Sunday, September 28, 2014

சொல்வனத்தில் இருந்து...

மேண்டலின் ஸ்ரீநிவாஸ் – அஞ்சலி

mandolin-exponent-u-srinivas-passes-away
மேண்டலின் ஸ்ரீநிவாஸ்
(பெப் 28,1969 – செப் 19,2014)
எசக்கியப்பன் உள்ளே வரும்போதே, ‘அடாடாடா.. என்ன கச்சேரி என்ன கச்சேரி… ஏய்… குன்னக்குடியெல்லாம் ஒண்ணும் பண்ணமுடியாது பாத்துக்க.. இந்தச் சீனிவாஸன்ட்டு ஒரு ச்சின்னப்பய.. எப்பிடி மேண்டலின் வாசிக்குதான் கேட்டயா’, என்று சொல்லிக்கொண்டே வந்தார். என் தந்தையுடன் மின்சாரவாரியத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது நான் ஏழாம் வகுப்பில் இருந்தேன். அப்போதெல்லாம் டேப்ரெக்காடர் வைத்துக்கொள்வதே ஆடம்பரம்; வானொலி மட்டும்தான் என்ற நிலை.
ரேடியோவில் கச்சேரி ஆகட்டும், டிசம்பர் இசை விழாவிலிருந்து நேரடி ஒலிபரப்பாக இருக்கட்டும் அறிவிப்பு வந்தநாள் முதலே காத்திருப்பது ஒரு ஆனந்தம். ‘மொத பாட்டே கஜவதனா-ன்னு ஸ்ரீரஞ்சனில வாசிச்சா நல்லாயிருக்கும்’, என்று பிடிவாதமான எதிர்பார்ப்புகளோடு கச்சேரி கேட்க உட்காருபவரைக் கூட, அதற்கு வேறாக, ஒரு அட தாள வர்ணமோ அதுவரை அவர் கேள்விப்பட்டிராத விவர்த்தனி ராகத்தில் வினவே ஓ மனஸா என்பது போன்ற ஒரு கீர்த்தனையையோ வாசித்தால் கூட, அதன் நாலாவது சங்கதிக்குள் தன்னோடு அவரையும் நடத்திக்கொண்டு செல்ல முடிந்த வாசிப்பு. கேள்விஞானத்தால் ராகங்களைத் தெரிந்து கொள்பவர்களுக்கு, அவர்களுக்குள்ளேயே சில விதிமுறைகள் உண்டு. லதாங்கி என்ற ராகத்தைக் கல்யாணி மாதிரி இருக்கும்; ஆனா, கல்யாணி இல்ல என்று புரிந்துகொள்வார்கள். பிறவா வரம் தாரும், வெங்கட ரமணா என்று கீர்த்தனை ஆரம்பித்து அதை உறுதிசெய்யும்போது அவர்கள் முகத்தில் அரும்பும் புன்னகை அலாதியானது. அப்படிப்பட்டவர்களையும் ரசிகப்ரியா, ஸ்வர்ணாங்கி என்று வாசித்தால்கூட கொஞ்ச நேரத்தில லயிக்க வைத்துவிடும் வாசிப்பு அவருடையது. ‘ரேவதி மாரி ஒண்ணு வாசிச்சான் நாகு. பாத்தா, ரமணி வாசிப்பரே, பிந்துமாலினி… அதான்… என்னமா கொழைஞ்சு உருக்கிட்டான். பூர்வஜன்மாலயே சாதகியா இருந்திருக்கணும் இவாள்லாம்’ என்று மாமாக்கள் அபிப்ராயம் சொல்லிக்கொள்வார்கள்.

சேலம், கோவையில் மேண்டலின் ஸ்ரீநிவாஸ் கச்சேரி என்றால் ஈரோட்டிலிருந்து ஒரு கும்பலே கிளம்பிப் போகும். ’அவன் சின்னப்பையன்; சுத்தி எல்லாம் பெரிய்ய ஆளுங்க; ஜாம்பவான்…’ வேட்டிநுனியைக் கையில் பிடித்துக்கொண்டோ மடித்துக் கட்டிக்கொண்டோ, ‘எப்பிடி சிரிச்சுகிட்டே வாசிச்சான்… தாளம் போட்டான்… தெரியுமா?’ என்று பேசியபடி ஆச்சிரியம் தாங்கவொண்ணாது வீடு திரும்புவார்கள். மறுநாள் காலைதான் அவையெல்லாம் மறந்து, நின்று விளையாடிய பைரவி ஆலாபனையோ வேகமான காலப்ரமாணத்திலும் தெளிந்த நீரோடையாய் உள்ளம் நிறைத்த கதனகுதூகலமோ நினைவுக்கு வரும். அப்புறம் எப்ப வருவான் என்பதுதான் அடுத்த சந்திப்பின் முதல் கேள்வி.
முதல் டேப்ரெக்காடர் வீட்டுக்கு வந்தபோது அப்பா பத்து கேஸட்டுகள் மெட்ராசிலிருந்து வாங்கி வந்தார். மஹாராஜபுரம், பாலமுரளி, ரமணி, லால்குடி (அப்பா இதுல சிவராமன் சார்து எத்தன?) என்று வித்வானுக்கு ஒன்றாய் இருக்க, மேண்டலின் மட்டும் இரண்டு.
மேண்டலின் ஸ்ரீநிவாசன் வாசிப்பது மேண்டலின் அல்ல, மினி கிடார் தான் என்று சுப்புடு தன் விமர்சனங்களில் குறிப்பிட மறந்ததே இல்லை. ஸ்ரீநிவாஸ் அதை எலக்ட்ரிக் மேண்டலின் என்றார். எது ஈர்த்தது இத்தனை இசை ரசிகர்களையும்? மடியில் கிடந்து மயக்கும் குழந்தை போன்று இருந்தது அக்காட்சி. அந்த வாசிப்பில் இருந்த சுநாதம், ராக பாவம், விறுவிறுப்பு, லயம், வர்ணத்திலிருந்து ராகம் தானம் பல்லவி வரை, அதன் பின்னான சின்ன உருப்படிகள் எனப்படும் சின்னஞ்சிறு கிளியே முதல் பஜன்கள் வரை, எதை வாசித்தாலும் எல்லாமே அதன் கட்டமைப்புக்கு மேல் ஒரு மேதையின் வருடலால் சிறப்பு பெறும் தன்மையோடு காதுகளை வலிக்காமல் நிரப்பின.

மேதைத் தன்மை என்றதும் உன் உலகைச் சேர்ந்தவன் நானில்லை என்ற பார்வையோ, இது எப்பேற்பட்ட தவம் தெரியுமோ என்ற த்வனியோ, கஜப்பிரசவம் முடித்த களைப்பாகவோ இல்லாமல், இயல்பாக வெளிப்படும் அழகு. Embodiment of Effortlessness என்பதை சிலரிடம் தான் காணமுடியும். அதன் விசேஷம் என்னவென்றால், அவர்கள் அதைச் செய்யும்போது மிக எளிதாகத் தோன்றுவதால் அடடே, இதை நாமும் செய்யலாமே என்று செய்யப்போய், ஐயையோ.. ரொம்பக் கஷ்டம்.. எப்படி விழுந்துதுல்ல அந்த சங்கதி என்று கற்றறிந்த வித்வான்களும் வியந்து, அது அவருக்கு ரத்தத்துல ஊறியிருக்கு என்று பிரமித்து நிற்றல். இயல்பான ஆற்றல் என்பது இலவசமாக வந்துவிடவில்லை. ஆங்கிலத்தில் சொல்வது போல to make something bone of your bones and flesh of your flesh என்ற அந்நிலைக்குத் தேவையான கடும் உழைப்பும் தேடலும் அவருக்கு இருந்தது. வாத்ய சங்கீதத்திற்கே பொருந்தி வரக்கூடிய அடுக்கடுக்கான சிறிய கணக்குகள், பொருத்தங்கள் யாவையும் விரவிக் கிடந்தன அவர் கச்சேரிகளில்.
இளம் மேதைகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் பெயர் வாய்ந்த மிருதங்க வித்வான் தஞ்சாவூர் ஸ்ரீ உபேந்த்ரன் ஸ்ரீநிவாஸை நாடெங்கும் அழைத்துச் சென்றார்.
  • சிக்கில் பாஸ்கரன் வயலின்,
  • தஞ்சாவூர் உபேந்த்ரன் – மிருதங்கம்,
  • வலங்கைமான் ஷன்முகசுந்தரம் பிள்ளை – தவில்,
  • ஹரிசங்கர் – கஞ்சிரா,
  • வினாயகராம் – கடம்
என்பதான பெரிய பக்கவாத்யங்கள் புடைசூழ பவனி வந்து இசையமுதம் படைத்தார் ஸ்ரீநிவாஸ். எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், சந்திரசேகரன், உமையாள்புரம் சிவராமன் (என்னுடைய குரு), பாலக்காடு ரகு, திருச்சி சங்கரன்  போன்ற பெரும் கலைஞர்கள் அவருக்கு விரும்பி வாசித்தார்கள்.
ஸங்கீதம் பாட்டாய் இருக்கையில் அதற்கு குரலின் ஸ்தாயி தொடர்பான சில எல்லைகள் இருக்கின்றன. அதை மீறியது வாத்ய ஸங்கீதம். ஆனால், அந்த மீறுதல் ஒன்றையே பலமெனக் கொள்ளாமல் வார்த்தைகள் சுமந்து வரும் உணர்வுகளைப் போலவே, அவர் சங்கீதமும் பாட்டின் பொருளை, அதற்குரிய காலப்ரமாணத்தில் (பாட்டின் நடையின் வேகம்), ஸாஹித்யத்தின் மனக்குரலை சப்தரூபத்தில் அளிப்பதில் நிறைவாக இருந்தது.
ராகம் தானம் பல்லவி விஸ்தாரமாய்ச் செய்யப்படவேண்டும், அதை முழுதாய் ஒரு தாக்கத்தோடு வெளிப்படுத்த ஒரு மணிநேரமேனும் வேண்டும் என்று எண்ணியிருந்த வேளையில் (80களின் ஆரம்பத்தில்), ரேடியோவில் கால் மணி நேரத்தில் சங்கராபரணத்தில் ஒரு ராகம்-தானம்-பல்லவியை வழங்கி அதில் (மிருதங்கம் தஞ்சாவூர் ராமமூர்த்தி என எண்ணுகிறேன்) தனியாவர்த்தனமும் செய்ய இடமளித்த அந்த நேர்த்தி இன்னும் சிலிர்க்கிறது. அதனளவில் அது முழுமையாய் த்ருப்திகரமாய் இருந்தது. அதற்கு முன்னால் வாசித்த நளினகாந்தி மின்னல் போல இன்னும் நினைவில் ஜ்வலிக்கிறது.
ஸாமஜ வரகமனா, சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர் போன்ற கீர்த்தனைகளுக்கு பக்கவாத்யம் வாசிப்பதைவிடவும் வர்ணங்கள், பஞ்சரத்ன கீர்த்தனங்கள், தில்லானா இவற்றுக்கெல்லாம் வாசிப்பதில் சற்று கவனம் தேவை. ஏனெனில், இதில் பாட்டின் அமைப்பும் சிட்டை ஸ்வரங்கள் (ஜதிகள் கூட) கணக்கு, அறுதி, கரைபுரண்டு வந்து பாட்டின் வரிகளொடு சேருகின்ற இடங்கள் ஆகியவை என்னவென்று தெரிந்து, அப்பாடலை போஷித்து வாசிப்பது அவசியம். அது போன்ற தருணங்களில், பாடல்களை வார்த்தைகளாய் கேட்டு மனனம் செய்வதை விட, வாத்ய இசையின் மூலம் அறிந்துகொள்ளுதல் வளரும் கலைஞர்களுக்கு எளிது. அதிலும் புல்லாங்குழல், வயலின் அல்லாமல் மேண்டலின் வீணை போன்றவைகளில் மீட்டி வாசிப்பதால், சீர் பிரித்து அறிந்துகொண்ட செய்யுள் போல அவை எளிதில் புலப்படும். பைரவி வர்ணம், எந்தரோ மஹானுபாவுலு, ரஞ்சனி மாலா போன்ற பல பாடல்களை நான், என் சிறு வயதில் அவ்விதமே அறிந்துகொண்டேன்; அவையெல்லாம் ஸ்ரீனிவாஸ் கேசட்டுகள் தாம். பழகுவதற்கினிய சுபாவமும் தன்னடக்கமும் கொண்ட தேர்ந்த கலைஞர்.
அஞ்சலி செலுத்துகிற கையோடு ஏன் நாற்பத்தைந்துக்குள் மறைந்துவிட்டார் என்ற சர்ச்சைகளும் பேசப்படுகின்றன, அறிவுஜீவி மனிதர்களால். நம் ஊரின் சாபக்கேடு என்னைக் கூட சிலசமயங்களில் போன பிறவில நீங்க நாயை எட்டி ஒதச்சுட்டீங்க என்றும், கண் போனவர்களைப் பார்த்து நீ முந்தின பிறவில குளிக்கறதப் பாத்துருக்க என்று சொல்வது போல, ஸ்ரீநிவாஸுக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் கூச்சமேயில்லாமல், ’குடி சார்… ஒரே குடி’ என்ற தான்தோன்றித்தனமான பேச்சுகளும் ஆங்காங்கே முளைத்தன.
அவர்கள் இந்தியன் எக்ஸ்ப்ரஸில் வந்திருக்கும் Srinivas’s demise shatters Myths on Liver Trouble என்ற கட்டுரையைப் படித்து போதை தெளியட்டும்.
அற்புதமான கலைஞர்கள் மறைந்துவிடும் போதெல்லாம், அவர்கள் இருந்து ஆற்றவேண்டிய பணிகள் எத்தைனையோ உள்ளன என எண்ணம் வருவது உண்மை, இயற்கையும் கூட. ஆனால், இயற்கையை வெல்வதெப்படி? எவெரேனும் மறைந்த பின்னும், இதை இவர் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நமக்குத் தோணுவதே அதை அவர்கள் செய்தார்ப்போலத் தான். என்ன சொன்னாலும், இரண்டு நாட்களாக ஃபேஸ்புக் நினைவூட்டும் நண்பர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லவும் மனமில்லை. ஏதோ ஒரு பாரம் இன்னும் இறங்காமல் தவிக்கிறது.

பின் குறிப்பு:
1) அவர் எப்போது பிறந்தார், என்னென்ன விருதுகளைப் பெற்றார், எந்தெந்த நாடுகளில் ரசிகர்களின் மனவெழுச்சியைத் தூண்டி மகிழ்வித்தார் என்பது பெரும் பட்டியல். அவற்றை இங்கே குறிப்படவில்லை (இணையத்தில் காண்க).
2) Rest in peace என்பதே எனக்குப் பிடிக்கவில்லை. ரெஸ்ட் என்றதும் ஓய்வெடு என்ற பொருளோடு, இனிமேலாவது என்ற பொருள் வேறு படுத்துகிறது. அதைவேறு வலைஞர்கள் RIP என்று ஆக்கி, பைரேட்டட் டிவிடி லெவலுக்கு கொண்டு சென்றுவிடுகிறார்கள். 140-க்குள்ள எழுத வேண்டிருக்கு சார் அப்புறம் என்ன செய்ய என்பதும் புரிகிறது. இருக்கட்டுமே. HRHK என்று ஹரே ராமா ஹரே க்ருஷ்ணாவை எழுதுவதைப் போல RIP-ம் ஏனோ ஒப்பவில்லை.
3) கணக்கு என்பது ஒரு ஸ்வரக்கோவை (கோர்வை). பொருத்தம் என்பது ஒரு ரிதமிக் காம்போசிஷன் மட்டுமின்றி அதன் முற்றுப்பெறுகின்ற இடம் கோர்வை முடிந்து ஆரம்பிக்கப் படவேண்டிய பாடலின் வரியையோ முதல் வார்த்தையைப் போன்றோ இருப்பது. (நேரில் கேட்டு அறிந்து கொள்ளல் நலம்)

ஈரோடு நாகராஜன்
(erodenagaraj.blogspot.in)
20.9.2014.

நன்றி: http://solvanam.com/

Tuesday, September 23, 2014

மெய்யோ, போலியோ...


அம்மா இன்று தேங்காய்ப் பாயசம் செய்திருந்தார். ரொம்ப நன்னா இருக்கு என்றேன். ’ஒனக்கு தெரியுமா? மெட்ராஸ்ல ஒன் வைத்தியத்துக்காக இருந்த போது, ராஜு காலேஜ் விட்டு வரும்போதே, “தேங்கபாச்சம்”-ன்னு (தேங்காய் பாயசத்தின் கொஞ்சல் வெர்ஷன்) கூப்டுண்டே தான் வருவான். ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே’ன்னு புக்ஸ கைல வெச்சுண்டு ஆடிண்டே வருவான்’.

அட்டகட்டியில் இருந்தபோது (வால்பாறை அருகில்)

’எட்டு மாசத்துலயே நீ ஓடவே ஆரம்பிச்சுட்ட, அதுலயும் கைல ஸ்கூல் பொட்டியையும் இழுத்துண்டு. பக்கத்தாத்துப் பாட்டி, ‘நாகா நடக்கறான்; நாகா நடக்கறான்’ன்னு பொலம்பிண்டே இருப்பா. அவ பேத்திக்கு ஒரு வயசாயிருந்துது, ஆனா அவ நடக்க ஆரம்பிக்கல... திடீர்னு மூணு நாள் காச்சல் வந்து எல்லாம் போயிடுத்து, போலியோன்னே தெரியாது. அதுக்கும் முன்னாடி இருந்ததெல்லாம் குந்தா, கெத்தேன்னு மலையும் காடுமா... ஆனை, கரடி, மானுன்னு இருக்கும். போலியோ ட்ராப்ஸ் ஆவது, ஒண்ணாவது... ஒண்ணும் தெரியவும் தெரியாது. ஃபேமிலி ப்ளானிங் ஆபரேஷன் பண்ணி, அஞ்சு வருஷம் கழிச்சு நீ பொறந்த.

ஒருநாள் மத்யானம் பன்னண்டு பன்னண்ட்ரைக்கு ஒன்ன கண்டுவும் நீலாவுமா ட்ரெஸ் எல்லாம் பண்ணி அவா ஸ்கூலுக்குக் கூட்டிண்டு போனா. போற வழில கொஞ்சம் ஒத்தையடிப் பாதையாட்டாமா எல்லாம் உண்டு. அந்த வழில நடு மத்யானத்துல போனதால, மேல காத்து கருப்பு போயிண்டிருந்துருக்கும். அதுந்நெழல் ஒம் மேல விழுந்து தான் தூக்கிவாரிப் போட்டு, இருளடிச்சிருச்சு ஒடம்புக்கு வந்துடுத்துன்ன்னு ஊர்க்காரா சொன்னா.

ஆனா, எதுக்கோ அந்தத் தெருல மணல் கொட்டி வெச்சிருந்தா. அதுல வெளயாடறபோது, அதுல இந்த சின்னசின்ன சங்கு, கிளிஞ்சல் எல்லாம் இருக்குமே, அதுல நாலஞ்சு குட்டி சங்கு, ஏதோ கிளிஞ்சல் எல்லாம் நீ வாய்ல போட்டுண்டு கறக்முறக்னு கடிச்சு முழுங்கீட்ட. மாதுவுக்கும் மாலாக்கும் ஏண்டி கொழந்தையப் பாக்கப்டாதா வெளையாடறச்சேன்னு அடி குடுத்தேன். அப்பறம் தான் ஃபீவர் வந்துது. இதெல்லாம் வேற தின்னுட்டயேன்னு, மொளகுக் கஷாயம் எல்லாம் வெச்சும் குடுத்தேன், வெஷ முறிவு; அதோட மலங்கட்டாதுன்னு. மலங்கட்டிடுத்துன்னா கை கால் இழுத்துக்கும்னு தாத்தா சொல்லுவா.


ஒனக்குக் காச்சல் வந்த மூணாண்ணாள் துணி ஒணத்தீண்டு இருந்தேன்; நீ டக்குன்னு தொவண்டு விழுந்து ”காலு வலிக்கறது காலு வலிக்கறதும்மா”-ன்னு தவழ ஆரம்பிச்சுட்ட. அப்பறம் காச்சலும் ஜாஸ்தியாச்சு.. பயமாப் போயிடுத்து. கோயம்புத்தூருக்கு ஒடனே போனாதான் முடியும்னு, ஆஃபீஸ்ல வண்டி (ஜீப்) கேட்டா அப்பா.

எம்.ஜி.ஆர். அப்போ கட்சி ஆரம்பிச்சு மொதமொதலா வெவசாயிகள் போராட்டம்னு அன்னிக்கு ஒரே அமளி. ரோடெல்லாம் தகராறு. வண்டி தர முடியாதுன்னுட்டா. அப்பா தான், நான் பொறுப்பேத்துக்கறேன், பெட்ரோல் போட்டுக்கறேன்னு சூப்ரவைஸர்ட்ட உறுதி குடுத்தா. ட்ரைவர் எல்லாம் தெரிஞ்சவா தான். கூட்டிண்டு போனா. அங்க 
பாப்பநாயக்கம் பாளயத்துல ஆஸ்பத்ரில டாக்டர் வந்து செக் பண்ணிட்டு, சுத்தி மாதிரி ஒண்ண வெச்சுண்டு கை, கால், முட்டின்னு ஒரு விடாம தட்டினார். வலிக்குதான்னு கேட்டார். ஒனக்கு வலில்லாம் ஒண்ணும் தெரியல.
டெஸ்ட்டு பண்ணினா, எவ்ளோ போயிடுத்துன்னு. கையெல்லாம் பொழச்சிருக்கான்னு பாக்க ஒரு மிட்டாய காமிச்சா, கைய நீட்டுவியோ தூக்குவியோன்னு... ஆனா, வெறும் நாக்க தான் நீட்டின, அதான் முடிஞ்சுது ஒனக்கு. ரெண்டு மூணு மாசத்துல மெட்ராசுக்குக் கூட்டிண்டு போகச் சொல்லிட்டா’. "This is Polio"ன்னு சொன்னா. ஒடனே நாலு கெட்டித்துண்டு பெருசா ஒரு டர்க்கி டவல் வாங்கிண்டு வரச் சொன்னார். ஒரு நர்ஸ் வந்து கொதிக்கக் கொதிக்க பக்கெட்ல தண்ணி கொண்டுவந்து நாலு துண்டையும் முக்கி கை காலெல்லாம் சுத்தினா. அப்பறம், பெரிய துண்ட முக்கி, ஒடம்பு பூரா சுத்தினா. சில்லிப்பே ஆகாது, சூடுபட்டு எவ்ளோ வரதோ வரட்டும்னு.. அப்பறம், மெட்ராஸ் போங்கோன்னுட்டா.’


’அங்க பெரிம்மாவாத்துல பொரசபாக்கத்துல (புரிசைவாக்கம்) தான் இருந்தோம். ராஜு தான் காலேஜ். மூர்த்தி, மஞ்சு, தாஸ்  
எல்லாம் சின்னவா. ஒன்ன தோள்லயே வெச்சுண்டு போவா வேடிக்கை காமிச்சுண்டு, வெளையாடிண்டு... செண்டை கொட்டு வரது, கல்யாண ஊர்வலம் வரது-ன்னு எத்தன நாள்... சேமியா பாயசம் பண்ணினா, ராஜு வந்து, டேய் நாகப்பாச்சம்... அது எல்லாம் புழு.. அய்யே-ன்னு கலாட்டா பண்ணுவான். சித்தீ, இதோ ஆட்டோ வந்தாச்சு, கெளம்பும்பான்.. நீ அழுவ. ஒனக்கு வேற திடீர்னு ஒடம்பு இப்படி ஆயிட்டதுல, அச்சாசோ.. நமக்கு என்னமோ ஆயிடுத்துன்னு பயத்துல எப்பவும் பொடவைய அழுத்திப் புடிச்சுண்டு இருப்ப.. ஒக்காத்தி வெக்கணும்னு பாப்போம். ஆனா, நெத்தில வெரல் வெச்சாக் கூட விழுந்துடுவ.. பேலன்ஸே இருக்காது. அதுனால, மூர்த்தியும் தாஸுமா ஒன்ன சேர்ல ஒக்காத்தி வெச்சு ஒரு துண்டால கட்டிவெப்பா விழாம.. ஒனக்குப் பாட்டெல்லாம் பாடி, தூக்கிண்டு அலஞ்சிருக்கா எல்லாரும். நீ கூட பாட்டெல்லாம் பாடுவ’

 


எப்படிம்மா? அதான் பேச்சுலேந்து எல்லாம் போயிடுத்தே?

‘அதாண்டா.. ரொம்பக் கவலையாயிருந்துது. பகவானே, இந்தக் கொழந்த வாயையும் பிடுங்கிடாதேன்னு ராத்திரியெல்லாம் அழுவேன்; வேண்டாத தெய்வமில்ல. போலியோ வந்து ஒரு மாசத்துல பேச்சு கொஞ்சம் வந்து, 
அப்பறம் நன்னா வந்துது மூணு மாசத்துல. மழலையே இருக்காது ரெண்டர வயசுல. ட்ரீட்மெண்ட்டுக்கு ஜிஹெச்சுக்கு கூட்டிண்டு போவேன், டெய்லி. தெனம் பஸ்சுல போறதப் பாத்துட்டு, பஸ் ஸ்டாப்புக்கு நடக்கற வழில, ‘வாம்மா காப்பி சாப்பிடலாம்னு’ கூப்ட்டான். ‘செருப்பாலயே அடிப்பேன்னு சொல்லிண்டே, கூட்டமா ஜனங்க இருக்கற எடத்துக்கு ஓடினேன். ஃபிஸியோதெரபில டாக்டர் ராமநாதன் இருந்தார், நம்ம பத்மாவோட அண்ணா...’

‘நீ பெட்டுல படுத்துண்டு என்னடி ராக்கம்மான்னு பாடுவ. அதக் கேக்க நேசகுமாரி, இன்னும் பத்துப் பாஞ்சு நர்ஸ் எல்லாம் கூட்டமா ஒன்னச் சுத்தி நிப்பா. டாக்டர் வந்து, ’என்னடா இங்க க்ரிஷ்ண லீலா பண்ணிண்டு இருக்கே-ம்பார்..

அங்கயே பெட்டுல படுத்துண்டு போரடிக்கும் ஒனக்கு. ஒரு நாள் டாக்டர் வந்தவொடனே, ’இங்க சொவத்துல ஒரு பெரிய கண்ணாடி மாட்டிடுங்கோ டாக்டர். ஜன்னல் வழியா ரோட்ல போற வண்டியெல்லாம் அதுல தெரியும், நான் வேடிக்க பாத்துக்கறேன்னு’ நீ அவர்கிட்ட சொன்னதும் அவர் அசந்து போயிட்டார்.

ஒரு தடவ அப்பா ஊர்லேந்து வந்திருந்தா. பக்கத்துல கார்ப்பெண்ட்டர் வேலையெல்லாம் நடந்துண்டிருந்துது. ஒன்னத் தூக்கிண்டு போய் வேடிக்கை காட்டிண்டிருந்தா. அப்போ, ’பார்... மரம் எல்லாம் அறுக்கறா பார்’-னு, அவர் சொன்னதும், நீ ஒடனே, ‘இது எல்லாம் மரம் இல்ல; கட்டை. இதுக்கு எல, கெளயெல்லாம் கெடையாது..அதான், அறுத்தாச்சேன்னு’ சொல்லிட்ட! நாங்கள்லாம் ஆச்சிரியப் பட்டுண்ட்டோம்’ என்றாள். 
எல்லா அம்மாக்களுக்கும் தன் பெண் தான் அழகி; தன் பையன் தான் புத்திசாலி என்று நினைப்பு.


கழுத்துக்குக் கீழே சகலமும் இழந்துவிட்ட குழந்தை, மழலையின்றிப் பேசுவதும், புத்திசாலியா இருக்கே என்ற ஆச்சிரியம், சந்தோஷமும் தான் அவள் அந்த கடினமான வருடங்களைக் கழிப்பதில் ஆறுதலாய் இருந்திருக்கிறது. நான் கூட நினைத்துக்கொள்கிறேன், புத்திசாலியாகவே எப்போதும் இருந்திருக்கலாமே என்று.