Wednesday, November 25, 2009

தாதரும் மும்பை மயிலும்... 3

நீண்ட பயணங்களின் வெறுமை எல்லோருக்கும் பொதுவானது தான். அதை எப்படி எதிர்கொள்வது என்பதில் தான் மனிதர்கள் ஸ்வாரஸ்யமானவர்களாகி விடுகிறார்கள்.


நிற்கின்ற ஊரிலெல்லாம் விற்கின்றவரைத் தேடும் கண்கள்,  கைபேசியிலோ கணினியிலோ தங்களைத் தொலைக்க முயன்று, அந்த எட்டு பேரில் யாரைப் பார்த்துச் சிரிப்பது என்று யோசித்தே ஒரு பகலைக் கடக்க முயல்பவர்கள், பேப்பரோ புத்தகமோ தாங்களாகவே தந்து, தன்னைக் கவர்ந்த செய்தியைப் பேசி-விவாதிப்பவர்கள், குழந்தைகளைப் பார்த்துச் சிரித்து நட்புகொள்ள ஆரம்பித்து, பின் திரும்பி உட்கார்ந்து உண்பவர்கள், மேல் படுக்கையை விட்டு இறங்காது தன்னைத் தானே சந்தோஷப்படுத்திக்கொள்ள முயலுபவர்கள், மேல் படுக்கையில் படுத்தபடி, பாதைப் பக்கம் தலை வைத்து வருவோர் போவோரை ஆராய்பவர்கள், துக்கச் செய்தி கேட்டு மனம் முன்பே இடம் சென்று சேர்ந்திருக்க, உடல் தாமதமாய்ச் செல்லும் வலியில் இருப்பவர்கள், எந்த ஊரில் நின்றாலும் இறங்கி நிற்கும் மண்-காதலர்கள், சஹ  பயணியைத் தாற்காலிகமாகக் காதலிப்பவர்கள், இறங்க வேண்டிய ஊருக்கு வெகு நேரம் முன்பே பரபரப்பவர்கள், இப்படி எல்லாம் வலைப் பக்கங்களில் எழுதவேண்டி யோசித்தே, பொழுதைக் கழிப்பவர்கள் என்று எத்தனையோ எண்ணக்குவியல்கள், கற்பிதங்கள் வண்ணமிகு ஆடைகளுக்குள் உடல்களை மறைத்து விட்டு வேறு பெயர்களில் பயணச்சீட்டையே ஆவணமாய் வைத்துக்கொண்டு அந்த நேரத்து சொந்த இடத்தை ஆணவமாய் ஆக்ரமிக்கும் பயணங்கள்...


பகலில் உட்கார்ந்துகொண்டே தூங்கினேன். வந்த வழி ஞாபகமிருந்தது. துங்கபத்ரா சொத்துக் கணக்கைக் காட்டி விட்ட நீதிபதி போல் பல இடங்களில் பாறைகளாய்த் தெரிந்தது. மறைபொருள் காட்டுவதுதானே மந்த்ராலயம்... (அப்போ, வெள்ளமா தண்ணி ஒடீண்டிருந்தா என்ன சொல்லுவே? ஏதாவது சொல்லவேண்டியது தான், ஞானம் தளும்பி வழியறது பார், இங்க வந்தவாளோட மனசு மாதிரியே நிறைஞ்சு இருக்கு பார்னு எதாவது...) 


கடலை விற்கும் பையன்கள் எவ்வளவு வியாபாரம் ஆகியிருக்கிறதென்று  நான்கு பேராய் உட்கார்ந்து பணத்தை எண்ணினார்கள்... பெரியவனாய் இருந்த, பானையில்-லஸ்ஸி விற்பவன் பர்சில் ஆதர்ச நடிகனின் படத்தை வைத்திருந்தான். சைடு பெர்த் முதியவர் யாரென்று கேட்டதும், தலைவனைப் பற்றி கேள்வி வந்த மகிழ்ச்சியில், ஜூனியர் என்.டி.ஆர்.என்று பெருமையுடன் அந்தப் படத்தை இன்னொருமுறை பார்த்தான். ஒரு நாள் வியாபாரத்திற்கான முதலீட்டையே அபிமான நடிகனின்  ஒரு படத்தைப் பார்க்க செலவு செய்யும் பெருமிதம் தெரிந்தது.


கட்சி நிதி என்று ஏழையாய் இருக்கும் தொண்டனிடம் கூட, பணம் இல்லாட்டி என்னப்பா... அந்த வாட்சைக் குடேன் என்று, ஒன்றியமோ வட்டமோ கேட்க, தானைத் தலைவரின் உரை கேட்டு உணர்ச்சி வசப்பட்ட, சலவை கசங்கு முன் கையிலிருப்பதைக் கழட்டிக் கொடுத்தவரை என் பதின் பருவ ஆரம்பங்களிலேயே பார்த்திருக்கிறேன். "அடாது மழை பெய்தாலும் விடாது குவிகிறது கழக நிதி" என்று தூண்டில் போட்டதில், அன்று விற்ற பூக்காசை அப்படியே தொலைத்துவிட்டு, அடுத்த நாள் பெருமிதமாய் அந்தப் பேச்சின் கேசட்டை எனக்குப் போட்டுக் காட்டிய பூக்கடை பாய்க்கு நான்கு குழந்தைகள். பத்து வயதான பையன் நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டே இருப்பான்; அவனுக்கு உடலின் சமநிலையில் ஏதோ குறைவிருந்தது. அதற்கு வைத்தியம் பார்த்திருக்கலாம். இரண்டு பெண் குழந்தைகள் வேறு.



யுவதிகளிடம் யாரவது உன்னை எங்காவது இடித்து விடுவான் என்று கூறியே அணைத்துக் கொண்டு "பாதுகாப்பளிக்கும்" கிழவர்கள் போல, இல்லாதவர்கள்,   இல்(ill-குடும்ப)-ஆதவனை(சூரியனை) காலகாலமாக வழிபட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.


அன்றிரவும், மொபைலை அணைத்துவிட்டு பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். ட்ரெயின்  அஞ்சு மணிக்கு சென்ட்ரல் போய்டும் என்று அனுபவஸ்தர்கள் கூறியதால் நாலரைக்கு அலாரம் வைத்திருந்தேன். நல்ல உறக்கம்.


திடீரென ஒரு பரபரப்புச் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்ததில், சென்னை சென்ட்ரலுக்குள்  நுழைந்து கொண்டிருந்தது இரயில். பலரும் இறங்குவதற்குத் தயாராக நின்றிருந்தனர். மிக மெலிதாக என் கைபேசியின் அலார ஒலி எங்கோ கேட்டது. நான், அருண், சந்திரன் அனைவரும் தேடினோம், சாத்தியமாகிற சகல சந்துகளிலும். கிடைக்கவில்லை. 


பத்து நிமிடம் பொறுத்தால் திரும்ப சப்தமெழுப்பும் (snooze) என்று கூட காத்திருந்தோம். சுவிட்ச் off செய்திருந்ததால் அதுவும் இல்லை. நான் அமர்ந்திருந்த ஒன்றாம் எண் இருக்கையில் (S4) ஜன்னலுக்குக் கீழே,  இருக்கைக்கை சேரும் இடத்தில் இரயிலின் உட்புறச் சுவற்றில் ஒரு பொந்து இருந்தது. காதில் சிம்மேந்திர மத்யமம் ஒலித்தது. அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்...


வண்டி நேரே ஓடுகையில், பக்கவாட்டில் ஆடுகின்ற ஆட்டத்தில் என்  மொபைல் பையிலிருந்து நழுவி, அணைத்து  வைத்திருக்கிறேன் என்பதை மறந்து  சைலென்ட் மோடில் இருக்கிறோம் என்ற நினைவில், அதிர்ந்து அதிர்ந்து ஓட்டைக்குள் விழுந்திருக்க வேண்டும். அருணின் கைபேசியிலிருந்து வெளிச்சம் பாய்ச்சியதில் பூச்சி புழுக்கள் தெரிவதாகச் சொன்னான். 


விளக்குகளை அணைத்துக்கொண்டே வந்தார் ஒரு ஊழியர்.  "இத எடுக்கணும்னா அத ஓடைக்கணும்பா... நீ மொதல்ல எறங்கு, இந்த வண்டி இப்போ ஷெட்டுக்கு போகப் போகுது... ஆர்.பி.எஃப். ஆண்ட சொல்லு" என்றார். அங்கிருந்து வெளியே வந்ததில் நேரே அமர்ந்திருந்த மூன்று பெண் காவலர்களிடம் சொன்னேன். ஒரு பெண் தன்  வாக்கி -டாக்கியில் ஏதோ தகவல் கொடுத்து ஆர்வமாய் ஏதோ சொல்ல முற்பட, இன்னொருத்தி, "ஒனக்கு ஏன் இந்த வேலை.. பேசாம இரு என்று சொல்லிவிட்டு, வாசல்ல சரவணபவன் மாடில கம்ப்ளைன்ட் குடுங்க, போங்க..." என்றாள்.



கடமை தவறாத காவலர்கள் எழுதிக் கொடுத்த புகாரில் இருந்த விவரங்களையே மீண்டும் மீண்டும் எழுதச் சொன்னார்கள். வாங்கிப் பார்த்துவிட்டு, 


"பேர் எழுதுப்பா..."
'மேலே எழுதிருக்கு சார்...'


"அட்ரெஸ் எழுதுப்பா..."
'பேருக்குக் கீழ எழுதிருக்கு சார்'


"உன்  நம்பர் எழுது..."
'எழுதிருக்கு சார்..'


"சரி, நீ போ, எதுனா தகவல் கெடச்சா சொல்றோம்..."
"சார், அந்த சந்துல விழுந்திருக்கு.. அத எப்படி எடுக்கறது, ஷெட்டுக்குப் போய் பாக்கனும்னா நீங்க ஒரு லெட்டர் குடுத்தாலோ, ஃபோன் பண்ணி சொன்னாலோ, அங்க பாக்கலாம்ல சார்..."


"நீ, வீட்டுக்கு போய் மத்யானத்துக்குள்ள, இந்த செல் வாங்கின பில்லு கொண்டு வா... அப்புறம் பார்க்கலாம்..."


"சார்.. அதுல முக்கியமான contact details , draft எல்லாம் இருக்கு..."


"அதெல்லாம் கஷ்டம்பா... எத்தனையோ பேர் டெய்லி செல்லத் தொலைக்கறாங்க... பில்லு கொண்டு வந்தா, அப்பிடியே இந்த ஐவி நம்பரோ ஆர்வி நம்பரோ இருக்குமே, அதையும் கொண்டு வரணும்.."


மேற்கொண்டு எதாவது கேட்டால், நீ நோக்கியா CEO , MD எல்லாரையும் கூட்டிண்டு வா என்பார் போலிருந்தது. என்ன கேட்டால், நான் அங்கிருந்து வாழ்க்கை வெறுத்து திரும்பி விடுவேன் என்று முயற்சித்துக் கொண்டிருந்தார். சரி, நமக்குத் தெரிஞ்சவா யாராவது இரயில்வேல இருக்காளான்னு பாப்போம் என்று வீடு அடைந்தேன். சிஷ்யனின் உறவினர் ஒருத்தர் Pathway Inspector ஆகா இருக்கிறார் இன்னொரு நண்பர் ICF-ல் இருக்கிறார் என்று காய் நகர்த்தியதில், அந்த இரயில் ராத்திரி எட்டு மணி வரைக்கும் அங்க தான் இருக்கும், ஈவனிங் போய் பாத்து இருக்கான்னு பாக்கலாம் என்று சொன்னார்கள்.


அதுவரை, காலத்தைக் கழிக்க மனமின்றி, என் மொபைல் தொலைந்து விட்டது, டியூப்ளிகேட் சிம் வேண்டும் என எழுதிக்கொடுத்து, 'இப்போ மூணு மணி, ஆறு மணிக்கு ஆக்டிவேட்டு ஆயிரும்' என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். சொன்னதில் பாதி நடந்தது. ஆக்டி ஆகவில்லை;வேட்டு ஆனது!  Unregistered Sim என்று கூறிக்கொண்டேயிருந்தது.


அருண் கிளம்பி ஷெட்டுக்குப் போனான். "அந்த இரயிலா? அது பதினொரு மணிக்கே திரும்பி எக்ஸ்ப்ரஸ்ஸா பாம்பேக்கு போயிருச்சே... எதுக்கும் ஜிஎம்முக்கு ஒரு புகார் எழுதுங்க..."  அன்று இரவு 'இதம் ந மம' என்று தெளிந்தேன். BSNL வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு தொலைபேசியதில், "சார்... ஒரு சிம் ஆக்டிவேட் ஆக 24 மணி நேரம் ஆகும், நீங்க பொறுமையா காலைல பாருங்க, அப்பாவும் வரலைன்னா, கூப்பிடுங்க" என்றனர்.


புதன் மாலையும், வியாழன் மாலையும் sms-கள் அழைப்புகளின்றி கழிந்தது. வெள்ளி காலை கூப்பிட்டபோது, உங்க சீரியல் நம்பர தப்பா டைப் பண்ணீட்டாங்க; இன்னிக்கு மதியானம் சரியாயிடும் என்றனர். மதியம் அழைத்ததும், மீண்டும் தவறான எண் அனுப்பிவிட்டோம், இன்று மாலை சரியாகும் என்றார்கள். வெள்ளி மாலை தான் தீனி கிடைத்தது standby  மொபைலுக்கு. மூன்று நாட்களாக துருவக் கரடி போல் தூங்கிக்கொண்டிருந்தது. 


வியாழன் இரவு கடைக்குப் போய், 5030 basic model ஒன்று வாங்கி வந்தேன்... இப்போது ஒவ்வொரு மெசேஜுக்கும் 'யாரடி நீ மோஹினீ ', 'ஏனுங்க நீங்க யாருன்னு சொல்லிபோட்டு போங்க' என்பது போல் எழுத்துக்களை அமுக்கிக் கொண்டிருக்கிறேன்...



2 comments:

  1. இதுதான் இந்தியா! ஆனாலும் இது என் நாடு. இதை மிகவும் நேசிக்கிறோம்.

    ReplyDelete
  2. துரித நடை......

    பயங்கர அதிர்வு.

    இந்தியாவில் நான் கண்டது ஒன்னே ஒன்னு.

    செல்லு இல்லாதவன் புல்லு !

    ReplyDelete