Wednesday, August 12, 2009

honda activa...




இப்போதிருக்கும் கைனடிக் ஹோண்டாவிற்கு (three wheeler) வயதாகி விட்டதாம்.
மாற்ற வேண்டும் என்று சொல்லி ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, சுறுசுறுப்பாக மவுண்ட் ரோட் - திதார் மோட்டார்ஸில் ஒரு activa-வைப் பதிவு செய்தேன்.

"சார்.. வண்டிய ரெஜிஸ்டர் பண்ணித் தருவோம்; இன்சூரன்ஸ் பண்ணுவோம்.. கொஞ்சம் டிமாண்டு, அதனால ரெண்டு மாசம் ஆகும் டெலிவரிக்கு"

"அதனால பரவாயில்லப்பா... யானைக்கு இருவத்திரெண்டு மாசம், மனுஷனுக்கு பத்து மாசம், வண்டிக்கு ரெண்டு மாசம்... அவ்ளோ தானே..."

"வண்டி வந்ததும் ஃபோன் பண்ணுவோம் சார்... ஃபுல் பேமண்ட் குடுத்துருங்க... அப்பறம், சைடு வீல் செட் பண்ண பத்தாயிரம் ரூபா ஆகும்.. எங்களுக்கு ஆள் இருக்காங்க.. அஞ்சாறு நாள்ல பண்ணி குடுத்துடுவாங்க.. இப்போ ஆயர் ரூபா கட்டிடுங்க, புக்கிங்குக்கு "

ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு என்று ஜூலை இரண்டாம் தேதி மாலை நேரத்தில் பாட்டுப் பாடாமல் பணத்தை மட்டும் கட்டினேன். மூன்று நாட்களில் தொலைபேசினார்கள்.

"சார்... பர்ப்பிள் தான புக் பண்ணீருக்கீங்க?"

"ஆமாம்..."

"சரி சார்... ஒரு சந்தேகத்துக்கு தான் திருப்பியும் கேட்டோம்... ஒரு விஷயம்சொல்லணும் சார்.. மொதல்ல நாங்க வண்டிய ரெஜிஸ்டர் பண்ணித் தருவோம்... அப்புறம் தான் சைடு வீல் போடுவோம்."

"அப்படி பண்ணா, எனக்கு கஷ்டம்பா... சைடு வீலோட சேர்த்து ரெஜிஸ்டர் பண்ணா தான் இன்ஷ்யுரன்ஸ் க்ளைம் பண்ண முடியும். பழைய வண்டி அப்படி பண்ணதாதான் ஞாபகம்."

"நீங்க ஓனர் கிட்ட பேசிக்குங்க சார்... அவரு மத்யானத்துக்கு மேல வருவாரு"

என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை என்று, மதியம் வரை வேறு வேலை செய்வோம் என சில கேசட்டுகளை சீடியாக்கலாமா என்று தேடுகையில், கார்த்திக்கிடமிருந்து கால் வந்தது. கார்த்திக் ஒரு ஆடிட்டர், மிருதங்கக்கலைஞரும் கூட. சிவராமன் சாரிடம் மேலே கற்றுக்கொள்வதற்காகவே, கொல்கத்தாவிலிருந்து இங்கு வந்தவன் (நான் அங்கு சாரின் மேற்பார்வையில் அவர் வீட்டில் 1993-இலிருந்து கற்றுத் தருகிறேன்).

கச்சேரி விஷயங்கள் பேசிய பின், "வண்டி புக் பண்ணீருக்கேன் கார்த்திக்"

"ஓ.. என்ன வண்டி... எங்க?"

"ஹோண்டா ஆக்டிவா.. திதார்ல..."

"நாகராஜன்! திதார்லயா பண்ணீருக்கேள்... என்ன பண்ணனும்னு சொல்லுங்கோ... எங்க க்ளையண்ட் தான் அவன்.. வெலையெல்லாம் கொறைக்க சொல்லட்டுமா?"

"ஆஹா.. நல்லதாப்போச்சு... வெலையெல்லாம் கொறைக்க வேண்டாம்..registration பண்ண மாட்டேங்கறான் supporting வீல்சோட, என் பழைய வண்டி RC புக் xerox தரேன்.. அது மாதிரி பண்ணித் தரசொல்லு " என்று கூறி அடுத்த நாள் கார்த்திக்கிடம் xerox-ஐக் கொடுத்தேன்.

"Vehicle is fitted with supporting wheels on both sides so as to be driven by the physically handicapped owner. Tax is exempted so long as the motor cycle is used by the physically handicapped person as per G.O. ms.no.2885, Home (transport) 20-11-76" என்று எழுதி
Asst.Registering Authority சீல் வைத்து கையொப்பமிட்டிருந்தார்
(dated 11.9.98).

பிறகு நிம்மதியாக கச்சேரிகள் க்ளாஸ்கள் என்று செட்டிலாகி விட்டேன். திங்களன்று அழைப்பு வந்தது, " சார், புருஷோத்தமன் பேசறேன்... திதார்லேந்து... உங்க வண்டி இன்னிக்கு வந்துரும், வந்து பணம் கட்டீருங்க," என்று. இரண்டு மாதங்கள் ஆகிவிடும் என்றானே, குறை பிரசவமாக அதற்குள் வந்துவிட்டதா என்று எண்ணியபடி புறப்பட்டேன், வழியில் வண்டி நின்று விடக்கூடாது என்று வேண்டியபடி.

ஏனென்றால் சனிக்கிழமை இரவு கிருஷ்ண கான சபாவில் குருசரண் - உமையாள்புரம் சிவராமன் சார் கச்சேரி கேட்டுவிட்டுத் திரும்புகையில், வண்டி சுனாதவிநோதினியானது.

சுநாதமாக எப்போதும் வரும் சப்தம் மாறி, விநோதமாக ஒரு சப்தம் வந்தது! அதோடு, ஓடும்போதே பின்னாலிருந்து காத்து கருப்பு இழுப்பதைப் போல ஒரு pulling உணர்வு! வெள்ளிக்கிழமை சாயங்காலம் கைது செய்து, சனி ஞாயிறு கோர்ட் லீவாக இருக்கும்போது ஸ்டேஷனில் வைத்து லாடம் கட்டும் போலீசைப் போல சதி செய்தது என் இனிய கைனடிக் போண்டா (:P).

"சார் இது சைலென்சர் அட்ச்சுகிட்டா மாரிதான் இருக்கு.. நாளைக்கு கட கடியாது... மண்டே கொண்டது வாங்க இல்லேன்னா வந்து பாக்கறேன்"

"நாளைக்கு (ஞாயிறு) காலங்கார்த்தால கெளம்பி மியூசிக் அகாடெமிக்கு போகணுமே... கொஞ்சம் சரி பண்ணீடேன்"

"சார்.. இப்பவே மணி பத்தரை.. நெறய்ய வேலை இருக்குது சார்... கரண்ட் வருதான்னு எல்லாம் பாக்கணும்"

அடுத்த நாள் அகாடெமிக்கு போய்விட்டேன். ஒன்றும் ஆகவில்லை. திங்களன்று காலை மெக்கானிக் வந்துவிடுவான் என நம்பி அமர்ந்திருந்த வேளையில், திதாரிலிருந்து இப்படி ஃபோன். ஜெமினி ஏறி இறங்கியதும் கிரீம்ஸ் ரோட்டிற்கு திரும்புவதற்கு முன்னால் இடது புறம் வாசலில் ஏராளமான வண்டிகளுடன் திதார் மோட்டார்ஸ். என் சிஷ்யன் கிருஷ்ணாவை நேரே அங்கு வந்துவிடு என்று கூறியிருந்தேன். வாசலெங்கும் கறுப்புச் சகதியாய் நேற்று பெய்த மழை. நாற்றங்களுக்கு இடையில் காய்ந்திருந்த பஸ் ஸ்டாப் ஓரம் ஒரு fast food-ன் குப்பைத்தொட்டி. மகா ஜனங்கள் சிற்றின்பத்தை அனுபவிக்கும் அதே அவசர ஆசையோடு, தொல்லையையும் (சின்னது தானே... கொஞ்ச நேரத்தில் பஸ் வந்துவிடும்) பன்றிக் காய்ச்சல்களையும் பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்தார்கள்.

ஒரு போலீஸ் வேன், ஒரு ஆட்டோ மற்றும் சில பைக்குகள் அங்கே இடைஞ்சலாய் சொருகப்பட்டிருந்தன. கார்ப்பரேஷன் பணியாளர்கள் நீண்ட மாப் கொண்டு வந்து இந்த சகதியைத் தள்ளுவதற்காக ஓரமாக நின்று பார்த்துவிட்டு, ஒனர்களைத் தேடி கட்டுபடியாகாதென்று அவர்களே வண்டிகளை சற்றே நகர்த்தி தண்ணீரைத் தள்ளிவிட்டனர்.

கிருஷ்ணா வந்ததும், அந்த சின்ன வாசலில் குறுக்கே ஒரு படித்த மடப்பயல் நிறுத்திவிட்டுச்சென்ற பைக்கை அவனும் வேறோருவருமாகச் சேர்ந்து நகர்த்தி, மேடேறி கடை வாசலுக்குச் சென்றோம். என் பைக்கிலேயே உட்கார்ந்துகொண்டு நீ போய் பாத்துட்டு வந்துடு என்றேன். நேற்று பேசிய புருஷோத்தமன் எங்கோ வெளியில் போயிருப்பதாய்ச் சொன்னார்கள். அங்கு டைப் அடித்துகொண்டிருந்த பெண் புருஷோத் என்று கூப்பிட்டதற்கு என்ன என்று கேட்டவன் புருஷ உத்தமன் தானா என்று கிருஷ்ணா கேட்டான்.

மீண்டும் side attachment உடன் ரெஜிஸ்டர் செய்ய மாட்டோம் என்று சொன்னார்கள். ஒருவருக்கும் விவரம் தெரியவில்லை. நான் என்
RC புக் xerox பற்றிக்கேட்டேன். ஒருவருக்கும் தெரியவில்லை. RTO office-லேயே கேட்டுவிடுவோம் என்றேன். அப்போது தான் ஒரு டிராபிக் போலீஸ்காரர் வந்து தயங்கித் தயங்கி சாலையோரம் இடைஞ்சலாயிருந்த வண்டிகளின் முன் சக்கரத்தின் காற்றைப் பிடுங்கிவிட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் கேட்டதில் அவருக்கும் விவரம் தெரியவில்லை.

அங்கிருந்து வள்ளுவர் கோட்டம் வழியாக அசோக் பில்லரைக் கடந்து
RTO office வந்தோம். அங்கே ஒரு அதிகாரி ச்ரத்தையாக விவரங்கள் சொன்னார்.

"சார்.. ARAI, அதாவது Automotive Research Association of India-ன்னு ஒண்ணு இருக்கு. அதுல பதிவு பண்ணியிருக்கற கம்பனிகள் (manufacturers like TVS, KH and dealers) டீலர்ஸ் இவா குடுக்கற வண்டிகளோட extra attachments தான் register பண்ணுவா. மத்தது எல்லாம் வெறும் பைக்க தான் பண்ணுவா. So, நாளைக்கு நீங்க வெளீல போறத்தே யாராவது உங்க வண்டியை இடிச்சுட்டா... இன்ஷ்யுரன்ஸ் க்ளைம் பண்ணா null and void-னு சொல்லீடுவா... உங்களுக்கு ப்ராப்ளம்... நாளைக்கு வாங்கோ, இப்போ இங்க ஒருத்தரும் இல்ல, யார் யார் ARAI-ல பதிவு பண்ணீருக்கான்னு லிஸ்ட் பாத்துத் தரேன்"

வெளியே வந்த கிருஷ்ணா, "இதெல்லாம் ஒரு ஊரே இல்ல சார்... ஏன் இப்படி படுத்தறாங்க. டீலர் என்னாடான்னா விவரமே தெரியாதுங்கறான், ஆனா கேட்டா, ஒரு மாசத்துக்கு நாலு வண்டி இந்த மாதிரி வாங்கராங்க இப்படி தான் பன்றோம்கறான்..."

"US-ல எல்லாம் smoke alarm, ரெண்டு கொழாய்ல ஒண்ணு சுடு தண்ணி ஒண்ணு பச்சத் தண்ணி, கட வெச்சா கடையப்போல அஞ்சு பங்கு பார்க்கிங் இதெல்லாம் இல்லாட்டி approval-ஏ குடுக்க மாட்டான். நெப்போலியன் பேசீருக்கான் பாரு, பழைய கட்டிடங்களில் அரசாங்கத்தால ஒண்ணும் பண்ண முடியாது இனிமே கட்டப்போற எல்லாத்துலயும் வீல் சேர் போற மாதிரி ramp வெக்கச் சொல்லுவோம்னு.. ஏன், வண்டி பண்றவன்(manufacturers), டீலர் எல்லாம் ARAI-ல பதிவு பண்ணிக்கனும்னு ஒரு லைன் சேர்த்துட்டா அவனவன் பண்ணீருப்பானே? atleast, RTO office-லயாவது இன்னின்ன பண்ணனும்னு ஒரு நோட்டீஸ் வெச்சிருக்கலாம்... சரி, நடக்கறது நடக்கட்டும்னு, வாங்குவோம்.. ஆகிறபடி ஆகட்டும்..."

பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து, இப்போ யாராவது வந்திருக்காளா பாரு என்று சொன்னேன்.

"TVS மட்டும் தான் பண்ணீருக்களாம், டீலர் ஒருத்தன் கூட அதுல பதிவே பண்ணலியாம்.. ஒண்ணும் வேலைக்கு ஆகாது, நாம அதையே வாங்கீடலாம் சார்...ஏன்னா pept எல்லாம் waste சார்," என்றான் கிருஷ்ணா.

வீட்டிற்கு வந்ததும் ARAI-ஐ இணையத்தில் தேடி, ஏதாவது விவரம் இருக்குமா என்று பார்த்ததில் ஒன்றும் பிரயோஜனமில்லை. ஆனால் தேடியதில், கேரளாவில் இதே பிரச்சினைக்காக புஷ்பகுமார் என்பவர் போராடுவது தெரிந்தது. Trashed Human Rights என்ற வலைப்பக்கத்தில் இது விஷயமாய்
அவரின் போராட்டத்தைக் காணலாம்.

நேற்று கார்த்திக் பெங்களூருவிலிருந்து அழைத்தான். விவரங்கள் சொன்னேன். நான் வந்து திதார் மோட்டார்ஸ் முதலாளியைப் பார்க்கிறேன் என்றான்.

இன்னும், என் வண்டியின் சைலேன்சரைக் கழட்டி சரி பண்ணுவதாகச் சொன்ன மெக்கானிக் வரவில்லை.. சைலன்ட்டாக இருக்கிறார் போலும்.

இசையை "அனுபவிப்பது" நம் கடமை, ஏனெனில், "Silence is Music" :) :) :)

7 comments:

  1. சோகம்டா சாமி...ச்சே....ஒரு அளவே இல்லையா?

    ReplyDelete
  2. இனிய மானஸ்தன்,

    The country has been going to dogs for the past many centuries and it tries the 'pigs' too... It happens... :)

    ReplyDelete
  3. நாகராஜ்!
    செய்யவேண்டியத செஞ்சிட்டீங்க;
    அதை எல்லாம் பதிஞ்சிட்டீங்க
    படிக்கறவங்க புரிஞ்சிக்கிட்டாங்க;
    பலன் இருக்கும் - கவலை விடுங்க!

    ReplyDelete
  4. என்று தீரும் இந்த சோகம்??

    இந்த திருட்டு பூனைகளுக்கு ஒரு பெரிய "மணி" கட்டுவது யாரோ?

    ReplyDelete
  5. namma oorla makkal thirundhave matta... :(

    ReplyDelete
  6. you book your next car now only. It will take (hopefully) another decade to get that delivered....Hehehe

    ReplyDelete
  7. dear kg,rg,b-g(ji... thnak you...


    hari anna.. ஆஹா... நானோ? { :) } புக் பண்ணுவதோ? எல்லா விஷயங்களுக்கும் இரண்டு வழிகள் தான்... நடக்கட்டும் அல்லது நடையைக் கட்டும்...

    ReplyDelete