Sunday, November 22, 2009

தாதரும் மும்பை மயிலும்... 1


வெள்ளிக்கிழமை காலை எக்மோர் ஸ்டேஷனை அடைந்ததும் எதிரே பளிச்சென்று வந்தார் OST (ஓ.ஸ்.தியாகராஜன்). அவருக்கு வாஷி காட்கோபர் இரண்டு இடங்களிலும் கச்சேரி. என்னுடன் அருண் துணைக்கு வர, பவதாரிணியும் கோவை சந்திரனும் S4-ல் ஏறினோம்.

எங்கும் சார்ஜருக்கான plug பாயின்ட் இல்லை. பன்னிரண்டு மணிக்குள் ஏதாவது ஒரு பெட்டியில் இதைச் செய்தால் தான் முடியும், பிறகு ஏறும் மக்கள் கூட்டம் கட்டுப்பாடுகளற்றது என்றார் சக பயணி. ஆனால் எங்கும் அது இல்லை, இருந்த ஓரிரு இடங்களில் வேலை செய்யவில்லை. 3rd ஏசியில் சுவிட்ச் மட்டும் இருந்தது, பாயிண்ட்டே இல்லை! ரேணிகுண்டாவிலிருந்து, கரிப்புகை வர ஆரம்பித்தது, இரயிலில்.

எர்ரகுன்ட்லாவைத் தாண்டியதும் கிரானைட் பாளங்கள், பறந்து வரும் பொடிகள், குளங்கள் போன்று வெட்டிய பள்ளங்கள்... கம்பியைப் பிடித்து இழுத்து, வழவழப்பான சுருதி சேர்க்கும் கல் தேடலாம் என எண்ணினேன்... (எண்ணவில்லை,நிறைய இருந்தது,அதனால... நினைத்தேன் போட்டுக்கலாம்...)

பாரதி மணி மாமா கொடுத்திருந்த "பல நேரங்களில் பல மனிதர்கள்" கையிலேயே இருந்தது. அன்னை தெரேசாவை (7வது கட்டுரை) முடிக்கும்போது, muddanur -வை, optical illusion -ல் முத்தன்று என்று படித்தேன். dyslexia?

சற்று நேரத்தில் பக்கத்து சீட் பயணி சீட்டில் எழுந்து நின்றான்...!! சீலிங் ஃபேனுக்கு அருகில் சென்ற அவன் கை, அதற்கும் பின்னே இரயிலின் கூரையைத் தொட்டு வெளிவந்தபோது, கைகளில் இருந்தது அவனுடைய ஷூ!! கோவை சென்றபோது, TTE, சுருட்டிய நூறு ரூபாய் நோட்டுகளை, ஜன்னலில் ஸ்க்ரீன் தொங்கும் கம்பியில் தொங்கும் சந்தில், ஸ்க்ரீனின் சுருக்கங்களுக்கு இடையில் ஒளித்து வைத்ததைப் பார்த்தேன்.

யாராவது பார்க்கிறார்களா என்று அவர் தீவிரமாக செக் செய்தார், நான் கவனிப்பதை அறியாமலேயே...

பல வருஷங்களுக்கு முன் ஸ்ரீராம் ஒரு கல்யாணக் கச்சேரி வாசித்தான். ஆரம்பித்த பிறகு கைனடிக்கில் அங்கே சென்று, எப்படி வாசிக்கிறான் என்று பார்த்துவிட்டு,அவன் வருமுன் பார்க்கிங் இருட்டில் மறைந்து கொண்டேன், Larger than life -ல் யானை ஹோர்டிங்-ன் பின் (இன்று தான் பார்த்தேன், Sony Pix -ல்) ஒளிந்து கொள்வதைப் போல. அன்று அவனுக்கு வேஷ்டி எல்லாம் வைத்துக் கொடுத்தார்கள். ஆனால் பணத்தை ஒட்டிய கவரில் வைத்து விட்டார்கள்! அவனுக்கு உள்ளே எவ்வளவு இருக்கும் என்று ஆவல், ஆனால் அங்கேயே பிரித்துப் பார்த்தால் நன்றாக இருக்காது என்று, டிவிஎஸ் 50 -ல் ஏறி விட்டான். எஸ்.ஜி.எஸ். சபாவிலிருந்து டி.நகர் மெயின் ரோடு வருவதற்குள் 3,4 முறைகள் வண்டியை நிறுத்த தோதான இடம் தேடினான்.

என் ஸ்கூட்டரின் ஹெட் லைட்டை அணைத்துவிட்டு நான் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். இப்போது GRT இருக்குமிடம் அருகே, மரத்தடியில் வண்டியை நிறுத்தி, யாருடைய கவரோ போல், சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு, பிரித்து எண்ணிய போது, சிரித்தபடி அருகில் போய் "டேய்..." என்றேன். வெட்கம், ஆச்சிரியம், மிகுந்த மகிழ்ச்சி எல்லாம் சேர்ந்து, அண்ணா... என்றான். Love you Sriram...

கடப்பா என்று கடந்தும் காணாத கடப்பா கல், ஆதோனிக்கு அப்புறம், நரகூரில் காணக் கிடைத்தது. அடுத்து வந்த, குப்கல், பெயர் தியரிக்கு ஏற்றவாறு குப்பைகள் இன்றி, சுத்தமாகக் காணப்பட்டது.

நீண்ட தூரப் பயணங்களில் அழுக்கு ரெஸ்ட் ரூம்களைத் தவிர்க்க வேண்டி அதிகம் அருந்தாமல் விட்ட தண்ணீர், அந்த அடுக்கின் ஒவ்வொரு வலைக் கூட்டிலும் பாட்டில்களாய்த் தொங்கிக்கொண்டிருந்தது. தண்ணீருக்காகத் தவித்தபடி இருந்தது உடல். பெரும்பாலான நேரங்களில், தவிப்பைத் தான் இன்பம் என்று உணர்கிறோம். In fact, இன்ப அதிகரிப்பே தவிப்பினால் தான்.ஆனால், உடல் நீருக்கு அலைகையில், ஆழ்ந்து மூச்சுவிடத் தோன்றும். அது, மனம் ஒரு முகப்படுவதை எளிதாக்கிவிடுகிறது...

இப்போது, ஸூர்ய-காந்திப் (gandhi அல்ல, kaanthi) பூக்கள் மறைந்து, மரங்களற்ற பாறை மலைகள், கற்குன்றுகள் இரு மருங்கிலும். வேலூரை விட, கோடை கடுமையாக இருக்கும் போலிருந்தது. சிறிய கோவில் ஒன்றில் நேர்த்திக் கடனை முடித்துவிட்டு ஒரு குடும்பம் கூட்டமாகத் திரும்பிக்கொண்டிருந்தது. பக்கத்து அடுக்கிலிருந்து முக்கால் மணி நேரத்திற்கு ஒரு முறை coke வாசனை வந்தது. பெப்சியில் ஒரு ஷூ பாலீஷ் வாசனை இருக்கும்; இது coke தான்.

4-20pm: மந்த்ராலயம் ரோடு. ஒரு இரயில் நிலையத்திற்கு ஏன் ரோடு என்று பெயர்? காஞ்சிபுரத்தில் "சாலை தெரு" மாதிரி. திருவண்ணாமலை தீபத்தை பொதிகை தொலைக்காட்சியில் வர்ணித்துக் கொண்டிருந்த ஒரு "கவிஞர்" யானையைக் கண்டதும், அதோ வருகிறான் கஜமுகன் என்று கூவியதைப் போல. யானையைத் தவிர எந்த விலங்கோ மனிதனோ யானை முகத்துடன் இருந்தால் கஜமுகன் எனலாம்; யானையையே சொன்னால்!!

ஐந்து மணிக்கு இரயில் நுழைந்த ஸ்டேஷனில், ரெய்ச்சூர் என்ற பெயரை BSNL விளம்பரங்களுக்கு இடையே தேடிக் கண்டுபிடித்தேன். சட்டென நினைவு வந்து செல் போனைப் பார்த்ததில் சிக்னல் முழுதாகக் காட்டியது. கர்நாடகாவில் நுழைந்திருக்கிறாய் என்று தொ-lie -பேசி இல்லா-கா கொடுத்திருந்த (எச்சரிக்கை?) குறுஞ்செய்தியை அப்போதுதான் பார்த்தேன்.

இரயில் நிலையத்தை அடுத்திருந்த பள்ளியைப் பார்த்ததும் ஈரோடு இரயில்வே காலனி முனிசிபல் ஹையர் செகண்டரி ஸ்கூல் நினவு வந்தது. அங்கு தான் படித்தேன். அதன் மூன்றாம் மாடியின் வகுப்பறை ஜன்னல் வழியே பார்த்த இரயில்கள் ஞாபகம் வந்தன. சீராகத் (வேறு வழியின்றி) தொடரும் பெட்டிகளை இழுத்தபடி தானைத் தலைவர் எஞ்சின் அய்யா கம்பீரமாக வருவார்.அந்த இடத்தில் ஒரு வளைவும் அதன் பின்னே பெண் படுத்திருப்பது போல ஒரு மலையும் இருந்து, அக்காட்சியின் அழகை அதிகரித்தபடியிருந்தது.

வளைவுகளும் கவர்ச்சிகளும் பிரிக்கமுடியாதவை.

நடு நடுவே, கையிலிருந்த புத்தகம் (பாரதி மணியின் "பல நேரங்களில் பல மனிதர்கள்") இழுத்துக்கொண்டது. ஜன்னலுக்கு அருகில் காதை வைத்தால், வழக்கமான இரயில் சப்தத்தோடு, "ச்சுச்சுச்சுச்சு...." என்ற இரஹச்யக் குரலை கரிப்புகையுடன் எழுப்பிக்கொண்டிருந்தது தாதர். சிவராமன் சார், மிருதங்கத்தின் வலந்தலையில், கடைக்கோடியில் கையைச் செலுத்தி வாசிக்கும் அதி-மேல் கால "தகதின தகதின", தகதகதகதக போன்றவை, "ச்சகதின ச்சகதின" "ச்சக ச்சக ச்சக ச்சக " என்று கேட்பதைப் போல்.

அவர் "தரிகிடதொம்" என்று வாசிக்கும்போது (ஒரு வினாடியில் ஆறு தரிகிட சொல்ல முடிந்தால்? அந்த வேகத்திலிருக்கும், முயற்சி செய்து பாருங்களேன்...) மீட்டில் (white skin on the right side of mrudangam) வாசிப்பது நளினமாகவும், சாதத்தில் (black patch) விழும்போது கம்பீர அதட்டலாகவும், அதுவும் அந்த முறையில் வாசிக்கும்போது அவருடைய கை, ஏறக்குறைய அவர் தோள் உயரத்திலிருந்து மின்னல் போல இறங்கும். என் கண்களுக்கு, கருமேகத்திலிருந்து கீழ் வானம் வரை மின்னல் கீற்றொன்று கோடாய் இறங்குதல் போல, உயர்த்திய அவர் கைக்கும்-மிருதங்கத்திற்கும் இடையே ஒருகோடு தெரியும். அவரே, 'தோடுடைய செவியன்' என்பதைப் போல, "கோடுடைய முகத்தோனை" எப்பொழுதும் மறவா"தவர்" தானே...

அமெரிக்காவின் டெட்ராய்ட் (Michigan) நகருக்குப் போகும் வழியில் Frankfurt -ல் சில மணி நேரங்கள் காத்திருந்தேன். அங்கே, 20 நொடிகளுக்கு ஒரு முறை, ஒரு take off நிகழ்ந்துகொண்டு இருந்தது. நிலத்திலிருந்து விடுபட்டு, மேலேறும் அந்த விமானங்கள் ஒவ்வொன்றும் அவரின் வலது கை விரல்களை நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தன. "நம்" என்ற சொல்லை வாசிக்கும் போது, கை அப்படித்தான் இருக்கும்.

இரயிலின் ஜன்னலுக்கு நேரே, மலைகளுக்குப் பின்னே, நிலாத் தோழி அகன்றிருப்பாள் என்ற நம்பிக்கையில், நிலமகளை ஆரத் தழுவும் ஆவல் கொண்டு, வெளிச்சங்களை ம்ருதுவாக்கியபடி இறங்கிக்கொண்டிருந்தது விழு ஞாயிறு.

ரெய்ச்சூர் நிலையம் தாண்டி, இப்போது மீண்டும் ஸூர்ய-காந்தி மலர்கள். அனால் அவை ஒன்றும் மாலை நேரச் சூரியனைப் பார்த்து இல்லை; எதிரே எங்கள் பக்கமாய் தான் பார்த்திருந்தன. பார்க்காவிடினும், ஒருவேளை அவைகள் ஆதவனை நினைத்துக்கொண்டிருக்க கூடும். எங்கோ இருப்பினும், சிவராமன் "ஸாரை"யே "நாக"ராஜன் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல...

இப்போது மணி 5-27... கடந்த ஊர் யதலாப்பூர்...எதுலயாவது பூர்... மனம் எதிலாவது புகுந்துகொள்கிறது. அப்போது தான் உடல் மரணிக்கும் வரை, அதுவும் வாழ முடியும். மனம் செத்துப் போய் உடல் வாழ்தல் எப்படியிருக்கும்? என்றாவது அறிவோமாயிருக்கும்; அப்போது எழுதவோ பேசிக்கொள்ளவோ மாட்டோம்.

6-58 க்கு வாடியில் (ஆந்திரா)நுழைந்தது இரயில். வாடீன்னு ஒரு ஸ்டேஷனா! ஒண்ணும் இல்லை, நம்ம தமிழ்நாட்டுலேயே கிட்டவாடி, அய்யாவாடி, தோக்கவாடி எல்லாம் உண்டு. பெண்பாற் பெயர் கொண்டதை நேர் செய்யத் தானோ என்னவோ, விஜயவாடாவும் இருந்தது ஆந்திராவில். மூன்று முறை warning tone ஒலித்தது கை பேசியில், தெலுங்கு பேசியபடி... பேட்டரி-லோ...

இரவானதும் காதலர்களைத் தான் கதவைச் சாத்திக்கொள்ளச் சொல்வார்கள்; இங்கே, இரவானதும் காலதர்களைச் சாத்தச் சொன்னார்கள், குல்பர்காவிற்குப் பிறகு. ஜன்னல் ஃபிரன்ச் வார்த்தை, கால் அதர் தான் தமிழ் என்று எப்போதோ குமுதத்தில் படித்த ஞாபகம். கால் - காற்று; அதர் - வரும் வழி. The 'other' way of letting the air, even if door is closed! நானோ, வியாழன் இரவே மூடிவிட்டிருந்தேன், windowsஐ... :)

சென்ற வாரம் பொதிகையில் விஷக்கடிகளுக்கு நேரலையில் வைத்தியம் சொல்லிக்கொண்டிருந்தவரிடம் யாரோ ஒருவர் "பாம்பின் 'கால்' பாம்பறியும்" என்றால் என்ன கேட்டார். "எனக்கு பாம்புக்கடி பத்தி தான் தெரியும், பழமொழிக்கெல்லாம் அர்த்தம் கேக்காதீங்க" என்றார். தொகுத்து வழங்கிய சுபாஷினி தன் போக்கில் எதையோ சொல்லி சமாளிக்க, நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. "மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்தே" என்று ஒளவையார் பாடியிருக்கிறார். குண்டலினிப் பாம்பும் காற்றெனும் மூச்சும் பிரிக்கமுடியாதவை.

சனிக்கிழமை செம்பூர் fine arts -லும் ஞாயிறன்று பொவாயில் ஒரு chamber music concert -ம். அதைப் பற்றி விவாதித்துக் கொண்டு இரவு உணவை முடித்தோம். த்யாகராஜன் (mrudangam artiste, he was also in the same train with OST) வேறு பெட்டியிலிருந்து காண வந்தார். கல்யாணக் கச்சேரிகளில் பாட்டுகள் பற்றிப் பேச்சு வந்தது.

"பேசீண்டே இருப்பா, யாராவது... திடீர்னு வந்து குறையொன்றுமில்லை பாடுங்கோன்னு கேப்பா.. கேட்டவாளே போய் உக்காந்து பேச ஆரம்பிச்சுடுவா... மிக்சர் சாப்டுண்டே காபி குடிக்கறா மாதிரி, குறையொன்றுமில்லை கேட்டுண்டே பேசணும் போலிருக்கு..."

"தந்தனா னா ஆகி எல்லாம் பாடச்சொல்லுவா, அது பாட்டுக்கு சண்டாள பூமின்னெல்லாம் வந்துண்டிருக்கும் அந்த பாட்டுல... பல்லடம் வெங்கட்ரமணா ராவ் ஒரு தடவ சொன்னார், யாரோ வந்து 'மோக்ஷமு கலதா' பாடச் சொன்னாளாம் கல்யாணத்துல! இப்பதான் ஏதோ செட்டில் பண்ணி பக்கத்துல உக்காந்திருப்பா, அதுக்குள்ள மோக்ஷம்னா பொண்ணும் மாப்ளையும் என்ன பண்ணுவா, பாருங்கோ...அப்புறம் கொஞ்ச நாள் பொறுத்து மாப்ள, ஏடி ஜன்மம் இதிஹான்னு பாடுவான்.."

"ஏண்ணா.. அப்படி சொல்றேள்..." என்றாள் பவா.

"ச்சே..ச்சே.. ஏதோ ஆண்கள் மட்டும் அப்படிப் பாடுவான்னு சொல்லலை... பெண்களும், மோஸ ஹோதனல்லோ, நானே மோஸ ஹோதனல்லோன்னு எசப்பாட்டு பாடலாமே," என்றேன். :P

சற்று பேசிவிட்டு, பவா தன் இருக்கைக்குக் கிளம்பினாள். I will follow, good night என்றார், த்யாகராஜன். அதற்கு அடுத்த பெட்டி தான் அவர் இருக்கை. "நல்ல பக்க வாத்யம் என்றால் பாடகாளை follow பண்ணுவா," சந்திரனிடம் திரும்பி, ஆமா... female artiste எல்லாம் எப்படி பாட-"காளைன்னு" சொல்றது என்றேன்.

5 comments:

 1. //பக்கத்து அடுக்கிலிருந்து முக்கால் மணி நேரத்திற்கு ஒரு முறை coke வாசனை வந்தது. பெப்சியில் ஒரு ஷூ பாலீஷ் வாசனை இருக்கும்; இது coke தான்.//

  ரெண்டுமே குடிக்கிற வழக்கம் இல்லை, அதனால் தெரியாது இது பத்தி.

  //4-20pm: மந்த்ராலயம் ரோடு. ஒரு இரயில் நிலையத்திற்கு ஏன் ரோடு என்று பெயர்?//

  மந்த்ராலயம் ரோடு சூடான வடை பத்திச் சொல்லுவீங்கனு நினைச்சேன்! :D

  //அதுவும் அந்த முறையில் வாசிக்கும்போது அவருடைய கை, ஏறக்குறைய அவர் தோல் உயரத்திலிருந்து மின்னல் போல இறங்கும். என் கண்களுக்கு, கருமேகத்திளிருந்து கீழ் வானம் வரை மின்னல் கீற்றொன்று கோடாய் இறங்குதல் போல, உயர்த்திய அவர் கைக்கும்-மிருதங்கத்திற்கும் இடையே ஒரு கொடு தெரியும். அவரே, 'தோடுடைய செவியன்' என்பதைப் போல, "கோடுடைய முகத்தோனை" எப்பொழுதும் மறவா"தவர்" தானே.//

  நல்லா அநுபவிச்சுச் சொல்றீங்க. கற்பனை பண்ணிப்பார்க்க முடியறது.

  //எங்கோ இருப்பினும், சிவராமன் "ஸாரை"யே "நாக"ராஜன் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல...//

  குரு பக்தி!

  //இங்கே, இரவானதும் காலதர்களைச் சாத்தச் சொன்னார்கள், குல்பர்காவிற்குப் பிறகு//

  சாளரம் தமிழ்ச்சொல்னு நினைச்சேனே!

  //"பேசீண்டே இருப்பா, யாராவது... திடீர்னு வந்து குறையொன்றுமில்லை பாடுங்கோன்னு கேப்பா.. கேட்டவாளே போய் உக்காந்து பேச ஆரம்பிச்சுடுவா... மிக்சர் சாப்டுண்டே காபி குடிக்கறா மாதிரி, குறையொன்றுமில்லை கேட்டுண்டே பேசணும் போலிருக்கு..."//

  எங்க வீட்டுக் கல்யாணங்களில் இதுக்காகவே பாடகர்களை அவமதிப்பதில்லை. கச்சேரியே வைக்காமல் வாத்தியங்களின் இன்னிசையைப்பின்னணியில் போட்டுடுவோம். ரிசப்ஷன் என்ற வரவேற்பு நிகழ்ச்சியும் தாலிகட்டியதற்குப் பின்னர்தான். முதல்நாளே வைக்கிறதில்லை. அருமையான அநுபவங்களை நல்லா ரசிச்சு எழுதி இருக்கீங்க.

  ReplyDelete
 2. அன்புள்ள நாகராஜன்,
  உன் எழுத்துல ஒரு தனித்வம் இருக்கு!
  ரயிலோடு மனமும் பயணிக்க,எங்களுக்குக்
  கிடைத்தது சுவையானப் பகிர்வுகள்!
  நீ ஒரு சொற்சிலம்பன்!
  காதலர்- காலதர்,"சாரை"---"நாக"
  "பாம்பின் கால்"-- குண்டலினிப் பாம்பும்,கால் எனும் மூச்சும்
  யானையையே "கஜமுகன்"என்றுசொல்லும் அவசரத்தில்
  விளைந்த நகைச்சுவை

  ரயிலோடு,மனமோட சுவையான விருந்தளித்தாய்!

  சில தட்டச்சுப் பிழைகள்: கிளம்பினால்- "ள்"
  மேகத்திளிருந்து -- "லி"
  ஒரு மழையும்-- "லை"
  தோல் உயரத்திலிருந்து-- "தோள்"

  அன்புடன்,
  தங்கமணி.

  ReplyDelete
 3. நன்றி... திருத்திவிட்டேன்...

  ReplyDelete
 4. Hi. Amazing article...
  For Gita - The road leads to mantralayam and hence Mantralayam road.:)
  There is a station on the Kolkatta route called Khurda road. One alights here to go to Puri.

  ReplyDelete
 5. ஹைய்யோ..........

  போ$ற போக்கில் எவ்வளோ சேதிகள்!!!!

  // மோஸ ஹோதனல்லோ, நானே மோஸ ஹோதனல்லோன்னு //

  இது....... சூப்பர்!

  ஃபாண்ட் சைஸைக் கொஞ்சம் பெருசுபண்ணக்கூடாதா?

  நீ தய ரா......................

  ReplyDelete