Monday, June 22, 2009

நாகர்கோயில் பயணம் - 3
















மணக்குடியின் உடைந்த பாலத்திலிருந்து வரும் வழியில் சுசீந்தரம் கோவிலுக்கு வந்தோம். காருக்குள்ளேயே இருந்து விட்டேன். பார்க்கிங்கில் இருந்தவாறு கோபுரத்தை பார்த்தபடி ஒரு பத்து நிமிடம் இருப்போம், உடனே கிளம்பி விடலாம் என்று நினைத்தேன். படிக்கட்டுகளை ஏறி இறங்கும் மன நிலையில் நான் இல்லை. ரவியும் அருணும் இறங்கியபின், வேறு ஒரு வண்டி கிளம்புகிறது என்று சற்றே நகர்த்தி, திருப்பி நிறுத்தி இறங்கிச் சென்றார் டிரைவர். நேரே... கட்டணக் கழிப்பிடம்; பின்னால் கோபுரம்!














இரண்டு ரூபாய் என்பது பலருக்கும் மிகப் பெரிய தொகையாகவே இருந்தது. எல்லோரும் பார்க்கிங் முனையில் நிம்மதியடைந்தவாறு "இருந்தனர்".
பக்கத்தில், வெய்யிலை பொருட்படுத்தாது இரண்டு நாய்கள் கூடிக் கொண்டிருந்தன.

ஆவின் பார்லர் என்று எழுதியிருந்த இடத்தில் டீ குடிக்க எண்ணி, அந்த இடமும் அழுக்கும் பார்த்து மனம் மாறினேன். கோவிலிலிருந்து வந்ததும் ரவி, "ஈரோட் சார்... இங்க புட்டு கடலை சாப்பிட்டிருக்கேளா... ரொம்ப நன்னா இருக்கும்... இவ்ளோ தூரம் வந்துட்டு, அத சாப்டாம போனா எப்பிடி" என்றார். அஞ்சு மணீல இருந்து ஏழு மணி வரைக்கும் தான் புட்டு கிடைக்கும், அப்புறம் தீந்து போயிரும் என்ற டிரைவர் குரலைப் புறந்தள்ளி, குளத்தருகே தேடினார். அருணும் போனான். முதலில் திரும்பி வந்தது அருண்.

"மாமா, அவுரு, புட்டு இருக்கான்னு பாத்துண்டே, ஆர்ச் வரைக்கும் போய்ட்டார்... நான், ரவி சார்.. ரவி சார்னு கூப்டேன்... அவருக்குக் கேக்கல... நான் இருந்த எடத்துல பூரி சூடா இருந்துது... சரி அவர் புட்டு சாப்ட்டுட்டு வரதுக்குள்ள, இத முடிப்போம்னு பூரிய உள்ள தள்ளினேன்... வா, நம்ம அங்க போகலாம்"

ஆர்ச் அருகில் ரவி கையசைத்தார். நான் பதிலுக்கு கை காட்டியதும், நடுவில் யாரோ ஒருவர் என்னைப் பார்த்துச் சிரித்து, அவரும் கை காட்டினார். நடந்து வந்து, கடைகளில் படிக்கட்டுகளில், கையில் டீயுடன் குனிந்து காருக்குள் பார்த்து... எனக்கும் அவருக்கும் "ஸ்நானப் ப்ராப்தி" கூட இல்லை என்று தெளிந்து சென்று விட்டார்.

"டிரைவர்... இவர் யாரு?"

"தெரியல.. தலைக்கு ச்சொகமில்ல போல..."

மென்மையாக, மிகை நடிப்பற்ற, உற்று கவனித்தால் அன்றி, இதழோரக் குறுநகை தெரியாத, உள்ளே ஒளிந்த கிண்டல்.

பெய்த்தியத்துல ஒண்ணாம் நம்பர், ரெண்டுங்கெட்டான், கிறுக்குப் பய, பகல்லயே ஒரு எழவும் புரீல போலிருக்கு... என்ற தஞ்சை வாசகங்கள் இன்றி, கவிதையாய்த் தோன்றியது அந்த சொல்லாடல்.

அருகே வந்த ரவியின் கையில் இரண்டு பொட்டலங்கள். புட்டு-கடலையும் வடைகளும். ஒரு துண்டு வாயில் போட்டுக்கொண்ட வடை ஏனோ, அவ்வூரின் அபூர்வப் படைப்பு போல, மிகச் சுவையாய் இருந்தது. அங்கிருந்து தான் தொட்டிப்பாலம்.

தொட்டிப்பாலத்தில் இருந்து பத்மநாபபுரம் அரண்மனைக்குச் சென்றோம்.திங்கட்கிழமை விடுமுறை என்று எழுதியிருந்தார்கள். காரைத் திருப்பியபோது, பஸ் ஒன்று ரிவர்ஸில் வந்தது. "கைகாட்ட மாட்டீகளா... போப்பா..." என்று மென்மையாகக் கோபித்துக்கொண்டார் டிரைவர். "ஹ்ம்ம்.. இதே மெட்ராசா இருந்தா, சாவு கிராக்கி... வூட்ல சொல்லிக்கினு வந்தியா.
.. னு ஆரம்பிச்சிருப்பான்" என்றார் ரவி.

நேரே
திற்பரப்பு அருவிக்குச் சென்றோம். சரிவாக சிமென்ட் பாதையில் இறங்குகையில், பாதி வழியில் ஆண்கள் குளிக்கச் செல்லும் வழியில் என்று இடது புறம் திரும்பி மூங்கில் கைப் பிடிகளுடன் படிகள் இறங்கின.


Detroit
-ல் இருந்தபோது, மாடி ஏறுகையில் கஸ்தூரியிடம் கேட்டேன். சைடுல புடிச்சுண்டு ஏற மரத்துல hold இருக்கே, இத எப்பிடி ஒரே வார்த்தைல சொல்லுவ? "சார், இந்த வெளையாட்டுக்கு நான் வல்ல.. நீங்களே சொல்லுங்கோ..." "உடன்படிக்கை" :) :) நேராக இறங்கிய சரிவில் சென்றால் தான் அருவியருகில் நான் போகலாம். பெண்கள் செல்லும் வழியில் என்றது அறிவிப்பு. ஆனால், அறிவிப்புகளை மதித்தால் ஆபத்து வரும் என்று "தெளிவாக" காட்டியது மற்றொரு பலகை.





நான் பெண்கள் பகுதியில் இறங்கித் திரும்பியதும், ஈரம் ஆரம்பித்த முனையிலேயே நிறுத்திவிட்டேன். அதற்கு மேல் இறங்கி வழுக்கினால், bathing using liqur என்று எண்ணப்படுவேன் என்று! ஆண்கள் தான் பெண்கள் அருகில் போகக்கூடாதே தவிர, ஆண்கள் பகுதியில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள். உறவுக்கு வலியுறுத்தலும் பிறன் மனை நோக்குதலும் அவள் சம்மதித்தால் தவறில்லை என்று ஒரு விதியின் அடி நூலிழை பின்னப்பட்டுக்கொண்டிருந்தது.

அருவியில்
குளித்திருக்கலாம். ஆனால், அங்கேயே பல் தேய்த்து துப்பிக்கொண்டிருந்தனர் மக்கள். சோப்பு, ஷாம்பூ என்று, surf தவிர மற்றயவை சிதறின. அந்த அருவி, நீளமாக இருந்தது. பெண்கள் பகுதி, ஒரு சுவர்த் தடுப்பு, இரு படிகள் அளவிற்கு இறங்கினால், ஒரு பரப்பு, அங்கிருந்து இரு படிகள் இறங்கினால் சற்று நீல அகலத்துடன் ஒரு துறை, அதிலிருந்து இறங்கினால் சின்னதாய் குழந்தைகளுக்கு இயற்கை அளித்த குதூகலமாய் ஒரு சிறிய அருவி. ஆனால், அது தான் கடைசியாய் சகல தீர்த்தங்களையும் வாங்கி வழிந்து கொண்டிருந்தது. பலரும் நனையும் ஒரு அருவியில் ஒரு நீச்சல் குளத்தின் கட்டுப்பாடுகளை விதிப்பதோ, கண்காணிப்பதோ மிகக் கடினம் என்று தோன்றவில்லை. மக்கள் நாகரீகம் இழக்கும் தருணங்களில் அதைநினைவூட்டவாவது அரசு முனைய வேண்டும்.






திற்பரப்பில் இருந்து கிளம்பும்போது 11.30 மணி ஆகியிருந்தது. சாப்பிடாவிட்டாலும் பசி இல்லை.

2 comments:

  1. ஹைய்யோ......... நல்ல கூத்து:-)

    திற்பரப்பு அறிவிப்பில்

    'மட்டும்' என்ற சொல் மட்டும் விட்டுப்போச்சுதோ!

    ReplyDelete
  2. they have tried to balance the mockery in various languages... :)

    ReplyDelete