Tuesday, August 5, 2014

எப்போ எடுப்பாங்க?

மரணம் நிகழ்ந்துவிட்ட வீடுகளில்
குழுமியிருக்கும் நபர்களில்
எவருக்கேனும் வந்துகொண்டேயிருக்கிறது
பொருந்தாத பாடலுடன் ஒரு அழைப்பு.

கொடிகளை அசைத்ததும் மாறும் வடிவங்களென
அலைபேசியின் அழைப்புக்கோ
அரைக்குவளைக் காப்பிக்கோ
சொல்லாமல் கிளம்புவதற்கோ

விலகிப் போயும் வந்து சேர்ந்தும்
விநோத உருவங்களைக்
கட்டமைத்தபடி இருக்கிறது,
அப்படிச் செய்வதாய் உணராத ஒரு கூட்டம்.

பத்து நிமிடத்திற்கு மேல்
அனுஷ்டிக்க முடியாத துக்கமென்று
காட்டிக்கொடுத்து விடுகின்றன
சீரியல் பேச்சுகளும் அலுவலகக் கதைகளும்.

சிறியதொரு காகிதக் கோப்பையில்
கொஞ்சமேயிருக்கும் தேநீரைக் கூட
மறுக்கின்றனர் சிலர்
இன்னைக்கு இன்னுமொரு ஒரு சாவு
அங்கவேற போகணும்
’, என்றபடி.

இரண்டு சங்கொலிகளின் இடையில்
கழுத்து நரம்புகள் இளகி
மார்பு விரிய மூச்சிழுக்கும்
சங்கூதுகிறவர்
சாய்ந்திருக்கும் பெருசுகளை சாடையாய்ப் பார்த்தபடி
தனக்குள் யோசிக்கிறார், அவருக்கும்
வயதாகிவிட்டது.

எப்போது எடுப்பாங்க என்பது
அக்கறையாய்க் கேட்கப்படுகிறது
வேலை செய்பவளாலோ காவற்காரராலோ,
சாத்தியே இருக்கிற சில கதவுகள்,
ஜன்னல்கள், சுற்றுச்சுவர்களின்
பின்னிருக்கும் முகங்களின்
ஒற்றைக் குரலாக.

வீட்டுப் பெரியவர்கள்

விடுப்பெடுக்கச் சொல்லிவிட்டதால்
அதே கேள்விதான்
அத்தெருவின் சிறார்களுக்கும்,
மைதானத்தின் விரிந்த பரப்பின்
ஒவ்வொரு மணலுக்கும்
உரிமைகொள்ள முடிவது
வாரநாட்களின் பகல்களில் தான்.

முட்டக் குடித்தபின்னும்
மீதமிருக்கும் கொஞ்சம் பணம்;
சாவொன்று தான் சாதிக்கிறது அதனை,
மாலை வாங்குவதற்காய்
மயக்கத்திலும் தெளிவு.

முந்தானைக்குள் கைநுழைத்து
வாய்பொத்திய பெண்கள்
செருப்பிலிருந்து கால் விலக்கி
வெறுந்தரையில் ஆண்கள்
விளையாட்டை மறந்துபோய்
வாய்கோணும் குழந்தைகள்
தேய்ந்துகொண்டே போகும்
வெவ்வேறு ஒலிகள்
நீரூற்றி நனைந்த தெரு…

ஓடி வரும்போதெல்லாம் குதித்து,
தாழக் கிடக்கும் வேப்பங்கிளையின்
பழங்களையோ இலைகளையோ
தட்டித் தட்டி,
தான் வளர்ந்ததை
தனக்கே உறுதிசெய்து
மலர்கின்ற முகமொன்று

இம்மையென்பதே என்னவென்றறிவதற்குள்
மறுமைக்குச் செல்லவென்று
மரித்துப் போனது.

படம் உதவி இணையம்