Wednesday, October 7, 2009

அரண்மனைக்கு வெளியே... - 1


"இந்தியாவுக்கும்அமெரிக்காவுக்கும் என்னடா வித்யாசம்?"

"ம்ம்... அங்க, காலைல சீரியல்... இங்க சாயங்காலம் சீரியல்.."

நாற்பது வாட்ஸ் குண்டு பல்புகள் நகரமெங்கும் தொங்கியபடி மைசூரைப் பார்த்ததும் இதுதான் தோன்றியது. வெந்திருக்க வேண்டும், அவைகள் விடும் வெப்பத்திற்கு. ஆனால்அமைதியான சாலைகள், இரு மருங்கிலும் மரங்கள், இல்லாமையின் வடுக்களை மறைக்கும் இன்போசிஸ் சிறகுகள் எல்லாம் சேர்த்து அந்த ஊர் குளிர்ந்து இருந்தது.

"நாகராஜ்... எல்லா கொஞ்சம் நிதானமாதா நடக்கும் இங்க.. office-க்கே பத்தரை-பத்தேமுக்கால்தா ஜனங்க வருவா... நாராயண மூர்த்தி இந்த ஊர்தா... அவரே கொஞ்சம் வெக்ஸ் ஆயிட்டார்..." என்றுசொல்லிய 'தீபு' என்ற 'ஸ்ரீனிவாச பிரசாத்திற்கு' அந்நகரத்தை ஒரு இடம் விடாமல் விவரிக்கும் ஆசை இருந்தது. "மைசூர் full-ஆ பாக்கணுமானா it will take full seven days at least.. நானே இன்னும் கொஞ்ச இடமெல்லாம் பாத்தது இல்ல..."

National Programme of Music-ன் வருடாந்திரக் கொண்டாட்டம் தான் ஆகாசவாணி சங்கீத சம்மேளனம் என்னும் நிகழ்ச்சி. இரண்டாம் தேதி இரவு காவிரி எக்ஸ்ப்ரஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் மூச்சிரைக்க ஓடி வந்தது பூர்ணா வைத்யநாதன்.

"என் ticket-அ upgrade பண்ணியிருந்தேன், ஆனா chart-ல பேரே இல்ல... ரொம்ப டென்ஷன்.. ordinary-க்கும் A/C-க்கும் ஓடி ஓடி.. கடைசீல பாத்தா... கீழ எங்கயோ எழுதிவேச்சிருக்கான்... நான் உங்களுக்கு அடுத்த கச்சேரி... சீதா ராஜன் மாமிக்கு வாசிக்கறேன்..." நிறைய பேசினோம்.

எதிரில் கைக் குழந்தை ஒன்றும் இரண்டரை வயதில் ஒன்றுமாய் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தது ரித்திகா என்று சற்று நேரத்தில் தெரிந்தது. பெரியவளை மடியில் போட்டுக்கொண்டு தூக்கம் பண்ண முயற்சித்தபடி இருந்தாள். "She is not sleeping" என்று குறைபட்டுக்கொண்டாள். குழந்தை வளர்ப்பு, கோபங்கள் என்று பல விஷயங்கள் கேட்டுக்கொண்டேயிருந்தாள். கோபத்தைக்கூட அன்பாக எப்படிக்காட்டுவது, அடிப்பதைத் தவிர்ப்பது எப்படி, நாம் சாதாரணமாகச் செய்யும் விஷயங்களில் இருந்து குழந்தை எப்படி வேண்டாதவைகளைக் கற்றுக்கொள்கிறது, ஒரு விஷயம் குழந்தையின் மனதினுள் செல்ல என்ன செய்ய வேண்டும், குழந்தை வளர்ப்பை த்யாகம் level-உக்கு கொண்டுசெல்லாமல் எப்படி நம் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே ரசமாகச் செய்வது... இப்படிப் பேசிக்கொண்டே வந்ததில், மிகவும் நெகிழ்ந்திருந்தாள். இது போலச் சொல்வதற்கு ஒருவரும்இல்லை என்றும், எங்காவது இவை பற்றியெல்லாம் பேசுகிறேனா, lecture போல என்றெல்லாம் கேட்டாள். அதே நேரம், சீரான மெல்லிய பேச்சும் இரயிலின் மெல்லிய ஆட்டமும் குழந்தையைத் தூங்க வைத்திருந்தன.

"Remember me... I am Rithika.. மைசூர் இரயிலில் சந்தித்தோம் என நினைவுவைத்துக்கொள்ளுங்கள்,"

"வேண்டாம்... ரித்திகாவை ரித்திகா என்றே ஞாபகம்வைத்துக்கொள்கிறேன்
..."

அவள் கணவனிடம் என் card-ஐக் கொடுத்துவிட்டு, உறங்க தயாரான என்னை,
"சார்... இந்த பக்கம் தல வெச்சுக்கறேளா... side berth-லேர்ந்து, ஒங்களோட பேசீண்டே வரலாம்" என்றான் கிருஷ்ணா. " இப்படியே இருக்கேன்..." அருண் கைபேசியில் பாட்டு ஆரம்பித்திருந்தான்.

சீட்டுக்கடியில் ஒரு எலி ஓடியது. மிருதங்கம் அங்கே தான் இருந்தது.
மேலே யாரோ laptop-ல் பொக்கிஷம் படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வார்த்தைகளற்ற மௌனமாய்ப் படம் ஓடிக்கொண்டிருந்தது. தானே ஒரு குழந்தையாய் என்னைப் பார்த்த ரித்திகாவை கண்களால் புன்னகைத்துவிட்டு, காக்ஷிகளற்ற மௌனம் தருவாயா சந்த்ரசேகரா என்று என எண்ணியவாறே, படுத்துக்கொண்டேன்.

கமலஹாசனின் பேசும் படம் கூட, வார்த்தைகளற்ற ஒரு படம் தானேயன்றி மௌனம் இல்லை. இசை தன் இருப்பைத் தெரிவித்துக்கொண்டேயிருந்தது அதில். மக்கள் எந்த ஒரு காட்சியையும் கவனிக்காமல் போய்விடக்கூடாது என, கௌதமி கமலின் விரல்களைக் கோத்துக்கொண்டு வருவதும், சிவாஜி அதைப் பார்ப்பதும், பின்னர் கமல் விரல்களை விடுவித்துக்கொள்வதும் மூன்று தனித்தனி சீன்களாய் தேவர் மகனில் வைத்ததைப்போல, ஒரு மௌனப் படத்திற்கு இசை வேண்டியிருந்தது.

இசையற்ற நிசப்தம் கூட
மௌனம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில், காட்சியில் அமைதி இருப்பினும் பார்ப்பவர் உள்ளம் இரைச்சல் போட்டபடி தான் இருக்கும். பெங்களூரில் கோபாலகிருஷ்ணன் வீட்டில் கச்சேரிக்காகத் தங்கியிருந்தபோது, உடன் வந்தவெங்கட்ரமணன் "ப்ரஷாந்தி நிலையத்தில் அத்தனை கூட்டம் இருக்கும்; ஆனால் pin drop silence sir..." என்று விழிகளை விரித்தபொழுது, அங்கிருந்த கூட்டத்தின் மன இரைச்சலில், கூக்குரலில் செவிப்பறைகள் கிழிபடுவதை அறிவாயா என்று கேட்டேன்.

நிசப்தமாய் காக்ஷி கூட இரைச்சல் தான்.

காக்ஷிகளற்ற மௌனம் தேட வேண்டும். தொலைத்திருக்கிறேன் என்பதைத் தவிர குறிப்புகள் அறியாத தேடல் அது. வெளிச்சம் தானே காக்ஷிகளுக்கு ஆதாரம்? தேடலைக் கலைக்க விரும்பாமல் குரு கூட ஒளியற்று, இருளாய் வருவார். இருப்பிடம் அறியா தேடலை வெறுமே வேடிக்கை பார்க்கிறாய் என்ற உணர்வை மட்டும் வைத்தா, நீ ப்ரஹ்ம வஸ்து என்று நான் உறுதிப்பட வேண்டும்....

(தொடரும்...)

6 comments:

 1. //எங்காவது இவை பற்றியெல்லாம் பேசுகிறேனா, lecture போல என்றெல்லாம் கேட்டாள். அதே நேரம், சீரான மெல்லிய பேச்சும் இரயிலின் மெல்லிய ஆட்டமும் குழந்தையைத் தூங்க வைத்திருந்தன.//

  குழந்தையை வேண்டுமானால் தூங்க செய்திருக்கலாம் உங்கள் பேச்சு... உங்கள் தேடல் விழிப்பைத் தருகிறது...  //தேடலைக் கலைக்க விரும்பாமல் குரு கூட ஒளியற்று, இருளாய் வருவார். இருப்பிடம் அறியா தேடலை வெறுமே வேடிக்கை பார்க்கிறாய் என்ற உணர்வை மட்டும் வைத்தா, நீ ப்ரஹ்ம வஸ்து என்று நான் உறுதிப்பட வேண்டும்....//

  நன்றி

  ReplyDelete
 2. //எங்காவது இவை பற்றியெல்லாம் பேசுகிறேனா, lecture போல என்றெல்லாம் கேட்டாள். அதே நேரம், சீரான மெல்லிய பேச்சும் இரயிலின் மெல்லிய ஆட்டமும் குழந்தையைத் தூங்க வைத்திருந்தன.//

  குழந்தையை வேண்டுமானால் தூங்க செய்திருக்கலாம் உங்கள் பேச்சு... உங்கள் தேடல் விழிப்பைத் தான் தருகிறது...

  //தேடலைக் கலைக்க விரும்பாமல் குரு கூட ஒளியற்று, இருளாய் வருவார். இருப்பிடம் அறியா தேடலை வெறுமே வேடிக்கை பார்க்கிறாய் என்ற உணர்வை மட்டும் வைத்தா, நீ ப்ரஹ்ம வஸ்து என்று நான் உறுதிப்பட வேண்டும்....//

  நன்றி

  ReplyDelete
 3. இரண்டு முறை வந்தும் பின்னூட்டம் கொடுக்கமுடியலை என்னனு புரியலை, இதுவாவது போகுதா பார்க்கிறேன்! :(

  ReplyDelete
 4. போயிருக்குனு நம்பறேன்.

  //தேடலைக் கலைக்க விரும்பாமல் குரு கூட ஒளியற்று, இருளாய் வருவார். இருப்பிடம் அறியா தேடலை வெறுமே வேடிக்கை பார்க்கிறாய் என்ற உணர்வை மட்டும் வைத்தா, நீ ப்ரஹ்ம வஸ்து என்று நான் உறுதிப்பட வேண்டும்....//

  நல்ல பகிர்வுக்கு நன்றி. இன்னிக்குப் போற இடத்திலே எல்லாம் இம்மாதிரியான உணர்வுகளே தெரியுது அதிகமாய்! :)))))))))

  ReplyDelete
 5. YOur writing is good; for the first time I have visited your blog. Will come here often.

  Request to read and give your views in my blog also.

  Mohan Kumar

  வேலூர் தங்க கோயில் பற்றிய article படிக்க:

  http://veeduthirumbal.blogspot.com/

  ReplyDelete