Sunday, February 7, 2010

பத்மவிபூஷன்

சிவராமன் சாருக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்ட போது, நாகர்கோயிலில் இருந்தேன். மனோ வேகத்தில் உடனே அவரைக் காண வேண்டி  இரந்தது உள்ளம். அடுத்த நாள் காலை பத்து மணி வரை தவிப்பும் ஆனந்தமும் கூடிய நிலையிலேயே இருந்தது மனது. 

இது, புதியதாய் எழுதியது அல்ல, எனினும் இதோ..குரு வணக்கம் - 2 


முழவுக்கலையின் முதன்மை வேந்தன்-எம்

முன்னோர்கள் முன் செய்த

முற்றிய தவப் பயன்.

முகந்தனில் மலர்ந்த முறுவல் மாறாது

மூவகைக் காலமும் ஐவகை ஜாதியில்

கைவகை ஜாலம் களிநடம் புரிபவன்.

சூர்யனின் கிரணங்கள் சூக்ஷ்மமாய் படர்ந்து

சுரங்களாய்த் தழுவியதில் சூல் கொண்ட ஸாகரம்....

பெருகவே கருக்கொண்டு

பருகவே யிசைதந்து (வேயிசை)

உருகவே யாழ்த்திய (யாழ்)

உமையாள்புரக் கார்முகில்.

என்றுமிரு தங்கமென ( மிரு தங்கமென )

குன்றா சுரங்கமாய்

கன்றுக்குத் தாதியாய்

ஞானத்திற்காதியாய் (‘தா’ ‘தி’ – ‘ஆதி’)

ஸ்வாச லயம் ஓங்கிட – தகப்பன் (‘கிட – தக’)

ஈசனருள் தேங்கிட - துதித்து

தாள நயம் எங்கும் கிடந்திட (எங்“கும்கி”டந்திட)

தன்னிரகற்றுத் தாரகை போலே

உச்சத்தில் உறைகின்ற

ஆகாசா.... புதினம் புரிவாய்...

[ஆகா, சாபு தினம் (தி–நம்)புரிவாய்]

புதிதாய்ச் செய்வாய்..

அறிதலாங்கு அளித்தென்னை (தளாங்,கு)

தெரிதலுக்குள் தள்ளிடுவாய்....


முப்புரம் எரித்திட்ட முக்கண்ணன் - அவனின்

மைந்தருள் கொம்பன்; முருகனின் அண்ணன்

முழு முதல் நாயகன் - மூஷிக விநாயகன்

திருவடி முகிழ்ந்து திறம்படத் திகழ்பவன்

திரையிலும் தோன்றியே

திசைகளை வென்றவன்.
(மிருதங்கச் சக்ரவர்த்தி)

குருவாய் வந்தெனை லகுவாய்த் தேற்றினாய்

(குரு, லகு திருததம், மாத்திரை)

திருத்தம் செய்தென்னுள் திரிபினைச் சேர்த்தாய்.  

(திரிபு - permutation; சேர்வு - combination)

மனதினை மறைத்திட்ட மாத்திரை நீக்கி

நியதியால் எந்தன் மார்க்கம் மலர்த்தினாய்.

(மாத்திரை, யதி, மார்க்கம்)


சித்தி அடைந்தோரே கலைஞராயாவர் – தம்
(ஆவர் – தம்]

சித்தியால் சொல்லினை சிறப்பிக்க வைப்பர்.

அடைதல் என்பதே அகண்டதோர் வேதம்

அதற்காக பாதம் - நடைகள் பல காதம்....
(காக பாதம், நடை, கதி)

கதியெனப் பணிந்தேன்; அதுவே போதும்.


சிவராமன் சார் குறித்த நினைவுகளின் தாக்கமாய் 9.8.07 அன்று எழுதியது.

ஈரோடு நாகராஜன்,
சென்னை – 33

********************************************************

குரு வணக்கம் –1

நான்மறை நினைத்துத் தெளியும் மனம் போல;

ஞானியரை நனைத்தே தெளிந்திடும் கங்கையென,

நானிலமனைத்தும் மேவிடும் நாதமே!

நாதப் ப்ரவாஹமே - உனை

நாடியே வந்திடும்

விருதுகள்,

தந்திடும் ஏற்றம்

தமக்குத் தாமே!

நீ - உமையாள்புரம்;

உன் விழுதுகள் பூச்சரம்.

வாடாவென்னுமுன் வாஞ்சையால் இன்புறும்

"வாடா" மலர்கள் பற்றிடும் நின் கரம்.       

குவலயம் அதனருந் தவலயம் - லாவண்ய

லயமிதே நான் கொண்ட நவமன ஆலயம்.

நித்தமும் நீ தொழும் நிறைகுணவைங்கரம்

நினைந்தே பணிந்தேன்,

நிதமதே என்னறம்.
    

(20.3.2003 அன்று, சிவரமான் சாருக்கு பத்மபூஷன் வழங்கப்போகும் செய்தி அறிந்ததும்...)[விழுது – his art]

[மலர் – disciple]

[லாவண்ய லய- laya lAvaNyA –his foundation]


Saturday, February 6, 2010

நைஜீரியா - 4


சீக்கிரம் வேலைகளை முடித்துக்கொண்டு இன்று நைஜீரியா-4 -ஐ முடித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நாலு மணிக்கு தொலைபேசியில் நல்ல புகைப்படம் வேண்டும் வெள்ளை பின்புலம் இருத்தல் நலம் என்று தகவல் வந்தது. தகவல் என்று தட்டியதும், இன்று வெள்ளிக்கிழமை; பெரியவா சொன்னது போல் விநாயகர் அகவல் சொல்லவிலையே என்று ஞாபகம் வருகிறது. ஒரு ஐந்து நிமிடம் இருங்கள்...

------------------------------------------


நன்றி.

கிருஷ்ணாவிற்கு தொலைபேசி, அவன் வந்ததும் முயன்றதில் (மனதில் தான் எப்பேர்ப்பட்ட தில்), சற்று காமெடியாக இருந்தன படங்கள். குட்டி சிஷ்யன் பிரணவ் குறுக்கும் நெடுக்கும் நடந்ததில் சுவற்றில் கட்டியிருந்த வேஷ்டி விழுந்துவிடும் போல இருந்தது.

அவிழ்ந்தால் எப்போதும்
கவலை தான், எங்கிருந்தாலும்
வேஷ்டி.

சிறிய அறைகளில் படம் எடுக்கும்பொழுது, கண்களால் லென்சை நேர் பார்வை பார்த்தால், இரண்டில் அரை  குறையும். அதைத் தவிர்க்க வேறு இடங்களைப் பார்த்தபடி எடுத்த படங்கள் நன்றாயில்லை. இதற்கிடையில், ஏழு மணி net -class -க்கு வைத்திருந்த reminder இடையிடையே குரல் கொடுக்க, ஒவ்வொருமுறையும் படத்தின் குறுக்கே ப்ரணவின் நீட்டிய கையும் அதில் பற்றியிருந்த அலைபேசியும் தெரிந்தது!

ஏழு மணிக்கு, ஃபிரான்ஸ் மகேன் தேவராஜனுக்கு ஸ்கைப்பில் ஹாய் சொல்லியதும் மின்சாரம் நின்று போய், எட்டரை மணிக்குத்தான் வந்தது. இன்று எழுத இயலாது என்று நினைத்தபடி, அயோத்யா மண்டபம் வரை சென்றபோது, சூர்யப்ரகாஷ் கச்சேரியில், ஸ்ரீமுஷ்ணம் ராஜ ராவ் மாமா தனி வாசித்துக் கொண்டிருந்தார். பக்கத்து கடையில் ஆனந்த விகடன் வாங்கியதும், எழுதத் தோன்றி விட்டது. இரண்டு சேனல்களிடையே முரண்பாடு வரும், ஆச்சிரியமில்லை. நான் கூட (96 -97 வருடங்களில்) சன் டிவியின் midnight   மசாலாவில் மட்டும் வரும் பாடல்களை, ராஜ் டிவியில் பகல் வேளைகளில் பார்த்திருக்கிறேன்!! ஆனால், விகடனின்  கடைசிப் பக்க கிசு கிசுவில் சானியாவின் திருமணம் நடைபெறாததின் காரணம், ஒரு(?) நடிகருடன் காதல் என்று போட்டுவிட்டு, உள்ளே inbox செய்திகளில் கல்யாணத்திற்குப் பிறகு டென்னிஸ் விளையாடத் தடை என்று சானியாவின் would be மாமனார் சொன்னது தான் காரணம் என்று எழுதியிருந்தார்கள்!

உபகதைகள் போதும்.அந்த ஞாயிறு பரபரப்புகள் ஏதுமின்றி, சாதரணமாய் புலர்ந்தது. சென்னையில் இருந்திருந்தால் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை சீக்கிரமே ம்யூசிக் அகாடமியில் class எடுக்கச்  சென்றுவிடுவேன். அன்றைக்கு மதியம் அவியல் செய்வாள் ஆலிஸ் என்று சிவராமன் கூறினார். முன்தினமே அதற்குண்டான காய்கறிகள் வாங்கியிருந்தார். நம் மொழி தவிர அனைத்தும் அந்த வேலையாட்களுக்குத் தெரியும் என்றார்.   

Bankers Hall செல்லும் வழியில் சிக்னலில் எல்லாம் ஏதேனும் விற்றுக்கொண்டிருந்தார்கள். வாழைப் பழம், செய்தித் தாள்... ஏதாவது. "வாட்ச் எல்லாம் விப்பான், முன்னூறு ரூபாய்க்கு பாக்க நன்னாயிருக்கும், அதிஷ்டம் இருந்தா, ரெண்டு வருஷம் கூட ஓடும் இல்லாட்டி 5 ,6 மாசம்" என்று மணி சொல்லியிருந்தார்.

இரண்டு பேர் சக்கரம் வைத்த பலகையில் அமர்ந்து பிச்சை கேட்டபடியிருந்தார்கள். பெட்ரோல் பங்க்குகள் அனைத்திலும் பெரிய க்யூ இருந்தது. "இங்கயே பெட்ரோல் எடுக்கறா... இருபத்திரண்டு ரூபா தான்...
வெலை ஏத்தணும்னு பாக்கறான்... ஜனங்க விடமாட்டா.... அதனால, செயற்கையா ஒரு டிமாண்ட் க்ரியேட் பண்ணி, பெட்ரோல் வாங்கறது பெரிய பாடு.. க்யூல நிக்கணும், எங்க போனாலும் லேட் ஆகறது, அளவா தான் தரான்னு ஜனங்க ஸ்ரமப்பட்டுட்டா, வெலைய ஏத்திவுட்டுட்டு தாராளமா பெட்ரோலக்  குடுத்தா, இப்போ நிம்மதியா இருக்குன்னு வாய மூடிண்டு வாங்கீண்டு போவான்.. அதான் இப்படி..."

நிறைய கூட்டமிருந்தது. நீளமான வரிசைகள். ஒருவர் செய்தால் போதுமென்ற வேலையில் இருவர் அல்லது மூவர்.  ஒழுங்கற்ற ஒரு பெருங்கூட்டமும் முறையற்ற ஆட்சியும்...  "Building a stronger Nigeria..." என்று எழுதியிருந்த ஒரு பஸ் கடந்து போனது.

ஹால் நிறைந்த இரசிகர்கள். அமெரிக்கா போல் அடிக்கடி கச்சேரிகள் நடைபெறாததால், ஒவ்வொருவர் மனத்திலும் தனக்குப் பிடித்த ஒரு பாடலாவது இருக்கவேண்டும் என்ற தவிப்பு, என் மொழியில் ஏதுமுண்டா என்ற எதிர்பார்ப்பு,தென்னிந்திய முகங்களின் நடுவே, ஆங்காங்கே தெரிந்த வட இந்தியர்கள், சில நைஜீரியர்கள் என அனைவருக்கும் பிடித்தமானதாய் ஆனது மூன்றே கால் மணி நேரம் நடந்த அக்கச்சேரி. காகிதம் இல்லாததால், தான் விருப்பப் பாடலை செல்ஃபோனில் மெசேஜ் பகுதியில் எழுதி அதை ஒருவரிடம் கொடுத்து, எங்களிடம் காண்பிக்கச் சொன்னார் ஒரு ரசிகர், "ஸ்ஸாமஜ வர கமனா..."

 


அங்கிருந்து கம்பர்லேண்ட் என்ற உணவு விடுதியில் மிகுந்த கொட்டமடித்தோம். ஜோக்குகள் உணவு மேஜையின் இருமருங்கும் ஓடின. எங்களை அழைத்திருந்த ஃபைன் ஆர்ட்ஸின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் ஆளுக்கொரு பாட்டை பாட வேண்டும் என்று விளையாடினோம்.  காலங்களில் அவள் வசந்தம் பாடினார் சிவஸ்வாமி. அந்த சந்திப்பில், அவர்களுக்கே தெரியாமல் பல உறவுகள் இருந்தன. நெல்லை மண், ஒரே பள்ளி, தூரத்து உறவு, ஒரே கல்லூரி-விருப்பப் பாடம் என்று அங்கே ஒரு இனிய சங்கமம் நடந்தது. அங்கே இருந்தபடி, இத்தனை நாட்கள் தெரியவில்லையே என்று ஆச்சிரியம் கொண்டபடி, இன்னும் நெருங்கியவர்களாய் ஆனார்கள். சீதாராமன் சாரிடம் சென்னையில் CA படித்த  கதைகள் ஆனந்தமாய் விவாதிக்கப்பட்டன. இராஜாராமனும் சிவாவும் பஜனை சம்ப்ரதாயத்திலிருந்து இரு உருப்படிகள் பாடினர். பூர்ணஸ்ரீ, மோகன கல்யாணி தில்லானாவை கொஞ்சம் ஆடி காட்டினார்.

"நீங்க இந்த டிசம்பர் 22 அடையார் ஹம்சத்வநில ஷங்கர் ரமணிக்கு வாசிச்சேளா...  என் பையன் விக்னேஷ் சொல்லீண்டே இருந்தான், இந்த அங்க்கிள நாம பாத்திருக்கோம்னு... அப்புறம் சொன்னான், அங்க பார்த்தோம்னு... அன்னிக்கு, உங்க கச்சேரிக்கு அப்புறம் என்னோட டான்ஸ் தான் இருந்தது. அப்புறம் தான் எனக்கும் ஞாபகம் வந்துது. நான் ஷங்கரோட sister -in -law..."


Fanta-வையும் Sprite-ஐயும் கலந்து வெள்ளரித் துண்டும் எலுமிச்சையும் சேர்த்து, chapman என்று ஒரு நைஜீரியக் கோக் அருந்தினோம். பயப்படாமல் குடிக்கலாம், ஆல்கஹால் ஏதும் இல்லை என்று சொன்னார்கள். இரண்டு வாய் அருந்தியதும் ஒரு சுறுசுறுப்பு ஏற்பட்டது. இங்கே, வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.  திங்களன்று மதியம் விடைபெறும்போது வருத்தமாயிருந்தது. நரேன் வழியனுப்பி வைத்தார். எல்லோரும் ஃபோனில் பேசினார்கள்.

மீண்டுமொரு நீண்ட பயணத்திற்கு பின் சென்னை வந்தடைந்து, உடனே நாகர்கோவில் அருகே பூதப்பாண்டியில் இரண்டு நாட்கள் கச்சேரி முடித்து, இப்போது Back To Routine, ஆஃப்ரிக்கா என்ற தேசத்தின் எல்லா இடங்களையும் பார்க்க வேண்டுமென்ற ஆவலுடன்.

Friday, February 5, 2010

நைஜீரியா - 3

ஆலிசையும் கம்ஃபோர்ட்டையும், புகைப்படம் எடுத்துக்கொள்ளட்டுமா என்றதும் மிகவும் வெட்கப்பட்டார்கள். அருகில் உள்ள வீட்டில் வேலை செய்பவள், கிணற்றை பார்த்த குழந்தை போல பால்கனியிலிருந்து கீழே துப்பினாள். கிராமப் பழக்கம் என்று நினைத்தேன்; ஆனால், மறுநாள் ஒரு கம்பெனி எக்சிக்யூடிவ் போலிருந்தவளும்  நடந்து கொண்டே உமிழ்ந்தாள். ஆண்கள் தெருவில் சுவரோரம் சிறுநீர் கழிப்பதும் நடந்தது. அதிலும் சிலர் சுவற்றைப் பார்க்காமல் சாலையின் பக்கமாகவே திரும்பி.... கவைப்படாமல் காரியம் செய்தனர். சென்னையின் மக்கள் பரவாயில்லை. 

தெருவோரம் ஒரு டயர் மேல் அமர்ந்து முடி வெட்டுதலும் பார்த்தேன். வண்ணங்களைக் கொண்டாடுவதைப் போலவே, கருப்பின் மீதுள்ள வெறுப்பினாலோ என்னமோ, முடியைப் பாடு படுத்திக்கொண்டிருந்தனர். 
  


 மறுநாள் எல்லோரும் அங்கிருக்கும் ஷீரடி கோவிலுக்குச் சென்றனர். நான் காலடி எண்ணிக் களிப்புறுபவன் என்பதால் வாழ்க சீரடியாரெல்லாம் என்று இருந்துவிட்டேன். வீல் சேர் வராதது ஒரு காரணம். ஆலிஸ், குழந்தைகள் படிக்கின்றன, நான் பள்ளிக் கல்வி கற்றேன் என்றாள். ரெகே ம்யூசிக் தான் அவர்களின் இசை என்றாள். எனக்கு பாடிக்காட்டுகிறாயா என்றதும் முகம் சிவந்தாள். வீல் சேர் பதினொரு மணிக்கு மேல் வந்தது. அதற்குள் கோவிலில் இருந்து அனைவரும் திரும்பியிருந்தார்கள். அங்கிருந்து கிளம்பிச் சென்று அவ்வூரின் அடையாளமாக (yoruba) mask வாங்கிவரலாம் என்று கிளம்பினோம்.


 வாழ்க சீர் அடியார் என்று, ஆறிரு தடந்தோள் நினைவில் ஆடியதும் சந்தித்த வேல், இம்மானுவேல். அவர்தான் pajero -வை ஓட்டினார். அதன் இருக்கைகள் மிக உயரத்தில் இருந்தன, எப்படி ஏறப்போகிறோம் என்றும் மலைத்தேன். "எம்மானுவல்.... ஹெல்ப் மாஸ்டர்..." என்று சிவராமன் மாமாவின் குரல் கேட்ட அடுத்த நொடி, பலமான இரு கைகள் என் இடையைப் பற்றி, இருக்கையில் அமர்வித்தன. வழியில் சிவராமன், "இம்மானுவேலுக்கு எத்தன wife, எவ்ளோ குழந்தைன்னு கேளுங்கோ..." என்றார். பெருமிதம் கலந்த வெட்கச் சிரிப்புடன், "தெரியவில்லை..." என்று driver seat-லிருந்து அடிக்குரலில் பதில் வந்தது.

"இங்க, EKO -ன்னு ஹோட்டல் இருக்கு, அது உள்ளேயே shops இருக்கு... நாம mask எல்லாம் வாங்கீடலாம்... முந்தா நாள் நல்ல மழை பேஞ்சு, லேக்கி மார்கெட் எல்லாம் சொத சொதன்னு இருக்கும்... சின்ன சந்து மாதிரி தான் இருக்கும், போறதுக்கு. அப்புறம், முத்து-பவழம் எல்லாம் இங்க பிரசித்தம்... நம்ப அபார்ட்மென்ட் மாடில தான் சிங்கர் சித்ராவோட ப்ரதர் இருக்கார். போன வருஷம் சித்ராவ இன்வைட் பண்ணீருந்தோம். நல்ல கூட்டம், ரொம்ப நன்னா பாடினா.. அடுத்த நாள், ஹரிஹரன் ப்ரோக்ராம் வேற இருந்துது...சித்ராக்கு, இந்த ஊர் முத்து ரொம்பப் பிடிக்கும்.. கிலோ கணக்குல தான் வாங்குவா... எங்க மேலயெல்லாம் ரொம்ப ப்ரியம்... என்னோட பொண்ணு மாதிரி தான் அவள்..." என்றார் ஆங்கிலத்தில். அவருக்கு ஊர் திருவனந்தபுரம். மலையாளமும் ஆங்கிலமும் நன்றாக வரும், not much thamizh என்றார்.

  
ஹோட்டலின் கார் பார்க் அருகே, கடைகள் இருந்தன. இந்திய முகங்களைப் பார்த்ததும், "நமாஸ்தீ... நமாஸ்தீ... welcome sir... good morning... how was your stay..." என்று எளிதில் நெருங்கும் வியாபார முயற்சிகள் இன்முகங்களாய், குரல்களாய் வரவேற்றன. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஒரு கடையில் சிறியதாய் நான்கு முகமூடிகள் வாங்கினோம். இன்னொரு கடைக்காரர்,  no buy .. no photos... என்றார்.  ஹாய்... என்ற குரல் கேட்டது. இவள் ஒரு மிஸ் நைஜீரியா, என்று அறிமுகப்படுத்தினார் சிவராமன். 
 


ஏதோ ஜயித்துப் பெற்ற trophy போல, முகமுடிகளைக் கையில் ஏந்தி, அங்கிருந்த மரத்தடியில் படமெடுத்துக்கொண்டோம். அந்த மரம், தூசி தட்டும் கருவிகளைச் செருகி வைத்த stand போல இருந்தது. 


"நேரே வீட்டுக்குப் போகலாம்... அங்கே ஹாஜியை வரச் சொல்லியிருக்கிறேன்.. ஹாஜி யாரு தெரியுமோ? முத்து வியாபாரி..." என்றார் சிவராமன். Black pearls,coral, dull finish என்று முத்து மாலைகள் இறைந்து கிடந்தன ஹாஜியின் பையில். தரமான முத்துகள். சிறியதாய் சில மாலைகள் வாங்கினேன். அவைகள் என் பரிசாக இருக்கட்டும் என்றார் சிவராமன்.  

 
மதிய உணவை முடித்து சற்று கண்ணயர்வதற்குள், அங்கே இருந்த ஐயப்பன் கோவிலுக்குச் கிளம்பும் சமயம் ஆனது. கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நம்பூதிரியின் பூஜையும் அன்பர்கள் பஜனையுமாக அந்தக் கோவில் உள்ளே நுழைந்ததும் KK நகர் போல இருந்தது. நடந்துகொண்டிருந்த பஜனையில் தமிழ் பாடல்கள் பாடிக்கொண்டிருக்க, ஒரு ஆப்ரிக்கர் டோல்கி வாசித்துக் கொண்டிருந்தார். அது நிறைந்ததும், ஒரு அரை மணி நேரம் பாடினோம். ஒரு வெங்கடாசலபதி சந்நிதி, அதன் எதிரே கூப்பிய கரங்களுடன் சிவந்த ஆஞ்சநேயர். அருகில் பிள்ளையார் - முருகன், நடுவில் ஐயப்பன் அதற்கடுத்து தனி ஹாலில் சகல சிலைகளும். அங்கு தான் மங்கள ஆரத்தி நடந்தது. மரத்தடியில் ஒரு சிவன் தவித்துக் கொண்டிருந்தார். 

 

 


இரா.கணபதி ஒரு முறை மஹா பெரியவாளிடம் (அவர் வார்த்தைகளிலேயே...),

//....தவிக்க என்ற வார்த்தையை பெரியவாள் சொல்லக்கேட்டதும், அது பற்றி என் கண்டுபிடிப்பைச் சொல்ல வேண்டுமென்று தவிப்பு ஏற்பட்டது. அதைப் பறிந்து கொண்ட சைகாலஜிஸ்ட், "என்னமாவது சொல்லணுமா" என்றார்.


"தவிக்கிறது-ன்ன தவம் செய்யறதுன்னு அர்த்தமோன்னு தோணறது. ஜபம் பண்றது ஜபிக்கறது; அதே மாதிரி தவம் பண்றது தவிக்கிரதுன்னு இருக்குமோன்னு.."


"ஸரியாத்தான் படறது... ஆனா, 'தபஸ்' னா நேர் அர்த்தம் சூட்டுல வறுத்தி எடுக்கறதுதான். ஒரே சிந்தனையா இறுக்கினா அப்படித்தான் ஒரு சூடு பொறக்கும். அப்போ, மனஸ் அசையாம நிக்கறதுதான் தபோ நிஷ்டை. 'தவிக்கறது' - ங்கறச்சையோ, மனஸ் நெலை கொள்ளாம இருக்கும். நெல கொள்ளாம தவிச்சேன்னு சொல்றோமோன்னோ? இப்படி மனஸ் நெலை கொள்ளாட்டாலும் ஏதோ ஒரு விஷயத்துலேயே அது உள்ளூர ஒரே ஈடுபாடா இருக்கறதாலேதான் அதை அடையறதுக்காக நெலை கொள்ளாம ஓடறது. ஆகையினாலே, ஒன் (சிரித்து) நூதன வியாக்யானமும் ஒரு தினுசுலே ஸரிதான்."//


அன்றிரவு சிவாவின் வீட்டில் விருந்து. மினி பீட்சா, கராபரா என்று களை கட்டியது.  நரேன், நான், கோவை சந்திரன், சிவா, பவதாரிணி, விக்னேஷ், சிவராமன், பூர்ணஸ்ரீ எல்லோரும் பேசி மகிழ்ந்தோம். 


அடுத்த நாள் Bankers Hall -ல் கச்சேரி.