Friday, August 14, 2009

அவைகள் மிகப்பெரிய மனிதர்களுக்கானவை.

சற்று பெரிய பதிலாய் இருப்பதினால், பின்னூட்டத்தில் எழுதுவதற்கு பதிலாய், இங்கே பதிவாக.

டியர் கோபி,

வைர வரிகள் எல்லாம் பாரதி போன்ற கவிஞர்களுடையவை... எல்லோரையையுமே உயர்வு நவிற்சியாய் பாராட்டுவதை நாம் செய்யக்கூடாது. அதற்காக, KG ji போல, "அமைந்துவிட்டது" என்றும் சொல்லவில்லை; ரூம் எல்லாம் போடவில்லையே தவிர சற்று யோசித்தேன்... அவ்வளவுதான்... :)

தூக்கிட்டுக் கொள்ளும்போது
ஏறி நிற்கப் பயன்படுத்தும்
நாற்காலி
முக்காலி
சிறிய ஸ்டூல்
காலிக் குடம்
கட்டில்
சோபா
மேசை

எல்லாவற்றிலும்
சின்னச் சின்ன அசௌகர்யங்கள்
இருக்கின்றன

நீங்கள்
பிரயாசைப்படவேண்டும்

சில சமயம்
அவை திட்டத்தையே சீர்குலைத்துவிடலாம்

ஒரு முறை நீங்கள்
இந்தச் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துங்கள்

கழுத்தில் முடிச்சிட்டுக் கொண்ட பிறகு
காலால் லேசாகத் தள்ளினால் போதும்

தூக்கு மேடையில்
பலகை விலகுவதுபோல
அவ்வளவு மிருதுவாக
பூமியுடனான உங்கள் எல்லாத் தடைகளும்
விலகுவதைப் பார்ப்பீர்கள்
- மனுஷ்யபுத்திரன்.

மனுஷ்யபுத்திரனின் 'தூக்கு' கவிதை ஊனமுற்றவர்களின் போராட்டத்தையும் அதைக் கழிவறைக் காகிதமாக்கும் சமூகக் கேட்டையும் சாடுவதான கோபமே தவிர வேறொன்றுமில்லை. இந்த நாட்டில் சக்கர வண்டி இருந்தும் ஒரு பிளாட்ஃபாரத்தில் கூட அதை உபயோகப்படுத்த முடியாத இழிநிலை அவர்கள் இயலாமைக்கு அளிக்கப்பட்ட தீர்வே (சக்கர வண்டி) அவர்களைக் கட்டிப் போடுகிற வன்முறையாக மாறும் அவலமாயிருக்கிறது. அதோடு, அவர்கள் இயலாமையை அடிக்கடி நினைவுறுத்தும் வேலையையும் செய்கிறது.

"கணவனை இழந்த கதையையோ, பிள்ளையைப் பறிகொடுத்த துக்கத்தையோ, எங்கோ எவரிடமோ ஏமாந்த சோகத்தையோ மறக்க எண்ணும் மனதை, கிளறுவதும் அந்த இரணத்தின் அடிவேர் துளைத்து நினைவூட்டுவதும் மனித நேயமற்ற காரியம் எனில், அது, நாகரீகத்தில் சேராதெனில்...

ஒவ்வொருமுறையும் என் ஊனத்தை, என் இயலாமையை நினைவுறுத்தி, என் பயணத்தில் படர்ந்த பேரிடராய், என் தயக்கங்களை மட்டுமே ஊக்குவிக்கும் தடையாய், என் சமூஹத்தை மூச்சிரைக்க வைக்கும் மூல காரணமாய் முளைத்து நிற்கும் படிகள், சக்கர நாற்காலி வைத்துக் கொண்டும் சமாளிக்க முடியாத நம் அரங்குகளின் கட்டமைப்புகள்..."


சரியாகச் சொன்னால், அது சக்கர நாற்காலி தானே தவிர, சக்கர வண்டி அல்ல.

பெயரில் இருக்கும் சக்கரை காரியத்தில் கசக்கிறது என்பதையே,

ஆஸ்த்மா வந்துவிட்ட ஆரோக்யசாமிகள்
தகரத்துக்கே தடுமாறும் தங்கப்பொண்ணுகள்
பிச்சையெடுத்து வாழுகின்ற லக்ஷ்மிபதிகள்
மண்டுகளாய்க் காலந்தள்ளும் மதியழகன்கள்
இருட்டினாலே பதுங்கிவிடும் வீரமணிகள்
தமிழைக் கொலை செய்யும் தேன்மொழிகள்
ஒட்டிய வயிற்றுடன் ஓதுகின்ற கனபாடிகள்

பெயர்களில் உள்ளதெல்லாம்
வாஸ்தவத்தில் இல்லாதிருக்க,
சக்கர வண்டிகள் மட்டும்
விதிவிலக்காய் இனித்திடுமா...


என்று சொன்னேன். "ஏதேனும் குறைவு எங்கேயோ மிக அதிகம்" என்பது கூட, 'ஆண்டவன் ஒரு கொறையக் குடுத்திருந்தாலும், ஒரு திறமையக் குடுத்திருக்கான்' என்ற அடிக்கடி காதுகளில் விழுகிற வார்த்தைகளின் வெளிப்பாடு தான். உண்மையில் அதைச் சற்று கிண்டலாகத் தான் சொல்லியிருக்கிறேன், எவ்வளவு கோரமான விபத்தாக இருந்தாலும் தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது என்று ஆறுதல் சொல்வதைப் போல.

அன்பு மிகுதியால் கூட வைரங்களை யாருக்கும் தந்து விடாதீர்கள். அவைகள் மிகப்பெரிய மனிதர்களுக்கானவை.

4 comments:

 1. அ ! இப்படி எல்லாம் சொன்னால் -
  நீங்கள் கவிஞர் இல்லை என்று
  நாங்கள் நினைத்து விடுவோமா?
  நீங்கள் இப்பொழுது இருக்கின்ற
  வ(வி)சன கவிஞர்களை விட
  எவ்வளவோ மேல்!

  ReplyDelete
 2. உங்கள் இஷ்டம் நாகராஜ் சார்....

  தங்களின் பார்வை என் மேல் பட நான் தன்யனானேன்...

  ReplyDelete
 3. நாம் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டது எனக்கும் பூரண திருப்தியே. அறிதலின் ஆனந்தமே உயிர்களின் இயல்பு. நெருக்கமும் தூரமும் தான் வேறுபடுகிறது. நெருக்கம் அறிதலால் வருவது. தூரம், முழுவதுமாக அறிந்தோமா, அனேகமாக அறிவேன் எனும் நிலையா என்று வித்யாசப்படுகிறது.

  ReplyDelete