Sunday, June 19, 2011

அவலாஞ்சி ரோடு - 4

மஞ்ச கம்பையிலிருந்து மேலே ஏறி வலதுபுறம் திரும்பினால், சாம்ராஜ் எஸ்டேட். புதிதாக கோபாலக்ருஷ்ண சுவாமி கோயில் கட்டியிருக்கிறார்கள். அங்கிருந்து சற்று தொலைவே, சாலையோரம் இளைப்பாற ஒரு இடம். எனக்கு Antique Park Benches மிகவும் பிடிக்கும், அமர்ந்தோம். இரவிலே யாராவது லவட்டிக்கொண்டு போய்விடக்கூடாது என குணசீலம் போல அந்த பெஞ்சுகளை சங்கிலி கொண்டு பூட்டியிருந்தார்கள். ஐஸ் டீ அருந்தினோம். பிறகு மஞ்சூர் வந்து சேர்ந்தோம். மணி மூன்றிருக்கும்.  நல்ல பசி. என்னுடைய அண்ணா அக்கா எல்லோரும் ஆரம்பக்கல்வி கற்ற பள்ளியின் அருகே காரை நிறுத்தி சுற்றிலும் பார்க்க, பிஸ்கட்டே உசிதம் எனத் தோன்றியது. ஒரு மளிகைக்கடையில், "இன்னும் கொஞ்சம் தூரம் போனீங்கன்னா ஹோட்டல் ஷில்பா வரும்; கார் நிறுத்த எடமெல்லாம் இருக்கும். சாப்பாடு நல்லாயிருக்கும்" என்றார்கள். போனோம். அது ஒரு ஜன்னல் வைத்த டீக்கடை. கார் நிறுத்த இடம் என்பது வேறொன்றுமில்லை, இதே சாலை தான்! தொங்கிக்கொண்டிருந்த கோழிகளைப் பார்த்து பயந்தபடியே, ஊட்டிக்குத் திரும்பினோம்.

ஊட்டி 'சரியான' ஊர். மதுரை போல சகல வேளைகளிலும் சாப்பிட முடியாது. இரவு ஏழு மணிக்குத் தான் அடுத்த பந்தி என்று ப்ரீத்தி பேலசிலிருந்து சேரிங் க்ராஸ் மற்றும் இதர பகுதிகளில் சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள் மதிய உணவு வேளையிலேயே, பார்சல் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். 'சைவ உணவு-நியாய விலை-தரம்-14 மணி நேர சேவை' என்ற சமன்பாட்டில் எவரேனும் உணவகம் நடத்தினால் நல்ல வாழ்க்கை நிச்சயம். யாருக்கும் தோன்றும். ஆனால், குளிர் என்ற பருவம் தான் அத்தகைய முயற்சிகளில் இரண்டாவது கருத்தையும் தயக்கங்களையும் ஏற்றி வைக்கிறது. 

Glanton Manor-ல் பின்புறம் இருந்த உணவகத்தில் அதீத விலையில் அளிக்கப்பட்ட சுமாரான தோசைகள் பசியாற்றின. இருக்கும் குளிரில், ஏசியையும் போட்டு முதல் கவளம் அரைபடுவதற்குள் தட்டில் இருப்பது ஆறிவிடுகிறது. வெளியே வந்து, பக்கத்து கடையில் நான் குரங்கு குல்லா (அந்தப் பெயர் எப்படி வந்தது? இப்போது தானே, அணிகிறேன்!), முழுக்கை கம்பளி மேலாடை (ச்சே.. sweater-க்கு தமிழில் என்ன?), கம்பளிக் கையுறைகள் வாங்கினேன். [Infrastructure ready; Geneva -வில் யாராவது கச்சேரிக்கு ஏற்பாடு செய்யுங்கள்.] 'சித்தப்பா, இதப் போட்டுண்டா ரொம்ப குண்டா தெரியறது, கழட்டீடு,' என்றான் ராகவ்.

அடுத்த நாள் Upper Bhavani Dam செல்ல முடிவு செய்தோம். விளையாட்டு, எரிபொருள் நிரப்பி வருதல், மதிய உணவை முடித்துக் கடையைக் கட்டுதல் என நேரமானது. ஓடும் காரிலிருந்து சாலையைப் பார்க்க, எங்களை அப்படியே அந்தரத்தில் நிறுத்திவிட்டு மெல்லிய இழை போன்ற இடைவெளியில் பாதை வெகுவேகமாக பின்னோக்கி விரைந்தது போல இருந்தது. மலைகளைச் சுற்றி சுற்றிக் கடந்தபடி செல்கையில் குந்தா மலையிலிருந்து, கனமான குரலொன்று ஒலிபெருக்கியில் ஏதோவொரு கோயில் விழாவிற்கு வந்திருந்தவர்களை உணவுக்காக ஒழுங்குபடுத்திக்கொண்டு இருந்தது. அந்தக் குரல் ஒவ்வொரு திருப்பத்திற்கும் ஒலித்தும் மறைந்தும் வெகு நேரத்திற்குப் பிறகே காணாது போனது. எல்லா மலைகளுமே தேயிலையோ, மரங்களோ, பூக்களோ அணிந்திருக்க, இந்த மலையின் ஒரு முனை மட்டும் பாறையாக இருந்தது.  மலைச்சரிவுகளின் அழகில் நின்று நின்று போனோம். 

வழியில் தாய் சோலை எஸ்டேட் நீண்டு பறந்து விரிந்திருந்தது. குறுக்கே சம்பர் மான் பெரிய உருவமாய்க் கடந்தது. சற்று முன்னே செல்ல, வலது புற மேட்டில் மரங்களின் தலையில் மாலை வெளிச்சமும் காலடியில் இருட்டுமாய் இருந்த இடத்தில் ஜோடியாக காதல் வயமாய் எங்கோ பார்த்தபடி இருந்தன. நாமும் அங்கே ஒரு மரத்தடியில் இருந்தால் எந்த உயிரையும் எவர் மனதையும் காயப்படுத்தாது இருப்போமோ என்று தோன்றியது. மிகச் சிறிய சப்தத்திற்கு கூட அவைகள் இருப்பிடங்களிலிருந்து நகர்ந்து கொண்டே இருந்தன. அவற்றின் விரைவில், மெல்லிய அச்சமும் சிறிது தூரம் சென்றதும் லேசாகத் தயங்கி பின்னே தொடர்கிறார்களா, பாதுகாப்பான இடைவெளியில் இருக்கிறோமா என்ற ஓரப்பார்வையும் இருந்தது. 'இதுனால தான் நீ மாட்டிக்கற' என்று அவைகளிடம் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. 

மலையின் ஏறக்குறைய உச்சியில் இருந்து சமவெளியைப் பார்க்க, குகை போன்ற செடிகளின் வாசலில் நின்றிருந்த இரு மான்கள் எங்களைப் பார்த்தோ, உள்ளுணர்வினாலோ  தங்களை உள்ளே இழுத்து மறைத்துக்கொண்டன. பின்னாலோ பக்கவாட்டிலோ இருப்பவரை நிலைக்கண்ணாடியில் நாம் இங்கிருந்து பார்த்தால் அவருக்கு நம் முகம் தெரியும் என்ற கோண-விதியா, நீ கண்ணில் படவில்லை என்றாலே எனக்கு நிம்மதி என்ற குழந்தைத்தனமா அல்லது கைகளால் முகம் பொத்திக்கொண்டு 'என்னக் கண்டுபிடீ' என்று கூறும் குழந்தை மனதா... அந்த மானாக இருந்து அதை அறிய ஆசைப்பட்டேன். 

ஐந்து மணிக்கு அணைக்குச் செல்லும் கதவுகளை மூடிவிடுவார்கள். நாங்கள் அங்கே சென்றபோது நேரம் ஐந்து பத்து. யாரையாவது கேட்கலாமா அல்லது இங்கிருந்தே எட்டிப்பார்த்து திரும்பிவிடலாமா என்ற தயக்கத்தை உடைத்தது கதவருகே நின்றிருந்த காக்கியுடை குழந்தைராஜின் குரல். 

'வேணும்னா கீள எறங்கி வந்து கேக்கட்டும்', கேட்டோம். பத்து நிமிடங்களில் வந்து விடுங்கள் என்று சொல்லி அனுமதி தந்தார்கள். அந்தப் பாலத்தில் இருந்து வரவே மனதில்லை. நல்லவேளையாக ஒதுங்கும் இடங்களின் உள்ளே வீல்ச்சேர் போகுமளவிற்கு இடமிருந்தது. அவசரமாய்க் கண்களை ஓட்டி அந்த எழிலை மனதில் தேக்க முயற்சி செய்கையில் மேலேயிருந்து ஒரு பஸ் வந்தது. கூடவே குழந்தைராஜும்.
அறிவிக்கப்பட்ட நேரம் கடந்து அவர்களை அழைத்துவந்ததில் நல்ல லாபமுண்டு அவருக்கு. அதோடு, கீழே கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று பார்க்கலாம் என்று சொன்னார். அந்தப் பாலம் முடியுமிடத்தில் முக்குறுத்தி வனச் சரணாலயத்தின் கேரள எல்லை ஆரம்பிக்கிறது. காவிரியின் ஒரு துணை ஆறு தான் பவானி. குந்தா மலையிலிருந்து பாய்கின்றவளை, 'ம்ம்.. எங்கேயிருந்து எங்க போற' என்று கேரளாவிற்கு படி தாண்ட விடாமல் தமிழக எல்லைக்குள்ளேயே U-Turn போட வைப்பது தான் மேல் பவானி அணைக்கட்டு. அப்பகுதியில் இருக்கும் நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கெல்லாம் சோனியா ஜெயா எல்லாம் ஜஸ்ட் அக்கா தான்; பவானி தான் அம்மா. ஆனால், அப்பகுதியில் காணப்படும் Acacia மரங்கள் சரியான நீர் உறிஞ்சிகளாம். ஆகையால் நீர் மட்டம் குறைகிறதாம். அம்மரங்களை வெட்டும் பணியில் வனத்துறை ஈடுபட்டிருக்கிறது. பா.ம.க.வினர் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வதை விடுத்து, தெரிந்த தொழிலான இதை மேற்கொண்டால் சமூகத்திற்கும் நல்லது. பா.ஜ.க. வேண்டாம். அணையைக் கரசேவை செய்து, கேரளத்தை வளப்படுத்திவிடுவார்கள்.

அணையின் மேல் தளத்திலிருந்து கீழே செல்லும் வழி மண் சாலை தான். அதன் வளைவுகளில் பேருந்தைத் திருப்பும்போதேல்லாம் ஓட்டுனர் சிரமப்பட்டார். அவர் செய்த அகலமான திருப்பல்களால் அவரே ரிவர்சில் நிறைய வரவேண்டியிருந்தது. கீழே காரை நிறுத்தும்போதே, அந்த பஸ்ஸிற்குக் குறுக்கே காரை நிறுத்தி மடக்கவில்லைஎன்றால், திரும்பி ஏறும்போது இவர் பின்னால் மாட்டிக்கொள்வோம் என்று திட்டமிட்டு பார்க் செய்தோம். கட்டுப்பாட்டு அறையின் உள்ளே கீழே ஆறு ஓட, கம்பிகளாய் வலையிட்ட தரையிலிருந்து அதன் பக்கவாட்டுச் சந்துகள் பயமுறுத்த, கொஞ்சம் திகிலோடு பார்த்தோம். 'அப்பா இங்கெல்லாம்தான் வேலை செஞ்சாருன்னு அண்ணன் சொன்னாரு; அதான் உங்கள இவ்ளோ தூரம் கூட்டிக்கிட்டு வந்து காட்டறேன்', என்றார் குழந்தைராஜ் பழ வாசனையுடன். கனடா பெயர் எழுதி அதன் இலைச்சின்னம் வரைந்திருந்தது கலன்களில். 

வெளியே வந்ததும் பக்கவாட்டில் படிகள் மேலே ஏறின. அது, பாலத்திற்கு அடியில் சென்று நீண்ட குகைப் பாதையாய் tunnel. நீர் மட்டம் மிக உயர்ந்து, அடி மட்டத்தில் அழுத்தம் அதிகமாகிவிட்டால் அணை உடையும் அபாயம் தவிர்க்க, அந்த tunnel வழியே நீர் மறுபக்கம் வருமாறு அமைப்பது வழக்கம். எல்லா hydro power station-களிலும் அப்படி உண்டு. ராகவனுக்கு இருட்டென்றால் பயம். வாங்க போயிடலாம் என்பதை ஜபித்தபடியே அதைக் கடந்தான். 

திரும்பி வருகையில் அனேகமாக அந்தப் பகுதியிலேயே எங்கள் இரண்டு கார்கள் தான் ஓடிக்கொண்டிருந்தன. மேட்டுப்பாளயைம் வழியில் எலுமிச்சம்பழ மாலையெல்லாம் போட்டு மேரி மாதா தேர் ஒன்று குழல் விளக்குகளுடன் சென்றுகொண்டிருந்தது. இளைஞர்கள் அனைவருமே அனேகமாக வெண்குழல் வத்தி வாயில் நழுவ, மிகுந்த போதையில் மஞ்சள் வெட்டி நுனியை மேலே தூக்கி 'ஒத்த சொல்லால' பாட்டுக்கு மானசீகமாக ஆடிக்கொண்டு வழிமறிக்க, சின்ன பையன்கள் மஞ்சள் துணி சுற்றிய குடங்களில் வசூலிக்க முயன்றனர்.

குன்னூரின் உணவகக் கதவு கீழிறங்கும் நேரம் உள்ளே நுழைந்தோம். முதலில் எங்கள் வயிற்றுக்கு ஈந்த பின்னரே, கார் பசியைப் போக்க முடிவு செய்தது தவறாயிற்று. சாப்பிட்டு வெளியே வந்து மூடியிருந்த பெட்ரோல் பங்க்  அருகே சற்றே திகைத்த பொது,  அங்கிருந்து ஒன்பது கிலோ மீட்டர் சென்றால் காட்டேரி தாண்டி ஹுளிகல்லில் இருபத்திநாலு மணிநேர பங்க் இருப்பதாக ஆட்டோக்காரர் சொன்னார். நிரப்பிக்கொண்டு கோவையில் கூடடைந்தபோது ஆடைகளை, பெட்டிகளை ஒழுங்குபடுத்த வேண்டுமே என்ற கவலைக்கீடாக சுட்டுத் தள்ளிய படங்களை பிரிக்கவேண்டுமே என்ற கவலையும். 'ஆதியீன்றததுவே நீ/ ஓதியறி, ஒன்று' என்றும் குந்தா, அப்பர் பவானி அணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மலைகளுக்கு நடுவே உவகை. விரிவாக எழுதி லிங்க் போடுவேன்; படித்துவிட்டு கண்டபடி திட்டுங்கள் என்றும் கீசிவிட்டு (tweet), சில தினங்களில் ஈரோடு சென்று (பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு) நண்பர்களைச் சந்திக்கும் மகிழ்ச்சியில் மீதமிருந்த உருளை-பீட்ரூட்-கேரட்டுகளைக் கடைசியாகக் க்ளிக்கினேன். 

gopalakrishna  temple

cha(r)m raj estate

krithicka, busy with munching


 the two keep the tent pole in place-raju anna.

arun cautiously looking for expiry date

the-lock; no thalAk

appAdi, guNdar thadai sattam inga illa

kuLiril nadungiyapadi oru sangilik karuppan

Kundha Power House

'appA  vara jeep theriyaRadhAnnu ingEndhu pAppOm'-ammA


Emerald

grahaNam?

Upper Bhavani Dam


krithicka,sruth,ragav,ravi,ramki,arun & me



U-Turn

Add caption



andha bus



kuzhandhairaj.

Canada collaboration 





Steps to tunnel
entering the cave




ravi explaining where they went


8 comments:

  1. உங்கள் வர்னனைகளும் விளக்கங்களும் சென்று வந்த அனுபவம் கிடைத்தது!அங்கு செல்ல சிறப்பு அனுமதி ஏதெனும் பெற வெண்டுமா!! அனைத்து இடங்களுக்கும் பார்க்க அனுமதி உண்டா!
    நன்றி!!

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி. சிறப்பு அனுமதி நிச்சயம் வேண்டியிருக்கும். எங்கள் பின்னால் பேருந்தில் வந்தவர் பெரிய இடம் என்று நினைக்கிறேன். உள்ளே செல்லும் வழியில் அப்பா வெகு காலம் முன்பு அங்கே வேலையில் இருந்தது கூடுதல் சௌஹர்யமாக இருந்தது.

    ReplyDelete
  3. படங்களும் பகிர்வும் அருமை:)!

    ReplyDelete
  4. இன்று ‘இட்லி வடையில்’ உங்கள் பின்னூட்டம் பார்த்து ஒரு குறுகுறுப்பில் உங்கள் ப்ளாக் சைட்டிற்கு வந்தேன். கவிதைகளும் அவலான்சி பயண அநுபவமும் புகைப்படங்களும் பார்த்து ரசித்தேன். எழுதுவது ஒரு கலை. அதை மிளிரச் செய்வது சிலருக்கு மட்டும் வந்த கை வந்த கலை. ம்ருதங்க வித்வானுக்கு கையில் தான் கலை.
    உங்கள் பதிவுகளை எல்லாம் சீக்கிரம் படித்துவிடுகிறேன். எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். ரசித்த வரிகள்:
    / பக்கத்து கடையில் நான் குரங்கு குல்லா (அந்தப் பெயர் எப்படி வந்தது? இப்போது தானே, அணிகிறேன்!)/
    /. 'இதுனால தான் நீ மாட்டிக்கற' என்று அவைகளிடம் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை./
    / சோனியா ஜெயா எல்லாம் ஜஸ்ட் அக்கா தான்; பவானி தான் அம்மா. /
    / பா.ம.க.வினர் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வதை விடுத்து, தெரிந்த தொழிலான இதை மேற்கொண்டால் சமூகத்திற்கும் நல்லது. பா.ஜ.க. வேண்டாம். அணையைக் கரசேவை செய்து, கேரளத்தை வளப்படுத்திவிடுவார்கள்./
    நன்றி. - ஜெகன்னாதன்

    ReplyDelete
  5. ஆஹா, என்ன விரிவானதொரு ஊக்கமளிக்கும் பின்னூட்டம். வருகைக்கு நன்றி ஜகன்னாதன். :)

    ReplyDelete
  6. Superb.....
    S.R.MURUGAIYAN
    PONDICHERRY

    ReplyDelete
  7. Superb.....
    S.R.MURUGAIYAN
    PONDICHERRY

    ReplyDelete