Wednesday, October 17, 2012

மறதி


முந்தா நாள் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் கச்சேரிக்குக் கொண்டு சென்ற ஒலிம்பஸ் டிஜிட்டல் வாய்ஸ் ரெகார்டரை அங்கேயே மறந்துவிட்டு பாதி தூரம் வந்துவிட்டேன். திரும்பப் போய்த் தேடியும் விசாரித்தும் பார்த்ததில் இப்போது வரை கிடைக்கவேயில்லை; இனியும் கிடைக்க way இல்லை.
எங்கிருந்து ஆட்கொள்கிறது மறதி?

இப்போது தான் ஆனந்த விகடனில் மரம் கருணாநிதி பற்றிய கட்டுரை படித்தேன். பேட்டியின் முதல் வரியே ஆச்சிரியம். வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியே இல்லாத நாட்களில் போகிற வழியில் அரசல் புரசலாகக் காதில் விழுந்த பாடல் அது.

’தாய் நிலம் தந்த வரம் தாவரம்.. அது தழைக்கத் தழைக்க மகிழ்வார்கள் யாவரும்’

எம்.எஸ்.வி.யின் குரலோடு அதன் மெட்டும் திஸ்ர கதியும் சேர்ந்து மனதினுள் குரலாய் ஒலித்தது. எப்படியும் இருபது வருடங்களுக்குக் குறையாமல் இருக்கும் இப்பாடலைக் கேட்டு. எது நினைவில் இருத்தியது இதை, இவ்வளவு அழுத்தமாய்? இப்போது முணுமுணுக்கையில், ’பறந்தால் மேகங்கள் ஒடினால் வானங்கள் பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள் - இனிமை நிறைந்த உலகம் இருக்கு’ என்று ’மகிழ்வார்கள் யாவரு’மிற்குப் பிறகு கோத்துவிட்டால் தாளமும் மெட்டும் பொருந்துகிறது.  அதைச் ச்துஸ்ரமாக 4/4-ல் பாடினால் ’காடெல்லாம் பிச்சிப்பூவு... கரையெல்லாம் செண்பகப்பூவு.. நாடே மணக்குதுங்க - அந்த நல்ல மக போற பாதை...’ என்றும் கேட்கிறது. கிராமிய இசையின் மெட்டு அது.

எதற்குச் சொல்கிறேன் என்றால், எப்போதோ கேட்ட ட்யூனுக்குப் பொருத்தங்கள் கூட இப்போது தோன்றுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஐஃபோன் தொலைந்தது; அதற்குச் சில வருடங்கள் முன்பு வேறு ஒரு ரெக்கார்டர், பென் ட்ரைவ். இவை தவிர, அடிக்கடி தொலைக்கும் பேனா, பர்ஸ், புத்தகம், ரசீது மற்றும் எங்கே வைத்தோம் என்ற நினைவுப் பிழைகள் வேறு. எப்படியும் எதையாவது தொலைத்தோ மறந்தோ விடுகிறேன். பல வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு ஆண்டுப்பலனை மேய்ந்த பொழுது, ‘உங்கள் ராசிக்கு குடையை எங்கு வைத்தோம், கடிகாரத்தைக் கட்டிக்கொண்டு தான் வந்தோமா என்பன போன்ற விஷயங்களை நீங்கள் மறந்து விடுவீர்கள். ஆனால், முக்கியமானவற்றை மறக்க மாட்டீர்கள்’ என்று படித்துவிட்டு மகிழ்ந்ததை எண்ணிக்கொள்கிறேன். இப்போது, ’இதுல என்ன சிரிப்பும் சந்தோஷமும் வேண்டிக்கெடக்கு உனக்கு, புத்திகெட்டுப் போயிண்டு இருக்கே, தெரியறதோ... மான்கெட்’, என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

பார்த்தீர்களா... தலைப்பு வெக்கவே மறந்து, அப்படியே பதிவிட இருந்தேன்!

இன்னும் கொஞ்ச நாள் ஆனதும்,  Blog-லயா Twitlonger-லயா, 750words-லயா Facebook-இலா ட்விட்டரிலா... எதில் பகிர்கிறேன் என்றெல்லாம் குழப்பம் வருமோ?

3 comments:

  1. என் தாத்தா முப்பது மாலை மதி நாவல்களை வரிசையாக வைத்திருப்பார். ஒன்று எடுத்து படித்து முடித்தவுடன் கடைசியில் வைத்து விடுவார். பல வருடங்களுக்கு அதே முப்பது தான்! கேட்டால், அதனால ஒன்னும் பிரச்சனை இல்லை. மறுபடி அந்த புத்தகத்தை எடுக்கறதுக்குள்ள அதோட கதை மறந்துடுது என்பார்!

    ReplyDelete
  2. மறதி மனிதனுக்குக் கிடைத்திருக்கும் வரம்! இல்லையென்றால் பழைய விஷயங்களையே நினைத்துக் கொண்டு இப்போது சரியாக செயல் பட முடியாமல் போய்விடும்.
    நன்றி.

    ReplyDelete
  3. நல்ல மறதிதான். ஆனால் இந்த வயசிலும் என்னோட மாமியார் மறக்காமல் சமையலறைச் சாமான்கள் எடுத்த இடத்தில் வைப்பதையும், சரியாக அடையாளம் சொல்வதையும் பார்த்தால் ஆச்சரியமாகவும் இருக்கிறது; வெட்கமாயும் இருக்கு. கண்ணெதிரே இருக்கும் பொருளைத் தேடும் வழக்கம் எனக்கு. :P:P:P:P

    ReplyDelete