Sunday, June 19, 2011

அவலாஞ்சி ரோடு - 4

மஞ்ச கம்பையிலிருந்து மேலே ஏறி வலதுபுறம் திரும்பினால், சாம்ராஜ் எஸ்டேட். புதிதாக கோபாலக்ருஷ்ண சுவாமி கோயில் கட்டியிருக்கிறார்கள். அங்கிருந்து சற்று தொலைவே, சாலையோரம் இளைப்பாற ஒரு இடம். எனக்கு Antique Park Benches மிகவும் பிடிக்கும், அமர்ந்தோம். இரவிலே யாராவது லவட்டிக்கொண்டு போய்விடக்கூடாது என குணசீலம் போல அந்த பெஞ்சுகளை சங்கிலி கொண்டு பூட்டியிருந்தார்கள். ஐஸ் டீ அருந்தினோம். பிறகு மஞ்சூர் வந்து சேர்ந்தோம். மணி மூன்றிருக்கும்.  நல்ல பசி. என்னுடைய அண்ணா அக்கா எல்லோரும் ஆரம்பக்கல்வி கற்ற பள்ளியின் அருகே காரை நிறுத்தி சுற்றிலும் பார்க்க, பிஸ்கட்டே உசிதம் எனத் தோன்றியது. ஒரு மளிகைக்கடையில், "இன்னும் கொஞ்சம் தூரம் போனீங்கன்னா ஹோட்டல் ஷில்பா வரும்; கார் நிறுத்த எடமெல்லாம் இருக்கும். சாப்பாடு நல்லாயிருக்கும்" என்றார்கள். போனோம். அது ஒரு ஜன்னல் வைத்த டீக்கடை. கார் நிறுத்த இடம் என்பது வேறொன்றுமில்லை, இதே சாலை தான்! தொங்கிக்கொண்டிருந்த கோழிகளைப் பார்த்து பயந்தபடியே, ஊட்டிக்குத் திரும்பினோம்.

ஊட்டி 'சரியான' ஊர். மதுரை போல சகல வேளைகளிலும் சாப்பிட முடியாது. இரவு ஏழு மணிக்குத் தான் அடுத்த பந்தி என்று ப்ரீத்தி பேலசிலிருந்து சேரிங் க்ராஸ் மற்றும் இதர பகுதிகளில் சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள் மதிய உணவு வேளையிலேயே, பார்சல் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். 'சைவ உணவு-நியாய விலை-தரம்-14 மணி நேர சேவை' என்ற சமன்பாட்டில் எவரேனும் உணவகம் நடத்தினால் நல்ல வாழ்க்கை நிச்சயம். யாருக்கும் தோன்றும். ஆனால், குளிர் என்ற பருவம் தான் அத்தகைய முயற்சிகளில் இரண்டாவது கருத்தையும் தயக்கங்களையும் ஏற்றி வைக்கிறது. 

Glanton Manor-ல் பின்புறம் இருந்த உணவகத்தில் அதீத விலையில் அளிக்கப்பட்ட சுமாரான தோசைகள் பசியாற்றின. இருக்கும் குளிரில், ஏசியையும் போட்டு முதல் கவளம் அரைபடுவதற்குள் தட்டில் இருப்பது ஆறிவிடுகிறது. வெளியே வந்து, பக்கத்து கடையில் நான் குரங்கு குல்லா (அந்தப் பெயர் எப்படி வந்தது? இப்போது தானே, அணிகிறேன்!), முழுக்கை கம்பளி மேலாடை (ச்சே.. sweater-க்கு தமிழில் என்ன?), கம்பளிக் கையுறைகள் வாங்கினேன். [Infrastructure ready; Geneva -வில் யாராவது கச்சேரிக்கு ஏற்பாடு செய்யுங்கள்.] 'சித்தப்பா, இதப் போட்டுண்டா ரொம்ப குண்டா தெரியறது, கழட்டீடு,' என்றான் ராகவ்.

அடுத்த நாள் Upper Bhavani Dam செல்ல முடிவு செய்தோம். விளையாட்டு, எரிபொருள் நிரப்பி வருதல், மதிய உணவை முடித்துக் கடையைக் கட்டுதல் என நேரமானது. ஓடும் காரிலிருந்து சாலையைப் பார்க்க, எங்களை அப்படியே அந்தரத்தில் நிறுத்திவிட்டு மெல்லிய இழை போன்ற இடைவெளியில் பாதை வெகுவேகமாக பின்னோக்கி விரைந்தது போல இருந்தது. மலைகளைச் சுற்றி சுற்றிக் கடந்தபடி செல்கையில் குந்தா மலையிலிருந்து, கனமான குரலொன்று ஒலிபெருக்கியில் ஏதோவொரு கோயில் விழாவிற்கு வந்திருந்தவர்களை உணவுக்காக ஒழுங்குபடுத்திக்கொண்டு இருந்தது. அந்தக் குரல் ஒவ்வொரு திருப்பத்திற்கும் ஒலித்தும் மறைந்தும் வெகு நேரத்திற்குப் பிறகே காணாது போனது. எல்லா மலைகளுமே தேயிலையோ, மரங்களோ, பூக்களோ அணிந்திருக்க, இந்த மலையின் ஒரு முனை மட்டும் பாறையாக இருந்தது.  மலைச்சரிவுகளின் அழகில் நின்று நின்று போனோம். 

வழியில் தாய் சோலை எஸ்டேட் நீண்டு பறந்து விரிந்திருந்தது. குறுக்கே சம்பர் மான் பெரிய உருவமாய்க் கடந்தது. சற்று முன்னே செல்ல, வலது புற மேட்டில் மரங்களின் தலையில் மாலை வெளிச்சமும் காலடியில் இருட்டுமாய் இருந்த இடத்தில் ஜோடியாக காதல் வயமாய் எங்கோ பார்த்தபடி இருந்தன. நாமும் அங்கே ஒரு மரத்தடியில் இருந்தால் எந்த உயிரையும் எவர் மனதையும் காயப்படுத்தாது இருப்போமோ என்று தோன்றியது. மிகச் சிறிய சப்தத்திற்கு கூட அவைகள் இருப்பிடங்களிலிருந்து நகர்ந்து கொண்டே இருந்தன. அவற்றின் விரைவில், மெல்லிய அச்சமும் சிறிது தூரம் சென்றதும் லேசாகத் தயங்கி பின்னே தொடர்கிறார்களா, பாதுகாப்பான இடைவெளியில் இருக்கிறோமா என்ற ஓரப்பார்வையும் இருந்தது. 'இதுனால தான் நீ மாட்டிக்கற' என்று அவைகளிடம் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. 

மலையின் ஏறக்குறைய உச்சியில் இருந்து சமவெளியைப் பார்க்க, குகை போன்ற செடிகளின் வாசலில் நின்றிருந்த இரு மான்கள் எங்களைப் பார்த்தோ, உள்ளுணர்வினாலோ  தங்களை உள்ளே இழுத்து மறைத்துக்கொண்டன. பின்னாலோ பக்கவாட்டிலோ இருப்பவரை நிலைக்கண்ணாடியில் நாம் இங்கிருந்து பார்த்தால் அவருக்கு நம் முகம் தெரியும் என்ற கோண-விதியா, நீ கண்ணில் படவில்லை என்றாலே எனக்கு நிம்மதி என்ற குழந்தைத்தனமா அல்லது கைகளால் முகம் பொத்திக்கொண்டு 'என்னக் கண்டுபிடீ' என்று கூறும் குழந்தை மனதா... அந்த மானாக இருந்து அதை அறிய ஆசைப்பட்டேன். 

ஐந்து மணிக்கு அணைக்குச் செல்லும் கதவுகளை மூடிவிடுவார்கள். நாங்கள் அங்கே சென்றபோது நேரம் ஐந்து பத்து. யாரையாவது கேட்கலாமா அல்லது இங்கிருந்தே எட்டிப்பார்த்து திரும்பிவிடலாமா என்ற தயக்கத்தை உடைத்தது கதவருகே நின்றிருந்த காக்கியுடை குழந்தைராஜின் குரல். 

'வேணும்னா கீள எறங்கி வந்து கேக்கட்டும்', கேட்டோம். பத்து நிமிடங்களில் வந்து விடுங்கள் என்று சொல்லி அனுமதி தந்தார்கள். அந்தப் பாலத்தில் இருந்து வரவே மனதில்லை. நல்லவேளையாக ஒதுங்கும் இடங்களின் உள்ளே வீல்ச்சேர் போகுமளவிற்கு இடமிருந்தது. அவசரமாய்க் கண்களை ஓட்டி அந்த எழிலை மனதில் தேக்க முயற்சி செய்கையில் மேலேயிருந்து ஒரு பஸ் வந்தது. கூடவே குழந்தைராஜும்.
அறிவிக்கப்பட்ட நேரம் கடந்து அவர்களை அழைத்துவந்ததில் நல்ல லாபமுண்டு அவருக்கு. அதோடு, கீழே கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று பார்க்கலாம் என்று சொன்னார். அந்தப் பாலம் முடியுமிடத்தில் முக்குறுத்தி வனச் சரணாலயத்தின் கேரள எல்லை ஆரம்பிக்கிறது. காவிரியின் ஒரு துணை ஆறு தான் பவானி. குந்தா மலையிலிருந்து பாய்கின்றவளை, 'ம்ம்.. எங்கேயிருந்து எங்க போற' என்று கேரளாவிற்கு படி தாண்ட விடாமல் தமிழக எல்லைக்குள்ளேயே U-Turn போட வைப்பது தான் மேல் பவானி அணைக்கட்டு. அப்பகுதியில் இருக்கும் நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கெல்லாம் சோனியா ஜெயா எல்லாம் ஜஸ்ட் அக்கா தான்; பவானி தான் அம்மா. ஆனால், அப்பகுதியில் காணப்படும் Acacia மரங்கள் சரியான நீர் உறிஞ்சிகளாம். ஆகையால் நீர் மட்டம் குறைகிறதாம். அம்மரங்களை வெட்டும் பணியில் வனத்துறை ஈடுபட்டிருக்கிறது. பா.ம.க.வினர் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வதை விடுத்து, தெரிந்த தொழிலான இதை மேற்கொண்டால் சமூகத்திற்கும் நல்லது. பா.ஜ.க. வேண்டாம். அணையைக் கரசேவை செய்து, கேரளத்தை வளப்படுத்திவிடுவார்கள்.

அணையின் மேல் தளத்திலிருந்து கீழே செல்லும் வழி மண் சாலை தான். அதன் வளைவுகளில் பேருந்தைத் திருப்பும்போதேல்லாம் ஓட்டுனர் சிரமப்பட்டார். அவர் செய்த அகலமான திருப்பல்களால் அவரே ரிவர்சில் நிறைய வரவேண்டியிருந்தது. கீழே காரை நிறுத்தும்போதே, அந்த பஸ்ஸிற்குக் குறுக்கே காரை நிறுத்தி மடக்கவில்லைஎன்றால், திரும்பி ஏறும்போது இவர் பின்னால் மாட்டிக்கொள்வோம் என்று திட்டமிட்டு பார்க் செய்தோம். கட்டுப்பாட்டு அறையின் உள்ளே கீழே ஆறு ஓட, கம்பிகளாய் வலையிட்ட தரையிலிருந்து அதன் பக்கவாட்டுச் சந்துகள் பயமுறுத்த, கொஞ்சம் திகிலோடு பார்த்தோம். 'அப்பா இங்கெல்லாம்தான் வேலை செஞ்சாருன்னு அண்ணன் சொன்னாரு; அதான் உங்கள இவ்ளோ தூரம் கூட்டிக்கிட்டு வந்து காட்டறேன்', என்றார் குழந்தைராஜ் பழ வாசனையுடன். கனடா பெயர் எழுதி அதன் இலைச்சின்னம் வரைந்திருந்தது கலன்களில். 

வெளியே வந்ததும் பக்கவாட்டில் படிகள் மேலே ஏறின. அது, பாலத்திற்கு அடியில் சென்று நீண்ட குகைப் பாதையாய் tunnel. நீர் மட்டம் மிக உயர்ந்து, அடி மட்டத்தில் அழுத்தம் அதிகமாகிவிட்டால் அணை உடையும் அபாயம் தவிர்க்க, அந்த tunnel வழியே நீர் மறுபக்கம் வருமாறு அமைப்பது வழக்கம். எல்லா hydro power station-களிலும் அப்படி உண்டு. ராகவனுக்கு இருட்டென்றால் பயம். வாங்க போயிடலாம் என்பதை ஜபித்தபடியே அதைக் கடந்தான். 

திரும்பி வருகையில் அனேகமாக அந்தப் பகுதியிலேயே எங்கள் இரண்டு கார்கள் தான் ஓடிக்கொண்டிருந்தன. மேட்டுப்பாளயைம் வழியில் எலுமிச்சம்பழ மாலையெல்லாம் போட்டு மேரி மாதா தேர் ஒன்று குழல் விளக்குகளுடன் சென்றுகொண்டிருந்தது. இளைஞர்கள் அனைவருமே அனேகமாக வெண்குழல் வத்தி வாயில் நழுவ, மிகுந்த போதையில் மஞ்சள் வெட்டி நுனியை மேலே தூக்கி 'ஒத்த சொல்லால' பாட்டுக்கு மானசீகமாக ஆடிக்கொண்டு வழிமறிக்க, சின்ன பையன்கள் மஞ்சள் துணி சுற்றிய குடங்களில் வசூலிக்க முயன்றனர்.

குன்னூரின் உணவகக் கதவு கீழிறங்கும் நேரம் உள்ளே நுழைந்தோம். முதலில் எங்கள் வயிற்றுக்கு ஈந்த பின்னரே, கார் பசியைப் போக்க முடிவு செய்தது தவறாயிற்று. சாப்பிட்டு வெளியே வந்து மூடியிருந்த பெட்ரோல் பங்க்  அருகே சற்றே திகைத்த பொது,  அங்கிருந்து ஒன்பது கிலோ மீட்டர் சென்றால் காட்டேரி தாண்டி ஹுளிகல்லில் இருபத்திநாலு மணிநேர பங்க் இருப்பதாக ஆட்டோக்காரர் சொன்னார். நிரப்பிக்கொண்டு கோவையில் கூடடைந்தபோது ஆடைகளை, பெட்டிகளை ஒழுங்குபடுத்த வேண்டுமே என்ற கவலைக்கீடாக சுட்டுத் தள்ளிய படங்களை பிரிக்கவேண்டுமே என்ற கவலையும். 'ஆதியீன்றததுவே நீ/ ஓதியறி, ஒன்று' என்றும் குந்தா, அப்பர் பவானி அணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மலைகளுக்கு நடுவே உவகை. விரிவாக எழுதி லிங்க் போடுவேன்; படித்துவிட்டு கண்டபடி திட்டுங்கள் என்றும் கீசிவிட்டு (tweet), சில தினங்களில் ஈரோடு சென்று (பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு) நண்பர்களைச் சந்திக்கும் மகிழ்ச்சியில் மீதமிருந்த உருளை-பீட்ரூட்-கேரட்டுகளைக் கடைசியாகக் க்ளிக்கினேன். 

gopalakrishna  temple

cha(r)m raj estate

krithicka, busy with munching


 the two keep the tent pole in place-raju anna.

arun cautiously looking for expiry date

the-lock; no thalAk

appAdi, guNdar thadai sattam inga illa

kuLiril nadungiyapadi oru sangilik karuppan

Kundha Power House

'appA  vara jeep theriyaRadhAnnu ingEndhu pAppOm'-ammA


Emerald

grahaNam?

Upper Bhavani Dam


krithicka,sruth,ragav,ravi,ramki,arun & me



U-Turn

Add caption



andha bus



kuzhandhairaj.

Canada collaboration 





Steps to tunnel
entering the cave




ravi explaining where they went


Saturday, June 18, 2011

உருளை+Gas (potato அல்ல, நமஸ்தே வாயு:)

'அம்மா.. கேஸ்' என்று வாசலில் குரல் கேட்டது. சிலிண்டரைப் பொருத்தியதும் 'எவ்ளோப்பா கேஸ்', என்றேன். 
'365 ரூபா சார்'. அம்மா, ரூ.500 கொடுக்க, 135 மீதி கொடுத்தான். 

'எவ்ளோ வெலம்மா கேஸ்'?

'பில்லப் பாரேண்டா..' 

ரூ.352.35 காசுகள்!

டெலிவரி பாய் இதற்குள் விடுவிடுவென வாசலுக்குச் சென்றுவிட்டான். அம்மா பின் தொடர்ந்து போய், 'க்ரவுண்ட் ஃப்ளோர் தானப்பா.. அஞ்சு ரூபா தான் எப்பவும் தருவேன். மீதியக்குடு' எனறாள். எதிர் வீட்டு இரண்டாம் மாடியிலிருந்து, 'மாமீ.. நாங்க எப்பவும் பத்து ரூபா குடுக்கறோம்' என்று குரல் வந்தது. 

'நீங்க மாடில இருக்கேள்;நாங்க கீழேயே தான இருக்கோம்?'

அதற்குள், 'அய்ய.. இந்த எக்ஸ்ட்ரா பணத்துக்கு தான் இந்த வேல பாக்கறதே' என்று சொல்லியபடியே வண்டியைச் செலுத்தியபடி ஆள் எஸ்கேப். 

இதை status message-ஆக facebook-ல் போட்டதும் ராஜு அண்ணா (cousin) 'இது ரொம்ப தப்பு தம்பி, அந்த ஆளை விடாதே' என்றார். நண்பர் தினகர் இராஜாராம், 'அந்த 352.35 என்பதே, டெலிவரிக்கான ரூ.15 சேவைக் கட்டனன்மும் சேர்ந்தேதான். நான் எப்போதும் அதற்கு மேல் தருவதில்லை. உபரித் தொகை தராவிடில் டெலிவரி செய்ய மாட்டேன் என்று அவர்கள் சொல்ல முடியாது, மேலும் முகவரின் கிடங்கிலிருந்து நாமே எடுத்துக்கொண்டால் அந்த பதினைந்து ரூபாயையும் கூடத் தரவேண்டிய அவசியமில்லை என்றார்.

இது விஷயமாகப் புகார் செய்யலாம் என்று சில நிமிடங்கள் யோசித்தேன். ஆனால் முதலில் பில்லைப் பார்த்துவிட்டு, பிறகு ஸக்தி அனுசாரம் காசு கொடுப்பது தான் உசிதம் என்று முடிவு செய்துவிட்டேன். 

  1. உடனே, புகார் செய்யலாம் என்று ஏஜென்சி நம்பரை எத்தனை முறை அழைத்தாலும் அது betrothal betrothal என்றதால், சிந்திக்கக் கிடைத்த அவகாசம்.
  2. முன்பு ஒரு முறை round figure syndrome அல்லது சில்லறைத் தட்டுப்பாடு போன்ற காரணத்தினால் ஒரு டெலிவரி பாய் அதிகமாகக் கேட்ட தொகையை அம்மா தராததால், அவன் சிலிண்டரை வாசலுக்கு எடுத்துச் செல்லுவதற்குள் இரண்டு இடங்களில், ரகசியப் புன்னகையுடன் தடேர் தடேர் எனப் போட்டு, சேதப்படுத்திய தரை ஞாபகம் வந்தது. 
  3. முகவர் உரிமம் எடுப்பவர் டாஸ்மாக் பானம் அருந்திவிட்டு ஹாயாக டிவி பார்க்கிறார். அவருக்கு, ஒரு சிலிண்டருக்கு பதினைந்து ரூபாய் வந்துவிடுவதால் டெலிவரி ஆட்களுக்கு, இந்த சில்லறை தான் சம்பளமாம், பல இடங்களில். எனவே, முகவரிடம் புகார் அளிப்பது ஊழலை எதிர்த்து சோனியா, கருணா எல்லாம் அறிக்கை விடுவது போல ஆகிவிடும்.
  4. அதற்கும் மேலிடத்தைக் கண்டுபிடித்து, புகார் செய்து நடவடிக்கை எடுக்கக் கோரலாம் என்றால், இரண்டு விஷயங்கள் கவனிக்க வேண்டும். (முன்பொரு முறை, கோவை சென்று இரயில்வே நிலையத்தில் lift வேலை செய்யாமல் சிரமப்பட்டு, பல புகார்களும்  அனுப்பியிருந்தேன்.(http://erodenagaraj.blogspot.com/search/label/disability இந்த உறலியில் ஆறாவது பதிவு) இந்த விடுமுறையில் கோவை சென்று 20 நாட்கள் தங்கினேன். புதியதாகப் பல குப்பைகள் சேர்ந்துள்ளதைத் தவிர lift அப்படியே தான் இருக்கிறது. அது தானியங்கி. அதை நீங்களோ நானோ இயக்க முடியாது).
  5. வந்தவரே வருவதில்லை பெரும்பாலும். பணி இட மாற்றம் என்பது வேறு இடத்தில் ஊழல் செய்து கொள்ள அனுமதியே தவிர, தண்டனை அல்ல. மேலும், வேலையாட்களுக்கு இடையே உள்ள நல்லுணர்வு-தொடர்பு காரணமாக அடுத்த முறை சிலிண்டர் நம் வீட்டிற்கு வருவதற்கு முன்பு, இரண்டு நாட்கள் ஏதோவொரு டீக்கடையிலோ இட்லி-வடை சாப்பிடும் இடத்திலோ டயட் செய்துவிட்டே வரும்.
  6. ஏற்கனவே, இலவச கேஸ் அடுப்பு திட்டத்தில் அளிக்கப்பட்ட சிலிண்டர்கள் தீர்ந்ததும், அணுகவே முடியாத  அதன் விலையால், அதன் தலையில் தான் ஒரு பலகையைப் போட்டு அதில் இலவச டிவியை வைத்திருக்கிறார்கள். இவர்கள் மீண்டும் பதியாததால், வீடுகளிலேயே தேங்கிவிட்ட சிலிண்டர்களால் ஏற்கனவே கிளப்பிவிடப்பட்டுள்ள பற்றாக்குறை.
  7. பல வருடங்களுக்கு முன், செய்தித்தாள் போடும் முகவர் ஒவ்வொரு மாதமும் தினத்திற்கு தினம் வேறுபடும் அதன் விலையை யார் சரிபார்க்கப் போகிறார்கள் என்று, ஞாபகமாக round figure-ஆக இல்லாமல் பதினேழு நாற்பத்தைந்து, பதினெட்டு முப்பத்தைந்து என்று கூட்டிப் போடுவதை அப்பா letters to the editor-க்கு  எழுதிப்போட்டு, அதை ஹிந்து நாளிதழ் உறுதி செய்து கொண்டு, முகவரையே மாற்றியது. இங்கே அப்படி ஏதும்  நடந்தால், நம் முகவரியையே மாற்றிவிடுவார்கள்.
  8. கிஷ்மு ஒரு படத்தில், 'தொப்புளுக்கு மேல கஞ்சி' என்று வசதியானவர்களைச் சொல்லுவார். இப்போது தொப்புளுக்கு மேல் குடி. முன்பெல்லாம் தொழிலதிபர், முதலாளி, மாத வரும்படி, வாரச் சம்பளம், தினக்கூலி என்றிருந்த standard of living -ஐக் குறிப்பிடும் சொற்கள் தற்போது தினம் குடிப்பவர், வாரமிருமுறை, மாதம் ஒரு முறை, மனைவியில்லாத போதெல்லாம், புது ஜட்டி தொலைந்த ட்ரீட் என்று மாறிவிட்டிருக்கிறது. ஆகையால் பலருக்கும் மேலே எதாவது கிடைத்தால் பரவாயில்லை எனத் தோன்றுகிறது. பள்ளி நாட்களிலிருந்தே பதின்பருவத்தினரை இப்படியே பழக்குகின்றன அரசும் சினிமா போன்ற ஊடகங்களும்.
  9. உண்ணாவிரதம் இருக்கலாம் என்றால், ஒன்று, கௌரவமாக இருக்கும் என்னையும் ராம்தேவ் list-ல் சேர்த்து  விடுவார்கள் அல்லது கங்கைக்கரை போல, ஆனால், கூவக்கரையில் யாரும் கண்டு கொள்ளாமல் பத்தே நாட்களில் பரலோகம் வாய்த்துவிடும்.

அவன் எடுத்துக்கொண்டு போன அந்த பதிமூன்று ரூபாயைப் பெட்ரோல் விலையேற்றம் போல ஏற்றுக்கொண்டு, வேறு நடவடிக்கைகள் எடுக்காமல், பகிர்தலிலேயே திருப்தியடைந்து விடும் மனோநிலை வந்ததில் வருத்தமே எனினும்  பெரும்பாலான நண்பர்கள் 'திருந்தீட்டயா! இனிமே லைஃப்  ஸ்மூத்தா இருக்கும் பாரு' என்கிறார்கள். 

ஈரோடு நாகராஜ்.

Friday, June 3, 2011

அவலாஞ்சி ரோடு - 3

நல்ல பனிமூட்டம். ஐந்தரைக்கே நல்ல வெளிச்சம். 

பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனியே போல... Smog ஏதும் இல்லையென்றால் சட்டெனத் தெளியும் சாலைகள் கண்ட சென்னைக் கவிஞனின் மனதா அது. அல்லது, காலைச் சூரியனின் சாய்வான கதிர்களின் மெல்லிய தீற்றலுக்கே கரைந்து விடும் பனி அளவுக்குத்தான் பாவம் செய்யலாம் என்ற கட்டோ அனுமதியோவா? "சந்த்யாவந்தனம் பண்றபோது, காமம் தான் செய்தது; கோபமே செய்தது-ன்னு சொல்லத் தேவையில்லாத வாழ்க்கை வாழ்ந்துட்டா..." என்ற பெரியவாளின் குரல் கேட்டது. 

ஆதவன் என்ற பார்வை இருந்தது; உணர்வு இல்லை. 'நோக்கு' மட்டும் உண்டு, நேக்கு தெரியாதாக்கும் என்று எண்ணும்போதே, இதற்கே இப்படியென்றால் கயிலாயக் குளிருக்கு என் செய்வேன் ஈசனே! அதற்குத்தான் மயிலையே கயிலை என்று சமாதானமா என வலை பின்னியபடி வெளியே வந்தால், ஊரே அமைதியாய் இருந்தது. நாற்பதடி சரிவில் மஃப்ளரின் சந்துகளில் பெரிய மீசை காட்டிக்கொடுக்க சீரற்ற புற்களை சீவிக்கொண்டிருந்தார் மணி. இதே ஊரில் பழம் தின்று கொட்டை போட்ட பெருசுகள் வெறும் காலுடன் டீக்கடை பெஞ்சில் குறைவாகப் பேசினார்கள். அசட்டு தித்திப்பு என்பது போல, பரிதியே, முன்பனி போலத்தான் இருந்தது.

அதிகாலையில் எழுந்து சும்மா இருப்பவர்கள் குறைவு.  அசைவு தரும் வெப்பம் மிகமிகத் தேவையாயிருக்கும். விலங்குகளின் அதிகாலை அலைச்சல், துரத்தல், ஓடி ஓடி சூடான ரத்தம் பருகுதலுக்குக் கூட அதுவே காரணம் போலும்.  கிழச்சிங்கம், தானாக வந்து மாட்டிகொள்ளும் சிறு விலங்கைச் சாப்பிடுவது போல, மற்ற மூவரின் அனுசரணை மூவ்களில் வீல்ச்சேருக்கு ப்ரேக் போட்டுவிட்டு, Shuttle cock  விளையாடினேன். சர்வீஸ் போட்டால் அது சைடில் எங்கோ சென்றது. கையுடன் பேட்டின் நீளத்தையும் சேர்த்து புரிந்துகொள்ள சில நிமிடங்கள் ஆகியது. தாச-குமார்கள் இறகுப்பந்து-வலை மட்டை எனப் படிக்கவும் (வாசிக்கவும் என்று எழுதினால் மிருதங்கம் ஞாபகம் வருவதால் Backspace).

சுற்றிலும் பலவிதமான பூக்களை ஸ்ருதி,கிருத்திகா, ராகவ் சுட்டார்கள். 'ஏய்..ப்ளீஸ் நா எடுக்கரண்டி', என்று எந்த படத்துக்குமே இரண்டு காப்பி இருந்தது கேமராவுக்குள். மூன்று சூரியகாந்திகள், மூன்று மலைச் சரிவுகள், மூன்று பூச்சிகள் அதோடு ஒரு நேர் பார்வை என்று சுலபமாக நாலும் தெரிந்தவனானேன். 

சுத்துப்பட்டு பதினெட்டு பட்டியிலும் பஞ்சாயத்து பண்ண கொஞ்சம் கஷ்டம். பறந்து விரிந்து இல்லாமல் மரங்கள் எல்லாம் ஒல்லியாக (stomach fire)
உயரமாக இருந்தன. அவலாஞ்சி அணை செல்லலாம் என்று கிளம்பினோம். கொஞ்ச தூரத்தில் Good Shepperd School வெண்மையாய் பரந்திருந்தது. அதற்கப்பால் சரிந்து இறங்கிய சாலையில் கேரட் சுத்தம் செய்யும் சிறிய ஆலை. விலைக்குத் தருவார்களா என்று கேட்டதில், அதெல்லாம் வேண்டாம் என்று பை நிறையத் தந்தார்கள். உடைத்தால் சாறு தெறிக்கும் கேரட். அனேகமாக, நாம் அண்ணாச்சியிடம் வாங்கும் கேரட்டுகள் இங்கே மாடுகள் சாப்பிடும். வழியில் காலிஃப்ளவர் கோஸ் எல்லாம் பயிராகியிருந்தன. உருளைக்கிழங்கு இருந்தது. நீங்களே கூட எடுக்கலாம் என்று நிலக்கிழார் கூறியதும் குழந்தைகள் ஆரவாரமாய் மண் கொத்தினார்கள்.
பீட்ரூட்டும் வாங்கினோம். வழியெங்கும் நிறைய ஹட்டிகள். ஹட்டி என்றால் கிராமமாம் (hutty places are villages, you know!).

ஆடவர் சுய உதவிக் குழு என்ற அறிவிப்புப் பலகைகளை நிறைய பார்த்தேன். ஜெயமோகனை லீனா அழைப்பது போல MCP-யா அல்லது இங்கெல்லாம் மதுரையா தெரியவல்லை. வழியில் பார்த்த ஒரு ஊரின் பெயர் காந்தி கண்டி. 'ம்மவனே... காந்தி கண்டி மெய்யாலுமே இத்த பாக்கறாருன்னுவெய்யி..  இன்னாடா, இப்படிக்கா வந்தா, அதும் நம்ம பேர்ல கருணாநிதி ஜெயலலதா எல்லாம் இருக்க சொல்லோ, இப்டி ஒரு ஊரு கீது.. தோடான்னு பெஜாராயிட மாட்டாரு!' என்று இதைப் படிப்பதற்கு ஆகும் விநாடிகளை விட குறைவான நேரத்தில் ஒரு குரல் கேட்டது. வீடுகளில், நிறைய இடங்களில் சாலையின் மட்டத்தில் நம்மை வரவேற்பது பால்கனி அமைத்த ஒரு திறந்த வராண்டா. அதன் மறு மூலையில் படிகள் கீழிறங்கி வீடு, அதன் கீழே இன்னொரு வீடு, இங்கிருந்து பார்த்தால். கீழிருந்து பார்த்தால் ரெண்டு மாடி வீடு. அதன் மொட்டை மாடி, சாலையோடு!

எமரால்டைத் தாண்டும் போது, அணைக்குச் செல்லும் வழி ஒன்று வலதுபுறம் மேலே ஏறியது;ஏறினோம். மண் சாலையாகவே பல இடங்கள். மூடியிருந்தது. பக்கத்தில் ஒரு புல் வழி இறங்கியது. ஒரு டாட்டா வேன் மானுடத்தில் நம்பிக்கையை அதற்குள் இழந்துவிடாமல் அதன் தலையில் நிறைய bag-கள் வெறுமே கட்டிவைத்திருக்க, ஓரமாக நின்றிருந்தது. கீழேயும் யாரும் தென்படவில்லை. மேலிருந்தே எட்டிப் பார்த்துவிட்டுக் கிளம்பினோம். மிகக் கொஞ்சமே தண்ணீர். மலைச் சரிவுகள் நீர்நிலைகள் இரண்டும் குறைவற இருப்பதால் நிறைய நீர்த்தேக்கங்கள் ( kundhaa, gedhdhai, emarald, avalaanchi, glenmorgan, paikkaaraa, mukkuruththi, மாயார், upper bhavaani ...) கனடாவின் தொழில்நுட்ப உதவி நிறைய பங்காற்றியுள்ளது. கனடா நீர்த் தேக்கம் என்றே ஒரு அணை உள்ளது. 

அவலாஞ்சி பவர் ஹவுசுக்கு செல்லும் வழியில் ஒரு செக் போஸ்ட் இருந்தது. நல்ல காட்டு வழியாதலால் வனத் துறையினரின் அனுமதியின்றி செல்ல முடியாது என்றார்கள். சரி, நாளை அனுமதி பெற்று இதே வழியில் வருவோமென்று திரும்பினோம். ஏழு கிலோமீட்டர்கள் வந்த வழியிலேயே திரும்பினால் குந்தா செல்லும் சாலை. அது வழியே சுற்றிக்கொண்டு சென்றால் மஞ்சூர் வழியே Upper Bhavani செல்லலாம், அனுமதி வேண்டாம் என்றார்கள்.

Kundhaa, அதனருகில் இருக்கும் கெத்தே எல்லாம் 1960-70களில் மின்வாரியத்தில் என் தந்தை ஸ்ரீ.சுப்ரமணியன் பணிபுரிந்த (Head Clerk) இடங்கள். கெத்தே நான் பிறந்த ஊரும் கூட. குந்தா, சுற்றிலும் மலைகள் சூழ்ந்து நடுவே ஒரு அகன்ற பறக்கும் தட்டு இறங்கியது போன்ற பள்ள-சம வெளியில் இருந்தது. குறிஞ்சிக் காட்சிகளின் அழகில் ஆங்காங்கே நின்று ரசித்ததில், நேரம் ஆகிக்கொண்டிருந்தது. மலைகளின் வளைவுகளில் காரைச் செலுத்திப் பழகிவிட்டதால் அருண்குமார் i10 -ல் முன்னே சென்றான். மதிய உணவு, சைவர்களுக்குக் கஷ்டம். எல்லா இடங்களிலும் சைவ-அசைவ சிறு கடைகளே இருந்தன. கேரட், சாக்கலேட், பிஸ்கட் என்று காலந்தள்ளி வலது ஓரத்தில் குந்தா பவர் ஹவுசைப் பார்த்தபடி மெதுவே சென்றோம். 

ஓரிடத்தில் அருவி போல நீர் கொட்டியபடியிருக்க, அருகில் மரங்கள் சீராய் வெட்டி அடுக்கப்பட்டிருந்தன. iPhone அதன் சகல முனைகளிலும் வழுக்கியபடி இந்தப் பயணம் முடிவதற்குள் என் விரல்களுக்கிடையே நழுவிவிடுவதாய் பயங்காட்டிக்கொண்டே இருந்தது. 

"சித்தப்பா.. wooden logs அடுக்கி வெச்சிருக்கறதால யானை வரும் இங்கெல்லாம்".

"அப்பா சீக்கிரம் படம் எடுத்துண்டு உள்ள வா, ஃபோன் ஜாக்ரத.."

அங்கிருந்து ஊட்டி சாலையில் திரும்புவதற்கு முன், மஞ்சக்கொம்பை -> மூன்று கிலோமீட்டர் என்று அறிவிப்புப் பலகை சொல்லியது. நாகராஜா கோவிலும் அம்மன் கோவிலும் இருப்பதாக அம்மா சொல்லுவாள். சென்றோம். 

மஞ்சக்கம்பை என்று சில இடங்களில் உள்ளது. (மஞ்சு-மேகம்/கம்பை-மலைத்தொடர்).

ஒரு நீரோடை, அதற்கடுத்த பரந்த புல்வெளி மைதானம், பக்கவாட்டில் நாகராஜா கோவில், படிகளில் மேலேறினால் ஹெத்தே அம்மன் கோவில். வாழும் பாம்பு உண்டு. நாகராஜா கோவிலிலிருந்து அம்மன் சன்னதி வரை அது சுரங்கப்பாதை வைத்திருக்கிறது, குடி-புகை பழக்கம் இங்கு வழிபட்டால் போகும், இராமர் இலங்கையிலிருந்து இந்த வழியாக வந்தார் என்பவை தலப் பெருமைகள்.  

நான் காரின் உள்ளேயே இருந்தேன். சாலையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த முதியவர் பெருக்கி பெருக்கி, கூடைகளை நிரப்பிக்கொண்டிருந்தார். சாலை மேட்டில் இருந்து, யாரையோ பார்த்து இதோ வருகிறேன் என்று சொன்ன ஒரு மாது, சரிவில் இறங்கி, நீரோடை தாண்டி, புல்வெளி கடந்து, மறுபுறம் மேலேறி, மரங்களுக்கு இடையே மறைந்து போக பத்து நிமிஷம் ஆகியது. கூப்பிடு தூரம், ஒரே நிமிஷம் என்பதெல்லாம் பிரதேச வரைமுறைகளுக்கு உட்பட்டு மாறிக்கொண்டேயிருக்கும் அழகு.

அதே சமயம் உள்ளே, அம்மன் கோவிலில் சுமார் 75 வயதான சாமியாரை அண்ணா மன்னி குழந்தைகள் எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அவர் அங்கு வந்த ஒருவனை, "குடிக்காதன்னு சொன்னேன்ல.. மறுபடியும் குடிச்சா நான் கண்டுபிடிச்சிருவேன்" என்று சொல்லியபடி கன்னத்தில், அறையவில்லை, அடித்தார். தப்பு சாமியாம். ராகவைப் பார்த்ததும், பப்ளிமாஸ் என்று கூப்பிட்டார். குழந்தைகளை எல்லாம் நாளா படிக்கணும் என்று சொல்லி, கன்னத்தில் செல்லமாகத் தட்டினார். சன் டிவி நிஜம் நிகழ்ச்சியில் இவரைப் பார்த்திருக்கிறேன் என்று மன்னி சொன்னாள். சாலையின் மறுபுற மேட்டில் ஒரு மரம் டைனோசர் போல இருப்பதைக் காட்டி, படம் எடுத்து வரச்சொன்னேன். கிருத்திகாவும் ஸ்ருதியும் ஒருவரையொருவர் துரத்தியபடி ஓடினார்கள். 

நான் இங்கிருந்து நாகராஜா கோவிலைக் கூர்ந்து பார்க்க, இருட்டு மூலையிலிருந்து கற்பூர வெளிச்சத்துடன் ஒரு தட்டு ஏந்தி ஒரு கை மட்டும் வெளியே நீண்டது.. 


ragav -sruthi  

8.30am...

Add caption

rear view

on the right

on the left




cabbage






be a bee to be attaining what you wanna be 












TEA! two kinds of tea are there. vAyila pottukkaRadhu oNNu, kAdhula pOttukkaRadhu oNNu.



nal mEippar

maN moodiya carrot



veLiyErum azhukku neer

emerald dam

krithi looking for the roots

nAn thAn nAgarAjan, nee En koththaRa?




















manju kambe ne'erodai'

car-ilirundhu kOvil

kOvililirundhu me


kudikkAdhE.. enakku therinjudum...


avar inga dhAn poRandhArnA, inga koottikittu vandhirukkalAmE, andhak kaarlayaa irukkaaru?


thee midhi uNdu

aruirundhu aruN eduththadu. not visible from my view

yEi.. mEla irukkudi dinosaur tree...




modhalla mAdikku vAnga!