Monday, November 23, 2009

தாதரும் மும்பை மயிலும்... 2


உறங்கச் சென்றபோது, கை பேசியை எங்கே வைத்துக்கொள்வது என்று யோசித்துவிட்டு, கால் சட்டைப் பையில் வைத்துக்கொண்டேன். குறுக்கு வாட்டில் வைத்ததும் German Shepherd-ஐப் பார்த்து  stay என்று சொன்னதைப் போல், அமர்ந்துகொண்டது. குழந்தையை விட்டுவிட்டு சற்று வெளியே போகநேர்ந்தால் "கண்ணு... அம்மா வரவரய்க்கும் பொட்டாட்ட கோந்திருக்கோணும்...என்ன..." என்பார்கள் ஈரோட்டில்.

"மாமா, பேன்ட்டுல எல்லாம் வெச்சுக்காத... என்ட்ட குடு,  மேல வெச்சுண்டு காலேல தரேன்" என்றான் அருண்.

"வேண்டாம், ஜாக்ரதையா வெச்சுப்பேன்.. எனக்கே பாத ராத்திரி ஒன்னக் கூப்பிடணும்னா, கால் பண்ணனுமே, எல்லாரும் தூங்கீண்டு இருப்பா"

இருள் தந்த சோம்பலில் வேறு வழியின்றித் தூங்க ஆரம்பித்திருப்பானோ மனிதன்? உறக்கம் மட்டும் இல்லையெனில், இன்னும் எந்த அளவிற்கு சாத்தானின் பட்டறை ஆகியிருக்கும் மனம்! இரவையும் தூரத்தையும் ஒரு சேரக் கடந்தபடி விரைந்துகொண்டிருந்தது வண்டி. அதற்குத் தெரியாமல் ஆயிரக்கணக்கான உலகங்களையும் நிகழ்வுகளையும் கனவாய் நினைவுகளாய்த் திருட்டு இரயிலேற்றி, விஷமமாய்த் துயில்கொண்டிருந்தனர் பயணிகள்.

தாதர் வந்தததும், ஸ்டேஷனில் தீராது வந்துகொண்டேயிருந்த திரௌபதி வஸ்த்ரப் பிரயாணிகளை, துச்சாதன சர்தாஜிகள் சின்ன சின்ன ஃபியட்டுகளில்  கொத்துகொத்தாய் ஏற்றி, நெரிசலைக் குறைக்க முயன்றுகளைத்துக் கொண்டிருந்தர்கள். ஆனால், கிருஷ்ணர் உயிர்களை சலிக்காது அனுப்பிய வண்ணமிருந்தார். சலித்து அனுப்பினால் இராவணர்கள் ஏது? கம்சன்கள் ஏது? கிருஷ்ணர் தான் ஏது? மாலவனே மூலவனாய் வேலையற்றுப் போயிருப்பான்!!

ஒரு டவேராவில் ஏறி மூன்று திருப்பங்கள் கடந்ததும் தான், மும்பை என்றால் மனதில் தோன்றும் பிம்பமாய் ஒரு பெண், சற்று பரபரப்பாக, மெல்லிய பூச்சுகளின் மேலே சிற்சில முத்துக்களாய் தோன்றிய துளிகளைப் புறக்கணித்து, காற்றில் அலைந்த கற்றைகளை நளினமாக நகர்த்தியபடி சென்றாள். செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், அகாடமி போல ஒரு திருப்பத்தின் முக்கில் இருந்தது. அதைக் கடந்து சற்று தூரம் சென்றால், அன்னபூர்ணா.  மூன்று மாடிகள் இருப்பதால், நல்ல வேலை முதல் மாடீலேயே கெடச்சுது என்று சந்தோஷப்படுவார்கள் என்று எண்ணியோ என்னமோ,
Lift இல்லாத முதல் மாடியில் அறை.   :P

அறை கிடைத்தால் அனுபவிக்கணும்;ஆராயக்கூடாது என்றெல்லாம் அபத்தமாய் வசனங்கள் ஞாபகம் வராமல் பார்த்தபோது, மூன்று விஷயங்கள் கண்ணில் பட்டன. ஏ.சி.மெஷின் இருந்தது; ஆனால், அந்த குளிரோ காற்றோ படுக்கைக்கு வராத அளவில் ஒரு அகலமான செவ்வகத் தூண் இடையில் இருந்தது. 26 இன்ச் நீளமிருக்கும்... தரையில் உட்கார்ந்து சிலம்பக்கட்டை போல் சாதகம் செய்தேன். குளியலறையில் நுழைந்ததும்
exhaust fan எல்லாம் வைத்து, தேவலை என்று நினைப்பதற்குள், அதன் இறக்கைகளிடையே தெரிந்த நிறம் எங்கோ பார்த்தது போல் இருக்கவே, உற்றுப் பார்த்தேன். அடப்பாவி... அது, ஹாலில் இருந்த திரைச்சீலை. இது வெளியே அனுப்பும் காற்று அறைக்குள்ளேயே ஏ.சி.யிலேயே வட்டமடிக்கும்! எப்படி மூடினாலும், சிந்திக்கொண்டேயிருந்து ஒரு காலப்ரமாணத்தைத் தந்துகொண்டேயிருந்தன  குழாய்கள்.

படிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பிடிகள் ஏதுமின்றி, வழவழப்பாய் வேறு இருந்தன.

மாலை, சிவஸ்வாமி அரங்கில் ரமேஷ் ராமமூர்த்தி வரவேற்று உபசரித்தார்.  ஒலிப் பொருத்தச் சோதனைகளுக்குப் பின் Green Room-ல் என்னுடைய மும்பை உறவினர்களைச் சந்தித்துவிட்டு ஆறரைக்குத் தொடங்கிய கச்சேரி ஒன்பதரைக்கு முடிந்தது. விமர்சனம் இங்கே. பத்து மணிக்கு அறைக்குத் திரும்பியதும், உணவு இருக்குமா என்ற கேள்வியுடன் சந்தேகமாய் ஆர்டர் செய்தவைகள் அரை மணி நேரம் கழித்து வந்தன. Alu parathaa, Butter Naan, Channa Masala-வுடன் Pinapple Raithaa உன்னுயிரைத்தா என்றது. நல்ல பசியினால் சுவை கூடித் தெரிந்தது.

அடுத்த நாள் என்னை மகாலட்சுமி கோயிலுக்கோ, சித்தி விநாயக் கோவிலுக்கோ அழைத்து செல்லவும் தன் சித்தப்பா வீட்டில் காலை உணவிற்கு அழைத்திருப்பதாகவும் பவதாரிணி கூறினாள்.  இந்தப் பிறவியில் இன்னொரு முறை இந்தப் படிக்கட்டுகளை இறங்கி ஏறுதல் சிரமம் என்று மென்மையாக மறுத்துவிட்டு, அறைக்குள்ளேயே அடைந்து கிடந்ததில் (இதுல என்ன தில்?) அன்றைய கச்சேரிக்கு வந்திருந்த சஞ்சீவ், நெற்குணம் ஷங்கர், சேர்த்தலை அனந்தக்ருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்தேன். மதியம் இரண்டு மணிக்கு பொவாய்-சேம்பர் மியூசிக் கச்சேரிக்காக கார் வந்தது.

படிகளில் பின்புறமாக இறங்கும்போது திடீரென, இரண்டு வினாடிகளில் கீழ் படியில் இருந்தேன். அந்த இரண்டு வினாடிகளில் ஒரு பிடிப்பிற்காய் கை அலைந்திருக்க வேண்டும்; ஆனால் கவிழ்ந்திருந்த ஆணுடலில் அபாய அடிகளைத் தவிர்க்க வேண்டி, தாடையையும் இடுப்பையும் சற்று உயர்த்திக் கொண்டேன் [Or else, you would have heard a self written "tetsimonial"(testi-moanial)].அருண், நான்  சின்னக் குழந்தைகள் போல சறுக்கி இறங்கியதை எண்ணி, சாதரணமாக என் வீல்ச்சேரை பிரித்தவன், விவரம் தெரிந்ததும் கொஞ்சம் அதிர்ந்தான்
.

டிரைவர் துரை திருநெல்வேலிக்காரர். பொவாய் எப்படி மலையாக இருந்தது, அதைக் குடைந்து எழுப்பிய கட்டடங்கள், அங்கே மலையில் இருந்த மிருகங்கள், திடீரெனத் தோன்றிய சிறுத்தை, வாயில் கவ்வியபடி எல்லோரும் உறைந்து நிற்க, அது கவ்விச்சென்று, ஓடியபடியே இரத்தம் குடித்து சக்கையாய் கீழே போட்டு இறந்துவிட்ட குழந்தை, பீதியில் உறைந்த மக்கள், அந்த அச்சம் குறைக்க, தேசியப் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு, அவிழ்த்து விடப்பட்டு திரும்பிப் பிடிக்கப்பட்ட வேறொரு புலி போன்ற கதைகளைக் கூறி நிறுத்திய இடம் ஒரு அபார்ட்மென்ட். "அங்க பின்னாடி ஒரு கொக தெரியுதா.. அங்கிருந்து வந்து மேலேயிருந்து பாத்து கவ்வீருச்சு..."

ரஹேஜா விஹாரின் ஹில் சிட் விங்கில் பதினோராவது மாடியில் கச்சேரி. அங்கிருந்து மலையும் பொவாய் எரியும் அழகாயிருந்தன. ஞாயிற்றுக்கிழமை இராஹு காலம் என்பதால், 4-25 க்கு ஆரம்பித்து ஏழே கால் வரை கச்சேரி. பின்னர் பாஸ்தா, இட்லி என சிறியதோர் விருந்துக்குப் பின், பத்தரை மணிக்கு சத்ரபதி சிவாஜி ஸ்டேஷனின் ஜன சமுத்திரத்தில் கலந்து உள்ளே சென்றதும், "இங்கே இரயில்வே சம்பந்தமாக எதையும் விசாரிக்காதீர்கள்" என்று எழுதி ஒட்டிக்கொண்டு ஆனந்தமாக ஒருவர்  கணினியில்  spider solitaire விளையாடிக்கொண்டிருந்தார். இரவு-பகல்-இரவு என்று  நீண்ட பொழுதுகளைக் கழிக்கப் போகும் அயர்ச்சியில் அமர்ந்தேன். இந்த இரயிலிலும் எங்கும் சார்ஜருக்கான பாயிண்ட்டுகள் இல்லை. காலை வரை கலையாதிருந்தது மொபைல், நாளை நடக்கப் போவதை அறியாமல்!
  .

3 comments:

 1. பதிவுலகில் முத்திரை பதித்துவரும் அன்பரே,

  இந்த பதிவுலகிற்கு புதியவன் ஒரு காதல் கதை எழுதியுள்ளேன்..தங்களது ஆதரவை விரும்பி, தங்களே எனது வலைக்கு அழைக்கிறேன்….

  http://idhayame.blogspot.com/2009/11/blog-post_12.html

  அன்புடன்

  செல்லத்துரை…..

  ReplyDelete
 2. ஏகப்பட்ட 'சங்கதிகள்' வந்து விழுகிறது!!!!!

  ரசித்தேன்.

  வீல் சேர்.....?

  ReplyDelete
 3. :) i use wheel chair, see this links:

  http://www.chennaionline.com/chennaicitizen/2004/02nagarajan.asp

  http://ramsabode.wordpress.com/2006/10/07/erode-nagaraj/

  ReplyDelete