Friday, August 20, 2010

நமக்கு மட்டும்...




மாலை நேரமும்
மழை பெய்யும் சாரலும்,
விரலோடு விரல் கூடி,
முணுமுணுத்த
வரிகளும்...

பின்னாலிருக்கும் நீ
தான் காரணம்...

போகும்போது வேகமாய்ச் செல்வதற்கும்
திரும்புகையில்
சக்கரங்கள்...
தயங்குதற்கும்.

சீறலாய் விழுந்திட்ட
தூறலின் துளிகளால்
ஈரமாய்ச் சுட்டவை
இரு உதடுகள் மட்டுமா - உன்
இதழ் பட்டுச் சிலிர்த்த
என் காதோரங்கள் கூடத்தான்.

முணுமுணுப்புகள் பேசிடவா
முதுகினிலே சாய்ந்திட்டாய்!
சாய்த்திட்ட பாரங்களால்
சடங்குகளை சாதல் செய்தாய்!!

வேகமெடுத்த மழைத் துளிகள் - காதல்
மேகம் தொடுத்த கழை கனிகள்
தேகமெடுத்த நாள் முதலாய்
தேடாததைக் கண்டுகொண்டேன்.

கூடலினால் கொண்டதினால்
வாழ்க்கை ஒரு கூடு,
கூடென்பது சீசா - எண்ணிடப்
புரிகின்றது லேசா.

ஒரு புறம் தாழ்ந்திடின்
மறு புறம் உயரும்; 
உயரங்கள் கண்டதினால்
காண்பவைகள் மாறும்.

மழைத் துளிகள் தாழ்ந்ததினால்
மதக்காதல் பறக்குதடி
மதி மயக்கம் தீர்ந்த பின்னும்
மனம் அங்கே நிற்குமடி.

நகரங்கள் தொட்டதும் உன்
சிகரங்கள் விலக்கிக் கொண்டாய்
நண்பர்கள் பார்ப்பரென்று
நடு வழியில் இறங்கிவிட்டாய்

நன்றாக எரிந்திருந்தும்
நஞ்சானதடி தெரு விளக்கு...
நமை யாரும் காணாத
நாள் என்று?
சொல்லெனக்கு.

தவறவிட்ட முத்தத்தால்
தணலானது நம் மனது
தர மறந்த தருணங்களால்
தரையிறங்கா தவிப்பு அது.

மாலை நேரமும்
மழை பெய்த சாரலும்
காலங்கள் கடந்தும்
காதலைச் சொல்லுமடி...

இருந்தும்,
கடந்து போன காதல்களை விடவும்

இறந்தும்,
முடமாகவும் போய்
இருண்டு போன
இன்னுயிர்களே நினைவிலுள்ளது,

மாமல்லபுரத்துச் சாலைகளுக்கு.

2 comments:

  1. சீக்கிரமாய்க் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க! எத்தனை நாட்கள் இப்படி ஒளிஞ்சு இருந்து பார்த்துக்கறது நடக்கும்?? :))))))))))))))

    ReplyDelete
  2. ஏதோ கொஞ்சம் புரிகிறமாதிரி இருக்கு. ஒருவேளை எனக்கு வயதாகிவிட்டதால் புரியவில்லையோ என்றும் தோன்றுகிறது! கீதா அவர்கள் சொன்னதை வழி மொழிகின்றேன்.

    ReplyDelete