஸ்கரன் வயலின்,
  • தஞ்சாவூர் உபேந்த்ரன் – மிருதங்கம்,
  • வலங்கைமான் ஷன்முகசுந்தரம் பிள்ளை – தவில்,
  • ஹரிசங்கர் – கஞ்சிரா,
  • வினாயகராம் – கடம்
என்பதான பெரிய பக்கவாத்யங்கள் புடைசூழ பவனி வந்து இசையமுதம் படைத்தார் ஸ்ரீநிவாஸ். எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், சந்திரசேகரன், உமையாள்புரம் சிவராமன் (என்னுடைய குரு), பாலக்காடு ரகு, திருச்சி சங்கரன்  போன்ற பெரும் கலைஞர்கள் அவருக்கு விரும்பி வாசித்தார்கள்.
ஸங்கீதம் பாட்டாய் இருக்கையில் அதற்கு குரலின் ஸ்தாயி தொடர்பான சில எல்லைகள் இருக்கின்றன. அதை மீறியது வாத்ய ஸங்கீதம். ஆனால், அந்த மீறுதல் ஒன்றையே பலமெனக் கொள்ளாமல் வார்த்தைகள் சுமந்து வரும் உணர்வுகளைப் போலவே, அவர் சங்கீதமும் பாட்டின் பொருளை, அதற்குரிய காலப்ரமாணத்தில் (பாட்டின் நடையின் வேகம்), ஸாஹித்யத்தின் மனக்குரலை சப்தரூபத்தில் அளிப்பதில் நிறைவாக இருந்தது.
ராகம் தானம் பல்லவி விஸ்தாரமாய்ச் செய்யப்படவேண்டும், அதை முழுதாய் ஒரு தாக்கத்தோடு வெளிப்படுத்த ஒரு மணிநேரமேனும் வேண்டும் என்று எண்ணியிருந்த வேளையில் (80களின் ஆரம்பத்தில்), ரேடியோவில் கால் மணி நேரத்தில் சங்கராபரணத்தில் ஒரு ராகம்-தானம்-பல்லவியை வழங்கி அதில் (மிருதங்கம் தஞ்சாவூர் ராமமூர்த்தி என எண்ணுகிறேன்) தனியாவர்த்தனமும் செய்ய இடமளித்த அந்த நேர்த்தி இன்னும் சிலிர்க்கிறது. அதனளவில் அது முழுமையாய் த்ருப்திகரமாய் இருந்தது. அதற்கு முன்னால் வாசித்த நளினகாந்தி மின்னல் போல இன்னும் நினைவில் ஜ்வலிக்கிறது.
ஸாமஜ வரகமனா, சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர் போன்ற கீர்த்தனைகளுக்கு பக்கவாத்யம் வாசிப்பதைவிடவும் வர்ணங்கள், பஞ்சரத்ன கீர்த்தனங்கள், தில்லானா இவற்றுக்கெல்லாம் வாசிப்பதில் சற்று கவனம் தேவை. ஏனெனில், இதில் பாட்டின் அமைப்பும் சிட்டை ஸ்வரங்கள் (ஜதிகள் கூட) கணக்கு, அறுதி, கரைபுரண்டு வந்து பாட்டின் வரிகளொடு சேருகின்ற இடங்கள் ஆகியவை என்னவென்று தெரிந்து, அப்பாடலை போஷித்து வாசிப்பது அவசியம். அது போன்ற தருணங்களில், பாடல்களை வார்த்தைகளாய் கேட்டு மனனம் செய்வதை விட, வாத்ய இசையின் மூலம் அறிந்துகொள்ளுதல் வளரும் கலைஞர்களுக்கு எளிது. அதிலும் புல்லாங்குழல், வயலின் அல்லாமல் மேண்டலின் வீணை போன்றவைகளில் மீட்டி வாசிப்பதால், சீர் பிரித்து அறிந்துகொண்ட செய்யுள் போல அவை எளிதில் புலப்படும். பைரவி வர்ணம், எந்தரோ மஹானுபாவுலு, ரஞ்சனி மாலா போன்ற பல பாடல்களை நான், என் சிறு வயதில் அவ்விதமே அறிந்துகொண்டேன்; அவையெல்லாம் ஸ்ரீனிவாஸ் கேசட்டுகள் தாம். பழகுவதற்கினிய சுபாவமும் தன்னடக்கமும் கொண்ட தேர்ந்த கலைஞர்.
அஞ்சலி செலுத்துகிற கையோடு ஏன் நாற்பத்தைந்துக்குள் மறைந்துவிட்டார் என்ற சர்ச்சைகளும் பேசப்படுகின்றன, அறிவுஜீவி மனிதர்களால். நம் ஊரின் சாபக்கேடு என்னைக் கூட சிலசமயங்களில் போன பிறவில நீங்க நாயை எட்டி ஒதச்சுட்டீங்க என்றும், கண் போனவர்களைப் பார்த்து நீ முந்தின பிறவில குளிக்கறதப் பாத்துருக்க என்று சொல்வது போல, ஸ்ரீநிவாஸுக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் கூச்சமேயில்லாமல், ’குடி சார்… ஒரே குடி’ என்ற தான்தோன்றித்தனமான பேச்சுகளும் ஆங்காங்கே முளைத்தன.
அவர்கள் இந்தியன் எக்ஸ்ப்ரஸில் வந்திருக்கும் Srinivas’s demise shatters Myths on Liver Trouble என்ற கட்டுரையைப் படித்து போதை தெளியட்டும்.
அற்புதமான கலைஞர்கள் மறைந்துவிடும் போதெல்லாம், அவர்கள் இருந்து ஆற்றவேண்டிய பணிகள் எத்தைனையோ உள்ளன என எண்ணம் வருவது உண்மை, இயற்கையும் கூட. ஆனால், இயற்கையை வெல்வதெப்படி? எவெரேனும் மறைந்த பின்னும், இதை இவர் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நமக்குத் தோணுவதே அதை அவர்கள் செய்தார்ப்போலத் தான். என்ன சொன்னாலும், இரண்டு நாட்களாக ஃபேஸ்புக் நினைவூட்டும் நண்பர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லவும் மனமில்லை. ஏதோ ஒரு பாரம் இன்னும் இறங்காமல் தவிக்கிறது.

பின் குறிப்பு:
1) அவர் எப்போது பிறந்தார், என்னென்ன விருதுகளைப் பெற்றார், எந்தெந்த நாடுகளில் ரசிகர்களின் மனவெழுச்சியைத் தூண்டி மகிழ்வித்தார் என்பது பெரும் பட்டியல். அவற்றை இங்கே குறிப்படவில்லை (இணையத்தில் காண்க).
2) Rest in peace என்பதே எனக்குப் பிடிக்கவில்லை. ரெஸ்ட் என்றதும் ஓய்வெடு என்ற பொருளோடு, இனிமேலாவது என்ற பொருள் வேறு படுத்துகிறது. அதைவேறு வலைஞர்கள் RIP என்று ஆக்கி, பைரேட்டட் டிவிடி லெவலுக்கு கொண்டு சென்றுவிடுகிறார்கள். 140-க்குள்ள எழுத வேண்டிருக்கு சார் அப்புறம் என்ன செய்ய என்பதும் புரிகிறது. இருக்கட்டுமே. HRHK என்று ஹரே ராமா ஹரே க்ருஷ்ணாவை எழுதுவதைப் போல RIP-ம் ஏனோ ஒப்பவில்லை.
3) கணக்கு என்பது ஒரு ஸ்வரக்கோவை (கோர்வை). பொருத்தம் என்பது ஒரு ரிதமிக் காம்போசிஷன் மட்டுமின்றி அதன் முற்றுப்பெறுகின்ற இடம் கோர்வை முடிந்து ஆரம்பிக்கப் படவேண்டிய பாடலின் வரியையோ முதல் வார்த்தையைப் போன்றோ இருப்பது. (நேரில் கேட்டு அறிந்து கொள்ளல் நலம்)

ஈரோடு நாகராஜன்
(erodenagaraj.blogspot.in)
20.9.2014.

நன்றி: http://solvanam.com/

3 comments:

  1. Very nice to get a mridanga vidwan's perspective on Srinivas. Completely agree with the "Rest in Peace" bit. Also with regards to insights on the need to be extra careful while playing for kritis like the pancharatnams and varnams that contain jatis. Very movingly written Nagaraj, thanks for this.

    ReplyDelete
  2. நல்ல கலைஞனின் மறைவு சோகமே

    ReplyDelete
  3. Excellent tribute to an amazing human being! Srivas's music and his smile would never fade away from our mind!

    ReplyDelete