Wednesday, August 17, 2011

இரையாகாமல் எதுவரை?

பன்னிரண்டு நிமிடங்களுக்கும் மேல் அசையாமல் வரவேற்பறையின் கதவோரம் கிடந்தேன். மயங்கியெல்லாம் விழவில்லை. அங்கிருந்து ஐந்தடி தொலைவில் வாசலில் கிரில் கதவு. கம்பிகளுக்கிடையே ஆன இடைவெளிகளில் நுழைந்து எதுவும் வந்திடாதிருக்க இரண்டடி உயரத்திற்கு ஒரு தகரப் பலகை. 

அதன் கூரிய விளிம்பை அலட்சியப்படுத்தி இரு கால்களை அதன் மேலும் முன்னிரண்டை ஒரு கம்பியிலும் வைத்தபடி எட்டிப் பார்த்த பூனையை விரட்டினேன். மதியம் இரண்டு மணி முதல் மூன்று வரை மின் வெட்டு. உணவுக்கு முன் உருளலோ அல்லது பின் உருளலோ அன்றி பெரிதாக ஏதும் வேலைகளற்ற வேளை. நிலைச்செய்திகள் கீச்சுக்கள் அற்ற வாழ்க்கை என எண்ணிக்கொண்டிருக்கும் போது, அந்தக் கீச்சொலி கேட்டது. 

மாடிப்படியின் அருகில் நிறுத்தியிருந்த சக்கரவண்டியின் அடியில் ஒரு மூஞ்சூறு.
அண்ணன் பூனையார் அவசரப்பட்டது ஏன் என்று விளங்கியது. க்ரில்லும் தரையும் சேருமிடத்தின் சந்தில் பொறுமையிழந்த நான்கு பாதங்களின் உலாத்தல் தெரிந்துகொண்டேயிருந்தது. தலையருகில் வைத்திருந்த கையைச் சற்றே நகர்த்தியதும் சுனாமி வந்துவிட்டதைப் போல் விழுந்தடித்துக் கொண்டு வாசல் பக்கம் திரும்பி, பின்னர் மனம் மாறி, சக்கரங்களின் அடியே காணாமல் போனது மூஞ்சூறு. 

ஒரே ஒரு நிமிடம் தான். அதற்குள் மீண்டும் வெளியில் வந்துவிட்டது. எங்கள் மூவருக்குமே நல்ல பசி போலும். இப்போது வாசலில் தெரிந்த பாதங்களைக் காணவில்லை. ஒரு சந்தேகம் உறைக்க, அண்ணாந்ததில், அங்கிருந்து கிணற்றுக்குத் தாவி, வாசல் கிரில்லின் மேல் sun shade-ல் குதித்து அங்கிருந்து மாடிப்படியின் மேல் பகுதியில் நீளும் சாளரத்தின் 'தின்' ஓட்டைகள் வழியே தலை நுழைக்க இடமுண்டா என்று தேடியபடி, பூனை முகம்.

"மண்டுவா இருக்கியே.. நான் லேசா வெரல ஆட்டினாக்கூட அவ்ளோ தெரியறதோன்னோ... அங்க உன்ன ஸ்வாஹா பண்ணிடணும்னு கங்கணம் கட்டிண்டு எட்டிப் பாக்கறது தெரியலையாக்கும்... என்ன பொறப்புடா நீ, மனுஷாளாட்டமே.. எங்க வேணுமோ, அங்க கண்ண மூடிண்டு," என மூஞ்சூறுடன் பேசிப்பார்த்தேன். 

இந்த வார்த்தைகளைக் கற்று தந்த அன்று அன்னா ஹசாரே அழைக்கிறார்  என்று பள்ளிக்குச் செல்லாமல் டெல்லிக்குச் சென்றுவிட்டதா அல்லது சமச்சீரில் அந்த பகுதிகள் வெட்டப்பட்டனவா என்று தெரியவில்லை. அது கண்டுகொள்ளாமல் தன் போக்கில் இருந்தது, சகலத்தையும் முகர்ந்தபடி.
நான் குறுஞ்செய்தி ஏதும் வருகிறதா என்று பார்ப்பதற்காக கைபேசியை ஏந்தியபடி படுத்தவாறு பார்த்துக்கொண்டிருந்தேன். கட்டை விரல் பூனைப் பாதங்கள் போன்று keypad-ஐ ஒற்றியபடி கேமராவை உயிர்ப்பித்தது. 

சாளரத்திலிருந்து மறைந்து போய் இப்போது வீட்டைச் சுற்றி வந்து ஜன்னல் வழியே இரை பிடிக்கலாமா என்று யோசித்து அங்கும் எட்டிப் பார்த்தது பூனை.
கண்ணெதிரே ஒரு உயிர் கசாப்புக் கடை சமாதானங்களோடு கீச்சுகள் அடங்கி, ஓரமாய் ரத்தம் சிந்தி, அவ்வுயிரின் அளவேயான அகந்தை மற்றொரு நாளின் மலமாகி விடும் நிகழ்வு இன்றைய பசியாறலாய் நடந்துவிடும் எனத் தோன்றியது. சட்டென்று யோசிப்பதைக் கூட நிறுத்தி விட்டு, சலனமற்று இருக்க முயற்சித்தேன். தேவராய் முனிவராய் வல் அசுரராகி, கணங்களாய்ப் பேயாய் மனிதனாய்.. கல்லாய் ஏழெட்டு நிமிடங்கள். நேரமானதும் இன்னும் நெருங்கி வரவேற்பறையின் கதவருகே வந்து வாசனித்தது மூஞ்சூறு. 

'ஒன் பேர் என்ன ராணி முகர்ஜியா'

ஓரிரு நிமிடங்கள் ஆனபின் அசையாச் சொத்தாகவே ஆகிவிட்டிருந்த என்னை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் வெறும் பொருளாய் மதித்து அருகே வந்து சட்டையின் ஓரங்களில் வெடிகுண்டோ போதைபோருளோ இருக்கிறதா என்று
தாற்காலிக மோப்ப squad போல ஏற இறங்கப் பார்த்துவிட்டு மேசைக்கடியில்  நுழைந்து இருளில் கலந்துவிட்டது.

இன்னமும் பூனை, பார்க்கிங்கில் டிக்கெட்டுக்குத் தவிக்கும் Mr. Bean போல, 'கிருத்திகா பள்ளி முடிந்து உள்ளே வரத்தானே போகிறாள், அட! ஒரு குரியர் கூடவா வராது இவர்களுக்கு... அப்போ தொறந்து தான ஆகணும்...' என்று வாசலில் அலைந்து கொண்டிருக்கிறது.


 . 

Sunday, August 14, 2011

தோப்பனை அறியாற்குத் தோழனே.

'Can you pl translate the poem, written by Minmus, the poetic pig about the Boar Neppoleon?' asked my aNNaa, P.V.ராமஸ்வாமி. 

Friend of fatherless!
Fountain of happiness!
Lord of the swill-bucket! Oh, how my soul is on
Fire when I gaze at thy
Calm and commanding eye,
Like the sun in the sky,
Comrade Napoleon!
Thou are the giver of
All that thy creatures love,
Full belly twice a day, clean straw to roll upon;
Every beast great or small
Sleeps at peace in his stall,
Thou watchest over all,
Comrade Napoleon!
Had I a sucking-pig,
Ere he had grown as big
Even as a pint bottle or as a rolling-pin,
He should have learned to be
Faithful and true to thee,
Yes, his first squeak should be
'Comrade Napoleon!'
அந்த வரிகளின் ஊடே பின்னியிருந்த மெலிதான கிண்டல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே,   

தோப்பனை அறியாற்குத் தோழனே 
தோன்றுமென் ஆனந்த ஊற்றே 

அழுக்குகளை அலசும் 
அகன்றதொரு வாளியின்
அரசனே! அண்ணனே -  உன்
கண் கண்ட பொழுதெல்லாம் 
ஆதவனாய் சூரியனாய்
ஆட்கொண்டும் 
அமைதி 'நிலவியும்' - என் 
ஆன்மாவை அணைக்கிறதே
அக்கினியின் நாக்குகள் - அந்த 
வான் 'வெளிச் சத்தியமே'
தோழனே! நெப்போலியனே!!

அன்பு கொள்ளும் பண்டமெல்லாம்
அளவிடாது ஈந்து ஈந்து

அருஞ்சுவை தீண்டியதும் 
அறி நாவின் நுனியிலிருந்து 
ஆங்கு சற்றே வீங்கிக்கொண்ட 
அடி வயிற்று ஓரம் வரை 
தின்னவும் கொடுத்தவனே 
தினம் உருள திண்டு போல் 
வைதலற்ற இனியதான 
வார்த்தைகளைப் போலிருக்கும் 
வைக்கோலும் தந்தவனே 
வையகமே அமைதி கொள்ள 
வகைவகையாய்க் கொடுத்தவனே
நண்பனே  நீ தான் 
நல்கிடுவாய் அனைத்துமே 
தோழனே! நெப்போலியனே!!

ஆமோதிக்கவியலாத 

அருவருப்பான பன்றியே எனினும் 
முன்னரே பிறந்துவிட்டு 
முகம் முற்றிய பிறப்பெனினும் 
அரைக்காலே நிரம்பிய 
அறிவு மயக்கும் குப்பியோ 
அரைத்ததையே அமுக்கி நீவும் 
சப்பாத்திக் குழவியோ...

கல்வியும் கலை சூழ்ந்த 
உயிர்திணையோ - அஃதன்றி 
கல்லோ கனிமரமோ உணர்விலா 
அஃறிணையோ...

எப்படித்தான் உதித்தென்ன 
எதுவாகப் பிறந்தாலும் - அதன் 
வாய் உதிர்க்கும் முதல் முத்து,
தோன்றிடும் முதல் ஓசை...

தோப்பனை அறியாற்குத் 
தோழனே - தோன்றுமென் 

ஆனந்த ஊற்றே! ஆரமுதே!!தோழனே - நெப்

'போலியனே...'  

:)) :D 

Friday, August 12, 2011

சிவ நாம மஹிமை

 நம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம். அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்கள் மூன்றையும்'த்ரயீ' என்பார்கள்.
அப்போதும் ரிக் மற்றும் ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ். இந்த யஜுர் வேதம் 'சுக்ல, க்ருஷ்ண' என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்கிற 5 பகுதிகளின் மத்தியில் வருவது 'க்ருஷ்ண யஜுஸ்'. இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் என்பது அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம், இங்கே தான் வருகிறது ஸ்ரீ ருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வயக்ஷரமான 'சிவ'.


உடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்கிறார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை திருவள்ளூவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார். வேதங்களை எல்லாம் ஒரு சரீரமாக, மெய்யாக வைத்துக் கொண்டால் அத்ல் உயிராக, மெய்ப் பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால் அந்த ஹ்ருதயம், சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்.

வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாத (ன்) நாமம் நமசிவாயவே.

அவ்வைப் பாட்டி செய்த 'நல்வழி' என்னும் நூலில்,

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு)
அவாயம் (அபாயம்) ஒருநாளும் இல்லை'

என்று சொல்லியிருக்கிறார்.


சிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயணி ப்ராணத்யாகம் செய்யும் சந்தவேசத்தில், 'த்வயக்ஷரம் நாம கிரா' என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, 'சிவ' என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும் என்கிறாள். இதையே திருமந்திரத்தில் "சிவ சிவ என்கிலர் தீவினையாளர் " என்று திருமூலரும் சொல்வது.

தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 985-989

Monday, August 1, 2011

மௌனம்

பாதங்கள் வலிக்காமல்
பாதைகள் கடந்த பின்னும்

கண்கள் மட்டும் மறக்கவில்லை
மிதிக்காதபோதும், 
முள்வலியை.   

********************************************************* 


பார்வைகள் பனியானால்
மழையாய்க் குளிர்ந்திருப்பேன்


காத்திருத்தல் கவிதைகளானால்
மொழியாய் இசைந்திருப்பேன்


முத்தங்கள் நீரானால்
கங்கையாய்க் கடலாயிருப்பேன்


தழுவுதல் இலைகளானால்
பூக்களாய் தருவாயிருப்பேன்


மௌனமே நீயானால்
என்னவாயிருப்பதடி...


யாரிடமேனும் சொல்.
*********************************************************  


அன்று...


எனக்கு வேண்டியிருந்தது,
உனக்கு மனமில்லை.


ஒரு நாள்
உனக்குத் தோன்றியிருக்கும்;
உன் மௌனம் என்னை எட்டவில்லை.


எனினும்,
நமக்கு வேண்டியிருக்கும்போது
சந்திக்காமலேயே நகர்ந்து விடுவது


நாட்களா -
நாமா?
*********************************************************  


நான் - நானாகவும்
நீ - நீயாகவும் இருந்திருக்கலாம்.


நானும் நீயும், நீயும்-நானுமாய்
உதடுகள் திறந்து, உள்ளே தேடி,


நாக்குச் சுவைத்து,
நம்மை அறிந்தும்...


நாளும் பிணங்கி நாளையே சேர்வதும்
எத்தனை தின்றும் தீர்ந்திடாதிருப்பதுமாய்


சுயமற்றுப் போன பின்பு
யாரிடம் காட்டுவது...


நெஞ்சைக் கிழித்து.

*********************************************************  


SMS ஏதும் இல்லை

MAIL BOX ன் மற்றவைகள்
தேடத்தான் வைத்தன...

ஒலிக்காத போதும் அடிக்கடி
பார்த்துக்கொண்டேன் கைபேசியை.

வார்த்தைகளை விடப்
பெரியதுதான் மௌனம்,

நாமிருவரும்...
சேர்ந்திருக்கும்போது மட்டும்.

*********************************************************   

மனமற்றுப் போனால் -
நினைவற்றுப் போகும் ;

நினைவற்றுப் போனால் -
பேச்சற்றுப் போகும்,

பேச்சற்றுப் போன பின்பும்
பேசிக்கொள்வோம்

நானும் நீயும்...

எங்கோ இருந்தபடி இரு(ற)க்கும் வரை
ஸ்வாசம் போல.


************************************************************ 


அந்த இடைவெளி
அப்படியேதான் இருக்கிறது.

நீ வார்த்தைகளிடையே
அமர்ந்தபோது,
நான்
மௌனத்தில் சஞ்சரித்தேன்.

நீயும் மௌனமான போது
உடல் மொழியை உணர்ந்தேன்.

பேச்சு - இரைச்சல்;
ஸ்பரிசமே சங்கீதம்.

அதற்கப்பால் ஒரு மௌனம்
இருக்கக்கூடும். ..

திரியின் நீளம் தீரும் வரை ,
பற்ற வைப்போம் -

அணைப்போம், பற்றும்போதே
வெடிக்கும் ஒருநாள்...

அதுவரை.

***************************************************************

பாராதபோதும்,

நினைவுகள் நிறைக்கும்...

உண்மைதான் - உன்

உணர்வுகளின் ஓரங்களில்

வரியாய் ஓடிடும்

எனக்குள்ளே அழைத்திட்ட

நிசப்தக் குரலின்

நீண்டிடும் விளிம்புகள்.

****************************************************************

என் குரல் எனக்கே கேட்டதை
உள் மன விழிப்பென்றே எண்ணியிருந்தேன்.

பாதி இருக்கை மட்டும்
பள்ளமான பைக்,

எப்போது வாங்கினாய் என்று
எண்ண வைக்காத கொடி,

குறுக்கிலே படுத்தாலும் - வெளியே
கால் தெரியாத கட்டில்,

உபயோகப்படுத்தாத மாற்றுச் சாவி...

அஹ விழிப்பு அல்லடி அது,

பூட்டியே கிடக்கின்றதொரு
எதிர் வீட்டின் கதவைப் போல...

தொடர்பற்றுப் போனாலும் - தொடர்ந்தபடி கழிகின்ற
மற்றுமொரு நாளின்

தனிமை.


***********************************************************************